”டே நீ சி.வியை வாசிச்சிருக்கியா?”என்றார் பாலசந்திரன் சுள்ளிக்காடு. ”ஆமாம்” என்றேன். ”என்ன வாசிச்சே?” நான் யோசித்து ”எல்லாம் ஹிஸ்டாரிகல் ரொமான்ஸ். அதெல்லாம் லிட்டரேச்சர் இல்லை” என்றேன். அப்போது நான் சுந்தர ரமசாமியின் ஞானப்பிடியில் அடங்கி இருந்த காலம். யோசித்து யோசித்து, பூடகமாக எழுதப்படும் நவீனத்துவ யதார்த்த எழுத்து அல்லாமல் எதுவுமே இலக்கியமல்ல என்ற நம்பிக்கை என்னுள் நடப்பட்டு ஓயாமல் நீரூற்றப்பட்டுக்கொண்டிருந்தது.
”போடா மயிரே…நீ கண்டே பெரிசா…” என்றார் பாலசந்திரன். சி.வி.ராமன்பிள்ளையின் தர்மராஜா என்ற நாவலில் இருந்து ஒரு பக்கத்தை முழுக்க கடகடவென்று ஒப்பித்தார். ஹரிபஞ்சானனன் என்ற உக்கிரமான எதிர்மறைக் கதாபாத்திரம் தர்மராஜா என்ற மூலம்திருநாள் மகாராஜாவுக்கு எதிராக செய்த சதிகளெல்லாம் முறியடிக்கப்பட்டபின் தன் வாழ்க்கைநோக்கமே இல்லாமலாகிவிட்டது என்று உணர்ந்து இருளில் இறங்கி ஓடும்போது சொல்லும் வசனங்கள். ”இருளா விழுங்கு, விழுங்கு இவனை” என்று ஆரம்பிக்கும் அந்த வசனங்கள் ஒரு ஷேக்ஸ்பியர் துன்பியல் நாடகத்தில் வரவேண்டியவை.
நான் ”இது நாடகம் போலிருக்கிறது. நாவல் என்றால் யதார்த்தமாக இருக்க வேண்டும்” என்று சொன்னேன் ”யாருடைய யதார்த்தம்?”என்றார் பலசந்திரன் சுள்ளிக்காடு. ”இன்றைக்கு இருக்கிற யதார்த்தம் நாளைக்கு இல்லை. நேற்றிருந்த யதார்த்தம் என்ன என்றே நமக்கு தெரியாது. எந்த யதார்த்தத்தை நம்பி எழுத்தாளன் எழுதவேண்டும்? யதார்த்தங்கள் மாறிக்கோண்டே இருக்கும். இலக்கியபப்டைப்பு மாறாது. டேய், சி.வி.ராமன்பிள்ளை காலத்தில் இருந்த ஒரு கல் கூட இன்றைக்கு கிடையாது. அவரது சொல் நின்றுகொண்டிருக்கிறது.”
நான் வாயடைந்து போய்விட்டேன். ”டேய், இலக்கியப்படைப்புக்கு ஒரே ஒரு யதார்த்தம் மட்டும்தான். அந்த படைப்பு அதற்குள் உருவாக்கி அளிக்கும் யதார்த்தம். வேறு எந்த யதார்த்ததை வைத்தும் அதை அளக்க முடியாது. டேய் மயிரே, நீ சின்ன பையன். . நீ என்னத்துக்கு கண்டகண்ட தமிழ்பட்டர்கள் சொல்லுவதையெல்லாம் கேட்டு சீரழிகிறாய்? ஒன்றுமில்லையென்றாலும் நீ ஒரு நல்ல நாயரல்லவா? நமக்கு நம்முடைய ஞானமும் திறமையும் இல்லையா? டேய், சி.வி.ராமன்பிள்ளையின் மார்த்தாண்ட வர்மா நாவலில் உள்ள யதார்த்ததை வைத்துக்கொண்டு தர்மராஜாவை அளக்க முடியாது தெரியுமா?”
