இமைக்கணக் காட்டில் தன் முன் அமர்ந்திருந்த பீஷ்மரிடம் யாதவராகிய கிருஷ்ணன் செயலெனும் யோகத்தை விளக்கி இவ்வண்ணம் சொல்லத் தொடங்கினார். மூப்பையும் திறனையும் மறந்து, சலிப்பையும் விலக்கத்தையும் இழந்து, கைகட்டி விழிநிலைக்க அமர்ந்து அச்சொற்களை பீஷ்மர் கேட்டிருந்தார்.
பிதாமகரே, முன்பு சுலபை எனும் பேரறிவை அரசமுனிவராகிய ஜனகரிடம் கேட்டாள். ஒவ்வொரு பொருளும் அப்பொருளின் நுண்கூறுகளில் திகழும் தனித்தன்மையினால் ஆனது என்று கணாத காசியப முனிவரால் வகுக்கப்பட்டுள்ளது. அத்தனித்தன்மைகளோ அறியப்படுவதனூடாக அமைபவை. ஆகவேதான் அறிமுறையைக் குறித்த அறிவே அறிவில் தலையாயதென்று அக்ஷபாத கௌதம முனிவர் வகுத்தார்.
அறிவையன்றி எதையும் அறியவியலாதென்றால் அறிவென்பது அறிதலெனும் நிகழ்வே என்றாகிறது அல்லவா? அறிபடுபவன் இல்லையென்றால் அறிதலே இல்லையென்பதனால் அறியப்படுவதெல்லாம் அறிபவனின் அறிநிலை என்று அன்றி வேறெப்படி வகுக்க இயலும்?
அறிபவனுக்கேற்ப தன்னை காட்டும் இப்புடவியை அவ்வண்ணம் முடிவிலாது அறிவதனால் என்ன பயன்? ஒன்று பிறிதைக் காட்டும் பல்லாயிரம் ஆடிகளில் முகம்நோக்கி யார் தன்னை அறிந்துகொள்ள முடியும்? செயலெல்லாம் அறிதலே என்று சொல்கின்றன நூல்கள். செயல் பிற செயலென்று பெருகுமென்றால் செயல்புரிவோன் முடிவிலா அறியாமையில் சிக்கியிருக்கிறான் என்பதல்லவா மெய்?
சுலபை ஜனகரிடம் இவ்வண்ணம் கேட்டாள். அரசே, ஒருபோதும் கரைக்கு வராத நாவாயில் பிறந்து வளர்ந்து இறக்கும் ஒருவன் இருந்தான். அவன் இப்புவி நிலையானதென்று அறிந்திருக்கவேயில்லை. இங்குள்ள ஒவ்வொன்றும் அலையடிப்பதென்றே நினைத்திருந்தான். அவன் மறைகையில் அந்தப் புவி எங்கு செல்கிறது? பிற கோடிப்பேர் அறிந்த புவியை ஆளும் தெய்வங்கள் அந்த அலைப் புவியில் எப்படி திகழ்கின்றன?
அனைத்து விதைகளையும் முளைக்கவைக்கும் அணைப்பு கொண்டது இந்த மண். முளைக்காத விதைகள் காத்திருக்கின்றன. மானுட உள்ளத்தில் மூவிழைவுகள் இல்லையென்றான கணம் அமையலாகுமா? அவை ஐம்புலன்கள் மேல் அமையாத தருணமொன்றுண்டா? விழைவுகளும் புலன்களும் முடைந்தமைந்த சித்தமே நிலைகொள்ளாக் கடல். அரசே சொல்க, புயல் கொந்தளிக்கும் மரக்கிளையில் எப்பறவை வந்தமரும்?
முன்பு உங்கள் மூதாதையான சுதிருதி தன் நகர் அமைந்த குன்றுக்குக் கீழே ஓடிய சிற்றோடை ஒன்றின் கரையில் அமர்ந்திருந்தார். அவர் ஊழ்கத்திலிருந்து விழித்தெழுந்தபோது ஓடைவிளிம்பில் எழுந்து நின்றிருந்த நுரைக்குமிழி ஒன்றில் தன் நகரின் முழுத் தோற்றத்தை கண்டார். அன்றே அங்கிருந்தே கான்புகுந்தார்.
