இலங்கை,நவீன்,அனோஜன்

ano

இலங்கை,நவீன்

அன்புள்ள ஜெயமோகன்,

நவீன் எழுதிய இலங்கைப்பயண அனுபவங்கள் கட்டுரையை உங்கள் குறிப்போடு வாசித்தேன். நீங்கள் சொல்வது முற்றிலும் சரி.இலங்கைக்குச் சென்றால் இலக்கிய கூட்டத்தில் கலந்துகொள்வதைத் தவிர வேறு மடத்தனம் ஏதும் இருக்க முடியாது.ஏனென்றால் சமகாலத்தில் இங்கே அவ்வாறான ஒன்று இருப்பதில்லை. வெறுமே அரசியல் அடிதடியும் மாறி மாறி வன்மங்களை உமிழ்வதும் யார் பெரியவர் என்பதை நிரூபிக்கச் செய்யும் அகங்காரச் சிக்கலுமே இருப்பதுண்டு. இதைத்தாண்டி ஒரு விவாதத்தை முன்னெடுப்பது பெரும் சவால். நானும் பல இலக்கிய கூட்டங்களை ஒருகிணைத்தும் பங்குபற்றியும் சலிப்பையே அடைந்திருக்கிறேன். சில கூட்டங்கள் மட்டுமே மனநிறைவை தந்திருக்கின்றன. அதில் ஒன்று நானும் நண்பர்களும் சேர்ந்து ஒருங்கிணைத்த அசோகமித்திரன் நினைவுகள் மீதான ‘நினைவேக்கங்களின் ஊற்றுமுகம்’ எனும் நிகழ்வே. அதன் பின் முற்றிலும் ஒதுங்கிவிட்டேன். தற்சமயம் இங்கிலாந்துக்கு முதுகலைப் பட்டப்படிப்பை படிக்க கிளம்பிவந்து ஏழுமாதங்கள் ஆகியிருக்கின்றன.இதனால் நவீனை சந்திக்க இயலவில்லை.

நீங்கள் முதன்முறை கனடா சென்றபோது குறும்பட திரையிடலுக்குப்பின் நடந்த கேள்வி பதில் நேரத்தில் உங்களிடம் கேட்கப்பட்ட கேள்விகள் போலவே இங்கு வந்தாலும் படைப்பூக்கதிற்கும் இலக்கியத்திற்கும் சம்பந்தமற்ற அரைவேட்காட்டுத்தனமான கேள்விகளே எழுப்பப்படும் என்பதே என் ஊகம். எப்படியாவது ஜெயமோகனை மடக்கி, எதிலொன்றிலாவது மண்டியிடச் செய்திட வேண்டும் என்கிற அகங்காரச் சிக்கல் சார்ந்த கேள்விகளே எழுப்பப்படும். இங்கு ஜெயமோகன் மீதான விம்பம் என்பது வன்மங்கள் சார்ந்தே இருக்கின்றது. ஏன் இத்தனை வன்மம் என்று எனக்கு புரியவேயில்லை. எல்லோரும் சொல்லும் ஒன்று இந்திய அமைதிப் படை ஈழத்தில் எந்த பாலியல் வன்முறையையும் செய்யவில்லை என்று வாதாடினார். தனக்குத்தானே கடிதம் எழுதி இந்திய ப் பெருந்தேசியதிற்கு ஆதரவாகப் பேசினார் என்பதே . அந்த விவாதத்தின் தொடர்ச்சியை முற்றிலும் பின்தொடர்ந்து வாசித்தார்களா என்பதில் எனக்கு ஐயமே உண்டு.

இதுமட்டும்தான் காரணமா என்றால் இல்லை என்றே சொல்வேன். முக்கியமாக கறாரான விமர்சனத்தால் புண்பட்டவர்கள் தான் பெரும்பாலானோர். அந்தக் காயம் வளர்ந்து வளர்ந்து சீழ்பிடித்துக் கொட்டுகிறது. தங்களது சிறுமைகளை மறைக்க வசைகளில் இறங்குகிறார்கள். ஜெயமோகன் வாசகர் என்பதே உடலில் மண்ணெண்ணையை ஊற்றிவிட்டுத் யாழ்ப்பாணத் தெருவில் திரிவது போல. யார் வேண்டும் என்றாலும் எந்த நேரத்திலும் பற்றவைக்கலாம்.