நான் ஒன்றும் சொல்லவில்லை. பாலசந்திரன் இன்னும் ஒரு சி.வி.ராமன்பிள்ளை வசனத்தைச் சொன்னார். சம்ஸ்கிருதத்தின் முழக்கமிடும் சொற்களும் புராதன மலையாளச் சொற்களும் கூடி முயங்கி உருவாகும் அதிநாடகத்தன்மை. கரும்பாறைக்கூட்டங்கள் போல கண்ணெட்டும் தூரம் வரைக்கும் விரிந்து கிடக்கும் சொல்வெளி. ”டேய், நல்ல எழுத்தாளன் எழுத வேண்டியது வாழ்க்கையை. வாழ்க்கையின் உச்சமாக அபூர்வமான தருணங்களில் எழுந்துவரக்கூடிய அற்புதமான தருணங்களை. ஒரு எழுத்தாளன் அதை நுட்பமாக எழுதி வைப்பான். ஒருவன் கொந்தளித்து குமுறுவான். அதெல்லாம் அந்தந்த படைப்பாளியின் இயல்பு. ஒன்று சரி, இன்னொன்று தப்பு என்று எவனால் சொல்ல முடியும்? ஆனால் ஒருவன் அந்த அற்புதக்கணத்தைத் தொட்டுவிட்டான் என்றால் அது அவனுடைய படைப்பில் தெரியும்”
பாலசந்திரன் தொடர்ந்தார்.” சி.வி.ராமன்பிள்ளை கதகளி கண்டு வளர்ந்த கலைஞன். கதகளியின் உக்கிரமான நாடகத்தன்மைதான் அவரது கலையிலும் இருக்கிறது. சிவியின் நாவல்களில் பழிவாங்கும் குரோதம், மகத்தான தியாகம், பேரன்பு, வரலாற்றால் உருவாக்கப்படக்கூடிய மாற்று இல்லாத துக்கம் என்று எத்தனை அடிப்படை மானுட உணர்ச்சிகள் கொந்தளிக்கின்றன. அதெல்லாம்தான் எழுத்தாளன் எழுத வேண்டிய விஷயங்கள். அதல்லாமல் துரைகள் என்ன எழுதியிருக்கிறார்கள் என்று நாகர்கோயிலில் இருந்துகோண்டு நெற்றிமீது கையை வைத்து பார்க்கிறதல்ல இலக்கியம். போய் சொல்லு உன் பட்டரிடம்”
ஆகவே சுந்தர ராமசாமியிடம் வந்து சொன்னேன். அவர் ஒரே சொல்லில் நிராகரித்துவிட்டார். ”ஹிஸ்டாரிகல் நாவல் எல்லாம் லிடரேச்சரே கெடையாது” நான் ”அப்ப வார் ஆண்ட் பீஸ்?” என்றேன். ”அது அப்ப உள்ள யதார்த்தம். இன்னைக்கு அதிலே பெரும்பகுதிக்கு வேல்யூவே கெடையாது” ஆனால் அவர் சி.வி.ராமன்பிள்ளையின் மார்த்தண்டவர்மாவைத்தவிர எதையும் வாசிக்கவில்லை என்றும் சொன்னார். நான் அதனால் சற்று குழப்பம் அடைந்தேன். நான் இன்னொருமுறை அவரது நாவல்களை வாசிக்க வேண்டும் என்று முடிவுசெய்தேன். அந்த முடிவு வழியாக சுந்தர ராமசாமியைவிட்டு நிரந்தரமாக விலக ஆரம்பித்தேன்.
