வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-17

wild-west-clipart-rodeo-31சிகண்டி எழுந்துகொண்டு “நான் விடைகொள்கிறேன் யாதவரே, இன்று நாள் நலம்கொண்டது” என்றார். இளைய யாதவர் அவருடன் எழுந்துகொண்டு “உங்கள் ஐயங்கள் தீர்ந்துவிட்டனவா?” என்றார். “இந்த வினாவுக்கு இதற்குமேல் ஒரு விடை இல்லை” என்றார் சிகண்டி. இளைய யாதவர் புன்னகைத்தார். சிகண்டி “நான் உங்களைத் தேடிவந்தது வீணாகவில்லை. இவை எங்கு நிகழ்ந்தன என நான் அறியேன். என்னுள் இருந்து எழுந்தவையாக இருக்கலாம். காலத்துளியெனக் கூறப்படும் இக்காட்டில் எழுந்தவையாக இருக்கலாம். ஆனால் அவை மெய்மையென்றே உறுதியாகத் தோன்றுகிறது” என்றார்.

தலைமுடியை சுருட்டிக் கட்டியபடி சிகண்டி முற்றத்தில் இறங்க இளைய யாதவர் படிமேல் நின்றார். “நன்று, யாதவரே. நான் என் தவச்சோலைக்கே மீள்கிறேன்” என்றார் சிகண்டி. இளைய யாதவர் புன்னகைத்தார். “உமது புன்னகையில் இன்னுமொன்று எஞ்சியிருப்பதாக குறிப்புள்ளது” என்ற சிகண்டி “இக்காட்சியில் உங்களுக்கு ஐயமுள்ளதா?” என்றார். “இல்லை” என்று இளைய யாதவர் சொன்னார். “இது உணர்த்துவது அவர்களிருவரும் இருக்கும் மெய்மையைத்தான்.” சிகண்டி “உமைசிவ நடனம்” என்றார். “சொல்லறிந்த நாள் முதல் கேட்டது. ஆயினும் உணர்வதற்குரிய தருணம் இப்போதே அமைந்தது.”

இளைய யாதவர் “பாஞ்சாலரே, நோயல்ல, நோய்மூலமே உசாவப்படவேண்டியது. உங்களில் எழுந்த ஐயமே அதற்குரிய வேர் எங்கோ உள்ளது என்பதை காட்டுகிறது” என்றார். “அது என் ஆணவத்திலிருந்து எழுந்தது. நான் என்னை இயற்றுகிறேன் என்னும் எண்ணத்தால். நன்று, இப்போது கனவில் உண்ட கனியின் இனிமையே நாவிலுள்ளது” என்றபின் தலைவணங்கி சிகண்டி முற்றத்தைக் கடந்து இருளுக்குள் சென்றார். இளைய யாதவர் அவரை நோக்கியபடி நின்றபின் திரும்பி குடிலுக்குள் சென்று கதவை மூடினார். அந்த மெல்லிய ஓசையை சிகண்டி கேட்டார். விளக்கொளி அணந்தபோது நிழற்பின்னல் உருமாறியதை விழிகள் அறிந்தன.

இருளுக்குள் உறுதியான அடிகளுடன் சென்றுகொண்டிருந்த சிகண்டி மெல்லிய முக்ரையோசை கேட்டு நின்றார். மறுகணமே சேற்று மணத்தை உணர்ந்தார். “அன்னையே” என்று முனகியபடி நின்றார். காட்டின் கரிய இலைத்தழைப்புக்கு அப்பால் இருள்வரி ஓவியமென பெரும்பன்றி தெரிந்தது. மேலும் அணுகியபோது பிசிறி நின்றிருந்த பிடரிமயிர் முட்கள் தெளிந்தன. “அன்னையே” என்றபடி அவர் மேலும் நெருங்கியபோது அது திரும்பி நடக்கத் தொடங்கியது. அவர் தொடர்ந்து செல்ல அதன் விரைவு மிகுந்துவந்தது. மூச்சிரைக்க மரங்களின் புதர்களினூடாக அவர் அதை துரத்திச் சென்றார்.

காட்டின் நடுவே இலைகளுக்கு அப்பால் மனோஹரத்தின் ஒளி தெரிந்தது. மாபெரும் நாகவிழி என அது அசைவற்றிருந்தது. பெரும்பன்றி சென்று அதன் விளிம்புச்சேற்றில் இறங்கி நீரில் மூழ்கி மறைந்தது. அவர் நோக்கிக்கொண்டு கரையில் நின்றார். சுனைநடுவே மனோசிலை இருளொளியுடன் நின்றிருந்தது. பன்றி மேலெழும் என அவர் காத்திருந்தார். பின்னர் மெல்ல சுனைநோக்கி சென்றார். நீர் விளிம்பை அடைந்தபோதுதான் நீர் அசைவற்றிருக்கவில்லை என்றும் மிக விசையுடன் சுழன்றுகொண்டிருக்கிறதென்றும் உணர்ந்தார்.