ஈழ இலக்கியம் மிகக்குறுகிய வட்டம்தான். ஓரளவுக்குத் திவீரமாக எழுதினாலே இலக்கிய வட்டத்தில் பரீட்சியமாகி அனைவர்க்கும் தெரிந்தவராகிவிடலாம். மிக மென்மையான அனைவரையும் திருப்திப்படுத்தும் இலக்கிய விமர்சன போக்குகள். எஸ்.பொவுக்குப் பின் தீவிரமான இலக்கிய விமர்சனத்தில் இருந்தவர்கள் என்று சொல்லும் அளவுக்கு இங்கு எவரும் இல்லை. அப்படியும் கறாரான விமர்சனத்தை முன்வைத்தால் அரசியல் நிலைப்பாட்டுடன் பொருத்திப் பார்க்கபடுகின்றது.

யுத்தம் ஒரு தலைமுறை தொடர்ச்சியை புலம்பெயர வைத்தது. இலக்கியம் சார்ந்து இன்று எமக்கு முன்னுள்ள தலைமுறை என்பது நாட்டுக்கு வெளியேதான் அதிகம். அந்தத் தலைமுறையின் செயல்பாடுகள் மிகப்பலவீனமானவை. அதன் பின்வந்துள்ள என் தலைமுறைக்கு அணுக்கமானவர்களாக இலக்கியம் (அரசியல் அல்ல) சார்ந்த உடையாடல்களை தொடர்ந்து எடுத்துச்செல்ல எவரும் இல்லை என்பது துன்பமானதே. என் முன்னையை தலைமுறையில் ரிஷான் ஷெரிப், இளங்கோ டிசே, ஜிப்ரி ஹாசன் போன்றவர்களே புனைகதைகளைத் தாண்டி சமகால இலக்கியம் பற்றி ஓரளவுக்கு எனும் பேசுகிறார்கள். தீவிரமாக உழைக்கிறார்கள்.

புலம்பெயர்ந்து சென்ற சமூகத்தின் அடுத்த தலைமுறைகள் ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள், இவர்களைப் பற்றி இளங்கோ டிசே கவனப்படுத்தி தமிழுக்கு எழுதுகிறார். அவராலே The Story of a Brief Marriage நாவலை எழுதிய ‘அனுக் அருள்பிரகாசம்’ பற்றி அறிந்தேன்.அவரின் புத்தகம் பற்றித் தேடவே ‘ஷியாம் செல்லத்துரை’ பற்றி அறிந்தேன். இவ்வளவு நாளும் ஷியாம் பற்றித் தெரியாமல் இருந்திருக்கிறேன் என்பது சங்கடத்தையே தருகிறது. சரிநிகரில் அவரின் நாவலான Funny boy யின் தமிழ் மொழிபெயர்ப்பின் சில அத்தியாயங்களை வாசித்துவிட்டு ஆங்கிலத்தில் அவரின் நாவலை வாங்கி வாசிக்க ஆரம்பிதேன். அப்பொழுதுதான் தமிழ் மொழிபெயர்ப்பு எத்தனை மோசமானதாக இருக்கின்றது என்று புரிந்தது. ஷியாம் இன்னும் பல நாவல்களை எழுதிவிட்டார். ஆனால் ஈழத் தமிழ் சூழலில் அதைப் பற்றிய உரையாடல்கள் இல்லை. ஆங்கிலத்தை விடுவோம் ஈழத் தமிழ் சூழலில் வெளியாகும் சமகால படைப்புகள் பற்றி கட்டுரைகள் எல்லாம் வாசிக்க கிடைப்பதே அரிதிலும் அரிது. சமகால எழுத்தாளர்களின் படைப்புகள் மீதான விவாதம், விமர்சனம், உரையாடல் எல்லாம் நிகழ்வதே இல்லை. சில இடங்களில் அபூர்வமாக நடந்தேறுகின்றது.

