மார்க்ஸியம் இன்று தேவையா?

அன்புள்ள ஜெ.எம்,

மீண்டும் அன்பு. உங்கள் கடிதத்தை வாசித்து முடிக்கவே எனக்கு ஒருநாள் ஆகியது. அதற்குள் அந்த கடிதத்துக்கு மூன்று வடிவங்கள் வந்து சேர்ந்து விட்டன. அதில் பாதி எனக்கு இன்னும் புரியாததாகவே இருக்கிறது. நான் இன்னும் மார்க்ஸியத்தின் மீது ஒரு நம்பிக்கை கொண்டவனாகவே இருக்கிறேன். நீங்கள் மார்க்ஸியத்தை ஒட்டுமொத்தமாக நிராகரித்து விட்டீர்கள். மார்க்ஸியத்துக்கு இன்று எந்த பயனுமே இல்லையா? அது வரலாற்றுக்குமேல் நிகழ்ந்த ஒரு வன்முறை மட்டும்தான் என்று நீங்கள் சொல்ல வருகிறீர்களா என்ன?

கெ.அன்புராஜ்

அன்புள்ள அன்புராஜ்,

பலநாட்களாகப் பலர் கேட்ட கேள்விகளுக்கான பதில் அது. பல நிலைகளில் பலரிடம் உரையாடியதன் விளைவு. ஆகவே சொல்லிச் சொல்லி முடியாமல் நீண்டுகொண்டே சென்றது. அதில் பல கேள்விகள், பல பதில்கள் உள்ளன. அத்தனையையும் ஒரு கட்டுரையாக்கும்போது கட்டுக்கோப்பை உருவாக்க பெரிதும் சிரமப்படவேண்டியிருக்கிறது.

நான் மார்க்ஸியத்தைப் பற்றி கொண்டிருக்கும் எண்ணத்தை முன்னரும் பலமுறை சொல்லியிருக்கிறேன். இங்கே நாம் மார்க்ஸியத்தை அதன் அரசியல்தளப் பிரச்சாரகர்களிடமிருந்து மட்டுமே தெரிந்து கொண்டிருக்கிறோம். ஒவ்வொரு அன்றாட அரசியல் நடவடிக்கைக்கு ஏற்பவும் அவர்கள் தொடர்ச்சியாக மாற்றி வளைத்து ஒடித்து திரித்துக் கொண்டே இருக்கும் மார்க்ஸியத்தை புரிந்து கொள்வது எளிதல்ல.

இந்த அரசியல்வாதிகளால் செய்யப் பட்டுள்ள முக்கியமான ஒரு திரிபை நாம் புரிந்து கொள்ள வேண்டும். மார்க்ஸ் முன்வைத்த மார்க்ஸியம், அதற்கு லெனின் அளித்த அரசியல் விளக்கம், அதன் விளைவாக உருவான சோவியத் அரசு உருவாக்கிய ஆட்சியமைப்பின் செயல்பாடுகள் ஆகிய மூன்றையும் சேர்த்து ஒன்றாகவே அவர்கள் நம்மிடம் சொன்னார்கள். அதில் இருந்தே எல்லா சிக்கல்களும் ஆரம்பமாகின்றன.

மார்க்ஸ் சொன்ன மார்க்ஸியம் என்பது ஒரு வரலாற்றுவாதம். அன்றைய சமூகவியல் தரவுகளின் அடிப்படையில் மனித குலத்தின் வரலாற்றை ஒட்டுமொத்தமான நகர்வாக உருவகித்துக்கொண்ட மார்க்ஸ் அந்த வரலாற்றுக்குள் உள்ளுறையாக ஒரு வளர்ச்சிப்போக்கு இருப்பதாக ஊகித்தார். அது பழங்குடி வாழ்க்கையில் இருந்து நிலப்பிரபுத்துவத்துக்கும் அதில் இருந்து முதலாளித்துவத்துக்கும் நகர்கிறது.

முதலாளித்துவத்தின் அன்றைய சிக்கல்களை வைத்து அவர் முதலாளித்துவத்தில் இருந்து அடுத்த கட்டமாக அது கம்யூனிசம் நோக்கிச் செல்லும் என்று ஊகித்தார். நிலப்பிரபுத்துவத்தின் போதாமைகளை தீர்க்கப் பண்ணையடிமைகள் போராடியதன்மூலம் முதலாளித்துவம் வந்தது. முதலாளித்துவத்தின் போதாமைகளைத் தாண்ட தொழிலாளர்கள் போராடி கம்யூனிசம் வரவேண்டும். இதுவே மார்க்ஸ் முன்வைத்த வரலாற்றுவாதம். இதுதான் உண்மையில் மார்க்ஸியம் என்ற சொல்லால் உத்தேசிக்கப்படுகிறது.