சி.வி.ராமன்பிள்ளை யின் நாவல்கள் வால்டர் ஸ்காட்டின் நாவல்களை முன்னுதாரணமாகக் கொண்டவை. அவற்றை வடிவ ரீதியாக வரலாற்று உணர்ச்சிக்கதைகள் என்றுதான் வகைப்படுத்த வேண்டும். மார்த்தாண்ட வர்மா, தர்மராஜா, ராம ராஜா பகதூர் ஆகிய மூன்று நாவல்களும் அவரது முக்கியமான ஆக்கங்கள். அவை மூன்றுமே திருவிதாங்கூர் வரலாற்றைச் சித்தரிப்பவை. 1730ல் திருவிதாங்கூரில் ஆட்சிக்கு வந்து அதை வலுவான நாடாக ஆக்கிய மன்னர் மார்த்தாண்ட வர்மா அவரைக் கொன்று ஆட்சியைக்கைப்பற்ற முயன்ற எட்டுவீட்டுப்பிள்¨ளைமார் என்ற பிரபுகுலத்தை வென்று ஆட்சியைக் கைப்பற்றிய வரலாற்றை முதல் நாவல் சொல்கிறது. அது எளிமையான ஒரு சாகஸ நாவல் மட்டும்தான்.
வெற்றி பெற்ற மார்த்தாண்ட வர்மா மகாராஜா அந்த பிரபுகுலக் கட்டுமானத்தையே ஒழிக்க எண்ணினார். அது அரசியல் ரீதியாக ஒரு நல்ல முடிவுதான். ஆனால் அது ஒரு பெரும் மானுட அழிவு. வேரூன்றிய பழைய குடும்பங்கள் பூண்டோடு அழிக்கப்பட்டன. ஆண்கள் அனைவரும் கொல்லப்பட்டார்கள். முதியவர் முதல் கைக்குழந்தை வரை. பெண்கள் அனைவரும் பிடித்து கடற்கரையில் கொண்டுபோய் மீனவர்களுக்குப் பரிசளிக்கப்பட்டார்கள். ‘துறையேற்றம்’ என்று சொல்லப்படும் இந்த தண்டனை 1934 ல் குளச்சல் கடலோரத்தில் நடந்தது. இவ்வாறு வேருடன் பிடுங்கப்பட்ட வம்சங்களில் எஞ்சிய பழிவாங்கும் ஆவேசம் மீண்டும் மீண்டும் திருவிதாங்கூரைத் தாக்குவதை பிற இருநாவல்களும் காட்டுகின்றன.
பிந்தைய இரு நாவல்களும் செவ்வியல் ஆக்கங்கள் என்ற தகுதியைப்பெறுவதற்கான காரணம் அவற்றில் உள்ள எதிர்கதாபாத்திரங்கள்தான். மானுட அளவைவிடப் பிரம்மாண்டமான ஆளுமை கொண்ட அசுர கதாபாத்திரங்கள் அவை. தீமையின் வலிமையை, ஏன் கம்பீரத்தை, சி.வி.ராமன்பிள்ளை அக்கதாபாத்திரங்கள் வழியாக சித்தரிக்கிறார். கதகளியில் ராமனும் கிருஷ்ணனும் சின்ன கதாபாத்திரங்கள். துரியோதனனும் ராவணனும் நரகாசுரனும் எல்லாம்தான் மையக்கதாபாத்திரங்கள். கதகளி அந்த எதிர்நாயகர்களின் வீழ்ச்சியின் கதையைச் சொல்லும் அவலநாடக வழடிவம். சி.வி.ராமன்பிள்ளை நாவல்களும் அப்படியே. ஹரிபஞ்சானனின் குணச்சித்திரத்தில் மானுட இயல்புகளை விட ராட்சத இயல்புகளே மேலோங்கியிருக்கின்றன.
அந்த உக்கிர மனநிலைகளைச் சொல்வதற்கான தனித்த மொழிநடையை சி.வி.ராமன்பிள்ளை உருவாக்கிக்கொண்டார். செண்டைமேளம் போல முழங்கும் மொழிநடை அது. வர்ணனைகளின் கம்பீரமான தோரணையில் உள்ளது சி.வி.ராமன்பிள்ளையின் கலை. குணச்சித்திரங்களையும் அவர்களின் அக ஓட்டங்களையும் ஆசிரியர் கூற்றாக ஆவேசமான மொழிநடையில் சொல்லிச் சொல்லிச்செல்லும் சி.வி.ராமன்பிள்ளை நாவல்கள் அசாதாரணமான ஒரு வாழ்க்கைத்தரிசனத்தை அளிப்பவை. பெரும் காவிய அனுபவத்தின் சாயல் கொண்டவை. அவை மனிதவாழ்க்கையை சி.வி.ராமன்பிள்ளையே உருவாக்கிக்கொண்ட ஒரு தனி யதார்த்தத்துக்குக் கொண்டு சென்று நிறுத்தி ஆராய்கின்றன. நல்லியல்புகளை விட தீய இலய்ல்புகள் பல மடங்கு ஆற்றல் கொண்டவை என்று அவை காட்டுகின்றன. ஆனால் மண்ணில் தியாகத்தை வெல்ல எந்த சக்தியாலும் முடியாதென அவை நிறுவுகின்றன.