நமது முன்னையை தலைமுறைக்கு முன்னையை தலைமுறை எழுத்தாளர்கள் வயசாகி தங்களுக்குள் மொட்டைக்கடிதம் எழுதி அனுப்புவதில் காலத்தை செலவிடுகிறார்கள். சமகால எழுத்தாளர்கள் படைப்புகள் பற்றி எங்கையாவது விரிவாக எழுதி இருகிறார்களா என்றால் இல்லை. இதுதான் நிலைமை. அதன் பின்னைய தலைமுறை ஏறக்குறைய அதையே பின்பற்றுகின்றது.இன்று ஜெயமோகன் பற்றி ஏதாவது பேஸ்புக்கில் எழுதினால் போலி கணக்கில் வந்து மிக அவதூறான மொழியில் பின்னூட்டம் இடுவதில் நம் முன்னையை தலைமுறையினரை அடித்துக்கொள்ள ஆட்களே இல்லை. ‘இரமணிதரன் கந்தையா’ போன்றோர் ‘கனகா சிவகுமார்’ என்ற கணக்கில் இதையே அடுத்த தலைமுறையினரிடம் செய்துவருகிறார்கள். சொந்த கணக்கில் இருந்து கொண்டு ஜெயமோகனுக்கு எதிராக மட்டுமன்று பொதுபடையான ஒரு கருத்தை சொல்லவும் ஆண்மை இல்லை.

ஈழத் தமிழர்களை தனியேயான தேசிய இனமாகச் சொல்லும் எம்மவர்களிடம் இலக்கியம் சார்ந்து எழுத்தாளர்களிடம் பணம் பெறாமல் இயங்கும் பதிப்பகம் இல்லை என்பது முரண்நகை. அப்படியும் இயங்கும் பதிப்பங்கள் வெறுமே புத்தகங்களை அச்சிட்டுக் கொடுக்கின்றன. பதிப்பகம் என்றால் வெறுமே அச்சிட்டுக் கொடுக்கும் அச்சக வேலை என்றே நினைக்கிறார்கள். விநியோகத்தில் கிஞ்சித்தும் அக்கறை இல்லை. நமது முன்னையை தலைமுறையில் பலர் கூட்டாக சேர்ந்து ‘எழுநா’ என்கிற பதிப்பகத்தை விரிவான வலையமைப்புடன் ஆரம்பித்தார்கள். உறுபினர்களை சேர்ந்து முற்பணம் பெற்று ஒரு தொகுதி புத்தகங்களை அச்சிட்டார்கள். அதோடு சரி அப்படியே கையைவிட்டுவிட்டுச் சென்றார்கள். மிகப்பெரிய வரலாற்றுத் துரோகம். இன்று மீண்டும் அப்படியொரு வலையமைப்பை உருவாக்க உறுபினர்களை சேர்க்கச் சென்றால் வாயிலே பனைமட்டையால் அடிப்பார்கள். இதைத்தான் நமது முன்னையை தலை நமக்குச்செய்து தந்தது.

ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை இல்லை என்று தடம் பேட்டியில் நீங்கள் சொன்னபோது ‘குணாகவியழகன்’ பேஸ்புக்கில் ஜெயமோகனோடு பகிரங்க விவாதத்திற்கு அழைப்பதாக எழுதினார். ஜெயமோகன் வரவில்லை ஆகவே அவர் தோற்றுவிட்டார் என்று ஒரு கும்பல் ஆர்ப்பரித்தது. இதையே பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் சொன்னபோது அவர்களின் குரல் எங்கே சென்றது என்று தெரியவில்லை. எல்லாவற்றுக்கும் பின்னால் இருப்பது தன் படைப்பை நிராகரித்துவிட்டார் ஜெயமோகன் என்கிற உளக்காயமே. கர்ப்ப நிலம் நாவலின் பிரான்ஸ் அறிமுக கூட்டத்தில் அமெரிக்கா திருகோணமலையை புலிகளிடம் கேட்டது;சம்மதித்திருந்தால் புலிகளை தப்பவைத்திருப்பார்கள், அதற்கு புலிகள் சம்மதிக்கவில்லையாம். காரணம் அமெரிக்கா இலங்கையின் இறையாண்மையை அழித்துவிடும்; அதனாலாயே ஒட்டுமொத்த இலங்கையை காப்பாற்ற முள்ளிவாய்காளில் புலிகள் தன்னை அழித்தது என்றார் குணாகவியழகன். இந்த முட்டாள் தனமான கருத்துக்கு எதிராக கூட்டத்தில் இருந்த எவரும் கேள்விகேட்கவில்லை. அதன் காணொளிகளைப் பார்ந்த நமது முன்னையை தலைமுறை எல்லாம் அமைதியாக அமர்ந்திருக்கின்றது.இதுதான் ஈழ இலக்கியத்தின் சமகால போக்கு. எல்லோரையும் திருப்திப்படுத்த வேண்டும் நமக்கு எதற்கு வம்பு என்கிற மனநிலை.

