இரண்டுமுகம் கடிதம்

images (2)

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

தங்கள் இரண்டு முகம் கட்டுரை படித்தேன் இதை வேறு கோணத்திலும் பிரயோகிக்கலாம் என்று தோன்றியது. இன்று இல்லறத்தினுள்ளும் இந்த பிரச்சனை இருக்கிறது. ஆண் பெண் இருவருக்கும் தனி தனி எண்ணங்கள் குறிக்கோள்கள் இருக்கின்றன,ஒருவருக்கு மிக முக்கியமான ஒன்று மற்றவர்க்கு ஏளனமாக இருக்கிறது. பலர் குழந்தைகள் நலனிற்காக ஒன்றாக இருக்கின்றனர். வேலை போன்றவற்றிலாவது வேறு வகையில் விடுபடலாம் இது போன்ற நிலைமைகள் வாழ்க்கை முழுக்க தொடர்வது

 

ராம்குமரன்

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

தமிழ் எழுத்தாளன் பெறுகிற உபகாரங்கள்  மற்றும் இரண்டு முகம் பதிவுகளை வாசித்து விட்டு எழுதுகிறேன்.

 

மேலதிகமாக லட்சுமி மணிவண்ணன் அவர்களின் தளத்திற்கும் சென்று வாசித்தேன்,நான் வளர்க்கப்பட்ட சூழலிலிருந்து பெற்றுக் கொண்ட மனநிலை வேலை கிடைத்து குடும்பத்தை பேணுவது, நான் சேர்ந்த ஒரு வருடத்திலே எனக்கு புரிந்தது, ஏதோ ஒரு கட்டுரையில் நீங்கள் சொன்னது போல இந்த உலகமே சில இரும்பு விதிகளால் ஆனவை அவற்றை அனுசரித்துதான் மீள முடியுமே அன்றி உடைக்கிறேன் என புறப்பட்டு மூக்கை உடைத்துக் கொள்வது அறிவீனம்.

 

நான் என்னுடைய இருபதுகளில் தான் உங்களை அறிந்திருந்தேன்,உங்களின் தளத்தை வாசிக்க துவங்கிய போது இருபத்தி இரண்டு வயது,ஒரு மூன்று நான்கு ஆண்டுகளில் புரிந்து விட்டது இது எனக்கான இடம் இல்லையென,ஆனால் எந்த திட்டமிடலும் இல்லாமல் இந்த சூழலிலிருந்து தப்பித்து விட முடியாது.

 

உங்கள் சொற்களுக்கே மீண்டும் வருகிறேன் நீங்கள் சொல்லியிருப்பீர்கள் கலைஞர்களை கலை மனம் கொண்டவர்களை புரக்கும் ஒரு சூழல் இருந்தது,அந்த உதவி இன்றைய சூழலில் இல்லை,என் அனுபவத்தில் சொல்ல போனால் எனக்கு வாசிப்பு மட்டுமே விருப்பமான ஒன்றாக இருக்கிறது, தேடி தேடி வாசித்து வாழ தான் பிடித்திருக்கிறது,ஆனால் ஏன் குடும்பத்தினரிடம் அதை சொல்லும் போது அவர்கள் அடையும் அதிர்ச்சியையும் நான் கவனித்துக் கொண்டே தான் இருக்கிறேன்.

 

2011 இந்த ஆண்டின் துவக்கத்தில் அலுவல் நெருக்கடி,குடுமபத்திலிருந்து  பிரிவு இதன் காரணமாக ஒரு மனப்பிளவு நிலைக்கு ஆளானேன்,ஒரு சாலையை கடப்பதற்கு என நம்மிடம் ஒரு கணிப்பு இருக்கும்  அது என்னிடம் இல்லை,ஒரு தம்ளரிலிருந்து தண்ணீரை அருந்துவதற்குள் கைதவறி உடல் முழுக்க கொட்டி விடும் நீங்கள் சொன்ன மாதிரி துன்பத்தில் திளைக்கும் மகிழும் ஒரு மனநிலையையும் கவனிக்க தவறவில்லை.

