அசடன் -மேரி கிறிஸ்டி

idiot

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,

நம்மைச் சுற்றி அசுர வேகத்தில் சுழன்று அடித்துக் கொண்டிருக்கும் புயல்காற்றொன்று திடீரென்று நின்றுவிட்டால் எப்படியிருக்கும்! பத்து நாட்களாக என்னைப் பைத்தியம் பிடிக்காத குறையாக அலைக்கழித்துவிட்டு பத்தாவது நாள்,  “நீ யார்?” என்று அப்பாவியாக முகத்தை வைத்துக்கொண்டு வானத்திலிருந்து கீழே குனிந்து அப்புயலசடன் என்னைப் பார்த்துக் கேட்டபோது எனக்கு அப்படித்தானிருந்தது. நான் உண்மையில் செய்வதறியாது என்ன சொல்வதென்றறியாது அண்ணாந்து அதை வெறுமனே அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தேன்.

அறுநூறு பக்கங்களை வாசித்துக்கொண்டு வருகையில் எனக்கிருந்த படபடப்பும் உணர்வுக் கொந்தளிப்புகளும் மனப்பிறழ்வுகளும் கடைசி ஐம்பது பக்கங்களில் சுத்தமாக அடங்கிவிட்டிருந்தன. நாவலின் இறுதி வரிகளை வாசிக்கையில் என் பொருண்மை இப்பூவுலகில் இல்லாமல் நான் முற்றிலுமாகக் கரைந்து விட்டிருந்தேன். இத்தகைய உணர்ச்சி வேகத்திற்கும் தலைசுற்றல்களுக்கும் இதுவரை நான் ஆளானதில்லை. அதேசமயம் இத்தகைய பேரமைதி மனநிலையையும் நான் அனுபவித்ததில்லை.

சனி இரவு பதினோரு மணிக்கு எங்கள் ஊர் பள்ளங்கோயிலிலிருந்து திருத்துறைப்பூண்டி புனித லூர்து அன்னை பேராலயத்திற்கு ஈஸ்டர் பூசை காணச் செல்ல வேண்டும். மீதமிருக்கும் ஐம்பது பக்கங்களை முடிக்காமல் செல்ல மனம் வரவில்லை. ஆனால் அப்போது எதிர்பாராத திருப்பமாக இளவரசன் மிஷ்கின், நஸ்டாஸியா ஃபிலிப்போவ்னாவை திருமணம் செய்துகொண்டாக வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தான். இது விவரிக்க இயலா ஆழ்ந்த அமைதியை என்னுள் உருவாக்கிவிட்டிருந்தது. வாழ்வில் எனக்கு நேரவிருக்கும் எத்தகைய இடர்ப்பாடுகளையும் என்னால் அமைதியாக எந்தவிதமான ஆர்ப்பாட்டமுமில்லாமல் ஏற்றுக்கொள்ள முடியும் என்ற மனப்பக்குவத்தை அடைந்ததுபோல என் மனம் இருந்தது.