கன்னி, நிழலின் தனிமை போன்ற நாவல்களை வாசித்துவிட்டு பேசுவதற்கு யாருமேயில்லாமல் இலங்கையில் தவித்திருக்கிறேன்.இலக்கியம் பற்றிப்பேச நண்பர்களே அமைந்ததில்லை. அப்படி அமைந்தவர்களும் எதற்காக எழுதணும், படைப்பு என்பது இருக்கா இல்லையா என்கிற பாமரத்தனமான கேள்விகளை புதிஜீவித்தனமாக நினைத்து முன்வைப்பவர்கள்.

இன்று ஜெயமோகனுக்கு கடிதம் எழுதினாலே தீண்டதகாதவனகப் பார்கிறார்கள். அவரோடு சேராதீர்கள் என்று பாடமும் எடுக்கிறார்கள். நீங்கள் ஜெயமோகனின் சீடர் ஆகவே உங்களின் படைப்புகளை வாசிக்க மாட்டோம் என்று சொன்னவர்களும் இருக்கிறார்கள். அவர்களின் இலக்கிய ஞானம் அந்தளவுதான். அவர்களைப் பார்த்து பரிதாபம் கொள்ளவே இயலும். கவிஞர் இசை சொல்வார் எந்த வாசல் வழியாக இலக்கியத்திற்கு வருகிறோமோ அது முக்கியம் என்று. நான் ஜெயமோகன் வாசல் வழியாகவே இலக்கியத்திற்கு வந்தேன். என்னையே அடையாளம் கண்டு கொண்டேன். தத்துவம், வரலாறு என்று நான் தேட என் கையைபிடித்து அழைத்துச் சென்றவர் ஜெயமோகன் தான். அகில்குமார் எழுதிய ‘ஏன் எனக்கு ஜெயமோகனைப் பிடிக்கும்?’ கட்டுரையில் “என் அப்பா எனக்கு சோறு போட்டு வளர்த்தினார் என்றால் என் சிந்தனையை வளர்த்தியது ஜெயமோகன்தான்” என்று குறிப்பிட்டு இருப்பார்.நானும் அதைத்தான் சொல்கிறேன். இன்று எத்தனையோ தனிப்பட உளச்சிக்கல்களைக் கடந்து மீண்டு வந்திருக்கிறேன் என்றால் ஜெயமோகனின் எழுத்துகள்தான் காரணம். ஈழ இலக்கிய முன்னோடிகளிடம் இருந்து எனக்கு கற்றுகொள்ள எதுவும் இருந்ததில்லை.அ.யேசுராசாவிடம் இருந்து ஒன்றை மட்டுமே கற்றுக்கொண்டேன். அது புத்தகங்களை இரவல் கொடுக்கக்கூடாது என்பதைத்தான்.கொடுத்த புத்தகங்கள் வருவதில்லை. வந்தாலும் பலந்த சேதத்துடன் வருகின்றன.

