ஸ்டெர்லைட் – விளக்கங்கள்

29597677_1567145906716449_6518337892906440428_n

ஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி

ஸ்டெர்லைட்

ஜெ,

ஸ்டெர்லைட் ஆலையின் இந்த அறிக்கையைப் பார்த்தீர்களா? இந்த அறிக்கையை எப்படிப் புரிந்துகொள்வது? பெரும்பாலான கேள்விகளுக்கு இதில் பதில் உள்ளது என்றுதான் நினைக்கிறேன்.

எம்.சிவக்குமார்

ஸ்டெர்லைட் பிபிசி பேட்டி

***

அன்புள்ள சிவக்குமார்,

இப்படி ஒரு துணை அதிகாரியின் பதிலைப் பெறுவதற்கே இத்தனைப் பெரிய போராட்டம் நடத்தவேண்டியிருக்கிற நிலையை எண்ணிப்பாருங்கள். நமது பகுதியில் ஒரு தொழிற்சாலை வந்து நம் வாழ்க்கையைச் சீரழிக்கிறது. அதற்கு நாம் புகார்கொடுக்க, விளக்கம் கேட்க இங்கே அரசோ அதிகாரியோ இல்லை. எவரும் நம்மை பொருட்படுத்துவதில்லை. பல்லாயிரம்பேர் பல ஆண்டுக்காலம் போராடியபின்னர்தான் மிக மெல்ல அந்த ஆலைநிர்வாகம் ஒரு துணை அதிகாரியைக்கொண்டு ‘எல்லாம் சரியாத்தான் இருக்கு’ என்று ஓர் அறிக்கையை அளிக்கிறது. இந்திய ஜனநாயகத்தின் சீர்கெட்ட நிலையை, இதில் மக்களுக்குக் குரலே இல்லை என்பதை, இதைவிடச் சுருக்கமாகச் சொல்லிவிடமுடியாது

முதல் விஷயம், உண்மையிலேயே எந்தப்பிரச்சினையும் இல்லை என்றாலும் மக்கள் பீதியடைவதும் எதிர்ப்பதும் இயல்பு. அவர்கள் நிபுணர்கள் அல்ல. மக்களைச் சற்றேனும் பொருட்படுத்தும் ஒரு நிர்வாகம் அவர்களின் ஐயங்களைக் கணக்கில்கொண்டிருக்கவேண்டும். ஆனால் அவர்கள் ஒருவகையான குப்பைகளாகவே இதுவரை கருதப்பட்டிருந்தனர். நம் அறிவியல்ஜீவிகளும் மக்களையே குற்றம்சாட்டினர். இது அமெரிக்காவில் ஐரோப்பாவில் நிகழ்ந்திருந்தால் – இதைவிட பெரிய ஐயங்களும் எதிர்ப்புகளும் நிகழ்ந்த தருணங்கள் உண்டு – இப்படிப் பேசியிருக்கமாட்டார்கள்.

இங்கே உண்மையிலேயே பிரச்சினை உள்ளது. அதை சும்மா தூத்துக்குடிக்கு ஒருமுறை சென்றாலே புரிந்துகொள்ள முடியும். அங்கே ஸ்டெர்லைட் ஆலைப்பகுதிகளில் பேருந்தில் செல்வதே கடினம். அது ஸ்டெர்லைட் உருவாக்கும் மாசு அல்ல என்கிறார்கள். அப்படியென்றால் அதைக்கண்டுபிடிக்கவேண்டியது, தடுக்கவேண்டியது அரசு. அதை மக்கள் கண்டுபிடிக்கவேண்டும் என்கிறார்கள் என்றால் இங்கே அரசு ஒன்று இருக்கிறதா?

மக்கள் நாங்கள் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்றுதான் சொல்லமுடியும். எங்கிருந்து எப்படி வருகிறது, எப்படி தீங்கு பயக்கிறது, எல்லாவற்றையும் அறிவியல்ரீதியாக நிரூபித்துவிட்டுப் போராடு என்று சொல்வதைப்போல கேனத்தனம் வேறில்லை. மக்களால், அல்லது சூழியல் அமைப்புக்களால், இந்த ஆலை அல்லது எந்த ஆலைப்பகுதியிலும் நுழையவே முடியாது. ஒரு அதிகாரபூர்வத் தகவலைக்கூட எடுக்கமுடியாது. ஒரு சின்ன விசாரணையைக்கூட நடத்தமுடியாது. அந்தத்துணிச்சலில்தான் இதைச் சொல்கிறார்கள்

இந்தப்பேட்டியைப்போல எத்தனையோ ‘விளக்கங்களை’ ஆலைகள் சொல்வதுண்டு. யூனியன் கார்பைட் வெடித்தபின்னரும் அந்த மாசுக்களை அகற்ற நடவடிக்கை எடுக்காத நம் அரசுகளின் சான்றிதழ் அவற்றுக்கு உண்டு. அந்த அறிக்கையின் தோரணையே ‘இது எங்களுக்கும் அரசுக்குமான விஷயம். நாங்கள் பேசிவிட்டோம்’ என்பதுதான். இதிலுள்ள எந்தத் தகவலையும் மக்கள்சார்பாக நின்று எவரும் ஆராய, பரிசீலிக்கமுடியாது. மக்களின் தரப்பு என்பது வெளியே நின்று அடிவயிற்றில் அறைந்து கூச்சலிடுவது மட்டுமே

என்ன தீர்வு, என்ன பேச்சுவார்த்தை என்றெல்லாம் நான் சொல்ல விரும்பவில்லை. நான் வெறும் பொதுக்குடிமகன் மட்டுமே. ஆனால் சூழியலின் தரப்பு வலுவாக, ஜனநாயகபூர்வமான கண்காணிப்பாக, போராட்டவிசையாக இல்லை என்றால் நம்மை அமிலத்தில் வாழவைத்துவிடுவார்கள் இந்த அரசும் ஆலைகளும் அதிகாரிகளும். திரும்பத்திரும்ப நிரூபிக்கப்படும் ஒன்று இது.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-9
அடுத்த கட்டுரைகிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்