idiaa

பத்து மணிக்கு தன்னிச்சையாக மிக அமைதியாக எழுந்து ஆலயத்திற்கு கிளம்பத் தொடங்கினேன். என் கணவரைப் பார்க்கையில் என் மகனைப் பார்க்கையில் ஆலயத்திற்கு செல்லும் வழியில் ஆலயத்தில் பார்த்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இன்னதென உணர முடியா ஒரு பரிவு, இரக்கம் பிறந்து என் உதடுகளில் என்னையறியாமல் ஒரு புன்னகை மலர்ந்தது. அங்கு ஒவ்வொருவரையும் பார்க்கையில் எனக்கு அவர்களைத் தெரிந்திராவிட்டாலும் புன்னகைத்தேன். எனக்கு கிளர்ந்தெழுந்து கொண்டிருந்த அந்த மகிழுணர்வை என்னால் வீட்டுக்குத் திரும்பும் வரையில் கட்டுப்படுத்தவே இயலவில்லை. வந்ததும் வாசலில் அப்பொழுதே என் தங்கையுடன் இணைந்து வண்ணக் கோலமிட்டு “Happy Easter 2018!” என்று எழுதிவிட்டு வேகமாக மாடியேறி, விட்ட அந்த ஐம்பது பக்கங்களை வாசிக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஆனால் அப்பக்கங்களில்  இருந்தது என்ன தெரியுமா? அந்த பரிதாபத்துக்குரிய மணப்பெண், அப்பாவப்பட்ட மணமகனை விட்டு மணமேடைக்கு வருவதற்கு சற்று நேரத்திற்கு முன் மீண்டுமாய் ஓடிப்போய்விடுகிறாள். ஆனால் அச்சூழ்நிலையைப் பக்குவமாக மணமகன் இளவரசன் மிஷ்கின் கையாண்டபோது நானும் அதே மனநிலைக்குச் சென்றிருந்தேன். முன்னைவிட என்மனம் மிக்க வலிமையுடையதாகியிருந்ததைப் போலிருந்தது. அதனால்தானோ என்னவோ நஸ்டாஸியா, அவளை வெறித்தனமாய் காதலித்துக் கொண்டிருந்த ரோகோஸினால் கொல்லப்பட்டதை அறியநேர்ந்தபோது துணுக்குறுதல் எழவே செய்தாலும் மிக நிதானமாக மனம் உள்வாங்கி காரணத்தை அலச முற்பட்டது.

idi1

ஆனால் எவ்வளவுதான் முயன்றாலும், மனப்பிறழ்வு அடையாமல் அதாவது அதீதமான உணர்வுக் கொந்தளிப்புகள் இல்லாமல், முழுவதுமான சுயப்பிரக்ஞையுடன் ஒரு குழந்தைக்குரிய மனநிலையுடன் ஒரு சமூகத்தில் நீதியுணர்வுடனோ நேர்மையுணர்வுடனோ நடந்துகொள்ளவே முடியாது என்று எனககுத் தோன்றிக் கொண்டேயிருப்பதை தடுக்க முடியவில்லை. ஒவ்வொரு எழுத்தாளனும் இலக்கியவாதியும் இலட்சியவாதியும் ஏதோவொரு உன்மத்தத்தால் ஆட்கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அதாவது அசுரத் தன்மையுடன் உளமானது ஏதாவது ஒன்றைத் தேடிக்கொண்டிருந்தால் மட்டுமே இத்தகைய மனப்போராட்டங்களையும் துயர்களையும் சிண்டுகளையும் சிடுக்குகளையும் படைக்கவும் எதிர்கொள்ளவும் முடியும் என்று தோன்றியது.

பியோதர் தஸ்தயேவ்ஸ்கி “அசடன்” நாவலில் சராசரிக் குடும்பம், தனித்துவமான குடும்பம் என்று இருவேறுபட்ட குடும்பங்களைக் காண்பிக்கிறார். அக்குடும்பங்களிலுள்ள சராசரி மனிதர்களின் செயல்பாடுகளையும் தனித்துவம் வாய்ந்த மனிதர்களின் செயல்பாடுகளையும் அலசி ஆராய்கிறார். நாவலில் வரும் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அப்போதைய கதைச் சூழலில் எந்தவிதமான குடும்பமுமில்லை. அவர்கள் தன்னளவிலேயே தனித்துவமானவர்களாக இருக்கிறார்கள். அந்த இருவரின் குணாதிசயங்களையும் இருவகையான குடும்பப் பண்புகளிடையே ( அதாவது இருவகைப் பண்புகளைக் கொண்ட சமூகத்தினிடையே) மோதவிடுவதன் மூலம் ரஷ்ய சமூகத்தின் ஆன்மீகப் பிரக்ஞையை, மனிதநேய உணர்வுகளைத் தூண்டிவிட முனைகிறார்.