1858ல் ஒரு நடுத்தர நாயர் குடும்பத்தில் பிறந்தவர் சி.வி.ராமன்பிள்ளை. அரண்மனையில் உயர்பதவியில் இருந்த ஒருவர் சி.வி.ராமன்பிள்ளையின் உண்மையான தந்தை என்றும் அவரது உதவியால் சி.வி.ராமன்பிள்ளை அன்றைய சூழலில் கிடைக்கச்சாத்தியமான உயர்கல்வியை அடைய முடிந்தது என்றும் சொல்லபப்டுகிறது. சம்ஸ்கிருதமும் ஆங்கிலமும் ஓரளவு ஆயுர்வேதமும் சி.வி.ராமன்பிள்ளை கற்றார். அரண்மனையுடன் நெருக்கமான உறவிருந்ததனால் திருவிதாங்கூர் வரலாறு அவருக்கு நூல்கள் வழியாகவும் செவி வழியாகவும் கிடைத்தது.
ரோஸ் என்ற பெயருள்ள வெள்ளைய பள்ளி ஆசிரியரால் சி.வி.ராமன்பிள்ளை மிகவும் கவரப்பட்டார். அவரிடமிருந்து வால்டர் ஸ்காட் நாவல்களை அறிமுகம் செய்துகொண்டார். பின்னாளில் வீடுகட்டியபோது அதற்கு ரோஸ் கோர்ட் என்றே பெயரிட்டார். சில நாடகங்களை எழுதியபின்னர் ஸ்கட்டை முன்னுதாரணமாகக் கொண்டு 1880 ல் தன் முதல் நாவலான ‘மார்த்தாண்ட வர்மா’ வை எழுதினார். 1885ல் தான் அது அச்சிலேரியது. இன்றும் கேரளத்தில் மிகவும் விரும்பிப்படிக்கப்படும் நூல் அது.
ஆனால் அதன்பின் இருபது வருடம் அன்று உருவாகிவந்த அரசியல் செயல்பாடுகளில் தீவிரமாக ஈடுபடலானார். அக்காலத்தில் திருவிதாங்கூர் அரசு பிராமணர்களின் பிடியில் இருந்தது. திவான், பேஷ்கார் உட்ப்ட எல்லா பதவிகளையும் அய்யர்களும் ராவ்களுமே வகித்தார்கள். ஐம்பது வருடம் முன்பு கடைசி நாயர் திவானாக இருந்த வேலுத்தம்பி தளவாய் திருவிதாங்கூரை கப்பம் பெற்று மேலிருந்து ஆட்சி செய்த வெள்ளையருக்கு எதிராக சுதந்திரப் பிரகடனம்செய்து கிளர்ந்தெழுந்து பெரிய அழிவை உருவாக்கினார். அந்தக்கிளர்ச்சியை அடக்கி அவரைக் கொன்ற பின்னர் மீண்டும் நாயர்கள் பதவிக்கு வருவதை வெள்ளையர் விரும்பவில்லை.
