உஷா ராஜ்

usha

பதினேழு ஆண்டுகளாக வீட்டில் தொலைக்காட்சி இணைப்பு இல்லை. இந்த பார்வதிபுரம் வீட்டுக்குக் குடிவந்தபோது சிலமாதங்கள் மட்டும் இணைப்பு இருந்தது. ஒருமுறை குடும்பத்துடன் டாமன் டையூ சென்றோம். ரயிலில் ஒரு கட்டுரையை வாசித்த அருண்மொழி தொலைக்காட்சியைத் தவிர்ப்பதைப்பற்றிச் சொன்னாள். முடிவெடுத்தோம்.

அதன் விளைவு என் மகள், மகன் இரண்டுபேருமே மிகச்சிறந்த வாசகர்கள் என்பது. ஒருவகையில் என்னைவிடச் சிறந்த வாசகர்கள். அவர்களின் காலம் அவர்களுக்கு அளிக்கும் வாய்ப்பு. நூல்களுக்காகத் தேடி அலைவதென்பதே அவர்களின் வாழ்க்கையில் இல்லை.

எதையாவது இழந்திருக்கிறேனா? இல்லை. நல்ல படங்களை பெரும்பாலும் திரையரங்குக்கே சென்று பார்ப்பேன். வீட்டில் அகன்றதிரை தொலைக்காட்சிப்பெட்டி உள்ளது. அதில் பார்ப்போம். உலகப்புகழ்பெற்ற ஆவணப்படங்களின் தொகைகள் இருந்தன. நல்லன எதையும் தவறவிட்டதில்லை. இணையம் வந்தபின் அந்த கேள்வியே எழவேண்டியதில்லை

ஆனால் சில விடுபட்டுவிடக்கூடும். அதைத் தவிர்க்க முடியாது. இல்லையேல் தொலைக்காட்சி அள்ளிக்கொட்டும் குப்பைகளில் உழலவேண்டியிருக்கும். அவ்வாறு விடுபடுவது மெல்லிசை நிகழ்ச்சிகள். இப்போது அரிதாக அவற்றை இணையத்தில் பார்க்கிறேன். என் மலரும் நினைவுகளை தூண்டும் இசைநிகழ்வுகள்.

மேடைமெல்லிசை நான் சிறுவனாக இருக்கையில்தான் அறிமுகமாகியது. எழுபதுகளுக்குமுன் அந்தக்கலை பரவாலாக இருந்திருக்க வாய்ப்பில்லை. நவீன ஒலி, ஒளி அமைப்புகள் இல்லாமல் ஒரு மேடையில் மெல்லிசைப்பாடலை நிகழ்த்த இயலாது. ஒலிநாடாக்கள் வந்தபின்னரே பாடல்களை மீளமீளக் கேட்டு பயிற்சிசெய்யும் வாய்ப்பும் அமைந்தது.

அக்காலத்தில் திருவனந்தபுரத்திலிருந்து வரும் ’ஆர்க்கெஸ்ட்ரா’க்கள் குமரிமாவட்டத்தில் மிகப்பெரிய இசைநிகழ்ச்சிகளை நடத்தின. அவர்களின் செயல்தளம் தென்கேரளத்தின் காட்டாக்கடை, நெடுமங்காடு மற்றும் குமரிமாவட்டம் என்பதனால் பாதிக்குப்பாதி தமிழ்ப்பாடல்கள் இருந்தாகவேண்டும். கண்முன் ஓர் இசைப்பாடல் நிகழ்வதன் ஆச்சரியம் அக்கலையின் முதன்மை அனுபவம். “உண்மையாகவே பாடுகிறார்கள்!” என்று ரசிகர்கள் வியந்து சொல்வதைக் கேட்டிருக்கிறேன்

இன்று இத்தனைக்குப்பின்னரும் மெல்லிசைநிகழ்ச்சியில் ஒருபாடல் நிகழ்த்தப்படுவதைக் கேட்பது – காண்பது – அதே பரவசத்தை அளிக்கிறது. அதிலும் அக்காலத்து மெல்லிசைப்பாடல்கள். அக்கால மேடைகளைப்போலவே. இன்று யூடியூபில் இரவில் அரைமணிநேரம் அவற்றைக் கேட்கிறேன்

usha-raj

அப்போது கண்டடைந்த ஆச்சரியம் உஷா ராஜ். பொதுவாக மேடைகளில் அதிகம்பாடப்படுவது டி.எம்.எஸ் , பி.சுசீலா பாடல்கள்தான். ஆனால் அவர்கள் இருவருக்கும் சமானமான குரல்கள்தான் அமையாது. ஜானகி, ஏ.எம்,ராஜா, ஜிக்கி,எஸ்.பி.பாலசுப்ரமணியம் குரல்களில் ஏறத்தாழ பாடிவிடுவார்கள். ஜேசுதாஸின் பல நகல்கள் உண்டு. வாணி ஜெயராமுக்குக்கூட நகல்கள் உண்டு.

பி.சுசீலாவின் பாடல்களை பிறர் பாடிக்கேட்கையில் மூலத்தை நினைவிலோட்டுவதனால் செவி அவற்றை ஏற்றுக்கொள்கிறது. இத்தனை ஆண்டுகளில் நான் கேட்ட மிகச்சிறந்த சுசீலாக்குரல் உஷா ராஜ். பல யுடியூப் பதிவுகள் எட்டாண்டுகளுக்கு முந்தையவை. கலைஞர் தொலைக்காட்சியிலும், பொதிகையிலும் வந்தவை. இத்தனை ஆண்டுகளாக தொடர்ச்சியாக அவர் சுசீலாவை தொடர்ந்து நிகழ்த்திக்கொண்டிருந்திருக்கிறார்.

சுசீலாவின் குரல் பிசிறின்றி, குரல்மாறுபாடின்றி உச்சங்களில் உலவுவது. இனிமைமாறாத நுட்பமான உணர்வுமாறுபாடுகள் வெளிப்படுவது. உஷா ராஜின் குரலை கேட்டால் சுசீலா அல்ல என்றே சொல்ல முடியவில்லை. அனைத்து நுட்பங்களுடன். பலசமயம் மூலத்தை விடவும் மேலோ எனத் தோன்றும்படி.

உஷா ராஜ் பற்றி எவரேனும் எழுதியிருக்கிறார்களா என்று இணையத்தில் தேடினேன். இசைபற்றி நிறைய எழுதும் நிபுணர்கள் எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. கர்நாடகத்தைச் சேர்ந்தவர், துளுவை தாய்மொழியாகக் கொண்டவர், கேரளத்தில் வளர்ந்தவர், இப்போதுகூட தமிழ் சரியாகத் தெரியாதவர் என ஒரு சிறுபேட்டியில் சொல்கிறார்.

பதினைந்தாண்டுகளுக்கும் மேலாக பாடிக்கொண்டிருக்கிறார். ஏராளமான மலையாள ஆல்பங்கள், பக்திப்பாடல்கள் வெளியாகியிருக்கின்றன. ஆச்சரியம்தான் ஏன் எவரும் எதுவுமே எழுதவில்லை என்பது.

மேடையில் நிகழும் பாடலில் வேறு ஒரு முகத்தில் இருந்து சுசீலா பிறந்தெழுவதைக் காணும்போது அழிவற்றது அப்பாடல் என்னும் பிரமை ஏற்படுகிறது. உஷா ராஜ் அதன்பொருட்டு வாழ்த்துக்குரியவர்.

 

 

 

முந்தைய கட்டுரைகுற்றவாளிகளின் காவல்தெய்வம்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-21