ரஷ்ய மனம் தன் முற்போக்கான கருத்துக்களினின்று தன்னைத் துண்டித்துக்கொண்டுவிட்டதோ அல்லது தன் ஆத்மார்த்தமான ஆன்மீக சிந்தனையில் தொய்வு கொண்டுவிட்டதோ என்ற அச்சம் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த ரஷ்ய எழுத்தாளர் தஸ்தயேவ்ஸ்கி அவர்களுக்குத் தோன்றியிருக்கலாம். இழந்ததை மீட்டுவிடவேண்டும் அல்லது இருப்பதை என்றென்றைக்குமாக இழந்துவிடவே கூடாது என்ற பதைபதைப்புடனும் ஆதங்கத்துடனும் இந்த “அசடன்” நாவலை எழுதியிருக்கலாம். ஏனெனில்  “அடித்துத் துவைத்து குற்றுயிரும் கொலையுயிருமாய் சிலுவை மரத்தில் அறைந்து கொல்லப்பட்ட இயேசு தன் அன்னை மற்றும் சீடர்களின் முன் உயிரற்ற உடலுடன் கிடக்கையில் இவர் எங்ஙனம் மூன்றாம்நாள் உயிருடன் வரக்கூடும் என்று எண்ணியவர்களே அதிகம்…… இயற்கை என்பதே ஒரு கருணையற்ற, பூதாகரமான, ஊமையான ஒரு மிருகத்தைப் போலத்தான் தோன்றுகிறது. மூளையற்ற, உணர்ச்சியற்ற, அந்த இயந்திரம் விலைமதிக்க முடியாத ஒரு ஜீவனை, இந்த பிரபஞ்சத்தின் இயற்கை மற்றும் இயற்கை விதிகளுக்கும்- இந்த உலகம் முழுவதற்கும் நிகரான, மகத்தான ஒரு ஜீவனை- யாருடைய பிறப்புக்காக, அவதாரத்துக்காக இந்த உலகமே உருவாக்கப்பட்டிருக்கிறதோ, அந்த உலகத்திற்கு நிகரான ஒரு ஜீவனை முட்டாள்தனமாக நசுக்கி, உருக்குலைத்து விழுங்கியும் விட்டது” என்று சாகப்போகும் இப்போலிட் தன் வாக்குமூலத்தை வாசிக்கும்போது வரும் இத்தகைய புலம்பல்களில் தஸ்தாயேவ்ஸ்கி அவர்களின் அச்சம் புலப்படுகிறது.

idd

இந்த நாவலை வாசிக்கும் எந்த நாட்டு மக்களுக்கும் எழும் இயற்கை பற்றிய கேள்வி இதனை ஒத்ததாகவே இருக்கும். இத்தகைய உலகளாவிய தன் ஆன்மீக சிந்தனையை தன் எழுத்தில் கொண்டுவந்து தன் நாவலை வாசிப்பவர்களை அப்படியே கட்டிப்போட்டுவிடுகிறார். உயரமான மலையுச்சியில் நம்மை நிற்கவைத்து, “அங்கிருந்து கீழே குதி. நான் கீழே இங்கேயேதான் நின்றுகொண்டிருக்கிறேன்” என்று அவர் மேலே பார்த்துக் கூறுவாரானால், நிச்சயம்  ஒரு கணமும் யோசிக்காமல் அப்படியே தலைகீழாகப் பாயவும் நாம் சித்தமாயிருப்போம். அப்படி விழமுற்படும்போது, திடீரென்று நம் கையைப் பிடித்திழுத்து, “விழுமுன் கொஞ்சம் யோசி” என்று கடிந்தும்கொள்கிறார்.