அனைத்து துறைகளிலும் நாயர்கள் அடக்கி வைக்கப்பட்டு பிராமணர் முன்னிறுத்தப்பட்டார்கள். கேரளம் முழுக்க நாயர்களிடையே ஒரு பெரிய அதிருப்தி உருவாகி மெல்ல வளர்ந்தது. ‘மலையாளி மெம்மோரியல்’ என்று பிற்பாடு அழைக்கப்பட்ட ஒரு அரசியலியக்கம் நாயர்களுக்கு அரச பதவிகளில் உரிய இடம் பெற்றுத்தருவதற்காக தொடங்கி நடத்தப்பட்டது. மகாராஜாவுக்கு கூட்டுமனு கொடுப்பதாக தொடங்கிய இவ்வியக்கம் பின்னர் பெரிய ஒரு அமைப்பாக ஆகியது. இவ்வியக்கம் தென்னிந்தியாவில் பிராமணரல்லாதார் இயக்கம் உருவாவதற்கான அடிப்படைகளில் ஒன்று. பின்னர் ஜஸ்டிஸ் கட்சி உருவாவதிலும் நாயர்கள் முக்கியப்பங்காற்றினார்கள். நாயர் சர்வீஸ் சொசைட்டி என்ற அமைப்பு பிற்பாடு உருவாவதற்கும் இந்தக்கிளச்ச்சி காரணமாகியது. இதில் சி.வி.ராமன்பிள்ளை பெரும் பங்காற்றினார்
இக்காலத்தில் சி.வி.ராமன்பிள்ளை இலக்கியத்தை விட்டு விலகிச்சென்றார். சி.வி.ராமன்பிள்ளை இருபதாண்டுக்காலம் எதுவுமே எழுதவில்லை. மார்த்தாண்ட வர்மா மூலம் கிடைத்த புகழ் மெல்ல மெல்ல இல்லாமலாயிற்று. மார்த்தாண்ட வர்மா நாவலையே அவர் எழுதவில்லை என்ற அவதூறும் உருவாயிற்று. ஆனால் முதுமைக்காலத்தில் அரசியலில் நம்பிக்கை இழந்த சி.வி.ராமன்பிள்ளை தொடர்ச்சியாக எழுத ஆரம்பித்தார்.1913 ல் அவர் தான் வகித்துவந்த அரசுப்பதவியை ஒரு மனக்கசப்பில் ராஜினாமா செய்தார். அதன்பின்னரே அவரது முக்கியமான நாவலாகிய தர்மராஜா எழுதப்பட்டது. 1918ல் அவரது மிகச்சிறந்த ஆக்கமென்று கருதப்படும் ராமராஜாபகதூர் வெளிவந்தது. 1922 மார்ச் மாதம் 1 ஆம் தேதி சி.வி.ராமன்பிள்ளை மரணமடைந்தார்.
பி.கெ.பரமேஸ்வரன் நாயர் எழுதிய ‘சி.வி.ராமன்பிள்ளை’ என்ற வாழ்க்கை வரலாற்றை படித்தபோதுதான் சி.வி.ராமன்பிள்ளையின் கலையின் சிறப்பியல்பு எனக்குப் புரிந்தது. அப்போது நான் சுந்தர ராமசாமியிடம் விவாதிக்க ஆரம்பித்திருந்தேன். ”எல்லாமே அவர்ட்ட ஜாஸ்தி கலரா இருக்கு”என்று சொன்ன சுந்தர ராமசாமியிடம் நான் சொன்னேன் ”அது உங்க ஸ்கேல் சார். உங்க வாழ்க்கையிலே கலரே இல்லை. மிக மிகச்சாதாரணமான ஒரு மிடில் கிளாஸ் பிராமண வாழ்க்கை உங்களுக்கு. அதைவைச்சுக்கிட்டு நீங்க மத்த வாக்கைகளைப் பாக்கிறீங்க. சிவியோட வாழ்க்கை அவரோட நாவல்களை மாதிரியே கலர்புல் ஆனது”
சி.வி.ராமன்பிள்ளை வாள்சண்டையும் கம்புச்சண்டையும் தெரிந்தவர். அரசுப்பணியில் திருவிதாங்கூர் முழுக்க அலைந்தவர். குதிரை மீது ஏறி திருடர்களை துரத்தியிருக்கிறார். ஊழல்களை விசாரித்து தண்டனை கொடுத்திருக்கிறார். ஒரு வரலாற்று அரசியல் இயக்கத்தை முன்னணியில் நின்று நடத்தியிருக்கிறார். அதிகாரத்துக்கான சதிகள் , மாற்றுச்சதிகளில் இருபதாண்டுக்காலம் ஈடுபட்டிருக்கிறார்.