தயங்கியபின் குனிந்து நீர்ச்சுழியை தொட்டார். களிறு தன் துதிக்கை நுனிவிரலால் என அவர் விரலைப் பற்றி பெருவிசையுடன் இழுத்து மூழ்கடித்து கொண்டுசென்றது சுழல். கணம் கோடி காதம் என சென்ற அதன் விரைவு அனைத்தையும் அழித்து இன்மையென்றாக்கியது. உடலின்மை, உளமின்மை, தன்னிலையின்மை. அவர் இருண்ட பெருவெளியை நோக்கிக்கொண்டிருந்தார். அப்பெருவெளியில் ஒருதுளியென்றிருந்தபடி. அவர்முன் எழுந்த பெரும்பன்றியின் உருவை கண்டார். அதன் மேழிமுகத்தின் மேல் சிறுபனித்துளி என புவி அமைந்திருந்தது. இடியோசையும் மின்னலொளியும் எழுந்தன. திசைகள் ஓங்காரமிட்டன.

அவர் விழிப்புகொண்டபோது மனோஹரத்தின் விளிம்பில் சேற்றில் கிடந்தார். கையூன்றி எழுந்தமர்ந்தபோது பின்னிரவின் ஓசைகளை அறிந்தார். அனைத்தையும் மீளுணர்ந்து எழுந்தமர்ந்து விண்மீன்களை நோக்கினார். சேற்றில் பதிந்த மின்மினிகள். சேற்றுப்பன்றியின் விழிகள். அசைவற்று கரும்பளிங்கு பரப்பெனக் கிடந்தது மனோஹரம். நடுவே எழுந்த மனோசிலை வான்நோக்கி சுட்டியது. எழுந்து ஆடைதிருத்தியபடி திரும்பி நடந்தார். செல்லச்செல்ல விசைகொண்டு விரைந்து இளைய யாதவரின் குடில் கதவை தட்டினார். மீண்டும் மீண்டும் தட்டியபடி “யாதவரே! யாதவரே!” என்று கூவினார். கையில் அகல்சுடருடன் கதவைத் திறந்து தழலெழுந்ததுபோல் அவர் தோன்றினார்.

“யாதவரே, ஒரு பன்றியை கண்டேன். பிறிதொரு பன்றியை” என்றார் சிகண்டி. “வியனுரு…” என்று மூச்சிரைத்தார். “நான் கண்டேன், புவி அகழ்ந்தெடுக்கும் பெருமுகரையை. மதவிழிகளை…” இளைய யாதவர் “உள்ளே வருக!” என்றார். சிகண்டி உள்ளே சென்று பதறும் உடலுடன் “நான் கண்டதென்ன? யாதவரே, நான் அங்கே கண்டது என்ன?” என்றார். “உங்கள் ஐயத்திற்கு எழுந்த பேருருவ விடை” என்றார் இளைய யாதவர். “அது விண்ணளந்தோன் முன்பு இருளுலகங்களை அளந்த பேருரு அல்லவா?” என்றார் சிகண்டி. இளைய யாதவர் “எல்லா தெய்வ உருவங்களும் ஐயங்களுக்கான விடைகளே” என்றபின் “அமர்க, பாஞ்சாலரே!” என்றார். சிகண்டி அமர்ந்து “நீர் வேண்டும்… விடாய்கொண்டிருக்கிறேன்” என எழப்போனார்.

இளைய யாதவர் எழுந்து “இதோ” என நீர்க்கொப்பரையை அளிக்க அதை வாங்கி தலைதூக்கி குடித்து முடித்து மூச்சொலியுடன் தாழ்த்தினார். பின்னர் “தொல்கதைகள் சொல்லும் பேருரு… அது மெய்யாகவே நிகழ்ந்திருக்கவேண்டும்” என்றார். இளைய யாதவர் “அது பிறப்பிறப்பற்றதென்றாலும் உயிர்களனைத்தும் அதுவே என்றாலும் மூன்றியல்புகளின் ஆடல் என்னும் தன் நெறிக்கேற்ப தன் விளையாடலால் பிறவியும் கொள்கிறது. எப்போதெல்லாம் அறம் அழிந்து தீமை மிகுகிறதோ அப்போதெல்லாம் அது நிகழ்கிறது. நல்லதைக் காத்து அல்லதை அழிக்க யுகங்கள்தோறும் எழுகிறது” என்றார்.