இந்த நாவலை வாசித்துக்கொண்டிருந்த கடந்த இந்த பத்து நாட்களும் நான் என் வசமில்லை. ஆரம்பத்தில் என்னைப் பார்த்து புன்னகை புரிந்த அவரின் சிநேக முகம், இடையில் எத்தனையோ ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டபோதும், கடைசிவரை மாறவேயில்லை. நாவலின் இறுதிவரியை வாசிக்கும்போதும் அந்த அமைதியான, கள்ளமில்லா புன்னகையையே என்னால் காண முடிந்தது. அந்த மகிழ்ச்சி அப்படியே என்னைத் தொற்றிக்கொண்டது. மணி நான்கு அடித்தது. அறையை விட்டு வெளியே வந்து பிரமாண்டமான வானவெளியைப் பார்த்து ஆழமானதொரு சுவாசத்தை உள்ளிழுத்துவிட்டு மீண்டும் வந்து படுத்துக்கொண்டபோது உலகம் எனக்கு அத்தனை பிரியமானதாயிருந்தது. ஒரு புன்னகையை என் உதடுகளில் தவழவிட்டபடியே  நிம்மதியாக உறங்கிப்போனேன்.

காலையில் எழுந்ததும் வீட்டில் பார்க்கும் ஒவ்வொருவரும் என் பேரன்பிற்குரியவர்களாகத் தோன்றினார்கள். இரவு இட்ட கோலத்தைப் பார்க்க தெருவிற்குச் சென்றபோது, அங்கு கடந்து சென்ற, என்றும் சிரித்திராத பெண்மணி என்னைப் பார்த்து சிரித்துப்போனாள். அதிலும் அச்சிரிப்பினில் ஒரு குதூகலம் கலந்த துள்ளல் தெரிந்தது. சிரிப்பின் சிறிய ஒலிகூட எழுந்தது. அவள்கூடவே வந்த, என்னிடம் இதுவரை பேசியிராத  இன்னொரு எங்கள் தெருப் பெண்மணி என்னைப் பார்த்து ஏதோ கேட்டுப் போனாள். இத்தனைக்கும் நான் இரவு கோலமிட்டுக்கொண்டிருக்கையில் எழுந்துகொண்டு அவர்களைப் பார்த்து சிறிய புன்னகையை மட்டுமே அளித்து அவர்கள் செல்ல வழிவிட்டு அவர்கள் செல்லும்வரை காத்து நின்றிருந்தேன். அவ்வளவுதான்.

இதுதான் “அசடன்” நாவல் கூற விழையும் சாராம்சம் என நினைக்கிறேன்.

idddd

இப்போலிட் மூலம் நாவலாசிரியர் பின்வருமாறு இதைத்தான் கூறுகிறார்.” நம் கண் முன்னே விரிந்து கிடப்பது ஒரு நெடிய வாழ்க்கைப் பயணம். கணக்கற்ற, அளவிடற்கரிய, விதம் விதமாகக் கிளைத்துக் கொண்டே போகும் பல உள் விஷயங்கள்  நம்மிடமிருந்து மறைந்தபடி அங்கே- அந்த வாழ்க்கைக்குள்    – பொதிந்து கிடக்கின்றன. சதுரங்க விளையாட்டில் மிகவும் தேர்ச்சி பெற்று, மிக மிகக் கெட்டிக்காரனாக இருக்கும் ஒருவனால், அடுத்து அவன் நகர்த்தப் போகும் சில இடங்களை, சில காய்களை வேண்டுமானால் ஊகிக்க முடியலாம். ஆனால் நம்முடைய வாழ்க்கையில்தான் எத்தனை நகர்வுகள், எத்தனை திருப்பங்கள் இருக்கின்றன! அவற்றுள் நம்மிடமிருந்து மறைக்கப்பட்டிருப்பவைதான் எத்தனை? எத்தனை?…….. மனித குலத்தின் எதிர்கால விதியை நிர்ணயிப்பதில்  நீங்கள் ஆற்றும் பங்கு எது என்பதை உங்களால் எப்படி அறுதியிட்டுச் சொல்ல முடியும்? இத்தகைய அறிவுத் தெளிவும், வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து வருவது இந்தப்பணி என்பதுமான ஒட்டுமொத்தப் பார்வையும் இருந்தால் குறைந்த பட்சம், ஆற்றல் வாய்ந்த ஏதாவது ஒரு விதையை நாம் விதைப்போம்! பயனுள்ள, திறன் மிகுந்த எண்ணத்தை விதைத்து அதை இந்த உலகத்துக்கு விட்டு விட்டுப் போவோம்!” என்பதுதான் அச்சிந்தனைகள்.