பி.கெ.பரமேஸ்வரன் நாயர் எழுதிய வாழ்க்கை வரலாற்றில் ஒரு நிகழ்ச்சி. இளைஞனாகிய சி.வி.ராமன்பிள்ளை ஆலப்புழை காயல் வழியாக படகில் வந்துகோண்டிருக்கிறார். 1883 ல் அவர் சிறிய அரசு வேலையில் இருந்தார். பெரிய குலச்சிறப்பும் இல்லை. காயலில் படகில் வந்து சரக்குத்தோணிகளைக் கொள்ளையடிக்கும் கும்பலை கண்காணிக்கும் வேலை. மத்தியான்ன நேரம். மிக மிகக் கடுமையான பசி. காயலருகே ஒரு பெரிய நாயர் தறவாட்டு வீட்டைக் கண்டதும் படகை அங்கே கொண்டுசெல்லச்சென்றார். அக்காலத்தில் ஆலப்புழா பகுதிகளில் போக்குவரத்து என்பதே படகுகள் வழியாகத்தான். ஆகவே இன்று வீடுகள் சாலையை நோக்கிக் கட்டப்பட்டிருப்பதுபோல அன்று காயலை நோக்கிக் கட்டப்பட்டிருக்கும். வீட்டுமுன் பெரிய படித்துறை இருக்கும்.
படித்துறையில் இறங்கி மேலே சென்றபோது அங்கே எதிரில் வந்த மூத்த நாயரிடம் ”நான் அரண்மனை சேவகன், எனக்கு கொஞ்சம் சாப்பாடு கிடைக்குமா?”என்று கேட்டார். அவர் அலட்சியமாக ”பின்பக்கம் ஊட்டுபுரைக்குப் போ”என்று கையைக் காட்டினார். சி.வி.ராமன்பிள்ளை மனம் புண்பட்டார். திரும்பிவிடலாம் என்று யோசித்து தயங்கியபோது ஓர் பேரழகி அவர் எதிரில் வந்தாள். அந்த நாயரின் மூத்த மகள். ”ஏன் திரும்புகிறீர்கள்? வாருங்கள், சாப்பிட்டுவிட்டுச்செல்லலாம்”என்று சொல்லி அழகிய சிரிப்புடன் அவரை கட்டாயப்படுத்தி உள்ளே கூட்டிச்சென்றாள்.
சி.வி.ராமன்பிள்ளை சாப்பிட்டு ஓய்வெடுக்கும்போதெல்லாம் அவளையே பார்த்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட ஒரு ராஜகுமாரி. அவளைவிட்டு கண்களையும் மனத்தையும் விலக்க முடியவில்லை. சாப்பிட்டுவிட்டு கிளம்பிச்செல்லும்போது பித்து எடுத்த நிலையில் இருந்தார். ஆனால் அவர் ஒருசாதாரண சேவகன். அந்த தறவாட்டு வீட்டு பூமுகக்கட்டிடத்தில் நுழையும் அருகதைகூட இல்லாதவர். ஆகவே அந்தக்கனவை அவர் தன் நெஞ்சுக்குள்ளேயே வைத்துக்கொண்டார்.
மூன்று வருடம் கழித்து மார்த்தாண்ட வர்மா வெளிவந்தது. பெரும்புகழும் நல்ல பதவியும் தேடி வந்தன. திருமண ஆலோசனைகள் வந்தன. அதில் ஒன்று ஆலப்புழா பகுதியில் இருந்து. தன்னுள் இருந்த கனவு உயிர்பெறக்கண்டார். ஆலப்புழாவுக்கு பெண் பார்க்கச்சென்று இறங்கியபோது தெரிந்தது, அதே வீடு. மனம் முரசு போல் அதிர்ந்தது. நிற்க முடியாமல் கால்கள் குழைந்தன. அந்தப்பெண்ணா? விதி சூதாடுகிறதா?