விழிப்புணர்ச்சி கொண்ட அரசியல் செயல்பாட்டாளர்கள் தொழிலாளர்களுக்கு அரசியல் உணர்ச்சி ஊட்ட வேண்டும். தொழிலாளர்கள் திரண்டு உற்பத்திச் சக்திகளை கைப்பற்றி, சமூக அமைப்புகளைச் சொந்தமாக்கிக்கொண்டு சமூகத்தைத் தன்வயப்படுத்தவேண்டும். விளைவாக முதலாளித்துவ உற்பத்திமுறை நெருக்கடிக்குள்ளாகும். அது கம்யூனிச அமைப்புக்கு வழிவிடும். அதாவது மாற்றம் தொழிலாளர்களிடம் இருந்து அரசை நோக்கிச் செல்லும்.

லெனின் ருஷ்யாவின் அன்றையநிலைக்கு ஏற்ப ஒரு விளக்கம் அளித்தார். அன்று அரசு பலவீனமானதாக இருந்தது. படைவீரர்கள் அரசுக்கு எதிராக கிளர்ந்தார்கள். அவர்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொண்டு அவர்கள் விரும்பிய கோஷத்தை எழுப்பிச் சட்டென்று தலைநகரைத் தாக்கி அரசைக் கைப்பற்றினார் லெனின். உற்பத்தி சக்திகளில் உற்பத்தி உறவுகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. தொழிலாளர்களுக்கு அரசியல் கல்வியும் அளிக்கப்படவில்லை.

அரசைக் கைப்பற்றியபின் இந்த மாற்றங்களை அரச அதிகாரத்தின் துணையுடன் மேலிருந்து கீழே கொண்டு செல்லலாம் என்றார். அதாவது மார்க்ஸ் சொன்னதற்கு நேர் தலைகீழ். இதுவே லெனினியம். லெனின் செய்தவற்றை மார்க்ஸ் அறிந்தால் கல்லறையில் நெளிவார் என்ற ஃபூக்கோவின் சொற்றொடரின் பின்புலம் இதுவே.

லெனின் காட்டிய வழியில் சர்வாதிகாரம் மூலம் சமூகத்தை வெட்டித்திருத்த ஸ்டாலின் முயன்றார். கோடிக்கணக்கானவர்களைக் கொன்றழித்தார். அவரது முன்மாதிரியைக் கொண்டு உலகம் எங்கும் மார்க்ஸிய சர்வாதிகாரிகள் ராணுவ ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றி விருப்பப்படி சமூகத்தை உருவாக்க முயன்று அழிவை உருவாக்கினார்கள். மாவோ, போல்பாட் முதல் இன்று கொரியாவின் கிம் இல் சுங் வரை

இம்மூன்றும் ஒன்றல்ல. நான் மார்க்ஸிய அரசியல் என்று சொல்வது லெனின் உருவாக்கிய அரசியலை. மார்க்ஸிய அரசமைப்பு என்று சொல்வது ஸ்டாலினும் மாவோவும் போல்பாட்டும் கிம் இல் சுங்கும் உருவாக்கிய அரசுவடிவங்களை. அவை முழுமையாகவே தோற்றுப்போனவை. பேரழிவுகளை உருவாக்கியவை.

நம்மை சிந்திக்கவே விடாமல் இடைவிடாத வசைகள் மற்றும் அவதூறுகள் என வெற்றோசை எழுப்பிக்கொண்டே இருக்கும் நம்மூர் மார்க்ஸியர்களை மீறிச்சென்று இதையெல்லாம் பகுத்து பார்ப்பது சாதாரண வேலை அல்ல. அவர்களுக்கு மார்க்ஸியம் என்பது ஒரு மத நம்பிக்கை . அது ஒரு வகை வெறி மட்டுமே. அதில் சிந்தனைக்கு, வரலாற்று நோக்குக்கும் இடம் இல்லை. ஆனால் நாம் இவற்றைச் செய்தாகவேண்டும்.

ஆக இந்தத் திரிபுகளை தள்ளிவிட்டு பார்த்தால் மார்க்ஸியம் என்பது இன்னொன்று. அதில் மூன்று கூறுகளை நான் காண்கிறேன். ஒன்று, அதன் இலட்சியவாதம். இரண்டு, அதன் தத்துவநோக்கு. மூன்று, அதன் அரசியல்

மானுடர்கள் அனைவரும் இந்தப் பூமியின் செல்வங்கள் மேல் சமமான உரிமைகொண்டவர்கள் என்ற நம்பிக்கையே மார்க்ஸிய இலட்சியவாதத்தின் மையம். ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காக அவர்கள் ஒருங்கிணைந்து போராடவேண்டும் என்ற அறைகூவல் அதன் வெளிப்பாடுதான். ஒருநாள் ஒடுக்கப்பட்டவர்கள் ஒடுக்குபவர்கள் என்ற பேதம் இல்லாத சமூகம் அமையும் என்ற கனவு அதன் உச்சம்

மானுட வரலாற்றில் உருவான ஒரு முக்கியமான மெய்யியல்தரிசனமாகவே மார்க்ஸிய இலட்சியவாதத்தை நான் காண்கிறேன். அது பிறந்திருக்கவில்லை என்றால் இன்றைய உலகம் உருவாகியிருக்காது. ஜனநாயகத்தின் உள்ளுறையாக சமத்துவம் அமைந்திருக்காது. இன்றைய நவீன நலம்நாடும் அரசுகள் அனைத்துக்கும் கருத்தியல் தொடக்கம் அதுவே. இன்றைய மக்கள் அமைப்புகள் அனைத்துக்கும் வழியமைத்தது அதுவே.

