கடிதங்கள்

தனிமையும், சில முறை வந்துபோகும் மன இறுக்கமும் போக நான் செய்வது உங்கள் நகைச்சுவைக் கட்டுரைகள் படிப்பதே. (கோபால் பல்பொடி விளம்பரம் மாதிரி ஒலிக்கிறது – பரவாயில்லை).

இங்கே மும்பையில் என் அறை முழுவதும் மரச் சட்டத்தால் மறைக்கப் பட்டது. உள்ளே அமர்ந்து கட்டுரைகளைப் படித்து, வெடித்துச் சிரித்துக் கொண்டிருந்த போது, கணக்கு உதவியாளப் பெண் ஊழியர் சட்டென்று கதவைத் திறந்து, ஒரு கணம் உறைந்து விட்டார். எப்படிச் சொல்வேன் – நான் என்ன செய்து கொண்டிருக்கின்றேன் என்று.. விரைவில் மீண்டும் துவங்க ஆண்டவன் அருள் புரியட்டும்.

ஒரு தர்மசங்கடமான நிலையில், கோவை வரமுடியாமல் உள்ளேன். மன்னிக்க

பாலா

அன்புள்ள பாலா

நான் என்னுடைய தனிமையையும் இறுக்கத்தையும் இந்த நகைச்சுவைக்கட்டுரைகளை எழுதித் தீர்த்துக்கொள்கிறேன், அவ்வளவுதான்

ஜெ

அன்பின் அண்ணன் ஜெ.மோ,

தங்களின் “ஆ.மாதவன்” குறித்த மாதவம் என இரண்டு கட்டுரையையும் வாசித்தேன். கடைத்தெருவின் கலைஞன் எனும் ஆ.மாதவன் பற்றி நீங்கள் எழுதியிருக்கும் நூலான “கடைத்தெருவின் கலைஞன்”-ஐ படிக்க ஆவலைத் தூண்டிய கட்டுரை இது. தொடரட்டும்.

இது போன்று உங்களின் எழுத்தால் பாதிக்கப்பட்ட ஓரு வாசகன் உங்களைத் தேடி வந்து உரையாடிய ஏதாவது ஒரு வித்தியாசமான தருணம் ஏற்பட்டதுண்டா? அப்படி ஒரு வாசகனை நீங்கள் எதிர்க்கொள்ளும் விதம் எப்படி இருக்கும்?

கே.பாலமுருகன்
மலேசியா
http://bala-balamurugan.blogspot.com/

அன்புள்ள பாலமுருகன்

அனேகமாக வாரத்துக்கு ஒருமுறை அப்படி ஒருவரைச் சந்திக்கிறேன். ஆழமான பாதிப்புடன் என்னைத் தேடி வருபவர்களில் இலக்கிய வாசகர்கள் அளவுக்கே இந்திய ஞானமரபின் மாணவர்களும் உண்டு என்பதே வேறுபாடு. அவர்களிடம் நான் சிறப்பாக எதையும் பேசுவதில்லை. சாதாரணமாக இருப்பேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் விரிவாகப்பேசும் மனநிலையில் இல்லாதவர்கள் என்பதனால் கொஞ்சம் அதிகப் படியான சகஜ மனநிலையில் இருப்பார்கள்.

இவ்வாறு அறிமுகமானவர்கள் ஆரம்பத்து தயக்கம் முடிந்தபின் நல்ல நண்பர்களாக ஆகியிருக்கிறார்கள். எல்லாவித உரிமையும் உடைய அத்தகைய நண்பர்களின் எண்ணிக்கை பெருகி இன்று பல ஊர்களிலாக விரிந்து கிடக்கும் ஒரு நண்பர் தொகையாக மாறிவிட்டிருக்கிறது

ஜெ

அன்பின் ஜெயன்

தமிழில்தான் உங்களுக்கு எழுத வேண்டும் என்ற பிடிவாதத்தினால் இவ்வளவு காலமும் அஞ்சல் எழுதவில்லை. கூகுளின் உதவியினால்

தமிழில் எழுதுகிறேன்.

உங்களைத் தொடர்ந்து வாசித்து வரும் வாசகி நான். இலக்கியத்தில் முறையான பயிற்சியும் பழக்கமும் இல்லை. தொழில் முறையிலும் எனது துறை வேறு. சமீபத்தில் அ.முத்துலிங்கம் அவர்களுக்கு அஞ்சல் அனுப்பினேன். கணக்காளர்கள் வாசிப்பதே அதிசயந்தான் என்று பதில் அனுப்பியிருந்தார். அது உண்மைதான். வசிக்கும் பழக்கம் மட்டும் இல்லாவிட்டால் வெறும் கணினியாகவே மாறியிருப்பேன்.

உங்களிடமிருந்துதான் நான் மற்ற எழுத்தாளர்களைத் தெரிந்து கொண்டேன். அ.முத்துலிங்கமும் நாஞ்சில் நாடனும் அதில் மிக முக்கியமானவர்கள். இப்போது ஆ.மாதவன். உங்கள் இணையம்தான் என் இலக்கிய உலகத்தின் வாசல்.