சிகண்டி அச்சொற்களால் உளப்பெருக்கு நிலைக்கப்பெற்று அசைவிழந்து நின்றார். இளைய யாதவர் “அவை காலமின்மையில் நிகழ்ந்தன. எனவே முன்பும் பின்புமல்ல, இப்போதும் எப்போதும் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அறியக்கூடுபவர் அவர்களுக்கு உகந்ததை கண்டுகொள்கிறார்கள்” என்றார். “விடையென தன்னை நிறுத்திக்கொண்டு வினாக்களால் உலகுகள் சமைத்து விளையாடும் மெய்மை. அறியக்கூடுவன என நிகழும் அறியமுடியாமை. அதை வரச்செய்யலாம், சென்றடையவியலாது.”

சிகண்டியின் விழிகள் நிலைத்திருக்க உதடுகள் மட்டும் சொல்லின்றி அசைந்தன. இளைய யாதவர் அவரை நோக்கிக்கொண்டு புன்னகையுடன் அமர்ந்திருந்தார். “யாதவரே” என்று கம்மிய குரலில் சிகண்டி அழைத்தார். “நான் அவ்வியனுருவின் விழிகளை கண்டேன். பின்னர் மூழ்கி மறைந்த இருளில் எழுந்த கனவுகளில் அவ்விழிக்குறியை மொழி என மாற்றிக்கொண்டேன். அது எனக்குரைத்தது பிறிதொன்று.”

ஒன்றும் பேசாமல் இளைய யாதவர் நோக்கியிருந்தார். “வாளிடம் அதை ஏந்தும் தோள் என எனக்கு அது ஆணையிட்டது” என்றார் சிகண்டி. “அதை மொழி என்று ஆக்கினேன் என்றால் இப்படி சொல்வேன். இயற்றுவோன் நான். ஆம், அச்சொல்லையே நான் கேட்டேன் – இயற்றுவோன் நான்.” இளைய யாதவர் “இயற்றுவதும் இயற்றப்படுவதும் அதுவே” என்றார். சிகண்டி கைகள் நடுங்க விரல்களை கோத்துக்கொண்டு உதடுகளை இறுக்கினார். மூச்சில் வறுமுலை சரிந்த முதுநெஞ்சு ஏறியிறங்கியது. “அவ்வண்ணமென்றால் நான் அறியவேண்டியது எதை?” என்று அவர் மூச்சொலியில் கேட்டார். “அதையா?”

“அதை மட்டும்” என்று இளைய யாதவர் சொன்னார். “அறிதலுக்கேற்ப வெளிப்படுவதும், வெளிப்படுமென்ற மாறாமையை தன் நெறியாகக் கொண்டதுமான ஒன்று. ஐயங்கள் கோடி, விடை ஒன்றே. அதை அறிந்தவர் மட்டுமே செயல்களை முழுமையாக அறிவென்றாக்கிக் கொள்பவர். செயல்களை ஆற்றி அதன் தொடர்விளைவுகளிலிருந்து விடுபடுபவர். துயரும் உவகையுமின்றி அலைகடலுக்குமேல் துருவமீன் என உலகச்செயலில் நின்றிருப்பவர். ஞானமென்பது நிலைகொள்ளுதலே. நிலைகொள்ளாமையே துயரம் எனப்படுகிறது. துயர்நீக்குவதே ஞானம் என்றனர் முனிவர்.”

wild-west-clipart-rodeo-31சிகண்டி கேட்டிருக்க நைமிஷாரண்யப் பெருங்காட்டில் இளைய யாதவர் இவ்வண்ணம் சொன்னார். பாஞ்சாலரே, ஒவ்வொன்றும் மாறிக்கொண்டிருக்கும் வெளி இது. தழல் நின்றாடுகிறது. மலைகள் உருகியழிகின்றன. நீர்க்குமிழிகள் உடைகின்றன. விண்கோள்கள் மறைகின்றன. முதற்பொருளிலிருந்து எழுபொருளுக்கு ஓயாதொழுகும் பெருக்கையே உலகென்று உணர்கிறோம். காலமென்று கணிக்கிறோம். இடமென்று பகுக்கிறோம். ஊழென்று விளக்குகிறோம்.