தொடர்ந்து படைப்பூக்கத்தில் இயங்கவும், வாசிக்கவும், சூழவுள்ள சூழலையும் அப்படியான நண்பர்களுடன் இருப்பதே உகந்ததென்று நீங்கள் ஓரிடத்தில் குறிப்பிட்டு இருந்தீர்கள். ஈழ இலக்கியத்தின் சமகால போக்கைப் பற்றி வருந்தி இளங்கோ டிசேயுடன் கதைக்கும்போது அக்கூற்றையே உங்களை குறிபிட்டுச் சொன்னார். இந்தக் கூற்று எவ்வளவு உண்மை. இன்று எனக்கிருக்கும் நண்பர்களை அவ்வாறே சுருக்கி வைத்திருக்கிறேன். இப்போது இனிமையாக எழுத முடிகிறது வாசித்த புத்தகங்கள் பற்றி விவாதிக்க முடிகிறது. அனைவரும் தமிழக நண்பர்கள். வெகு சிலரே ஈழத்து நண்பர்கள்.

யாருக்காக எழுதுகிறோம்? நமது வாசகர்கள் யார் என்பதை தீர்மானித்தே எழுத வேண்டும். ஈழ எழுத்தாளர்கள் ஈழத் தமிழர்களுக்காக எழுத வேண்டும் என்கிற கருத்து சமகாலத்தில் முன்வைக்கப்படுகிறது. இலக்கியம் என்பது உலகப்பொதுவானதாகவே இருக்க முடியும். மொழி, நிலப்பரப்பு, பண்பாட்டுச் சூழலினால் இலக்கியத்தை பிரித்தாளும் அவை மானுடம் நோக்கியே பேசுகின்றது.

ஒரு தேசிய இனத்துக்காகவோ அல்லது குறிப்பிட்ட தொகுதியினருக்காகவோ மட்டும் ஒரு இலக்கிய ஆக்கம் எழுதப்பட முடியாது.அப்படி எழுதப்படின் அது பிரச்சாரமாகவே இருக்க முடியுமே தவிர கலையாக ஆக முடியாது. தன் அனுபவங்களை ஒட்டுமொத்த மானுடர்களுக்கான அனுபவமாக மாற்றி படைப்பூக்கத்துடன் வளர்த்தெடுக்கும் போதே அது மானுடர்களுக்கான தரிசனத்தை வைக்கும். அந்த இடத்திலே கலை இருக்கிறது. பண்பாட்டுச் சூழல் மீதானதும், அதன் கலாசாரம் மீதானதுமான அவதானிப்புகள் நுண்தகவல்களைக் கூட்டி படைப்பின் மெய்நிகர் வாழ்க்கையை செறிவூட்டும். அது முக்கியமான ஒன்று. தவிர அது மட்டுமே கலையாக முடியாது. தேசிய உருவாக்கத்தில் கலையை உபயோகிக்காலம், ஆனால் கலை அதற்கானது அல்ல.

வெறுமே கலாச்சார அதிர்ச்சிகளை, பண்பாட்டு மீறல்களை, கழிவிரக்கத்தை கோரும் ஆக்கங்கள் அப்பண்பாட்டுச் சூழலில் இருக்கும் அவ்வின மக்களை திருப்பிதிப்படுத்துவதாக பாவனை மட்டுமே செய்யும். அதைத் தாண்டி இலக்கியம் முன்வைக்கும் தரிசனம் ஒட்டுமொத்த மானுடர்களுக்கானது. ஒரு புனைவு எழுத்தாளனிடம் யாருக்காக எழுதுகிறீர்கள் என்ற கேள்வி முன்வைக்கப்படுமாயின்,மானுடர்களுக்காக எழுதுகிறேன் என்ற பதிலே சொல்லப்படும். இங்கே அந்தப் புரிதல் இல்லை. ஆகவே இங்கிருந்து ‘ஆதிரை’ போன்ற நல்ல படைப்புகள் வெளிவருவது அபூர்வமே.

