சுவையின் வழி -கடிதங்கள்

 

ஜான் மில்ட்டன்
ஜான் மில்ட்டன்

சுவையின் வழி

 

ஜெமோ,

 

சுவை நாவிலிருக்கிறதா?இல்லை சுவைக்கும் பொருளில் இருக்கிறதா என்று பிரித்தறியமுடியாத அத்வைத நிலையில்தான் நீங்கள் குறிப்பிட்டிருந்த சிட்டுக்குருவி இருக்கிறது. அணுகுந்தோறும் ஏற்படும் அணுகமுடியாதவனின் தவிப்பு அச்சிட்டுக்குருவிக்கு இருக்கப் போவதில்லை. இயற்கைக்கு தன்னை ஒப்புக்கொடுத்தவர்கள் மெனக்கெடல் எதுவுமில்லாமல் தாங்களாகவே தங்களை செதுக்கிக் கொள்கிறார்கள். இந்ந நுண்ணர்வற்றவர்கள் தான் பல மரவெட்டி அறிஞர்களின் கோடாலிகளைத் தூக்கிக் கொண்டு கிளம்பி விடுகிறார்கள், பூக்களை கொய்வதற்கு.

 

எம்.ஏ. சுசீலா அவர்கள் மொழிபெயர்த்த தஸ்தயேவ்ஸ்கியின் ‘நிலவறைக் குறிப்புகள்’ வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் நுண்ணுணர்வுள்ளவர்களைப் பற்றிய அங்கதமாக வரும் “இங்கு இயல்பானவர்களெல்லாம் இயற்கைக்கு பிறந்தவர்கள் போலும். என்னைப் போன்ற நுண்ணுணர்வுள்ளவர்கள் சோதனைக் குழாய்க்குத்தான் பிறந்தவர்கள் போலும்” என்ற கதைசொல்லியின் சொல்லாடல் பண்பாடுகளை கடந்து நம்மை ரசிக்கத்தான் வைக்கிறது. முற்றுப்புள்ளியே இல்லாது தெளிந்த நீரோடை போல் செல்லும் கதைசொல்லியின் உளச்சிக்கல்கள் பற்றிய விவரணை நம்மையும் தஸ்தயேவ்ஸ்கியின் நாயகர்களுக்கு அணுக்கமாக்கி விடுகிறது. எம்.ஏ. சுசீலா அவர்களின் தமிழால் அந்த நீரோட்டத்தில் நம்மை இயல்பாக இணைத்துக்கொள்ள முடிகிறது.

 

நீங்கள் மிக அருமையாக வகைமைப்படுத்தியது போல பண்பாட்டை விட மானுடத்தை பேசிய இலக்கியங்களே உலக இலக்கியங்களாக, ஒவ்வொரு முறை வாசிக்கும் போதெல்லாம் புதுத்திறப்பை தருகிற செவ்வியல் ஆக்கங்களாக உருமாறுகின்றன. அடர்காடுகளைப் போல எப்போதும் நம்மை வசீகரிப்பவை தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புகள்.

 

அமர்த்தியா சென், இராமச்சந்திர குகா போன்றவர்களின் கட்டுரைப் புத்தகங்களைத் தவிர நான் படிக்கும் ஆங்கிலமெல்லாம் பிழைப்பு சாரந்தவை மட்டுமே. ஆங்கில இலக்கிய வாசிப்பெல்லாம் எனக்கு வாய்க்குமா என்று தெரியவில்லை. உங்களின் இக்கட்டுரை அதைத் சாத்தியமாக்குமா என்று அந்த சிட்டுக்குருவிபோல் காத்துக் கொண்டிருக்கிறேன்.

 

அன்புடன்

முத்து

 

vik
விக்டர் ஹ்யூகோ

 

ஜெ

 

விகடன் தடம் இதழில் வெளிவந்த சுவையின் பாதை வாசித்தேன். முக்கியமான கட்டுரை. சின்னவயதில் நாம் ஒரு பேஷனாகத்தான் வாசிப்போம். நாம் எல்லாவற்றையும் தெரிந்திருக்கவேண்டும் என்ற வெறி வரும். நிறைய தெரிந்துகொள்ளவேண்டும், மற்றவர்கள் கண்டுபிரமிக்கவேண்டும் என்ற ஆவேசம் இருக்கும். அப்படி ஒரு ஐந்தாறாண்டுகள் வாசித்துக்கொண்டே இருப்போம்.

 

அதன்பின் ஒரு ஆணவம் வரும். நாம யாரு என்கிறமாதிரி ஒரு மனநிலை. அப்போது சிக்கலான புதிரான விஷயங்களை வாசிப்பதில் ருசி வரும். அதைப்பற்றிப்பேசிக்கொண்டிருப்போம். பிறரை மட்டம் தட்டி மகிழ்ச்சி அடைவோம்

 

இதெல்லாம் ஒரு முப்பது வயசுக்குள் முடிந்தால் நல்லது. அதன்பிறகு நம் ரசனை இது, நமக்குரிய வாசிப்பு இது என்று தெளிவாகும். நாம் எதைத்தேடுகிறோம் என்று புரியவரும். நமக்கான ஆசிரியர்களைக் கண்டுபிடிப்போம்

 

உதாரணமாக நான் இன்றைக்கு முக்கியமானவராக நினைக்கும் ஆசிரியர் விக்தர் ஹ்யோக்கோ. அவரை சின்னவயதில் கதையாக வாசித்தேன். ஆனால் இன்றைக்கு எனக்கு நான் போகும் பாதையிலே சோர்வு வரும்போதெல்லாம் அவர்தான் ஊக்கமூட்டி கேள்விகளுக்குப் பதிலளிப்பவராக இருக்கிறார். அதேபோல வில்லியம் சரோயன். அவருடைய உலகம் ஒளிமிகுந்தது என நினைப்பேன்.

 

ஆனால் நான் படிக்கும்போது எனக்கு பெரிய ஆதர்சமாக இருந்தவர் அயன் ராண்ட், அதன்பிறகு காஃப்கா. கொஞ்சநாள் ஃபாக்னர், பெக்கெட் எல்லாம் வாசித்துக்கொண்டிருந்தேன். அந்த முக்கியத்துவம் இன்றைக்கு மனசிலே இல்லை

 

நாம் யார் என்று கண்டுபிடிக்கத்தான் வாசிக்கிறோம். கண்டுபிடித்தபின் நமக்கு உரியதை வாசிக்கிறோம் என நினைக்கிறேன்

 

பாஸ்கர் கண்ணப்பன்

முந்தைய கட்டுரைஇரண்டுமுகம் கடிதம்
அடுத்த கட்டுரைகுரங்குத்துணை