நாடோடிமன்னன்

naadodi

நேற்று அருண்மொழியும் அஜிதனும் நானும் நாகர்கோயில் கார்த்திகை திரையரங்கு சென்று எம்.ஜி.ஆர் நடித்து இயக்கி தயாரித்த நாடோடி மன்னன் திரைப்படத்தைப் பார்த்தோம். நான் அந்தப்படத்தை முதல்முறையாகப்பார்த்தது 1972 ல். நான் ஐந்தாம் வகுப்பு மாணவன் அப்போது. அன்று கண்ட காட்சிகள் பலவும் நினைவில் அப்படியே நீடிக்கின்றன.

அன்றெல்லாம் நாடோடி மன்னன் வெளியாவதென்பது ஒரு திருவிழா போல. வருடாந்தரத் திருவிழா. பலரும் பத்துப்பதினைந்து தடவைப் பார்த்திருப்பார்கள். ஆனால் அரங்கில் கூட்டம் நெரிபடும். படம் முழுக்க ரசிகர்களின் எதிர்வினை இருக்கும். வசனங்கள் வருவதற்குமுன்னரே அவற்றுக்கான கைத்தட்டல்கள் தொடங்கிவிடும். பாட்டுக்குரிய சந்தர்ப்பம் வருவதற்குள்ளே அரங்கு பாடத்தொடங்கிவிடும்.

மீண்டும் நாடோடி மன்னன் படத்தைப்பார்த்தது 1980ல், பட்டப்படிப்பு படிக்கையில். அப்போது நான் மலையாளப்படங்களின் ரசிகனாகிவிட்டிருந்தேன். படம் பிடிக்கவில்லை. கேலிசெய்தபடி பார்த்தது நினைவிருக்கிறது. இப்போது நவீனத் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்ட பிரதி என போட்டிருந்தனர். சரி, போய்த்தான் பார்ப்போமே என்று கிளம்பினோம். அரங்கில் நூறுபார்வையாளர்கள். பெரும்பாலானவர்கள் வயதானவர்கள்.

படம் தொடங்கும்வரை எந்த எதிர்பார்ப்பும் இல்லை. வேடிக்கைபார்க்கும் மனநிலைதான். ஆனால் பல ஆச்சரியங்கள் இருந்தன. மூன்றரை மணிநேரம் ஓடியபடம் கொஞ்சம் கூட சலிப்பேற்படுத்தவில்லை. தொடர்ந்து பார்க்கவைத்தது படத்தின் சரளமான, விரைவான திரைக்கதை. எம்.என்.ராஜம்- எம்.ஜி.ஆர் சம்பந்தப்பட்ட ஒரு காட்சியில் தவிர எங்குமே தமிழ்சினிமாவின் புகழ்பெற்ற மெலோடிராமா இல்லை என்பது படத்தை ரசிக்கவைத்த முக்கியமான அம்சம்.

இம்முறை, சினிமாவுக்குள் வந்துவிட்டபின் அறிந்தவற்றுடன் பார்க்கையில் உணர்ந்த சில விஷயங்களை குறிப்புட்டுச் சொல்லவேண்டும். சினிமா என்னும் விசேஷமான காட்சிக் கலைக்குரிய தனிநடிப்பை அறிந்த நடிகர் எம்.ஜி.ஆர். அவருடைய இந்தத்திறன் தமிழில் மதிப்பிடப்படவே இல்லை. அவர் ‘நடிக்கத்தெரியாதவர்’ என்றே திரும்பத்திரும்ப சொல்லப்பட்டுவருகிறது. அவருடைய ரசிகர்களுக்குக்கூட அவர் நடிகர் என்னும் எண்ணம் இல்லை.

இப்படத்தில் எம்ஜிஆர், எம்.ஜி.சக்ரபாணி, பானுமதி மூவரும்தான் மிக இயல்பாக நடித்திருந்தனர். பிறரும் இயக்குநரால் மிகவும் கட்டுப்படுத்தப்பட்டு நடிக்கவைக்கப்பட்டிருந்தமையால் உறுத்தவில்லை. ஆனால் அப்போதுகூட பிறருடைய நாடகத்தனமான நடிப்புக்கு நடுவே இம்மூவரும் தனித்துத் தெரிந்தனர்.

சினிமாவுக்குத்தேவை ‘நடிப்பு’ [acting] அல்ல ‘நடப்பு’ [behaving] தான் என்பது மிகத்தெளிவாக எம்.ஜி.ஆருக்குத் தெரிந்திருக்கிறது. அவருடைய அந்த மூக்குறிஞ்சும் ஸ்டைல் செயற்கைதான், ஸ்டைல் எதுவானாலும் செயற்கையே, ஆனால் அதையே அளந்துதான் செய்திருக்கிறார். மிக இயல்பான சிரிப்பு. அச்சுமொழி வசனத்தைக்கூட இயல்பாகவே சொல்கிறார். அவை வசனமென்றே தெரியாதபடி. உணர்ச்சிவசப்படுகிறார், உணர்ச்சிகளைக் ’காட்ட’வில்லை காதல்காட்சியில் காமிரா இருக்கும் உணர்வே இல்லாமல் அக்காட்சிக்குள் இருக்கிறார்.

