மோவாயிசம்

ru

 

பல பிற இசங்களைப்போலவே மோவாயிசத்துக்கு பிறந்த இடமும் பிரிட்டன்தான். ஆனால் அதை நடைமுறைக்காக கறந்த இடம் சீனா. ஆகவே உலகம் முழுக்க சீனாவையே இதற்கு மூலமாகக் கொள்வது இயல்பே. ’பிறந்திடத்தை நாடுதே பேதை மடநெஞ்சம் கறந்திடத்தை நாடுதே கண்’ என்று சான்றோர் சொன்னதை கூர்க. இன்று உலகமெங்கும் கற்றோர் மற்றும் காசுள்ளோரிடம் செல்வாக்குடன் இருக்கும் மோவாயிஸம் உலகின் மிகப்பிரபலமான இசங்களில் ஒன்று என்றால் மிகையல்ல.

பதினேழாம் நூற்றாண்டு இங்கிலாந்தில் நீளமான கழுத்தே அழகெனக் கொள்ளப்பட்டது. காரணம் ஆங்கிலோ சாக்ஸன்களுக்கு பொதுவாக நீளமான கழுத்து இருந்தது. ஆங்கிலோ சாக்ஸன்கள் இங்கிலாந்துக்கு குடியேறியவர்கள். ஒரு நாட்டில் குடியேறியவர்கள் அந்நாட்டு பூர்வகுடிகளை விட இனமேன்மை கொண்டவர்கள் என்ற உயிரியல் உண்மை ஆங்கிலோ சாக்சன்களால் நிறுவப்பட்டது. ஆகவே நீள்கழுத்து உயர்வானதாகவும் அழகானதாகவும் எண்ணப்பட்டது.

அக்கால இங்கிலாந்தில் மேல்சட்டைகளில் ரஃபிள் [ruffle] என்று அழைக்கப்பட்ட குட்டைத்துணியை கழுத்தைச்சுற்றி வரும்படி அமைக்கும் வழக்கம் இருந்தது. அந்த சட்டையானது பற்பல மடிப்புகளுடன் உடலோடு ஒட்டியதாக இருக்கும். இந்த ஆடை கெமீஸ் என்று அழைக்கப்பட்டது.அக்கால அகராதி ஒன்றில் அது ’கனவான்கள் படுக்கையில் கடைசியாக கழட்டும் ஆடை’ என்று அர்த்தம் அளிக்கப்பட்டிருந்தது. இது கெட்டஅர்த்தம் அளிக்கலாமென்பதனால் ’படுக்கையில் இருந்து எழுந்ததும் முதன்முதலாக அணிவது’ என்று திருத்திக்கொள்ளும்படி மேன்மைதங்கிய மகாராணியின் ஆணை இருந்திருக்கிறது.

கெமீஸ் என்ற சொல்லின் மூலத்தை தேடிச்சென்றால் கெமிசியா என்ற இத்தாலியச் சொல்லைச் சென்றடைகிறோம். அது அதே சொல்லால் ஆன லத்தீன் சொல்லில் இருந்து வந்தது. அந்த லத்தீன் சொல்லுக்கு குஆமிஸ் என்ற அராபிய சொல்லும், அதற்கு கமீஸ் என்ற பாரசீகச் சொல்லும், அதற்கு வேறு எழுத்துக்களில் கமீஸ் என்றே ஒலிக்கும் இந்தி சொல்லும், அதற்கு அந்த ஆடையும் மூலமாக இருந்துள்ளதை சரித்திரம் காட்டுகிறது.

மொகலாய ஆட்சிக்காலத்தில் சேடிப்பெண்கள் அணிய எளிதில் கழற்றும்படி ஒரு ஆடையை கண்டுபிடிக்கும்படி மாமன்னர் ஷாஜகான் ஆணையிட்டதாகவும் அரசவை ஆடைநிபுணர் மொகம்மது அல் மொகம்மது அதை வடிவமைத்ததாகவும் அவருக்கு டெல்லி அரண்மனையின் மாபெரும் தூண்களுக்கு சுற்றப்பட்டிருந்த பட்டுத்திரை தூண்டுதலாக இருந்ததாகவும் சரித்திரம் சொல்கிறது. அந்த ஆடையில் கழுத்தில் அணியப்பட்டிருந்த ஒரு பட்டியில் முகவாயருகே அமையும் ஒரு முடிச்சை மாமன்னர் இழுத்ததும் ஆடை ஒட்டுமொத்தமாக விலகும் பண்புநலன் கொண்டதாக இருந்தது. ஆட்சியாளர்கள் சிலைகளை திறந்து வைக்கும் மரபு இவ்வாறுதான் உருவாகியது.