பிறிதொரு காலத்தில் ஒழுகிக்கொண்டிருக்கிறது சித்தம். சித்தம் பொருளைச் சந்தித்து உலகு சமைக்கிறது. நம்மைச் சூழ்ந்திருக்கும் ஒவ்வொன்றும் சித்தத் துளி சூடி நின்றிருக்கின்றன. சித்தம் பொருட்களை வேர்பரப்பி உண்கிறது. ஓடும் நதிமேல் ஓடும் முகிலின் நிழல் என நின்றுள்ளது உலகெனும் ஓவியம்.

இவையனைத்துக்கும் உருவென்று ஒன்றை அளிக்கும்பொருட்டு அது உருவம் கொண்டது. இவையனைத்தும் தனித்தன்மை கொள்ளும்பொருட்டு அது பிரிந்தது. இவையனைத்தும் இணையவிழைவதனால் அது ஒன்றாகியது. இவையனைத்தும் தங்களை கடக்கவிழைவதனால் அது அப்பால்நின்றது.

எல்லையில்லா வானை பன்னிரு களமென்று பகுத்து விரித்தமைக்கின்றனர் நிமித்திகர். அதில் கருக்களென்று அமைகின்றன உலகப்பொருட்கள். சுட்டுவிரல்தொட்டு துருவனை நிறுத்துகின்றனர். அம்மாறிலியில் இருந்து சென்று மாறுதல்களை அளக்கின்றனர். கணம்தோறும் மாறும் களத்தில் நிகழ்கின்றது கணம்தோறும் மாறும் உறவுகளின் பின்னல்.

சொற்களம் அமைத்தாடுகின்றனர் கவிஞர். இல்லமெனும் களம், ஊரெனும் நாடெனும் நூறாயிரம் களங்கள். களங்கள் தோறும் எழுகின்றன மாறிலிகள். மாற்றங்கள் மாறிலிகள் உருவாக்கும் தோற்றங்கள். இக்காட்டின் மாற்றங்களை அந்த மலைப்பாறையால் அறிகிறோம். அந்த மலையை மேலிருக்கும் விண்மீனால் அறிகிறோம். அதை அளக்கும் மாறிலி அதற்கப்பால் உள்ளது. முதல் மாறிலியே முழுமை.

முதல்முழுமையில் தொட்டு எண்ணத் தொடங்குகின்றனர் கணக்கர். அது வெறுமையின் சுழி. எங்கெல்லாம் மாறிலியென ஒன்றை உணர்கிறோமோ அங்கெல்லாம் அதையே தொட்டறிகிறோம். மாறிலிகளின் நிரை தொடங்கியது அதில். சென்றடைவதும் அதிலேயே. நிலையின்மை காணும் மானுடர் நிலையென வகுத்துக்கொள்வது அதை. அறிவதற்கும் அறிவுக்கும் அறிபவனுக்கும் நடுவே அமையும் மையம்.

மாறுவன என்றே அனைத்தையும் அறிகிறோம். அவற்றில் மாறாத ஒன்றை காணும்பொருட்டே அனைத்து எண்ணங்களும், கணக்குகளும் அமைகின்றன. தொகுத்தறிய, வகுத்துச்சொல்ல, நிலைநிறுத்த முயலும் அனைத்துச் சொற்களும் அதையே திசைகொண்டிருக்கின்றன.

அன்றாடத்தின் மாறிலியே ஒழுக்கம். ஒழுக்கத்தின் மாறிலி அறம். அறத்தின் மாறிலி புடவிப்பெருநெறி. அதன் மாறிலி ஒன்றுண்டு. அதுவே அனைத்தும். ஒவ்வொன்றிலும் உட்பொருளென்று நின்றிருப்பது அது.

பாஞ்சாலரே, ஒருவர் தன் உணர்வால் நெறிகளை முற்றாக வகுக்க இயலாது. ஒரு சாரார் தங்களுக்குள் அறத்தை முடிவுசெய்துவிட முடியாது. உங்கள் அன்னையின் வஞ்சமல்ல நீங்கள் கொண்டுள்ளது. உங்கள் தந்தைக்கு எதிரானதுமல்ல.அவர்களும் நீங்களும் இங்கு இல்லாமலான பின்னரும் அது இருக்கும். ஏனென்றால் நீங்கள் இங்கு வருவதற்கு முன்னரே அது இருந்துகொண்டிருந்தது. அது மாறுவனவற்றின்மேல் மாறிலி கொண்டுள்ள விசை.

ஆழுணர்வுகள், பெருஞ்சொற்கள் தனிநெஞ்சில் ஒருநாவில் எழுவன அல்ல. அவை பெரும்பொதுமைகளுக்குரியவை. பெயரென்று குலமென்று நாடென்று நின்று அல்ல, பெண் என்று உயிரென்று நின்று எழுவன. இவையென்று ஆகி நின்றிருப்பதன் ஒலியென்று கேட்பன.

