அசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்
அன்புடன் ஆசிரியருக்கு
அசோகமித்திரனும் ஆர்டிஸ்டும் வாசித்தேன்.
இந்த ஆண் பெண் ஆணவ விளையாட்டை விமோசனத்தில் மிகுந்த கலைத்தன்மையுடன் அசோகமித்திரன் நிகழ்த்தியிருப்பதாக எண்ணுகிறேன். அவருடைய வழக்கமான அன்றாடத்திற்கு அல்லற்படும் குடும்பம். ஆனால் இன்றிலிருந்து பார்க்கும் போது அத்தகைய அல்லற்படுகிறவர்களின் வழியாகவும் அனைத்து உணர்வுத்தளங்களிலும் நுட்பமான கலை வெளிப்பாடுகளை நிகழ்த்திக்காட்ட முடியும் என்பதே அசோகமித்திரனின் சாதனை என்று தோன்றுகிறது.
விமோசனத்தில் சரஸ்வதி ஒரு புள்ளியில் கடும் கோபம் கொண்டு எழுகிறாள். அவள் மேல் தன்னை கட்டிக்கொண்ட கணவனை அந்த கோபம் உருக்குலைத்து விடுகிறது. ஆனால் அதன்பின்பு சரஸ்வதியில் ஒரு நுணுக்கமான நிமிர்வு வெளிப்படுகிறது. இனி அவள் புழு அல்ல புழுவை நடிக்கும் நாகம் என அவள் கணவன் கண்டு கொள்கிறான். “உம்” என்ற சொல்லின் வழியாக மீண்டும் மீண்டும் அவளுக்கு அவன் நினைவுறுத்துவது அந்த கணத்தையே. அவளில் எழுந்த அந்த உக்கிரம் அடங்கித் தேயும் வரை அவன் அதை அவளுக்கு நினைவுறுத்திக் கொண்டே இருக்கிறான். மண்ணில் புதைந்து தன் அடி தேடி வரவேண்டும் அவள் என்பதே அவன் விருப்பம். ஆனால் சரஸ்வதிக்கு ஒரு சாமியாரை பார்த்து வரவேண்டும் என்ற மாற்று தோன்றுகிறது. அந்த மாற்று தோன்றுவதே அவனை முழுமையாக நம்பிக்கை இழக்கச் செய்ய போதுமானதாக இருக்கிறது. அவளை அடித்த இரவில் அவள் பணிவின் இறுதிப்புள்ளியை அவன் தொட்டாயிற்று. இனி தன்னிடமும் வந்து அவள் பணியப்போவதில்லை என்பதையும் உணர்ந்து கொண்டு விடுகிறான். அதுதான் சரஸ்வதியை அவன் நிரந்தரமாக நீங்க வழிவகுக்கிறது போலும்.
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
அன்புள்ள சுரேஷ் பிரதீப்
ஆண் பெண் உறவின் ஆணவச்சிடுக்கு என்பது இலக்கியம் உருவான காலம் முதலே எழுதப்படுவது. நவீன இலக்கியத்தில் அது நிறைந்து கிடக்கிறது. இன்னமும் கூட அது எழுதப்படும். ஏனென்றால் அது பிரபஞ்ச விளையாட்டு
பார்வதியும் பரமசிவனும் தாயம் விளையாடும் சிற்பங்கள் அஜந்தா எல்லோராவில் உண்டு. அது புராணங்களில் இருந்து காவியங்களினூடாக வளந்த ஒரு கற்பனை. அதில் இருவரின் முகபாவனைகளை விதவிதமாக உருவாக்கியிருக்கிறார்கள். சிவன் பதைப்புடன் குனிந்து களத்தை பார்க்க பார்வதி வெற்றிச்சிரிப்புடன் நிமிர்ந்து அமர்ந்திருக்கிறார்
ஏறத்தாழ இதே சித்திரத்தை லா.ச.ரா ஒரு கதையில் எழுதியிருக்கிறார். தாயம் என கதையின் பெயர் என்று ஞாபகம். மிகச்சிறந்த கதையாக உடனே நினைவுக்கு வருவது வைக்கம் முகமது பஷீரின் பூவம்பழம்.
அசோகமித்திரனின் கதை ஒரு முறிவின் தருணம். அதை நுட்பமாகச் சொன்னதனால் அவருடைய நல்ல கதைகளில் ஒன்று அது.
ஆனால் நான் அக்கட்டுரையில் பேசியிருப்பது ஆண்பெண் ஆணவ ஆடலை அல்ல. கலைஞன் –பெண் என்னும் ஆடலை. கலைஞன் வெறும் ஆண் அல்ல. அவனுக்கு பெண் வெறும் பெண் அல்ல. அவள் அவனுடைய கலையின் களம். அவனுடைய கலைப்படைப்பு. அது கலைஞனுக்கும் அவன் படைப்புக்குமான உறவு, படைப்புக்கு ஆளுமையும் மனமும் உள்ளது என்னும்போது மிகச்சிடுக்கானது அது.
ஜெ
========================================================
ஜெ
அசோகமித்திரனின் நினைவுநாளில் நீங்கள் அவரைக்குறித்து எழுதுவீர்கள் என நினைத்தேன். காணாததனால் ஏமாற்றம். அவரைப்பற்றிய கட்டுரை அந்த ஏமாற்றத்தை நீக்கியது. அவரைப்பற்றிய ஒரு நினைவுகூரலாக இருந்தது
ராஜசேகர்
அன்புள்ள ராஜசேகர்
நான் பொதுவாக நினைவுகூரல் சம்பிரதாயங்களை கடைப்பிடிப்பதில்லை. ஞாபகமிருக்காது என்பதே காரணம். செயற்கையாக ஞாபகப்படுத்துவதும் பிடிக்காது. நமக்கு உண்மையில் முக்கியமானவர்கள் பேச்சில் இருந்துகொண்டே இருப்பார்கள். முக்கியத்துவமிழந்தால் இயல்பாக அவர்கள் மறக்கப்படவும் வேண்டும்
ஜெ