இறுதியாக நவீன் எழுதிய கட்டுரையை பகிரும்போது நீங்கள் எழுப்பிய “அங்கே இலக்கியவாசகர் என எவரேனும் இருக்கிறார்களா என்ற ஐயத்தையே நவீன் குறிப்பு உருவாக்குகிறது” என்ற கேள்விக்கு வருகிறேன். இருக்கிறார்கள். மிகச் சொற்பமாக, அபூர்வமாக.அவர்களை தனிப்பட்ட சந்திப்புகள் ஊடகா பேசி விவாதித்துச் செல்வதே ஒரேவழி. நவீன் இலங்கைக்கு வந்தது மலேசிய நவீன இலக்கியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் என்று நினைக்கிறேன். ஆகவே சரியான வாசகர்களை பரபரப்பான பயணத்தில் இனம்காண முடியாமல் போயிருக்கலாம். வழமையான இலக்கிய விம்பத்தின் ஊடாக அறியப்படுபவர்களை மட்டுமே சந்தித்திருப்பதாக அவர் பதிவின் ஊடாக புரிந்துகொள்கிறேன். அந்தத் திரையை கிழித்து சொற்பமான நல்ல வாசகர்களை சந்திக்கவும் ஈழ இலக்கியத்திலிருந்து புதிதாக எதையும் தெரிந்து கொள்ளவும் வேண்டும் எனின் தனிப்பட்ட சந்திப்புகள் ஊடாக நகர்வதே ஒரே வழி. இங்கிருக்கும் இலக்கிய கூட்டங்கள் அதற்கான ஒன்றல்ல.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

***

naveen

அன்புள்ள அனோஜன்,

நவீனின் இலங்கை வருகை பலவகையிலும் அங்குள்ள இளைஞர்களுக்கு உத்வேகமாக இருந்திருக்கவேண்டியது. ஏனென்றால் மலேசியச்சூழலும் இலங்கைச்சூழலும் ஏறத்தாழ ஒன்று. ஆனால் மலேசியாவில் அரசு சார்ந்த அமைப்புகளின் கெடுபிடிகள், முந்தைய தலைமுறையினரின் மொண்ணையான போக்குகள், அரசியல்சரிநிலைகள் ஆகியவற்றுக்கு எதிராக நின்று வலுவான ஒரு நவீன இலக்கியச் சூழலை உருவாக்கியவர் அவர். தனிப்பட்ட முறையில் அவர் ஒரு வரலாற்றுத்திருப்புமுனை என்றே நினைக்கிறேன். எதிர்காலத்தில் அவர் அவ்வாறே கருதப்படுவார்.

நவீன் சலிப்பின்றி நம்பிக்கையுடன் செயல்படுபவர். மிகுந்த செயல்விசை கொண்டவர். அதனாலேயே மிகையாகச்சென்று பலரைப் புண்படுத்தியவர். ஆனால் அது நானும் செய்தது, செய்வதுதான். அவரைப்போன்றவரிடம் இலங்கைச்சூழலில் ஒரு நல்ல விவாதம் நிகழ்ந்திருக்குமென நான் எண்ணினேன். அவரை அவர்கள் எதிர்கொண்ட விதத்திலிருந்த சழக்குப்போக்கு பெரிய ஏமாற்றத்தை அளித்தது. அவருக்கு என்னுடைய அரசியல் கருத்துக்களுடன் முரண்பாடுகளே மிகுதி. நாங்கள் பகிர்ந்துகொள்வது இலக்கிய அழகியல்மீதான நம்பிக்கையை மட்டுமே.

ஒருவேளை போருக்குப்பிந்தைய சூழல் அவ்வாறு அவர்களை உருவாக்கியிருக்கலாம். எப்போதுமே போர்ச்சூழல் கடுமையான கருத்துக்கெடுபிடிகளை, கசப்புகளை உருவாக்கி ஒரு தலைமுறைக்காலம்வரை நிலைநிறுத்துகிறது. போர் என்பது பெருமளவில் பிரச்சாரத்தளத்திலேயே நிகழ்கிறது. போர்ப்பிரச்சார வளையத்திற்கு வெளியே சென்று சுயசிந்தனையை உருவாக்கிக்கொள்பவனே கலைஞன். ஆனால் அது எல்லாருக்கும் இயல்வது அல்ல. எளிய எழுத்தாளர்கள் அரசியல்வாதிகள் இட்ட தடத்தில் செல்பவர்களே. எளிய அரசியல்வாதிகளுக்கு அவர்களே உவப்பானவர்கள். ஊருக்கு உகந்ததைச் சொல்லும் பெருவழிச்செலவினர். பாவம், அவர்களும் வாழ்ந்துவிட்டுப்போகட்டுமே. இலக்கியத்தில் இடமில்லை என்பதால் முச்சந்தியாவது எஞ்சட்டுமே.