அந்த பட்டியும் முடிச்சும் முறையே பாரசீகம் அரேபியா வழியாக இத்தாலி சென்று இங்கிலாந்துக்கு வந்தபோது அதற்கு இங்கிலாந்தில் பெருத்த வரவேற்பிருந்ததில் ஆச்சரியமில்லை – ஏனென்றால் இதற்கெல்லாம் யாரும் ஆச்சரியம் கொள்வதில்லை. இந்தபட்டியை அங்கிலேய ஆடைநிபுணர்கள் பலவாறாக ஆய்வுசெய்தபின் அதை ரஃப் [ ruff ]என்ற கழுத்தாடையாக மாற்றிக்கொண்டார்கள். தாடையாடை என்பதும் பொருத்தமே. இது மனிதர்களின் கழுத்தைசுற்றி வட்டமாகவோ அல்லது சாத்தியமான பிற வடிவங்களிலோ அமையும்.

ஆண்கள், பெண்கள் மற்றும் மதகுருக்கள் இந்த ஆடைத்துணுக்கை அணிந்தார்கள். மேலிருந்து பார்க்கும் தேவதூதர்களுக்கு மனித உடல் தெரியாமல் தலைமட்டும் ஒரு தாம்பாளத்தில் தெரிவது போல தோன்றவேண்டுமென்பதே இதன் இறையியல் விளக்கமாகும். போதையில் சிந்தும் மது ஆடையில் விழாமல் தடுக்கிறது என்பது நடைமுறை விளக்கம்

ரஃப்-ஐ முடிந்த வரை பெரிதாக அணிவதை பதினாறாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் குடிகள் குடிப்பெருமிதமாக கருதினார்கள். ஆங்கில அரசைக் கைப்பற்றிய ஆங்கிலோ சாக்ஸன்கள் இதை ஒரு போட்டியாக முன்னெடுத்தனர். நீளமான கழுத்து காரணமாக பிறர் அவர்களிடம் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டது. அக்காலத்தில்தான் போர்ரிஜ் எனப்படும் ஓட்ஸ்கஞ்சியை போதையில் ரஃப் மீது கொட்டிக்கொண்ட விஞ்செஸ்டர் கோமகனின் சலவைக்காரர் ஒருவர் ஆடைகளுக்கு கஞ்சி போடுவதை கண்டுபிடித்தார். அதன் பின்னர் ரஃப்கள் மேன்மேலும் ஆண்மை கொள்ள ஆரம்பித்தன.

ஒரு தர்மசங்கடமான சந்தர்ப்பத்தில் தன் ஆசைக்கிழத்தி தன்னைப்பற்றிச் சொன்ன சொற்றொடர் ஒன்றில் இருந்து ரஃப்களுக்குள் ஏன் கம்பு அல்லது சிம்பு வைத்துக் கட்டக்கூடாது என்ற எண்ணத்தை அடைந்த கோமகன் ஒருவர் அதில் இறங்க ஒரு கட்டத்தில் ரஃப் இரண்டடி அகலத்தைக்கூட எட்டியது. இதில் வண்டிச்சக்கர ரஃப் என்ற ஒன்று பிரபலமாக இருந்தது. மழையில் நனைந்து சென்றால் உடலில் ஒரு துளி நீர் படாது என்பது இதன் சிறப்பியல்பு

பதினாறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் ரஃப் காலராக உருவம் மாறியது. காலரை கஞ்சிபோட்டு விரைப்பாக்கி கழுத்தைச்சுற்றி நிறுத்திக்கொண்டார்கள். கம்பிகள் மூலம் அவை மோசமான வானிலையிலும் தாக்குப்பிடிக்கச் செய்தார்கள். இக்காலகட்டத்தில் ஆங்கிலோ சாக்ஸன்கள் மற்ற இனங்களில் பரவி ஊடுருவிவிட்டிருந்தமையால் நீள்கழுத்து இனமேன்மையாக அமையாது போய்விட்டதென்றாலும் உயரமான காலர் மேட்டிமைச்சின்னமாக நீடித்தது.