“குற்றமும் தண்டனையுமில்” எனக்கு எழுந்த கேள்விகளுக்கு விடைகள், “அசடனி”ல் கிடைக்கப்பெற்றுள்ளன. இதுவரை அனுபவித்திராத அமைதியை இச்சொற்றொடர்கள் எனக்கு வழங்கிக் கொண்டிருப்பதை விலகி நின்று என்னால் கவனிக்க முடிந்தது.

அதேநேரம் தஸ்தயேவ்ஸ்கி, இளவரசன் மிஷ்கின் மூலம்  அவன் சொந்த நாட்டில் மனித நேயமும் ஆன்மீகத் தேடலும் அவர் அஞ்சியவாறு அவ்வாறு ஒன்றும் அழிந்துவிடவில்லை, அது சமூகத்தில் இன்றளவும் எஞ்சிதான் உள்ளது, என்றுமே அது அழிந்துவிடாது என்று, எவ்வாறு இபான்சின் குடும்பத்தார் அளித்த அந்த சமூகத் தொடர்பான விருந்தினில் கண்டுகொண்டு பேருவகை அடைந்து உளம்பூரித்தாரோ, அதே போன்ற உவகையை நேற்றிரவு ஆலயத்தில் நான் அடைந்தேன். அங்கு நான் கண்டது என்னவெனில்,  நாற்பத்தைந்து வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணி தனக்கு முன் இரண்டு குழந்தைகளைப் படுக்கை விரிப்பினில் உறங்கவைத்து விசிறியபடியே திருப்பலியைக் கண்டுகொண்டிருந்தாள். எங்கள் ஜான் பீட்டர் ஃபாதர் தீர்த்தம் தெளித்தபடியே அந்த பெருங்கூட்டத்திற்குள் புகுந்து வந்துகொண்டிருந்தார். இப்பெண்மணியால் அந்த இரு குழந்தைகளையும் தூக்கி முன்கொண்டுவந்து காண்பித்து தீர்த்தத்தை தலையில் பெற வைக்க இயலவில்லை. நான் படியினின்று கீழிறங்கி தீர்த்தத்தை என் தலையில் தெளிக்கப் பெற்றுவிட்டு மீண்டும் ஏறிவரும்போது அப்பெண்மணியானவள், போகிறபோக்கில் தெளிக்கப்பெற்று பளிங்குத் தரையில் சிதறித் தெளித்து விழுந்த தீர்த்தத்துளிகளை தன் விரலினால் தரையினில் பலர் காலடி பட்டு மண்ணாயிருந்தாலும் அம்மண்ணோடு தொட்டெடுத்து அந்த இரண்டு குழந்தைகளின் நெற்றிகளில் மிகுந்த பக்தி சிரத்தையோடு பூசிக்கொண்டிருந்தாள்.