 

இந்த சூழலில் நான் என்ன விதமாக வேலை செய்திருப்பேன் என நீங்களே யோசித்துக் கொள்ளலாம்,2013 சற்று மனம் தேறிய பின்னர் ஒரு தீர்வை நோக்கி யோசிக்க ஆரம்பித்தேன்,குறைந்தது என்னுடைய குடும்பத்தின் மாத தேவையில் எண்பது சதவிகிதம் நான் வேலைக்கு செல்வதை நிறுத்திவிட்டாலும் வருகிற விதத்தில் ஒரு நிதி மூலதனத்தை உருவாக்கி விட வேண்டும்,நண்பர்கள் சொன்னார்கள் இந்த யோசனை நன்றாக இருக்கிறது ஆனால் நடைமுறை சாத்தியமில்லை,சில நண்பர்கள் வீடு வாங்குவது சந்தை முதலீடு என பல வழிகளை சொன்னார்கள்.

 

நான் மிக உறுதியாக கடந்த ஆறு ஆண்டு காலமாக ஆமை தன் அவயவங்களை அடக்கிக் கொண்டு இருப்பதை போல என்னை அடக்கிக் கொண்டு சிறுக சிறுக சேமித்து வருகிறவன், செலவை பார்க்கிலும் என்  சேமிப்பு அதிகம்.  நான் வங்கித்துறையில் பணியாற்றுகிறவன்,வருட வருடம் எங்களுக்கு அளிக்கப்படுகிற  இலக்குகள் அநேகமாக சாத்தியமில்லாதவை,எத்தனை முறை அநேகமாக பணியில் நீக்கப்படுகிற முனையில் தப்பி அடுத்த நிறுவனத்தில் நுழைந்து என எத்தனை குரங்கு வித்தைகள்  உண்டோ அத்தனையும் செய்து விட்டேன்.

 

நான் உங்களிடம் ஒரு மின்னஞ்சலில் கூறியது போல அநேகமாக எதையுமே வாசிக்க முடியாத மனநிலையில் வெறி பிடித்து வேலை செய்திருக்கிறேன், இங்கே இப்படி ஒரு மௌடீகமான மனநிலை தேவைப்படுகிறது,ஒரு அடிமையின் மனநிலை இல்லமால் இந்த துறைகளில் வேலை செய்து விட முடியாது,என்னோடு பணியாற்றுகின்ற அநேகமாக எவருக்கும் எந்த தேடலும் இல்லை, நாளின் இறுதியில் உழைத்த களைப்பு மட்டும் தான் அவர்களுக்கு இருக்கும் ஆனால் என்னை போன்றவர்களுக்கு, களைப்போடு  இணைப்பாக வெறுமையுணர்ச்சியும்,ஒரு நாளை பாழடித்த வலியும் தான் எஞ்சுகிறது.

 

ஆனால் இத்தனைக்கும் நடுவில் ஒன்றை சொல்ல முடியும்,அநேகமாக என் குடும்பத்தின் தேவைக்கான பணத்தில் ஒரு 85 விழுக்காடு நான் ஒன்றும் செய்யாமல் இருந்தாலே வட்டியிலேயே எனக்கு மாதம் கிடைக்கும் இடத்திற்கு வந்து விட்டேன்,இன்னும் ஒரு ஆறு மாதம் என்னுடைய இலக்கை நான் அடைந்து விடுவேன்.

 

எனக்கு திருமணம் செய்து கொள்ளும் திட்டமில்லை  ,நம் சூழலின் ஒவ்வொரு அசைவும் இப்படி பொருளியலால் கட்டுப்படுத்தப் பட்டிருக்கும் போது இனி முதலிலிருந்து துவங்க என்னால் முடியாது.

 

எழுத்தாளர் எஸ் ரா ஒரு இடத்தில் சொல்வார், நம்முடைய குடும்பங்களின் இணைப்புப் புள்ளி என்பது ஒரு மேலான ரசனை,பகிர்தல் என்பதன்றி கூடி சேர்ந்து உண்பதும் உறங்குவதற்குமான இடம் அவ்வளவே என உண்மை.

 

அநேகமாக முப்பது லட்சம் சேர்த்து விட்டு உங்களின் மாத தேவைக்கு நான் வழி செய்து விட்டேன் என்னுடைய வழி வேறு என்னை விட்டு விடுங்கள் என  என்னாலான வழிமுறையில் புரிய வைத்துக் கொண்டிருக்கிறேன்.