அண்மையில் மிகவும் நோய் வயபட்டு இருந்தேன். நோயும் வலியும் தனிமையை உணரச் செய்யும். உடலின் நோய் மனதையும் வலிமை இழக்க செய்யும். தவிர்ப்பதற்கு நான் செய்வது வாசிப்பதுதான்.

உங்கள் சிறுகதைகளிலேயே எனக்கு மிகவும் பிடித்தவை லங்கா தகனமும் பத்மவியூகமும். எத்தனை முறை வாசித்தாலும் புதுமையான அனுபவத்தை தருபவை. அண்மையில் மீண்டும் வாசித்தேன்.

“வெற்றியின் மலர்களில் ஒன்றில் பூநாகம் புகுந்து கொண்டு விடுகிறது.

தோற்றவர்களுக்கோ இழப்பதற்கு ஒன்றுமில்லை. கனவுகளும் மீதம் இருக்கும்.”

எத்தனை முறை வாசித்தாலும் புதிய அர்த்தங்களைத் தருபவை. ஜெயன் எங்கள் காலத்தின் மகத்தான எழுத்தாளர் நீங்கள். மொழியை அதன் உச்சத்திற்கே கொண்டு சென்று விட்டீர்கள். ஒரு நாள் இரவு மகாராஜபுரத்தின் மதுர மதுர கேட்டேன். மூச்சு நின்று போய்விடும் போல் இருந்தது. அதற்கு மேல் எதையும் கேட்க பிடிக்காமல் சும்மா இருந்தேன். உங்கள் எழுத்தும் அந்த அனுபவத்தை தரும்.

பாரதியின் வரலாறு பதிவு வாசித்தேன். பாரதியின் வரலாற்றை ராஜம் கிருஷ்ணன் “பாஞ்சாலி சபதம் பாடிய பாரதியார்” என்ற தலைப்பில் எழுதியிருந்தார். பாரதியின் பலம் பலவீனம் இரண்டையுமே எழுதியிருந்தார். வாசிததிருக்கிறிர்களா?   யாழில் நான் தொலைத்தவற்றில் அப்புத்தகமும் ஒன்று. எங்கு தேடியும் வேறு புத்தகம் கிடைக்கவில்லை.

எனது சுகவீனத்தால் இந்த வருடம் இந்தியாவிற்கு வர முடியவில்லை. புத்தகக் கண்காட்சியையும் பார்க்க முடியவில்லை. அடுத்த வருடம் பார்ப்போம்.

எனது மகள் நல்ல வாசகி. ஆனால் ஆங்கில புத்தகங்களைத்தான் விரும்பி படிக்கிறாள். அவளுக்கு வயது 11. Harry Potter, Anne of Green cables போன்ற புத்தங்களை மெதுவாகத் தாண்டி வருகிறாள்.பொன்னியின் செல்வனை ஒரே மூச்சில் முடித்து விட்டாள். நா.பா வும் அகிலனும் அவளுக்குப் பிடிக்கவில்லை. உங்கள் சங்கச்சித்திரங்களை அறிமுகம் செய்திருக்கிறேன். அவளுக்குத் தமிழில் படிக்க என்ன புத்தகங்களை கொடுக்கலாம்?

உங்கள் துணைவிக்கும் குழந்தைகளுக்கும் எனது அன்பைத் தெரிவியுங்கள்.

அன்புடன் கலா

அன்புள்ள கலா,

குழந்தைக்கதைகளைத் தாண்டி வாசிக்க ஆரம்பிக்கும் பிள்ளைகளை அவர்களின் மனது எந்தத் திசையில் செல்கிறது என கவனித்து நூல்களை அறிமுகம்செய்ய வேண்டும். குறிப்பாக நூல்களை உள்வாங்குவதற்குரிய ஒரு சின்ன முன்னுரை விளக்கத்தை அவர்களுக்கு அளிக்கலாம். நூலின் சமூகப்பின்னணி, அந்நூலின் அமைப்பு பற்றிய பொதுவான தகவல்கள் ஆகியவற்றைப்பற்றிக் கொஞ்சம் பேசிப் பிள்ளைகளின் ஆர்வத்தை உருவாக்கிய பின்னர் நூல்களுக்குள் கொண்டு செல்வது நல்லது. பல நூல்களுக்குள் குழந்தைகள் இயல்பாகச் செல்லமுடிவதில்லை.