அழிக்கப்படுவதில் எழுகிறது அழிவற்ற ஒன்று. அடக்கப்படுவதில் தோன்றுகிறது மீறிச்செல்வது. புரிந்துகொள்ளப்படாததில் விளைகிறது எளிதினும் எளிதானது. சிறுமை செய்யப்படும் ஒன்றில் எழுகிறது பெரிதினும் பெரிது.

ஒவ்வொன்றும் பிறிதொன்றின் எடைநிகர் என நிற்பன. ஒவ்வொன்றும் பிறிதொன்றின் மறுபக்கம் என நிகழ்வன. ஒன்றில் நின்று நாமறிவதற்கு அப்பால் நிகரான அறியப்படாமை உள்ளது.

பிழையற்ற கருவி தனக்கென விசையேதும் அற்றது. தன்னை ஏந்தியவனின் ஆற்றலை முழுக்க தான் ஏற்றுக்கொண்டது. இலக்குகளும் வஞ்சங்களும் வெற்றிகளும் வீழ்ச்சிகளும் தன்னுடையவை அல்ல என்று அறிந்தது. அது ஐயத்தால் விசைகுன்றுவதில்லை. களத்தில் சுழல்கையிலும் முற்றிலும் விடுதலைபெற்றிருக்கிறது.

அறிதலென்பது ஆதலே. முற்றறிதல் எச்சமின்றி ஆதல். உண்டு உமிழ்ந்து கடலை அறியமுடியாது மீனால். கடலென்றாகும் மீன் அலைகளில் இருந்து விடுதலை பெறுகிறது.

wild-west-clipart-rodeo-31இளைய யாதவர் முன் அமர்ந்திருந்த சிகண்டி பெருமூச்சுவிட்டார். இளைய யாதவர் “பாஞ்சாலரே, நீர் சென்று உசாவவேண்டிய ஓர் இடம் உள்ளது. உமக்கான ஆணை அங்கு எழக்கூடும். அங்கு செல்க!” என்றார். சிகண்டி வினாவுடன் நோக்க அவர் தன் முன் கைகளால் ஒரு களம் வரைந்தார். அதன் வடமேற்கே கையால் நீட்டித் தொட்டு “இங்கு” என்றார். “சுதுத்ரி, பருஷ்னி, அஸிக்னி, விதஸ்தா, விபஸ், குபா, சுஷோமா என்னும் ஏழு சிந்துக்களின் நிலம். அதிலமைந்துள்ள பூவராகம் என்னும் சிற்றூர். அங்கு நீர் முன்பு சென்றதுண்டு.” சிகண்டி “ஆம்” என்றார். “இதை தொடுக!” என்றார் இளைய யாதவர். சிகண்டி அப்புள்ளியில் கைவைத்தார். மறுகணமே அவர் சிந்துநிலத்தில் சென்றுகொண்டிருந்தார்.

இமயமலையிலிருந்து இறங்கிவந்த மென்வண்டல் படிந்த சிந்துவின் நிலம் கோதுமைப் பசுங்கடலாக அலையடித்துக்கொண்டிருந்தது. அவற்றின் கரைகளில் வைக்கோல்கூரைகள் கொண்ட வீடுகள் செறிந்த பலநூறு சிற்றூர்கள் ஓசையெழுப்பிக்கொண்டிருந்தன. சுதுத்ரியின் நடுவே மணல்மேடுகளில் நாணல்புதர்கள் காற்றில் உலைந்தன. குட்டை மரங்கள் இருந்த ஆற்றிடைக்குறைகளில் வெண்நாரைகள் கிளைகளில் அமர்ந்தும் வானில் சிறகுவிரித்து எழுந்தும் மீண்டுவந்து அமைந்தும் உரக்க அகவியும் அழகூட்டின. எப்போதாவது ஒரு பெரிய மீன் நீரில் மேலெழுந்து மறைந்தது.