உயரமான காலர் அமைத்துக்கொண்ட மனிதர் கழுத்தை வளைக்க இயலாது. அவரது மோவாய் முடிந்தவரை மேலே தூக்கி இருந்தாக வேண்டியிருக்கிறது. பின்னர் காலர் இல்லாதபோதுகூட இவ்வாறு மோவாய் மேலே தூக்கி இருப்பது உயர்குடிப்பிறப்பாக கருதபட்டது. பிற்பாடு இது பெருமிதத்தின் உடல்மொழியாகியது. நாட்டுப்பற்றுக்கு அடையாளமாக மாறியது. முகவாயை உயரதூக்கியபடி போரில் சாவதே சிறந்த பிரிட்டிஷ் வீரனின் பிறவிப்பயன் என்று எண்ணப்பட்டது.

ஆனாலும் ஆங்கிலத்தில் இதை ஒரு சொலவடையாக ஆக்கியது பென்சில்வேனியா செய்தியிதழான த ஈவினிங் டெமகிராட் என்றும் 1900த்தில் அது வெளியிட்ட கட்டுரை ஒன்றில் Keep your chin up என்ற சொல்லாட்சி பயன்படுத்தப்பட்டிருந்ததாவும் கலைக்கலஞ்சியம் சொல்கிறது. ஆச்சரியகரமாக இங்கே அது ஒரு ஆரோக்கிய குறிப்பாகவே பயன்படுத்தப்பட்டது. அன்றைய அமெரிக்கச்சாலையில் ஒருவர் மோவாயை தூக்கியபடி தூரத்தை மட்டுமே பார்த்து நடந்தால் நாற்றமடிக்கும் தரையின் சேற்றை பாராமல் வந்து விடமுடியும். அவ்வாறு செல்பவரே மேல்குடி என்று கருதப்பட்டது.

இவ்வாறு மோவாயை மேலே தூக்குவதற்காக சின் அப் என்ற உடற்பயிற்சிமுறை கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கம்பியைப்பிடித்தபடி எம்பி உடலைதூக்கி மோவாயை அதற்கு மேலே எழுப்ப முயல்வது இது. பிரிட்டிஷ் ராணுவத்துக்கு அளிப்பப்பட்ட இப்பயிற்சி உலகமெங்கும் பரவலாகியது.

இவ்வாறுதான் மோவாயிசம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஒரு சிந்தனைப்போக்காக உருவம் கொண்டது. ஒரு கோட்பாடாக இதை இவ்வாறு வகுக்கலாம் ‘சிறிய விஷயங்களை முழுமையாக உதறிவிட்டு தனக்குரிய பெரிய விஷயங்களில் மட்டுமே ஈடுபடும் பெரியமனிதப்போக்கு’ இதை ‘தொலைவை மட்டும் பார்த்து வழியில் தடுக்கிவிழும் போக்கு’ என்றும் சொல்வதுண்டு.

ruff

மோவாய் தமிழிலே நாடி என்று சொல்லப்பட்டிருக்கிறது. நாடிவாதம் என்று தொல்தமிழர் இதை வழங்கினர். உலகில் உள்ள எல்லாவற்றைப்பற்றியும் பேசியிருக்கும் தொல்தமிழ் முதனூலான குறளில் இதைப்பற்றி சொல்லப்பட்டிருப்பதில் ஆச்சரியமில்லை. தமிழெதிரிகளின் ஆச்சரியம் கணக்கில் கொள்ளப்படாது. ’நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்’ என்கிறார் செந்நாப்போதார்.