 

ஒரு சில நாட்களுக்கு முன் செய்தி தாளில் படித்துக் கொண்டிருந்தேன் பொருளியல் ரீதியாக எப்படி திட்டமிடுவது என இளைஞர்களுக்கு கல்வி நிறுவனங்கள் கற்று கொடுப்பதில்லை என ,நீங்கள் இன்றைய இரு மனம் பதிவில் சொல்கிறீர்கள் இது போன்ற கேள்விகள் இந்த தளத்தில் அதிகமாக வருகிறதென,அப்படித்தான் வரும் காரணம் இவர்கள்  மெய்யாக கற்பதே உங்களிடம் தானே.

 

மிகையாக சொல்லவில்லை ஒரு வேளை  உங்களை வாசிக்காமல் விட்டிருந்தால் என்னவாக ஆகியிருப்பேன்?

 

ஆனால் இன்றைக்கு நீங்கள் சொல்லி இருப்பது போல ஒரு எல்லைக்குள் இருந்து கொண்டெல்லாம் இன்றைய சூழலில் வேலை செய்து விட முடியாது,நிர்வாகம் களை எடுப்பது இவர்களை போன்றவர்களை தான் இதன் மூலமாக ஒரு வலுவான அழுத்தத்தை அடுத்தவர்களின் மனதிலும் ஏற்படுத்த தான் அது முயற்சி செய்யும்.

 

உங்களின் வெண்முரசு சென்னை கூட்டங்களில் சந்தித்த பல இளையவர்களும் இதே தொனியில் தான் பேசி வருகிறார்கள்.

 

கண்டிப்பாக அவர்கள் முதலில் தங்களின் தேவை (குடும்பத்தினரையும் சேர்த்து) என்ன என்கிற கணக்கையும் அதை எத்தனை ஆண்டுகளில் குறைந்தது ஒரு 80 விழுக்காடாவது அடைய முடியும் என இலக்கு வைத்து ஓடி அடைந்து தான் தீர வேண்டும், இது சாத்தியமா? என தோன்றலாம் சாத்தியமே! ஒரு ஆண்டு மூச்சை பிடித்துக் கொண்டு ஓடி விட்டால்  தொடர முடியும் இது என்னுடைய அனுபவம்.

 

ஒரு வாசகனாக என்னுடைய பத்தாண்டு சிறுகதை நாவல் கவிதை வாசிப்பில்,முதல் எழுத்தாளராக நான் கருதும் நீங்களே இதனை இடர்களுக்கு ஆளாகியிருக்கும் போது,இளையவர்கள் தங்களை சரியான எல்லையில் அமைத்துக் கொள்வது நல்லது.ஆனால் ஒரு விஷயத்தையும் பார்க்கிறேன் கலை இலக்கியம் ஆகிய துறைகளில் ஒன்று வெற்றி கிட்டத்தட்ட ஈடுபடுபவர்களில்  ஒரு சதவிகிதம், அநேகமாக 99 சதவிகிதம் பேருக்கு இந்த துறையில் தொடந்து ஈடுபடுவதற்கான  வேலை வாய்ப்புகளும் இருப்பதாக தெரியவில்லை.

 

என்னுடைய வங்கி துறையில் தலைமை செயல் அதிகாரியாக ஆவது  என்பதும் எவரோ ஒருவர் தான். ஆனால் அந்த  நிலைக்கு இடையில் பல நிலைகள் உள்ளன,அந்த வாய்ப்புகளில் பொருள் ஈட்டுவதர்கான சாத்தியங்களும் அதிகம் இவற்றையெல்லாம் கொஞ்சம் யோசித்துக் கொள்வது நலம்.

 

இப்போதைய என்னுடைய மனம் நிறையும் ஒரு இடத்தை நான் கண்டடைய வேண்டும்,இனி ஊதியத்திற்காக ஓடி ஓடி சேர்க்க வேண்டியதில்லை. ஆனால் மனம் நிறையும்  இடத்தை அடையும் அடுத்த சவால்,அடைவேன் என்றே நம்புகிறேன்.

 

அன்புடன்

சந்தோஷ்

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-22
அடுத்த கட்டுரைசுவையின் வழி -கடிதங்கள்