சிந்துநிலத்தின் வேளிர்சிற்றூர்களில் சுற்றுவேலிகள் கிடையாது. சுற்றிச் சுழித்தோடும் ஆழமான நீரோடையே அரணாக அமைந்திருக்க அவற்றின் மேல் போடப்பட்ட மரப்பாலங்கள் ஊருக்குள் இட்டுச்சென்றன. மென்சேற்றுநிலத்தில் மரத்தடிகளை ஆழ நட்டு அவற்றின் மேல் பலகையிட்டு வீடுகளை எழுப்பியிருந்தனர். வீடுகளுக்கு அடியில் கோழிகளும் ஆடுகளும் நின்றிருந்தன. வண்ணம் பூசப்பட்ட பலகைச்சுவர்களும் புற்கூரைகளும் கொண்ட வீடுகள். ஊர்மன்றுகூடும் அரசமரம் நடுவே அமைந்திருக்க சிறிய ஊர்க்கோயில்கள் நான்கு மூலைகளிலும் இருந்தன. அவற்றில் விஷ்ணுவும் சிவனும் கார்த்திகேயனும் கொற்றவையும் பூசனைகொண்டிருந்தனர். கற்களை அடுக்கி கூம்புக்கோபுரம் அமைத்து உள்ளே கல்பீடங்களில் சிறிய மண்சிலைகளாக தெய்வங்களை நிறுவியிருந்தனர்.

மெல்லிய தூறல் விழுந்துகொண்டிருந்தது. அவ்வப்போது காற்று தெற்கே இருந்து சீறிப்பாய்ந்து வடக்கு நோக்கி சென்றது. அதிலேறிய நீர்த்துளிகள் அம்புக்கூட்டங்களாக வீடுகளையும் மதில்சுவர்களையும் நீர்ப்பரப்பையும் தாக்கின. அவர் அச்சிற்றூரை நெருங்கியபோது வெளியே வயல்களில் உடலை சேற்றில் ஆழ்த்தி சாரல் துளித்துச்சொட்டிய காதுகளுடன் கிடந்த எருமைகள் தலைதிருப்பி அவரை விழித்து நோக்கின. மரத்தாலான பாலம் வழியாக நீர் சுழித்தோடிய ஓடையைக் கடந்து சிறிய கிராமத்தில் நுழைந்து அதன் மூங்கில் தடுப்புக்குப் பின்னால் நின்று “விருந்தினன்!” என்று மும்முறை குரல்கொடுத்தார்.

முதல் குடிலில் இருந்து வெளியே வந்த முதியவர் கைகூப்பியபடி “வருக… எங்கள் சிற்றூருக்கு நலம் தருக!” என்றார். அவர் “நான் சிகண்டி. இருபாலினன். சிகண்டமெனும் காட்டில் தவம்செய்பவன்”  என்றார். முதியவர் “எங்கள் குழந்தைகளும் கன்றுகளும் உங்களால் நலம்பெறுக!” என்றார். அவருடன் சென்று விருந்தினருக்காகக் கட்டப்பட்டிருந்த குடிலில் நுழைந்து உடைமாற்றிக் கொண்டார். திண்ணையில் வந்து அமர்ந்து நோக்கினார். வானிலிருந்து ஒளித்துருவல்களாக மென்மழை விழுந்துகொண்டே இருந்தது. அவ்வப்போது முகில்குவையில் இருந்து மெல்லிய உறுமல் கேட்டது. வீடுகளின் முற்றங்களில் மழையிலேயே காகங்கள் எழுந்து அமர்ந்து சிறகடிக்க, மழைத்திரைக்கு அப்பால் சில நாரைகள் பறந்து சென்றன.

மாலை மெல்ல மெல்ல அணுகி வந்தது. ஒளிபெற்ற நீர்வயல்கள் மேலும் ஒளிபெற, சூழ்ந்திருந்த புதர்கள் இருண்டன. பின்னர் வானத்தைவிட நீர்வெளி ஒளியுடன் தெரிந்தது. வயல்களில் இருந்து ஊர்க்குடிகள் ஒவ்வொருவராக வரத்தொடங்கினர். பெண்கள் மீன்களைப்பிடித்து நாணலில் கோத்து கொண்டுவந்தனர். சிலர் வயல்கீரைகளைப் பறித்து கழுவிக் கட்டி கையில் வைத்திருந்தனர். நாணல்களில் கோக்கப்பட்ட காய்கறிகள் சிலர் கையில் இருந்தன. ஆண்கள் வயல்களில் பிடித்த முயல்களையோ பறவைகளையோ நாரால் கட்டி தோளில் தொங்கவிட்டிருந்தனர். அனைவருமே ஓடைகளில் குளித்து உடலில் இருந்த சேற்றைக் களைந்து ஈர உடையுடன் வந்தனர். அவர்களுடன் வயல்களுக்குச் சென்ற நாய்கள் ஈரமுடியை சிலிர்த்துக்கொண்டு வால்சுழற்றியபடி பின்னால் வந்தன.