’நாடியை தூக்கி வைத்துக்கொள்ளுதல் என்பது ஒரு நோய். அந்த நோய்க்கு ஆதாரமாக இருப்பது மோவாயே. அந்த மோவாயை தாழ்த்திக்கொள்வதற்கு அவசியமாக இருப்பது மனிதனின் வாய். அந்த வாயை வாய்ப்புள்ள அளவில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ இதுவே இக்குறள் கூறும் பொருளாகும். குறளாசிரியர் மோவாயிசத்தை ஒரு தீங்கெனவே எண்ணினார் என்பதும் அதற்கு வாயைப்பயன்படுத்தும்படி சொன்னார் என்பதும் தெளிவு. வாயை எப்படி பயன்படுத்துவதென்று அவர் சொல்லவில்லை. அதை நாம் சித்த மருத்துவத்திலேயே தேடவேண்டும்.

மோவாயிசம் இந்திய மரபில் பல வடிவங்களில் இருந்துள்ளது. சமூக வாழ்க்கையில் இதன் வண்ணங்கள் பல நடைமுறைகளாக நீடிக்கின்றன. தமிழ்நாட்டில் மோவாயை தூக்குவதற்காக மேல்துண்டு பயன்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றிலைச்சாற்றை முன்வாயில் கீழுதட்டுக்கிண்ணத்தில் தேக்கிக்கொள்வதும் பண்ணையார்களிடம் வழக்கமாக இருந்திருக்கிறது. நள்ளிரவில் குடைபிடிப்பதும் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததற்கு ஆதாரம் உள்ளது.

அறிவுலகில் மோவாயிசத்தின் செல்வாக்கைப்பற்றியே நாம் மையமாக கருதவேண்டும். தமிழில் நெடுங்காலம் இலக்கணமே மோவாயிசத்தின் ஆயுதமாக இருந்தது. இலக்கியத்தின் எல்லா பாடுபொருட்களையும் திருணமாக கருதி காலெடுத்து வைத்து செல்வதுதான் அறிஞர்வழக்கம். இதற்கு தொல்காப்பியர் எழுதிய தொல்காப்பியம் பயன்பட்டது. ஆகவே தொல்காப்பியருக்கு திருணதூமாக்கினி என்ற பெயர் அளிக்கப்பட்டிருந்தது. இந்நூல் அறிஞர்களுக்கு மட்டும் அவர்கள் விரும்பிய பொருளை அளிக்கத்தக்கதாக இருந்தது.

பின்னர் இந்நூலின் நடையை ஒட்டி ஒரு நடை உருவாக்கப்பட்டது. இதை மோவாயிச தமிழ்நடை என்று சொல்லலாம். ‘கொடிதாகிய புலியின் உருவொப்ப வேங்கை பூத்ததென்றதனை களவின்கட் பெறாநின்ற இன்பம் நீங்குதலிற் கொடிதுபோற் றோன்றி கற்பின்கண் இல்லறப் பயனொடு கூடிப் பேரின்ப நுகர்வுகிடமாகுந் தன்மையினாற்..’ என்று செல்லும் நூல்களை மோவாயை தூக்கி வைத்தாலொழிய வாசிக்க இயலாது. வாசிப்பவர் மோவாயும் மேலே செல்லும் என்பர்.

வடமொழியில் மோவாயிசம் பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. வடமொழியே மோவாயிசமாக பின்னர் விளங்க ஆரம்பித்தது. இது மணிப்பிரவாளம் என்று தமிழில் சொல்லப்பட்டது. ‘அநாதிக்காலம் திறந்து கிடந்த வாசலெல்லாம் நுழைந்து எல்லாராலும் பரிபூதனான நான் தேவரீர் உகந்து தொட்டாலும் எதிர்த்தலைக்கு அகத்தியை விளைவிப்புக்கும் நிஹீதயை உடைய நான்…’ என்று இம்மொழி நீளும்.

பின்னர் தமிழில் நவீன இலக்கியங்கள் தோன்றலாயின. இவற்றில் நவீன மோவாயிசம் ஒன்று உருவாகி வந்தது. இதன் பிறப்பிடம் சென்னை பல்கலைகழகம் என்று வரலாற்றாசிரியர்கள் சொல்வதுண்டு. அங்கே வெள்ளைய ஆசிரியர்கள் உள்ளூர் மாணவர்களுக்கு ஆங்கில இலக்கியத்தைச் சொல்லிக்கொடுத்தார்கள். ஷேக்ஸ்பியரையும் கூல்ரிட்ஜையும் மோவாயை தூக்கியபடி சொன்னால் மட்டுமே அழகாக இருக்கும் என்பது பிரிட்டிஷ் அழகியல் கோட்பாடு. அவ்வாறு மோவாயிசத்தை பழகியவர்கள் தமிழையும் அவ்வண்ணமே கற்று எழுத ஆரம்பித்தபோது புதுவகை மோவாயிசம் உருவாகியது.

