அன்புள்ள ஜெ சார்,
இப்போது தான் சற்றே பெரிய நாவலான ”அசடன்” படித்து முடித்தேன், தஸ்தோயெஸ்க்கியின் பிரமாண்ட எழுத்தை பற்றி பேசுவதற்கு முன், இதை தமிழில் இவ்வளவு துல்லியமாக மொழிபெயர்த்த எம். ஏ.சுசீலா அம்மா அவர்களுக்கு, வணக்கமும் வாழ்த்துக்களும்.
ஒரு இடத்தில் கூட தடங்கல் இல்லாத, சலிப்பு தட்டாத ஒரு நடை. நிச்சயமாகவே, மிகப்பெரிய உழைப்பும், ஈடுபாடும் இன்றி இது சாத்தியமில்லை. இதற்கு முன் வேறுசிலரின் சில மொழிபெயர்ப்பு நூல்கள் சிரமப்பட்டு படித்து 30 பக்கங்கள் தாண்டாத நிலையில் ”பத்திரமாக” இருக்க, சில அறிவியல் புனைவு மற்றும் விஞ்ஞான, மொழிபெயர்ப்பு நூல்கள் பற்றி சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தான்மிகுந்த விருப்பத்துடன், சமிபத்தில் அசடன் படித்து முடித்தேன்.
டால்ஸ்டாயின், சுவிசேஷங்கள் சுருக்கம் எனும் எனும் நூலில், இப்படி தொடங்குகிறார்
//மனிதர்கள் இங்கு ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி கொள்ளவும், நியாய தீர்ப்பளிக்கவும் வரவில்லை, மாறாக ஒருவரை ஒருவர் காப்பாற்றி கொள்ளவே வந்திருக்கின்றனர், தூய்மை, அன்பு , மற்றும் மன்னிக்கும் தன்மை, போன்ற குணங்களுடன் வாழ்ந்து காட்டி, முன்னுதாரணமான செயல்களை அவர்களால் செய்ய முடியும்//
மேலும் ,
//நான் இறைவனை குறித்த கேள்விகளுக்கோ, வரலாற்றினை குறித்த கேள்விகளுக்கோ விடை தேடிக்கொண்டிருக்கவில்லை,இயேசு இருப்பாரா, இல்லையா , என்பது முக்கியமில்லை,ஆயிரத்து எண்ணூறு ஆண்டுகளாக, மனித குலத்தினை, ஞானமடைய வைத்துக்கொண்டிருக்கும்,ஒளியே எனக்கு முக்கியமானது, இன்றும் என்னுள் ஒளியூட்டி கொண்டிருப்பது,//
//சுவிசேஷங்களுக்கும் , சபையும் காட்டும் இயேசு அல்ல, நான் கண்டடைந்து,//
டால்ஸ்டாயின், இந்த இயேசு தான், அசடனில் மிஷ்கினாக மாற்றுரு கொள்கிறான்.
******
நாவலின் முதல் காட்சியே நம்மை ரஷிய குளிரை உணரவைப்பது தான்.ஒரு பெரிய திரையில் பிரமாண்ட நாடகம் அரங்கேறிய வண்ணம் உள்ளது, நாம் தொடர்ந்து படிக்க படிக்க, 20க்கும் மேற்படட முக்கியமான கதை மாந்தர்கள் உள்ளே வந்து தங்கள் பகுதியை நிறைவாக செய்து, நம்மை மேலும் உள்நோக்கி இழுத்துவிட்டு செல்கிறார்கள், கதையின் மய்யமாக ”அசடன்” அமர்ந்து புன்னகைத்த வண்ணம் நம்மையே பார்த்துக்கொண்டிருக்கிறான்.
இன்றும் கூட நமது மரபில் தொடரும் , அகண்ட தீபம், அணையா விளக்கு என்கிற கருத்துரு. எப்போதோ, ஒரு ஞானியால், யோகியால்,ஆசிரியராலோ ஏற்றப்படட விளக்கு அவர் உடல் நீத்து , தலைமுறைகள் தாண்டியும் தொடர்ந்து சுடர்விடட வண்ணம் இருக்கும், ஒவ்வொருமுறை திரி கருகும் போது, புது திரியை பற்றவைக்க பழைய சுடரில் இருந்தே ஒளி கொள்ளப்படும், அதுபோலவே, இந்த அசடனும் எங்கிருந்தோ பெற்ற ஒளியை அன்பாலும் மன்னிக்கும் தன்மையாலும் சுடர்விட செய்து அடுத்தவனுக்கு கை மாற்றி செல்கிறான், அப்படி ஒரு கதாபாத்திரமாக ”கோல்யா” எனும் துடுக்கான சிறுவன் வருகிறான், ஆரம்பத்தில் மிக சாதாரண, குறும்பு சிறுவனாக நாவலின் உள்ளே நுழையும் அந்த சிறுவன், மிஷ்கினிடம்,இருந்து பெற்றுக்கொண்ட ஆன்ம ஒளியால் ,தொடர்ந்து மிளிர்ந்த வண்ணம் நாவல் முடிக்கையில் எழுந்து நிற்கிறான், மிஷ்கினின் பரிதாப முடிவுக்கு பின்னர், மிஷ்கினின் தொடர் ஒளியாக அடுத்த தலைமுறைக்கான இளவரசனாக தொடர்கிறான்.