அவர்களைக் கண்டதும் ஊரைச்சூழ்ந்திருந்த எருமைக்கூட்டம் உரக்க குரலெழுப்பியது. சில எருமைகள் பின்னால் தொடர்ந்துவந்து மூங்கில் தடுப்புக்கு அப்பால் நெருக்கியடித்து நின்று வளைந்த கொம்புகள்கொண்ட தலைகளை உள்ளே விட்டு மெல்ல அலறின. பெண்கள் அவற்றின் பளபளப்பான முதுகுகளில் கைகளால் ஓங்கி அறைந்து அவற்றை ஓரமாக விலக்கினர். பெண்கள் வந்ததும் வீடுகளிலிருந்து குழந்தைகள் கூச்சலிட்டபடி ஓடிச்சென்று அவர்களின் ஆடைகளை பற்றிக்கொண்டு துள்ளிக்குதித்தன. அன்னையர் சிறு மகவுகளை அள்ளி தோளிலேற்றிக்கொண்டனர். திண்ணையில் அமர்ந்திருந்த முதியவர்கள் வந்து பெண்களிடமிருந்து கீரைக்கட்டுகளையும் மீன்களையும் காய்கறிகளையும் வாங்கிக்கொண்டனர். எங்கும் சிரிப்புகளும் கொஞ்சல்களும் ஒலித்தன.

சற்று நேரத்தில் வீட்டுக்கூரைகளின்மேல் புகை எழத்தொடங்கியது. இனிய ஊனுணவின் மணம் கிராமத்தை நிறைத்தது. மெல்ல இருண்டு மறைந்த வானில் அவ்வப்போது மேகங்கள் ஒளியுடன் அதிர்ந்தன. மரங்கள் நிழல்களாக ஆக அப்பால் வயல்நீர்வெளி தீட்டப்பட்ட இரும்புபோல கருமையாக மின்னியது. தென்மேற்கு ஓரத்தில் வட்டவடிவமாகக் கட்டப்பட்டிருந்த தனிக்குடிலில் வாழ்ந்த குலப்பூசகர் இடையில் புலித்தோலாடை அணிந்து கையில் அகல்விளக்குடன் கோயில்களை நோக்கி சென்றார். முதியவர்கள் எழுந்து கோயில் முன் கூடினார்கள். உடன் சில பெண்களும் குழந்தைகளும் வந்து இணைந்துகொண்டனர்.

சிகண்டி சென்று வணங்கி நின்றார். பூசகர் முதலில் கைமுகத்தோனுக்கு சுடர் ஏற்றி தூபம் காட்டினார். பின்பு விஷ்ணுவுக்கும் சிவனுக்கும் வரிசையாக ஒளியும் நறும்புகையும் காட்டப்பட்டன. அவர் தெய்வ உருவங்களை ஒவ்வொன்றாக நோக்கினார். தெய்வங்கள் அமர்ந்த நீள்பீடத்திற்கு எதிரே பிறிதொரு தனிபீடத்தில் கரியால் இருவிழிகள் வரையப்பட்ட நீளுருளைக் கல்வடிவில் இருந்த தெய்வத்தை நோக்கியபின் முதிய பூசகரிடம் “மூத்தவரே, அத்தெய்வம் எது?” என்றார். “அவள் பெயர் உர்வரை. இங்கு வாழ்ந்து மறைந்த தவச்செல்வி” என்று அவர் சொன்னார்.

“அன்னை எங்கள் தந்தையர் காலத்தில் இங்கு பிறந்தவள். தன் இளமைக்கனவில் அவள் சேற்றில்படிந்த காலடி ஒன்றை கண்டாள். அதை தன் கொழுநன் என நெஞ்சில் சூடிக்கொண்டாள். அவனைக் காணும்பொருட்டு தவம் செய்தாள். அக்காலத்தில் இங்கே இதைப்போன்ற மழைநாள் ஒன்றில் ஒரு வீரர் வந்து ஓரிரவு தங்கி கடந்துசென்றார். அவர் சென்றபின்னரே அன்னை அவள் காலடி சேற்றில் பதிந்திருப்பதை கண்டாள். அவரே என அறிந்து அவரை தேடிச்சென்றாள். அதற்குள் அவர் நதிகளைக் கடந்து சென்றுவிட்டிருந்தார்.”

“அன்னை அவருக்காகக் காத்திருந்தாள். நூறு அகவை நிறைவுவரை ஒவ்வொருநாளும் இந்த மரத்தடியில் அமர்ந்து இந்த வாயிலை நோக்கிக்கொண்டிருந்தாள். அவள் மறைந்தபின்னரும் அவ்விழிகள் இங்கேயே அவ்வண்ணம் மலர்ந்திருப்பதை பலர் கண்டனர். அவற்றை கல்லில் பொறித்து அழிவின்மையில் நிறுத்தினர். ஒவ்வொரு ஆண்டும் அன்னை நிறைவடைந்த சைத்ர மாதம் ஏழாம் வளர்பிறை நாளில் மலர்க்கொடை அளித்து வணங்குகிறோம்” என்றார் பூசகர்.

