திலீப்குமாருக்கு விளக்கு விருது

தமிழில் அசோகமித்திரனின் எழுத்துப்பாணி எவராலும் எளிதில் பின் தொடரக்கூடிய ஒன்று. பொருள்வயமான நேரடி நடையில் அன்றாட யதார்த்தங்களைச் சொல்லக்கூடிய கதைகள் அவை. ஆகவே அவரைப்பின்பற்றி எழுதக்கூடிய பல படைப்பாளிகள் சென்னை சார்ந்து உருவாகி வந்தார்கள். எழுபது எண்பதுகளில் கணையாழி அத்தகைய எழுத்துக்களுக்கான ஒரு களமாக இருந்தது. அவ்வெழுத்துக்களில் பெரும்பாலானவை இன்று உதிர்ந்துவிட்டன.

ஆனால் அசோகமித்திரனின் கலை என்பது அந்த எல்லையில் நிற்பது அல்ல. அது அவரது ஒரு கலைப்பூர்வமான பாவனை மட்டுமே. அவரது சிறந்த கதைகள் அனைத்துமே அந்த அன்றாடவாழ்க்கைச்சித்திரங்களில் இருந்து நுட்பமாக மேலேறிச் சென்று வாழ்க்கையின் எப்போதைக்குமான துயரங்களில் முட்டிக்கொள்பவை. அழியாத தரிசனங்களின் ஒளியால் கவித்துவம் பெறுபவை. அவரை பின்தொடர்ந்தவர்கள் அனேகமாக எவருமே அந்த இடங்களை அடையவில்லை. பெரும்பாலானவர்கள் அவரது புறவயநடையை மட்டுமே எடுத்துக்கொண்டார்கள். கோபிகிருஷ்ணன் போன்றவர்கள் அவரது மெல்லிய கசந்த நகைச்சுவையை மட்டும்.

சிறிய விதிவிலக்கு திலீப்குமார். ஆரம்ப கட்டத்துக்குமேல் எழுதுவதை விட்டுவிட்ட திலீப் அந்த சிறிய காலஅளவுக்குள் சில சிறந்த சிறுகதைகளை எழுதியிருக்கிறார். அக்கதைகள் அவை சொல்லும் தளங்களில் இருந்து எழுந்து மானுடத்தன்மை கொண்டிருக்கின்றன.அவ்வகையில் அசோகமித்திரனின் தடத்தைச்சேர்ந்தவர்களில் முதன்மையானவராக இருக்கிறார். அவரது கடவு என்ற சிறுகதைத்தொகுதி க்ரியா வெளியீடாக வந்துள்ளது.

திலீப்குமாருக்கு இவ்வருடத்தைய விளக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. திலீப்புடனான என் நட்பு முப்பதாண்டுகளை நெருங்கப்போகிறது. நினைத்தாலே மனம் மலரச் செய்யும் அவரது முகம் இப்போது கண்முன் எழுகிறது

திலீப்குமாருக்கு வாழ்த்துக்கள்.

திலீப்குமார்

திலீப்குமாரின் இலக்கிய உலகம் ச திருமலைராஜன்

திலீப்குமாரின் கதைகள் : அழியாசுடர்கள்

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010
அடுத்த கட்டுரைமாவோயிச வன்முறை 3