பதினொரு வயது பெண்குழந்தை என்றால் தமிழில் பெரிய நாவல்களை நோக்கியே செல்லமுடியும் என்று படுகிறது. பொன்னியின்செல்வன் வாசித்துவிட்டாள் என்றால் சாண்டில்யன் நாவல்களுக்குச் செல்லலாம். ஆனால் பெண்குழந்தைகளுக்கு அந்த சாகசங்கள் சிலசமயம் பிடிப்பதில்லை. அப்படியானால் தில்லானா மோகனாம்பாள். [கொத்தமங்கலம் சுப்பு]

நாம் ஒரு நூலின் முக்கியத்துவத்தை எப்படி முன்வைக்கிறோம் என்பதே முக்கியம். தில்லானா மோகனாம்பாளை இன்றைய குழந்தையிடம் எப்படி முன்வைப்பது? அது அவளுடைய சொந்த பண்பாட்டில் இன்று காலாவதியாகிப்போன ஒரு காலகட்டத்தை காட்டுகிறது. அவளுடைய பண்பாட்டின் இன்றியமையாத ஒரு பகுதியாகிய இசையின் மரபு என்ன என்று விளக்குகிறது. எப்படி ழீன் கிறிஸ்தோஃப் பிரெஞ்சு இசையுலகை காட்டுகிறதோ அதேபோல இதுவும் தமிழ் இசையுலகை ஓரளவு காட்டுகிறது. இந்த முன்னுரையுடன் அதை அளித்தால் பிள்ளைகள் எளிதாக, ஆர்வத்துடன் உள்ளே செல்லும்.

நவீன இலக்கியங்களையேகூட அறிமுகம் செய்யலாம். பாலியல் சிக்கல்களை, உறவுச் சிக்கல்களை அவ்வயது புரிந்துகொள்ளாது. அவை இல்லாத நேரடியான கதை சொல்லும் போக்குள்ள நாவல்கள் வாசிப்புக்குரியவை.

உதாரணமாக சுந்தர ராமசாமியின் ‘ஒரு புளியமரத்தின் கதை’. அவ்வயதில் சிறுவர்களுக்கும்கூட மிகுந்த ஆர்வமூட்டும் வாசிப்பை அது அளிக்கிறது என்பதை கவனித்திருக்கிறேன்.

அதேபோல தமிழ் வழியாக இந்திய நாவல்களை குழந்தைகளுக்கு அறிமுகம் செய்யலாம். அவற்றை ஆங்கிலம் வழியாக அறிமுகம் செய்வதைவிட இது இன்னும் நெருக்கமானது -நல்ல ஆங்கில மொழியாக்கங்களும் கிடைப்பதில்லை. உதாரணமாக பாதேர்பாஞ்சாலி, வனவாசி முதலிய நாவல்கள் பிள்ளைகளிடம் பெரிய கனவை உருவாக்குபவை.

இளம்பருவ வாசிப்பைக் கடந்து வரும் குழந்தைகளுக்குக் கிளாசிக்குகளை நேரடியாக அறிமுகம் செய்து, அவர்கள் வணிக எழுத்துக்குச் செல்லாமல் தடுப்பது நல்லது என்று நித்ய சைதன்ய யதி சொல்வதுண்டு. நான் அதை என் பிள்ளைகள் விஷயத்தில் செய்தேன். சைதன்யா சென்ற விடுமுறையில் தல்ஸ்தோயின் போரும் அமைதியும் நாவலை உணர்ச்சிப்பரவசத்துடன் வாசித்து முடித்தாள். ஆனால் அதற்கு 14 வயதாவது ஆகியிருப்பது நல்லது என்று எனக்குப்படுகிறது.

ஜெ

என் சிபாரிசு

தமிழ் இலக்கியத்தில்

தில்லானா மோகனாம்பாள் [கொத்தமங்கலம் சுப்பு]
திருவரங்கன் உலா [ஸ்ரீவேணுகோபாலன்]
கன்னிமாடம் [சாண்டில்யன்]
மன்னன் மகள்[சண்டில்யன்]
பாதையில் படிந்த அடிகள்[ராஜம் கிருஷ்ணன்]*
மணிபல்லவம் [நா பார்த்தசாரதி]

நவின இலக்கியம்

ஒரு புளியமரத்தின் கதை [சுந்தர ராமசாமி]*
கோபல்ல கிராமம் [ கி ராஜநாராயணன்]*
தலைமுறைகள் [நீலபத்மநாபன்]
வாடிவாசல் [சி சு செல்லபபா]
பதினெட்டாவது அட்சக்கோடு [அசோகமித்திரன்]
தலைகீழ்விகிதங்கள் [நாஞ்சில்நாடன்]
ஒருமனிதன் ஒருவீடு ஓர் உலகம்[ஜெயகாந்தன்] *

மொழியாக்கம்

செம்மீன் [ தகழி சிவசங்கரப்பிள்ளை]
தோட்டியின் மகன் [தகழி சிவசங்கரப்பிள்ளை]
ஒரு கிராமத்தின் கதை [ எஸ் கெ பொற்றேக்காட்]
இரண்டாம் இடம் [எம் டி வாசுதேவன்நாயர்]
பாதேர்பாஞ்சாலி [விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய]*
வனவாசி [விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய]*
ஆரோக்ய நிகேதனம் [ தாரசங்கர் பானர்ஜி]
ஒருகுடும்பம் சிதைகிறது [எஸ் எல் பைரப்பா]
கோதானம் [பிரேம்சந்த்]*

நட்சத்திரமிட்டவற்றைச் சிறப்பாகச் சிபாரிசு செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா பதிவுகள்