சிகண்டி அச்சிலையை நோக்கிக்கொண்டு நின்றார். பின்னர் ”நான் அன்னையிடம் ஒன்று கேட்கவேண்டும். அதன்பொருட்டே இங்கு வந்தேன் என உணர்கிறேன்” என்றார். பூசகர் “அன்னையிடமா?” என்றார். “ஆம்” என்றார் சிகண்டி. பூசகர் “அன்னையிடம் நீங்கள் கேட்கலாம். மறுமொழி சொல்ல அவள் எண்ணினால் எங்களில் ஒருவரில் அவள் எழுவாள்” என்றார். சிகண்டி கைகூப்பி அவ்விழிகளை நோக்கி நின்றார். உள்ளத்தை கூராக்கி முழுவிசையையும் கொண்டு அவ்வினாவை எழுப்பினார். மீண்டும் மீண்டுமென அவ்வினா சென்று அறைந்தபடியே இருந்தது. பின் பெருமூச்சுவிட்டு மீண்டுமொருமுறை தொழுதுவிட்டு தன் குடிலுக்கு திரும்பினார்.

ஏழு நாட்கள் அவர் அக்குடிலில் இருந்தார். ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் அன்னையின் பூசனைக்கு மட்டுமே சென்றார். நின்று துளிவிட்டும் பின் ஓசையுடன் எழுந்தும் பெய்துகொண்டிருந்த மழையை உள்ளும் புறமும் என கேட்டுக்கொண்டிருந்தார். ஏழாம் நாள் அந்திப்பூசனை முடிந்து பூசகர் அனைவருக்கும் மலரளித்துக்கொண்டிருந்தபோது மூன்று அகவை கொண்ட சிறுமி ஒருத்தி கையில் மலருடன் அவரை நோக்கி திரும்பி “ஓர் எண்ணத்தின்பொருட்டு ஒருவரை பலிகொள்வேன். ஒரு சொல்லின்பொருட்டு ஒரு குடியை. ஒரு செயலின் பொருட்டு ஒரு நகரை. எரி துளியென்றே எழுகிறது” என்றாள்.

கைகள் நடுங்க “அன்னையே” என்று சிகண்டி சொன்னார். கையிலிருந்த மலருடன் தொழுதார். “பிழைகள் பலிகளாலேயே நிகர்செய்யப்படுகின்றன” என்று நிலைகுத்திய விழிகளுடன் சிறுமி சொன்னாள். அவள் அன்னை குனிந்து “என்ன சொல்கிறாள்?” என்றாள். சிறுமி நிமிர்ந்து நோக்கி “அம்மா” என்றபின் அவள் மேலாடையைப் பற்றியபடி கால்தளர்ந்தாள். முகம் தழைய மயங்கி அன்னையின் கைகளில் சரிந்தாள். சிகண்டி “நான் தேடிவந்த சொற்கள் இவையே” என்றார். அன்னை தன் மகளைத் தூக்கி அருகிருந்த இல்லத்தின் திண்ணை நோக்கி கொண்டுசென்றாள். மீண்டும் ஒருமுறை அன்னையை வணங்கி அனைவரையும் நோக்கி கைகூப்பிவிட்டு சிகண்டி கிளம்பினார்.

wild-west-clipart-rodeo-31நைமிஷாரண்யத்தில் இளைய யாதவர் முன் மீண்டு வந்த சிகண்டி பெருமூச்சுவிட்டார். “வஞ்சத்திற்கும் அன்புக்கும் அப்பாலுள்ளது அறம். மானுடரை ஆளும் விசைகொண்ட அனைத்தும் மானுடம் கடந்தவையே” என்று இளைய யாதவர் சொன்னார். சிகண்டி “ஆம், அழிவிலாத விழிநீர் நிகர்செய்யப்பட்டாகவேண்டும். அது தன் பாதையையும் படைக்கலங்களையும் கண்டடைகிறது” என்றார். “அறிவால் ஐயங்களை அகற்றி தன் பாதையை தெளிவுசெய்க! அறிவு முழுமையாகவே செயலென்று ஆகும் நிலையே யோகம்” என்றார் இளைய யாதவர். வணங்கி மறுசொல்லின்றி எழுந்து சிகண்டி வெளியே நடந்தார்.

முந்தைய கட்டுரைஎம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்
அடுத்த கட்டுரைஇலங்கை,நவீன்,அனோஜன்