எம்.ஜி.ஆரின் தலைமுறையில் சினிமாவை அவரளவுக்கு எவரும் புரிந்துகொள்ளவில்லை என்றே எனக்குப்படுகிறது. நாடகபாணி நடிப்பு சினிமா பார்க்கும் அனுபவத்தை பெரிய வதையாக ஆக்கக்கூடியது. இன்றுகூட சினிமா நடிகர்களிடமிருந்து நடிப்பை இல்லாமலாக்க ரத்தம் சிந்துகிறார்கள் இயக்குநர்கள். எம்.ஜி.ஆர் என்னும் நடிகரை நம் விமர்சகர்கள் மறுமதிப்பீடு செய்யவேண்டும்.

ஓர் இயக்குநராக காட்சிகளை ஒருங்கமைத்திருக்கும் விதமும், தொடர்ந்து எல்லா படச்சட்டங்களிலும் சிக்கலான காட்சியசைவுகள் ஊடும்பாவுமாக இயல்பாக அசைவமைக்கப்பட்டிருக்கும் விதமும், தொலைதூரப் பின்னணியில்கூட இயல்பான நடிப்பும், சண்டைக்காட்சிகளில் எல்லா சட்டகங்களும் கொப்பளித்துக்கொண்டே இருப்பதும் எம்.ஜி.ஆர் அவருடைய படங்களை இயக்கிய இயக்குநர்களில் ஸ்ரீதருக்கு மட்டுமே நிகரானவர் என்பதைக் காட்டுகின்றன.

அனேகமாக எல்லா துணை நடிகர்களிடமும் அளவான நடிப்பை வாங்கியிருக்கிறார். எல்லா காட்சிகளையும் மிகச்சரியான நீளத்தில் அமைத்திருக்கிறார். பெரும்பாலானவற்றை மிகக்குறைவான வசனங்களுடம் பெரும்பாலும் காட்சிவழியாகவே உணர்த்தியிருக்கிறார். உதாரணம் எம்.என்.நம்பியார் தன்னைப்பற்றி கண்ணாடியில் பார்த்து சொல்லிக்கொள்வதும், அதே கண்ணாடியில் எம்ஜிஆரின் படம் தெரிவதும்.

நான் இப்படி ஒரு திரையனுபவமாக இந்தப்படம் இருக்கும் என நினைக்கவேயில்லை. இது தழுவல்படம்தான். அலக்ஸாண்டர் டூமாவின் மேன் இன் த அயர்ன் மாஸ்க் வெவ்வேறு வடிவில் உலக வணிகசினிமாவில் வந்தபடியே இருந்திருக்கிறது. ஹாலிவுட் படங்களை நகல்செய்தே பெரும்பாலும் காட்சிகள் எடுக்கப்பட்டிருக்கின்றன. அரண்மனை, உடையலங்காரம் எல்லாமே ஹாலிவுட் பாணி. நம்மூர் வரலாற்றுக்கும் இதற்கும் சம்பந்தமே இல்லை. இது ஒரு பொழுதுபோக்கு மிகைபுனைவு, அவ்வளவுதான். அந்த எல்லைக்குள் நின்றுகொண்டு வணிகரீதியான எல்லா நுட்பங்களையும் உணர்ந்து எடுக்கப்பட்டிருக்கிறது படம்.

உதாரணமாக இடைவேளைக்குப்பின் படம் ஒரு தீவுக்குச் சென்றுவிடுகிறது. இன்னொரு படமாகவே ஆகிவிடுகிறது. மிகநீளமான இந்தப்படம் முதல்பகுதியின் களத்திற்குள்ளேயே இருந்திருந்தால் அரண்மனைச்சதியை மட்டுமே காட்டிச் சலிப்பூட்டியிருக்கும் என வணிகத்திரைக்கதையை அறிந்தவர்கள் சொல்லமுடியும். மேன் இன் தி அயன் மாஸ்க் திரைவடிவங்களில் பலவற்றில் அந்தச் சலிப்பு உண்டு. உண்மையில் மூலநாவலிலேயே அந்தச்சலிப்பு உண்டு, த்ரீ மஸ்கிட்டீர்ஸ் போல சுவாரசியமான நாவல் அல்ல அது.