ஆனால் அவள் ஏற்கனவே மணமாகிச்சென்றுவிட்டிருந்தாள். அவள் பெயர் ஜானகியம்மா. அவளுடைய தங்கை பாகீரதியம்மாவைத்தான் சி.வி.ராமன்பிள்ளை பெண் பார்க்க வந்திருந்தார். அழகில் ஒருபடி குறைந்தவள். ஆனாலும் அந்த வீட்டுடன் ஒரு உறவென்பது சி.வி.ராமன்பிள்ளையின் கனவு. திருமணம் நடந்தது. ஜானகியம்மாவை அப்போது சி.வி.ராமன்பிள்ளை மீண்டும்பார்த்தார். அரசகுலத்தவரும் பிரபல ஓவியருமான ஸி.ராஜராஜ வர்மாவின் மனைவியாக இருந்தாள் அவள். அவளுடைய பேரழகு மேலும் முழுமை அடைந்திருந்தது. ஜானகியம்மா தன்னுடைய மிகச்சிறந்த வாசகி என்பதை சி.வி.ராமன்பிள்ளை கண்டார்.
பாகீரதியம்மாவை மணந்த சி.வி.ராமன்பிள்ளை திருவனந்தபுரத்தில் ஒரு வீடு கட்டி அதில் வாழலானார். அவருக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. கடைசிக்குழந்தை பிறந்ததுமே பாகீரதியம்மா நோயாளியாகி படுக்கையில் விழுந்தாள். கடைசிக்குழந்தையின் பெயர் மகேஸ்வரியம்மா. அவள் பின்னர் பிரபல மலையாள எழுத்தாளரான இ.வி.கிருஷ்ணபிள்ளையை மணம்புரிந்துகொண்டாள். அவளுக்குப்பிறந்த மகன் பெரிய நகைச்சுவை நடிகர் ஆனார். அடூர் பாஸி.
நோயில் கிடந்த பாகீரதியம்மா¨வை சி.வியால் கவனிக்க முடியவில்லை. மலையாளி மெமோரியல் உச்சத்தில் இருந்த காலம். அப்போது ஸி.ராஜராஜவர்மா மரணமடைந்திருந்தார். ஆலப்புழை வீட்டில் இருந்த விதவையான ஜானகியம்மா தங்கையின் உடல்நிலையை கவனிக்க வந்து சேர்ந்தார். அவருக்கு குழந்தைகள் இல்லை. சி.வி.ராமன்பிள்ளையின் வீட்டிலேயே தங்கி குழந்தைகளையும் தங்கையையும் அவர் கவனித்துக்கொண்டார்.
சி.வி.ராமன்பிள்ளை தன் மனதில் உள்ள ஆசையை ஒருபோதும் வெளிக்காட்டவில்லை. அவர் அதிகமாகப் பேசக்கூடியவர் அல்ல. கோபமும் மூர்க்கமும் கொண்ட படைவீரரின் மனநிலை உடையவர். பிறரிடம் உணர்ச்சிகளைக் காட்டுவதே இல்லை. அதிலும் ஜானகியம்மா மீதுள்ள காதலை மனைவி அறியாமல் முற்றிலுமாக மறைத்திருந்தார். நோய் முற்றி பாகீரதியம்மா மறைந்தார்.
