கவிதை மொழியாக்கம் -எதிர்வினை

 

ocp

வெ.ஸ்ரீராம்

கவிதை மொழியாக்கம் -கடிதம்

இனிய ஜெயம்

தனது மொழியாக்கம் குறித்த நண்பர் சூர்யா அவர்களின் எதிர்வினையை கண்டேன் . நியாயப்படி இக் கடிதத்தினை சூர்யா அவர்களுக்கு எழுதி இருக்க வேண்டும் .  தொடர்ச்சி கருதி இதையும் உங்களுக்கே எழுதுகிறேன் .

நீரின் சாவி

 

 

ரிஷிகேஷத்திற்கு பிறகு

கங்கை இன்னும் பசுமை.

சிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம்.

நாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல்.

மேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா.

நீலவெளிகளில் வெண்பாறைகளும் கருமேகங்களும்.

நீ சொன்னாய்:

இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது

அன்றிரவு நான் எனது கைகளை உனது முலைகளில் கழுவினேன்

இதுதான் சூர்யா மொழியாக்கம் செய்த கவிதை .  இதில் நீரால் எனும் சொல்லுக்கு பதில் வளங்களால் என போட்டு   இந்த தேசம் வளங்களால் நிரம்பியிருக்கிறது  என்றபடி  இந்த கவிதையை வைத்துக் கொள்வோம் .

இனி இந்த  கவிதையை  வைப்பு முறை வழியே அணுகிப் பார்ப்போம் .

 

முதலில் நோக்கு நிலை .  இக் கவிதை ‘அவனால் ”சொல்லப்படுகிறது . இரண்டாவது கங்கை குறித்த அவனது அவதானம் .மூன்றாவது இயற்க்கை சித்திரம் .நான்காவது ”அவளுடைய ”பிரகடனம் .ஐந்தாவது  கலவி ஒன்றின் உன்மத்த துவக்கம் மீதான சித்தரிப்பு .

 

// ஒரு சொல்லை எந்த அர்த்தத்தில் எப்படி தொனிக்குமாறு எந்த கலாச்சார பின்னணியில் பயன்படுத்துகிறார் என்பதை அனுமானித்துக்கொள்வது முக்கியம் //

 

அதே அளவு ஒரு சொல் .அது மொழிபெயர்க்கப்பட்டு அது வந்து சேரும் கலாச்சாரத்தில் அது எப்படி அர்த்தம் பெறும் என அனுமானிப்பதும் அதே அளவு முக்கியம் . உதாரணமாக சிகரங்களில் உடைகிறது கண்ணாடித் தொடுவானம் எனும் வரியை எடுத்துக்கொண்டால் , முதல் நோக்கில் அதிலுள்ளது ஒரு கவித்துவமான சித்தரிப்பு ,அடுத்த அடுக்கில் அதில் உள்ளது , கங்கையாக மாற பனி அடுக்குகள் உடையும் தருணம் . இந்த இரண்டை தாண்டி மூன்றாவது ஒன்று உண்டு .அது மூல ஆசிரியர் உத்தேசிக்காதது .ஆனால்  நமதே ஆனது .அது என்ன ? நாம் பார்க்கும் கங்கை இரண்டாவது கங்கைதான் .இதன் மூல கங்கை என்பது ஆகாயத்தில் இருக்கிறது எனும்  கவித்துவ புராண சித்திரம்தான் அது.  .ஆகாய கங்கை .  அப்படிப் பார்த்தால் உருக்கத் துவங்கும் அந்த பனி அடுக்கு , சிகரத்தில் உடையும் அந்த கண்ணாடி வானம் .ஆகாய கங்கை . ஆகாய கங்கையின் முதல் மண் தொடுகை அது .

 

ரிஷிகேசத்துக்கு பிறகான கங்கை  என்ற பதம் ஏன் வருகிறது ? ஏன் எனில் ரிஷிகேசத்துக்கு பிறகே கங்கை  சமநிலத்தில் நடக்கிறாள் .

 

இந்த நிலம் வளங்களால் நிறைந்தது .எல்லாம் அவள் அளித்த வளம் . கங்கர்கள் எனும் குலம் துவங்கி ,விவசாயம் தொடர்ந்து ,கங்கை சதுப்பு வெளிக்கு மட்டுமே சொந்தமான கூர் மூக்கு முதலைகள் வரை இங்கே திகழும் ,வாழ்வு வளம் எல்லாம் அவள் தந்தது .

 

அன்று இரவு அவளது முலைகளில் கைகளை கழுவினேன் . காமத்தின் முதல் பனி அடுக்கு ,சிகர முனைகளில் உடைந்து உருக துவங்கி விட்டது .கங்கை துவங்குகையில் கைகளை கழுவிகொள்ளலாம் என்னும் அளவு நீர் தான் . பின்னர் அவன் யார் ? அதன் பின் அவன் அந்த மல்லர் பெரியாற்றில் நீர்வழிப் படும் வெறும் புணை . காமம் எனும்  நீரின் சாவி கொண்டு அவளாகிய  அந்த நிலம் பொதிந்து வைத்திருக்கும் செல்வங்களை  எல்லாம் அவனுக்கு திறந்து காட்டப் போகிறாள் .  பெண்மை பெரும்பாலும்  உலக அளவில் வளத்தின் குறியீடு .

 

பெண்ணில்  காமம் என பெருக்கெடுத்து ஓடுவது கங்கை . ஆனால் அந்த கங்கையை மட்டுமே,  கை நனைக்கும் அளவிலேனும் ஆணால்  அறிய இயலும் .பெண்ணில் நிறையும்  இந்த கங்கைக்கு மூலமான அந்த ஆகாய கங்கையை ஆணால்  ஒரு போதும் அறிய இயலாது . இப்படி கற்பனை சாத்தயங்களை விரிய வைக்கும் தன்மையை வளங்கள் என்னும் சொல்லே அளிக்கிறதே அன்றி , நீராலானது எனும் சொல் அளிக்கவில்லை . மேலும் இந்த கவிதை நிகழும் உணர்வு தளத்துக்கும் நீராலானது எனும் சொல் முற்றிலும் பிழையான சொல் .

 

கவிதை இதைத்தான் உத்தேசிக்கிறது எனும் யூகத்தில் நிகழ்த்தும் ”சொல் மாறாட்டங்கள் ” மேம்படுத்துதல் கணக்கில்தான் சேரும் .  இவை கவிதையை கவிதை  இல்லாமல் செய்து விடும் .உதாரணமாக சூர்யா இதன் மூல பிரதியில் வளங்கள் என இருந்தது எனும் குறிப்பை கவிதைக்கு கீழே தந்திருக்கா விட்டால் , இந்த நல்ல கவிதையை நான் இழந்திருப்பேன் .

 

மற்றபடி  அடுத்த கட்ட அடிதடியை நண்பர் சூர்யா தொடரலாம்  : )

 

 

கடலூர் சீனு

 

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-11
அடுத்த கட்டுரைநாயக்கர் கலை -கடிதம்