காட்சிகளைச் சுருக்கமாகவே அமைப்பது, தேவையற்ற குளோஸப்களை வைக்காமலிருப்பது, வெவ்வேறு காமிராக்கோணங்கள் வழியாக எப்போதும் காட்சியின் பிரம்மாண்டத்தை நினைவூட்டியபடியே இருப்பது [பல காட்சிகளில் பார்வையாளன் பொருட்களுக்கு இப்பாலிருந்து பார்க்கிறான். நிகழ்வுகள் ஆடம்பரப்பொருட்களினூடாக ஒழுகிச்செல்கின்றன] என ஒரு வணிகப்பட இயக்குநராக ஏறத்தாழ எல்லா நுட்பங்களையும் எம்ஜிஆர் அறிந்திருக்கிறார். அனைத்துக்கும் மேலாக இந்த சினிமாவில் அவர் அழகாக இருக்கிறார். அவருடைய சிரிப்பில் வெளிப்படும் அந்தச் சிறுவன் உற்சாகமானவன். அவர் போரிடுகிறார், எவரையும் வெட்டுவதே இல்லை. ஏன் அவர் அவ்வளவு விரும்பப்பட்டார் என்பதைக் காட்டுகிறது இந்தப்படம்.

உண்மையில் தமிழ் சினிமாவில் நாம் இன்று வெறுக்கும் பல விஷயங்கள் மேலும் பத்தாண்டுகளுக்குப்பின் உருவாகி வந்தவை என நினைக்கிறேன். மிகையான நாடகத்தன நடிப்பு, செயற்கையான வசன உச்சரிப்பு, கண்களை உறுத்தும் காமிராக்கோணங்கள் போன்றவை. இந்தப்படத்தில் காமிரா இருப்பதே தெரியவில்லை. தனியாகக் கவனித்தால் சீரான நிதானமான காமிரா நகர்வை உணரமுடிகிறது. இன்றைய சினிமாக்களை என்னால் பலசமயம் பார்க்கவே முடிவதில்லை. ஒரு ரோலர்கோஸ்டரில் ஏறி இறங்கி சுழன்றபடி கீழே நிகழ்வதைப் பார்ப்பதுபோலிருக்கிறது இன்றைய காமிரா ஓட்டமும் வெட்டிவெட்டிச் செல்லும் படத்தொகுப்பும்.

வீட்டுக்குத்திரும்பும்போது மீண்டும் மீண்டும் வியப்புடன் பேசிக்கொண்டே வந்தேன். மூன்றரை மணிநேரம் ஒருநிமிடம்கூட சலிக்காமல் இந்தப்படத்தை பார்த்திருக்கிறேன். மிகப்பெரும்பாலான சமீபகாலப் படங்களில் நான் முதல் பதினைந்து நிமிடங்களுக்குள் நன்றாகத் தூங்கிவிடுவேன். திரும்பவரும்போது அருண்மொழியிடம் சுருக்கமாகக் கதையைக் கேட்டுத்தெரிந்துகொள்வேன்.

வணிகசினிமா என்பது கேளிக்கை. ஆனால் அது சமூகத்தின் அரசியல் விழைவுகள், சமூகமாற்றம் சார்ந்த கனவுகள் ஆகியவற்றையும் உள்ளடக்கியிருக்கும். ஏனென்றால் அது பார்வையாளனை கவர்ந்து உள்ளே அமரவைக்கவேண்டும். இப்படத்தில் ஜனநாயகம், பொதுவுடைமை சார்ந்த ஆரம்ப பாடங்கள் சொல்லப்பட்டிருக்கும் விதம் கவனத்திற்குரியது. அன்று தமிழகத்தில் பலபகுதிகளில் ஜனநாயகம் வந்தபின்னரும் மன்னராட்சியும் ஜமீன்தாராட்சியும் மறைமுகமாக நீடித்தது.அன்று படம் பார்த்தவர்களில் பெரும்பாலானவர்கள் மன்னராட்சியில் பிறந்தவர்கள். புரட்சி பற்றிப் பேசுகிறது படம், கூடவே அது வன்முறையற்ற புரட்சி என்று சொல்கிறது. இப்படி என்னென்ன கருத்துருக்களை, காட்சிக்குறியீடுகளை இது பயன்படுத்தியிருக்கிறது என எவரேனும் விரிவாக ஆராயலாம்.

கேளிக்கை வடிவங்கள் எப்போதும் வெளியே இருந்து வரும் கேளிக்கைவடிவங்கள் உள்ளூர் வடிவங்களுடன் கலந்து, ரசிகர்களின் விருப்பங்களுக்கும் மனநிலைக்கும் ஏற்ப நுட்பமாக மாற்றிக்கொண்டு மெல்லமெல்ல உருவாகி வருபவை. வணிகசினிமா என்ற கலைவடிவம் ஹாலிவுட் சினிமாவுக்கும் உள்ளூர் இசைநாடகங்களுக்கும் நடுவே திரண்டுவந்த ஒன்று. அது மெல்லமெல்ல உருவாகிவந்த விதத்தை ஆராயும் எவரும் நாடோடி மன்னன் ஒரு பெரும் திருப்புமுனை, ஒரு சாதனை என்றே மதிப்பிடுவார்கள் என நினைக்கிறேன்.

முந்தைய கட்டுரைநல்லிடையன் நகர் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅசடன் ஒரு பார்வை- அருணாச்சலம் மகராஜன்