எழுத்தாளன் இந்த வட்டத்திலிருந்து வெளியே செல்வதே அனைத்துவகையிலும் நல்லது. புதுமைப்பித்தன் சொன்னதுபோல வாழையடிவாழையாக வந்து கொண்டிருப்பவர்களுக்காகவே எழுதுகிறேன் என்னும் பாவனை. வாசிப்புச்சூழலில் அகங்காரச்சிறுமை எப்போதும் உண்டு. இலக்கியப்படைப்புகள் அவர்களை நோக்கி எழுதப்படுவன அல்ல. அவை நூலில் இருந்து கற்பனையால் விரியக்கூடிய உள்ளம் கொண்டவர்களுக்காக, அதில் வாழ்க்கையுண்மைகளை, வரலாற்றுவிரிவை, தத்துவதரிசனங்களை தேடுபாவ்ர்களுக்காக உருவாகின்றன. அவர்களை மட்டுமே இலக்காகக் கொள்க. அவர்கள் கண்டிப்பாக தமிழில் இருக்கிறார்கள்.

உங்கள் சிக்கல் அதெல்லாம் அல்ல. அவை உங்களை பாதிக்காது. படைப்பாளி என்னும் ஆணவமே உங்களுக்குக் காப்பு. உண்மையான சிக்கல் லண்டனில் இருப்பது. தமிழ்மொழி புழங்காத பகுதியில் இருப்பது எப்படியோ படைப்பூக்கத்துக்கு எதிரானது. இலக்கியவாதி அடையும் தனிமை இருவகையானது. படைப்பூக்கம் கொண்ட தனிமை இனியது, தேவையானது. ஆனால் புறத்தனிமை சோர்வுறச்செய்வது. அதை வெல்ல திட்டமிட்டு முயலவேண்டும். பெரும்பாலான புலம்பெயர்ந்த படைப்பாளிகள் அந்தத்தனிமையை அடைந்திருக்கிறார்கள். அலக்ஸாண்டர் குப்ரின் தன் ஃப்ரான்ஸ் வாழ்க்கையில் அதைப்பற்றி எழுதியிருக்கிறார்.

தொடர்ந்து தமிழ்ப்பண்பாடு, தமிழிலக்கியம் சார்ந்த தீவிரச்செயல்பாடுகளுடன் இணைத்துக்கொள்ளவேண்டும். அவ்வப்போது எழும் சோர்வு அந்தத் தனிமையால்தான் என்பதை உணர்ந்துகொண்டோம் என்றாலே அதைத் தவிர்த்துவிடலாம். ஆனால் அந்தத் தனிமை உருவாக்கும் சோர்வினால் நாம் இயல்பாகச் செய்வது எதிர்மறையான பூசல்கள் போன்றவற்றில் ஈடுபடுவது. அது நம்மை விசையுடன் இழுத்து வைத்திருக்கும். வம்பர்கள் தாங்கள் புழங்கும் சிற்றுலகில் அனைவரை இழுத்துப்போட்டு கவ்வி வைத்திருக்க இடைவிடாமல் முயல்பவர்கள். ஒருமுறை அவர்களைத் தொட்டால் அவர்களிடமிருந்து விலகவே முடியாது. அது ஒருவகை தனிமைநீக்கிதான். ஆனால் உள்ளூர படைப்பூக்கத்தை இல்லாமலாக்கிவிடும். நல்ல எழுத்தாளனுக்கு இளங்காதலனுக்கே உரிய எண்ணி எண்ணி உள்ளூர மகிழும் ஒர் அகவாழ்க்கை அமைந்திருக்கவேண்டும். புலம் பெயர் வாழ்வில் அந்த அக இனிமை இல்லாமலாகமல் கவனம் கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.

ஜெ

***

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-17
அடுத்த கட்டுரைகவிதை மொழியாக்கம்- வெ.நி.சூரியா கடிதம்