ஆறுகுழந்தைகளுடன் சி.வி.ராமன்பிள்ளை தனியரானார். ஒரு மாதம் ‘புலைதீட்டு’ கழியும் வரை ஜானகியம்மா கூடவே இருந்தார். ஒருநாள் அவர் தன் பெட்டியுடன் கிளம்பினார். சி.வி.ராமன்பிள்ளை அப்போது வாசல் திண்ணையில் இருந்தார். அவரைக் கடந்து சென்ற ஜானகியம்மா ”நான் கிளம்புகிறேன். எல்லாவற்றையும் வேலைக்காரியிடம் சொல்லியிருக்கிறேன்”என்றார். சி.வி.ராமன்பிள்ளை பேசாமல் வெற்றிலை மென்றபடி தலை குனிந்து அமர்ந்திருந்தார். ஜானகி அம்மா கடைசிப்படி இறங்கும்போது சட்டென்று உடைந்த குரலில் சி.வி.ராமன்பிள்ளை ”எனக்கும் என் பிள்ளைகளுக்கும் இனி யார் இருக்கிறார்கள்?”என்று கேட்டார்
கண்ணீருடன் நின்ற ஜானகியம்மா ”அதனால் நான் இங்கே நிற்க முடியுமா? இனி எனக்கு இங்கே என்ன உறவு?” என்றார் ”என்பிள்ளைகளுக்கு அம்மாவாக இருந்து கொள்” என்றார் சி.வி.ராமன்பிள்ளை. ஜானகி அம்மா கண்ணீருடன் வந்து சி.வி.ராமன்பிள்ளையின் கைகளைப்பிடித்துக்கொண்டாள். அவளை அவர் மறுமணம் புரிந்துகொண்டார்.
ஆலப்புழை வீட்டில் படகில்வந்த நாள் முதல் சி.வி.ராமன்பிள்ளைவின் மீது மாளாத மானசீகக் காதல் கொண்டிருந்தார் ஜானகியம்மா. அது பாகீரதியம்மாவுக்கு அப்போதே நன்றாகத்தெரியும். ஆனால் வேறு வழியில்லாமல் ஸி. ராஜராஜவர்மாவை மணக்க நேர்ந்தது. பாகீரதியை மணக்க சி.வி.ராமன்பிள்ளை வந்தபோது பாகீரதி தயங்கினார். அக்காவின் கட்டாயத்தால்தான் மணக்கச் சம்மதித்தார். நோயுற்று மரணப்படுக்கையில் இருந்த பாகீரதி தனக்குப்பின் தன் கணவனை அக்காவே மறுமணம் புரிந்துகொள்ள வேண்டுமென கோரியிருந்தார்.
ஆனால் அவர்கள் ஒருசொல்கூட பேசிக்கொள்ளவில்லை. கிட்டத்தட்ட பதினைந்து வருடம் அந்த காதல் இருவர் உள்ளத்திலும் ஆழத்தில் புதைந்துகிடந்து கனல் போல நீறி நீறிச் சுடர்விட்டுக்கொண்டிருந்தது. விதியின் சதுரங்கத்தில் அவர்கள் இணைந்தார்கள்.
ஆச்சரியமான விஷயம் இன்னும் ஒன்று உண்டு. ஜானகியின் மீது கொண்ட காதல் தன்னுள் எரிந்துகொண்டிருந்தபோதுதான் சி.வி.ராமன்பிள்ளை மார்த்தாண்ட வர்மாவை எழுதினார். அவளை இழந்தபின் பின்னர் இருபதாண்டுக்காலம் அவர் எழுத்தாளராகவே இல்லை. மீண்டும் ஜானகியை அடைந்தபின் பெரும் ஆவேசத்துடன் மீண்டும் இலக்கிய உலகுக்கு வந்து தன் சிறந்த படைப்புகளை உருவாக்கினார். அந்தக்காதல்தான் அவரது படைப்பூக்கத்தின் விசையா?
அவர் தர்மராஜாவையும் ராமராஜாபகதூரையும் எழுத வேண்டுமென்று எண்ணிய ஒரு சக்தி அவரை கவனித்துக்கொண்டிருந்ததா? இருபது வருடம் அது அவரைச் சோதனைசெய்து பார்த்துவிட்டு ஜானகியை அவரிடம் ஒப்படைத்ததா?
எத்தனை விசித்திரமான வாழ்க்கைச் சந்தர்ப்பங்கள்! இதில் பாதி சுந்தர ராமசாமிக்கு வாய்த்திருந்தால் அவர் எழுதிய நாவல்கள் வேறு வகையாகத்தான் இருந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Dec 19, 2012 @ 0:00