இங்கிருக்கும் ஒவ்வொன்றிலும் நிறையை மட்டுமே காணுதல் என்பது ஒருவகையில் வரம். இளவரசன் மிஷ்கின் அப்படியாக மண் நிகழ்ந்தவர்களின் வரிசையில் வருகிறான், எதன் மீதும் குறை காண்பதில்லை என்பதால், வாழ்வின் மீது ஒருபோதும் சலிப்பு ஏற்படுவதில்லை. இந்த மனோநிலையை ஒரு சாமானியன் அடைய முடியாததாலேயே, மிஸ்கின் போன்றவர்களின் மீது எரிச்சலும் பொறாமையும், வஞ்சமும், கொண்டு, ஆனால் மிஷ்கினை பார்த்து மாத்திரத்தில் எதோ ஒரு குற்ற உணர்வால் உந்தப்பட்டு, சிறு நகைப்புடன் ஒரு அன்பை வெளிப்படுத்துகிறார்கள், நாவல் முழுவதும் வரும் கதாபாத்திரங்கள் இந்த வகைமையை சேர்ந்தவர்களே.
ரோகோசின், கன்யா, லெபதேவ், போன்ற குழப்பமாக, சிக்கலான மனநிலை கொண்ட கதாபாத்திரங்கள், தொடர்ந்து மிஷ்கினின் மெய்யான ஆளுமை மேல் சந்தேகித்த வண்ணம் உள்ளனர்.ரோகோஸின் //இந்த இளவரசன் நடிக்கிறானோ // என்கிற மன ஊசலாடடத்தில் நாவலின் முடிவு வரை வருகிறான்.
கவிஞர் கண்டராதித்தன் எழுதிய ஸ்ரீ மான் ஷண்முகசுந்தரம் என்கிற கவிதையில்,
”எல்லோராலும் முடடாளாக மதிக்கப்படும் தவில் கலைஞர்ஸ்ரீ மான் ஷண்முகசுந்தரம், ,முத்த சகோதரர் எவ்வளவு நேர்த்தியாக அடித்தாலும் ஸ்ரீமான் மட்டும் ஒரு அடி
பிந்திவிடுவார், அதனாலேயே நாதஸ்வர பாலாண்ணாவிடம் இடியும் , மற்றவர்களால், ‘தனித்தவில்’ என்கிற கிண்டலுக்கும் ஆளானாலும், தான் ஒரு முடடாள் என்பதை அறியாதவர், என்பதாலேயே ஒரு நிகழ்ச்சியில் நெடுஞ்ச்சாலையில் அவரை அம்போவென விட்டுவிட்டு சென்று விடுவார்கள்,, அப்போதும் அவர் தவிலடித்தபடி தனியாக நடந்து வருவார், அப்போது ஒரு லாரியில் வரும் கடவுள் ஸ்ரீமானை பார்த்து வருகிறீர்களா என்று கேட்பர்.
இந்த ஸ்ரீமான் ஷண்முகசுந்தரம் , ஏதோவகையில் அந்த அசடனின் இன்றைய தலைமுறை.
தஸ்தோயெஸ்கியின் ‘அசடனுக்கான’ விமர்சனங்களில் அதிகம் சொல்லப்பட்டிருக்கும் சித்திரம் அவர் அசடனை ஏசுவிலிருந்து பெற்றுக்கொண்டார் என்பதே, இந்த நாவலின் முன்னுரையில் அவர் அதை ஒப்புக்கொள்கிறார், கழுதைமேல் சவாரி செய்யும் மிஷ்கினின், செயலில் தொடங்கி மேரி மக்தலீனை நினைவு படுத்தும் நஸ் டாஸியா எனும் ஒழுங்கீனமான பெண்ணின் பாத்திரப்படைப்பு வரை. ஏசுவிலிருந்து பெற்றதை காணமுடிகிறது.
உலகின் இரு பெரும் இலக்கிய கர்த்தாக்களான டால்ஷ்டாயும், தஸ்தோயெஸ்க்கியும், தேவகுமாரனிடத்திலிருந்தே தங்களுக்கானதை பெற்றுக்கொண்டுள்ளனர்.
அன்றைய காவியங்கள் முதல் இன்றைய சினிமா வரை, அசட்டுத்தனமும் குழந்தைமையும் உள்ள பத்திரப்படைப்புகள் அனைத்துமே, மனித மனங்களை வென்றெடுத்து இருக்கிறது, அந்தவகையில் அசடன்” என்றும் நம்மை வென்றவண்ணம் இருப்பான்
சௌந்தர்
எம்.ஏ.சுசீலாவுக்கு விழா
குற்றமும் தண்டனையும் – நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு வாங்க
அசடன் வாங்க