மார்க்ஸிய தத்துவம் என்பது முரணியக்கப் பொருள்முதல்வாதம். வரலாறு அதன் பொருண்மைச் சக்திகளின் முரணியக்கம் மூலம் முன்னால்செல்கிறது என்ற விளக்கம்,  வரலாற்றின் உள்ளுறையாக மானுடமுன்னேற்றம் என்ற கருத்து உள்ளது என்ற ஹெகலின் தரிசனத்துக்கு இவ்வாறு மார்க்ஸ் ஒரு பொருள்முதல்வாத விளக்கம் அளித்தார்.

இந்தத் தத்துவநோக்குச் சிந்தனைகளை, பண்பாட்டை, சமூக மாற்றங்களை, தொழில்நுட்பத்தை மானுட வரலாற்றின் பரந்த வெளியில் வைத்து ஒட்டுமொத்தமாக ஆராய்வதற்கு மிகமிக உதவியானது. வரலாற்றைப் புரிந்துகொள்ள, அதைவிட அதைப் பயன்படுத்திக்கொள்ள, முரணியக்க பொருள்முதல்வாதம் போல உதவியான இன்னொரு தத்துவ நோக்கு இன்று இல்லை.

தொழிலாளர்கள் உற்பத்திசக்திகளைக் கைப்பற்றுவது என்ற மார்க்ஸிய அரசியல் அன்றைய ஐரோப்பிய தொழிற்சூழலை வைத்து மார்க்ஸால் உருவகிக்கப்பட்டது. அதற்கு இன்று எந்த பொருளும் இல்லை. மார்க்ஸ் ஊகித்ததை விட முற்றிலும் வேறான ஒன்றாக, மாபெரும் தனி ஆற்றலாக, தொழில்நுட்பம் வளார்ந்துள்ளது இன்று. மேலும் மூலதனம் இன்று செயல்படும் முறையும் மார்க்ஸ் எண்ணிய வகையில் அல்ல. ஆகவே மார்க்ஸிய அரசியலுக்கு இன்று பொருத்தப்பாடு இல்லை.

மார்க்ஸ் சொன்ன அரசு இல்லாத சமூக அமைப்பும் அதைச் சாத்தியமாக்கும் தொழிலாளர்வர்க்க சர்வாதிகாரமும் இன்றைய நோக்கில் வெறும் கனவுகள். முழுக்க முழுக்க மனிதனின் நல்லியல்புகளை மட்டும் நம்பி, இலட்சியவாத நோக்கம் மட்டுமே கொண்டு உருவகிக்கப்பட்டவை. அதை பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒரு பொற்கனவு என்று மட்டுமே சொல்வேன். வரலாறு செல்லும்திசை வேறு. நாளை சாத்தியமான ஒரு அரசு என்பது எப்போதும் மானுடசமூகத்தில் இயங்கும் பல்வேறு விசைகளின் சமரசமாக அமைவதாகவே இருக்கும். அந்த விசைகளில் முக்கியமாக அமைவது தொழில்நுட்பம்.

ஆனால் மார்க்சிய இலட்சியவாதமும், மார்க்ஸிய தத்துவமும் இன்றும் முக்கியத்துவமிழக்கவில்லை என்றே நான் நினைக்கிறேன். ஒரு நவீன ஜனநாயக அமைப்புக்குள் மக்கள் தங்கள் உரிமைகளுக்காக போராடுவதிலேயேகூட மார்க்ஸிய இலட்சியங்களுக்கு பெரும் பங்களிப்பு உண்டு. இன்று நான் பயன்படுத்தும் வரலாற்றாய்வு நோக்கு மார்க்ஸியம் சார்ந்ததே.

அடிப்படையான தத்துவ சிந்தனைகள் எவையும் காலாவதியாவதில்லை. அவை மானுட சிந்தனையின் முரணியக்கத்தில் தங்கள் பங்களிப்பை ஆற்றுகின்றன.ஒருவேளை மார்க்ஸிய இலட்சியவாதம் மற்றும் தத்துவத்தின் பங்களிப்பு காலம்செல்லச் செல்லக் குறையலாம். ஆனாலும் மானுடச் சிந்தனையின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பை எவரும் மறுக்க முடியாது. நாளை இன்றைய முதலாளித்துவத்தின் வீழ்ச்சியில் இருந்து தொழில்நுட்பம் மூலம் இன்னொரு புதியசமூக அமைப்பு உருவகிக்கப்பட்டால் கூட அதிலும் மார்க்ஸியத்தின் பங்களிப்பு உண்டு என்றே சொல்ல முடியும்.

ஜெ

கலாச்சாரம் இரு புதுவரலாற்றுவாதக் கருதுகோள்கள்…

[மறுபிரசுரம்/முதற்பிரசுரம் டிசம்பர் 2010]

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 90
அடுத்த கட்டுரைஉலகத்தொழிலாளர்களே!