நான் ஒரு சில மாதங்களுக்கு முன்புதான்,  இந்த”தலையைத் தாண்டி கீழே சிதறும் தீர்த்தத் துளிகள்” பற்றிச் சிந்தித்துக் கொண்டிருந்தேன். “இந்தத்துளியானதுதான் எத்தனை புனிதமானது. இது தரையில் இப்படி சிந்தியுள்ளதை நாம் அனைவரும் மிதித்துக்கொண்டுதானே செல்கிறோம். அதோ தொங்கும் அந்த பூவேலைப்பாடுகள் மீதும் இந்த காலடிகள்மீதும் இவை விழுகின்றனவே, இவை தாம் புனிதமடைந்ததாக ஒருநாளாவது எண்ணியிருக்குமா, அல்லது யாராவதுதான் இந்த கீழே கவனிப்பாரற்று விழுந்து காய்ந்து போகும் இந்தத் துளிகளைப் பற்றி எதனாவது சிந்தித்துப் பார்த்திருப்பார்களா” என்று பூசையினிடையில் சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நேற்று என் மனம் இன்ப அதிர்ச்சியை அடையும்விதமாக, அந்தப் பெண்மணி அம்மண்ணீரை புனித நீராகக் கருதித் தன் குழந்தைகளுக்கு பூசிவிட்டதைப் பார்த்தவுடன்,  என் கால்கள் மானசீகமாக ஒரு ஆனந்தத் தாண்டவமே ஆடிவிட்டன.

பிறருக்கு மகிழ்வளிக்கும் விதத்தில் நம் எல்லாவிதமான  செயல்பாடுகளும் இருக்க இயலாதுதான். குறிப்பாக உண்மையுணர்வுடன் செயல்படுத்தப்படும் சில செயல்கள் அனைவரையும் உவக்க வைக்காதுதான். “அசடனில்” இளவரசன் மிஷ்கின் மூலம் நடைமுறை வாழ்வில் உண்மையுணர்வுடன், குழந்தையைப் போன்ற கள்ளம் கபடற்ற தன்மையுடன் இந்த உலகத்தை அணுகும்போது உண்டாகும் போராட்ட வாழ்வினைப் படிப்படியாக விவரித்துச் செல்லும்போது தஸ்தயேவ்ஸ்கி, வாசிக்கும் ஒவ்வொருவரையும் நிகர்வாழ்வு வாழவைக்கிறார். மனம் குமுற வைக்கிறார். மனம் புண்பட வைக்கிறார். பதறவைக்கிறார். மனங்கலங்க வைக்கிறார். கண்ணீர் விட்டு துயருறச்செய்கிறார். ஒரு நொடியில் அனைத்து மனஸ்தாபங்களையும் மறந்துவிட்டு தன் சின்னஞ்சிறிய தோழனின் கைப்பிடித்து விளையாடச்சென்றுவிடும் சின்னஞ்சிறிய சிறுவனின் மனநிலைக்குக் கொண்டுவிட்டுவிடுகிறார், குலுங்க குலுங்க சிரிக்க வைக்கிறார், நினைத்து நினைத்து புன்னகை புரிய வைக்கிறார், ஆனால் நன்றாகக் குழப்பமடையவைத்து அனைத்தையும் தெளிந்த சலனமற்ற நீரோடையாக்கிவிட்டு மனநிறைவடைகிறார்.

முத்தாய்ப்பாக,     இத்தகைய அனைத்து உணர்ச்சிப்பெருக்கத்தையும் உள்வாங்கி  ஆத்மார்த்தமாக மொழியாக்கப் பணியினில் தன்னை ஈடுபடுத்திக் காெண்டு பேராசிரியர் எம்.ஏ. சுசீலா அம்மையவர்கள் தமிழில் மொழிபெயர்த்திராவிட்டால் நிச்சயம் நான் இத்தனை பரவசத்தையும் மனவலிமையையும் ஆன்மீக சிந்தனையையும் பெற்றிருக்க வாய்ப்பே இல்லைதான். எனவே அவருக்கு என்றென்றும் என் நன்றிகளை சமர்ப்பித்துக்கொண்டேயிருப்பேன்.

அன்புடன்

கிறிஸ்டி.

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா
குற்றமும் தண்டனையும் – நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு  வாங்க 
அசடன் வாங்க
முந்தைய கட்டுரைஊட்டி இலக்கியச் சந்திப்பு நிபந்தனைகள்
அடுத்த கட்டுரைபாரஞ்சுமக்கிறவர்கள்  (அசடன் நாவலை முன்வைத்து)  – விஷால்ராஜா