rug

இத்தகைய மோவாயிசம் இட்டிலித்தட்டில் இடியாப்பம் பிழிந்தது போன்ற மொழிநடை ஒன்றை உருவாக்கியது, ஆங்கிலத்தில் பிழிந்த தமிழ். சிக்கலை விடுவிக்காமல் அப்படியே சாப்பிடவேண்டும் என்று தெரியாத பாமரர்கள் இருட்டில் முட்டிமோதுகையில் மோவாயிசர்கள் மகிழ்ச்சியாக இதில் திளைத்தார்கள். ’ஒர் எழுத்து எந்த அளவுக்கு புரியாமல் போகிறதோ அந்த அளவுக்கு அது பன்முக அர்த்தங்களை அடையும்’ என்ற தேற்றம் செல்வாக்கு பெற்றது. படிமம், அழகியல் என்று இவர்களுக்கென தனியான கலைச்சொற்கள் உண்டு.

இவர்களைப்பற்றி ‘ஊருக்குநாலுபேர்’ என்ற பிரபல நவீனம் எழுதப்பட்டிருக்கிறது. ஊர் என்றால் இங்கே மாவட்டம் என்று பொருள்படுகிறது. ’அந்த நாலுபேருக்கு நன்றி’ என்ற உருக்கமான பாடல் இவர்களைப்பற்றியதே. இவர்கள் மூக்கருகே முலை போட்ட படம் அச்சடிக்கப்பட்ட சிற்றிதழ்களில் எழுதினார்கள். இந்த மொழியில் பற்பல பரிசோதனைகள் செய்யப்பட்டன. அவற்றின்மூலம் இருந்தபெரும் தமிழணங்கை பல்வேறு யோகாசன நிலைகளில் குந்தச்செய்தனர்.

மோவாயிசத்தில் பிற்போக்கு முற்போக்கு என்று இரு மரபுகள் உண்டு. முதலாளிகளை ஒழித்து தொழிலாளர்களின் சர்வாதிகாரத்தை உருவாக்குவதற்காக உழைக்க முன்வந்த முதலாளிவீட்டு பிள்ளைகளால் இந்தியாவில் மார்க்ஸியம் அறிமுகம்செய்யப்பட்டது. இவர்கள் லண்டனில் பார் அட் லா படிக்கச்சென்றபோது பூங்காப்பிரசங்கங்கள் வழியாக அதை கற்றார்கள். இங்கே வந்து ரயிலை கவிழ்ப்பது, கறுப்பு டீ சாப்பிடுவது, தொழிற்சங்கம் நடத்துவது, ஆங்கிலநாளிதழ்களை நடத்துவது, பாராளுமன்றம் செல்வது, அரசுகளை ஆள்வது முதலியசெய்கைகள் வழியாக இவர்கள் அதை பரப்பினார்கள்

இந்த தரப்பு தங்களை முற்போக்கு என்று சொல்லிக்கொண்டது. முற்போக்காக இருக்கும்பொருட்டு இவர்கள் சிலரை பிற்போக்கு என்று திட்ட ஆரம்பித்தார்கள். இவ்வாறு மோவாயிசத்தில் உருவான பிரிவினை சிந்தனையில் பெரும் பிளவாக மாறியது. முற்போக்கு மோவாயிசம் கோட்பாட்டுமொழியை உருவாக்கியது. அதற்கு வர்க்கம், உபரி, பாட்டாளி, அடிக்கட்டுமானம் போன்ற பல புது கலைச்சொற்கள் உருவாகி வந்தன. அடிக்கட்டுமானத்தை கோவணம் என்று புரிந்துகொள்பவர்கள் பாட்டாளிகள். அது மேல்கட்டுமானத்துக்கு அடியில் இருப்பது என்று புரிந்துகொள்பவர்கள் கட்சித்தோழர்கள்.

ஆனால் மேல்கட்டுமானத்தை சொந்தமாக புரிதலுக்கு ஆளாக்குபவர்கள் தோழர்களால் லும்பன்கள் என்று வையப்பட்டார்கள். நாளடைவில் கலைச்சொற்கள் பிறருக்கு புரிய ஆரம்பிக்கும்போது அவற்றை மாற்றி விடுவது முற்போக்கு மோவாயிசத்திலும் வழக்கம்தான். பிற்போக்கு முற்போக்கு மோவாயிசங்கள் கலைச்சொற்களை ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்வதுமுண்டு. சோஷலிச யதார்த்தவாதம் போன்று உலோகக்கலவைகள் இவ்வாறு உருவாகி வந்தன.

மோவாயிசத்தின் கடைசி நிலை என்று சொல்லப்படுவது முற்போக்குக்கும் முற்போக்கு. இவர்களின் வழி நேரடிப்புரட்சியாகும். இது காடுகளுக்குள் செய்யப்படுகிறது. காடுகளுக்குள் பழங்குடிகள் மட்டும் இருப்பதனால் அவர்களைக்கொண்டு இது நிகழ்த்தப்படுகிறது. அதற்கு முதலில் கோட்பாட்டுப்பயிற்சி அளிக்கப்படுகிறது. கோட்பாட்டின் மையம் துப்பாக்கியின் விசை. அதை சுட்டுவிரலால் அழுத்துவதே கோட்பாட்டுச் செயல்பாடு. துப்பாக்கிமுன் எவர் நிற்கவேண்டும் என்பதை தலைமை முடிவுசெய்கிறது. தலைமையை கேள்விகேட்காமல் அங்கீகரிப்பது தொண்டர்கள் துரோகிகளாக ஆவதில் இருந்து பாதுகாக்கும்.

இந்த மோவாயிசத்தை இவர்கள் மாவோயிசம் என்று பிழையாக அழைக்கிறார்கள். இதன் தலைவர்கள் தலைமறைவாக இருக்கிறார்கள். அவர்களுக்கு கட்டளையிடுபவர்கள் மட்டுமே அந்தத் தலைகளை பார்க்கமுடியும் என்ற நிலை நிலவுகிறது. தலைகள் மாறினாலும் தலைமை மாறாமலிருக்க இது ஒரு சிறந்த வழியாக அமைகிறது. மோவாய் தூக்கியிருப்பதனால் இவர்களின் கண் எப்போதும் டெல்லியை நோக்கியே இருக்கும். வழியே காலில் இடறும் சின்ன ஊர்களின் சின்ன பிரச்சினைகளைக் கவனிக்கமுடியாது.

டெல்லியை கைப்பற்றியதும் முதல் வேலையாக இவர்கள் வறுமையை ஒழிப்பார்கள். வறுமையால் அதுவரைக்கும் ஒழிந்தவர்கள் போக எஞ்சியிருப்பவர்களுக்கு மீட்பு கிடைக்கும் என இவர்கள் சொல்கிறார்கள். இவர்களின் தொண்டர்கள் மட்டுமே எஞ்சியிருபார்களாதலால் அது சாத்தியமும் கூட. இவர்களின் ஆதர்ச தலைவரான போல்பாட் நாட்டின் மக்கள்தொகையை பாதியாகக் குறைப்பதன் மூலம் உணவுப்பஞ்சத்தைப் பாதியாகக் குறைத்து அதற்கு வழிகாட்டியிருக்கிறார்.

மாவோயிசம் மோவாயிசமே என்பதற்கு அவர்களின் சீருடைகளும் மொழிகளுமே சான்றாக உள்ளன. இந்த மோவாயிசம் பிற மோவாயிசங்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. இது உண்மையில் மற்ற மோவாயிசங்களை முழுமையாக ஒழித்துக்கட்ட எண்ணக்கூடியது. ஏனென்றால் இது மோவாயிசங்களால் புறக்கணிக்கப்பட்ட ஏழைமக்களுக்காக உருவான மோவாயிசமாகும்.

[மறுபிரசுரம் முதற்பிரசுரம் 2009 ஜுன்]

முந்தைய கட்டுரைமணவுறவுமீறல் -கடிதம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் பத்தொன்பது – திசைதேர் வெள்ளம்-27