தாழியில் தன் முன் வந்த பாலைக் கண்டு முன்பு உங்கள் மூதாதையான மரு அதை வணங்கினார். அவர் முன் க்ஷீரை என்னும் தெய்வமாக எழுந்தது பால். “அன்னையே, இத்தாழியின் வடிவை ஏன் கொண்டாய்?” என்று அவர் கேட்டார். “அதற்குமுன் பசுவின் அகிடின் வடிவிலிருந்தேன். அதற்கும் முன் அதன் குருதி வடிவில்” என்று க்ஷீரை சொன்னாள். “பெருவடிவில் வானிலிருக்கிறேன். எப்போதும் ஏதேனும் வடிவிலேயே இருக்கிறேன். வடிவில்லையேல் இன்மையென்றே இருப்பேன்.”
“நான் உன்னை அறிகையில் அறிவது இத்தாழியை அல்லவா?” என்று மரு கேட்டார். “ஆம், கலமின்றி பாலை அறிய மானுடர்க்கு வழியே இல்லை” என்றபின் க்ஷீரை மறைந்தாள். மரு அதுவரை கற்ற அனைத்தையும் துறந்து களிமகன் ஆனார். நுரைசூடிய கள் என்று வாழ்வை கொண்டாடலானார்.
முன்பு ஒருகாலத்தில் சிறுகுட்டையில் வாழ்ந்த ரஜதன் என்னும் மீன் மேலிருந்து குனிந்து தன்னை நோக்கிய முனிவரிடம் துயருடன் சொன்னது “நான் கலங்கிய நீரின் அலைகளால் சூழப்பட்டிருக்கிறேன். அதையே அருந்துகிறேன். அதையே நோக்குகிறேன். அதனால் மறைக்கப்பட்ட உலகையே காணும்படி அமைந்துள்ளது என் வாழ்க்கை.”
முனிவர் அதனிடம் சொன்னார் “இனியவனே, உன் நீரை கலக்கிக் கொண்டிருப்பது நீயேதான்.” ரஜதன் திடுக்கிட்டு “நான் ஒரு கணமும் செதிலும் வாலும் ஓய முடியாது. நீரில் மூழ்கி இறப்பேன்” என்றது. முனிவர் “அவ்வண்ணமென்றால் நீ இந்தக் கலங்கலையே அடைந்தாகவேண்டும்” என்று திரும்பிச் சென்றார்.
மானுடர் ஆற்றும் செயல்கள் பயனற்றவையே என்று நிறுவி இவ்வண்ணம் பேசிய சுலபையிடம் ஜனகர் சொன்னார் “அறிவின்பொருட்டு எழுந்தவளே, செயல்கள் எதையும் செய்யாமலிருப்பதனால் எவரும் செயலற்ற நிலை அடைவதில்லை. செயலற்ற நிலை என்பது கடுந்தவத்தால் சென்றடையவேண்டியது, மேலும் கடுந்தவத்தால் நிலைகொள்ளவேண்டியது. விரையும் படகின் அமர மையத்தில் நிற்பவன் துடுப்பிடுபவருக்கு நிகராகவே உடலுழைக்கிறான்.”
மூலப்பேரியற்கையில் எழுந்த மூன்றியல்பின் முரண்களால் முதற்செயல் தோன்றியது என்று கபிலமுனிவரின் மெய்நூல் சொல்கிறது. முதற்செயலின் தொடர்ச்செயலே இப்புவியெனும் செயற்பெருக்கு. ஒவ்வொருவரும் அதற்குள்தான் வாழ்கிறார்கள்.
இங்கு செயலாற்றாத எதுவுமில்லை. புவிக்குமேல் விண்கோள்கள் சுழல்கின்றன. சிற்றெறும்பு துயில்வதேயில்லை. செயலாற்றுவதன் பயன் என்னவென்று அவை அறிவதில்லை. செயலாற்றாதிருக்க இயலாதென்னும் நெறியாலேயே அவை செயலாற்றுகின்றன. எவரும் ஒரு கணப்பொழுதேனும் செயலற்ற நிலையில் இருக்கவியலாது.
முக்குணம் தெளியா முதற்பொருள் செயலினூடாகவே தெளியும் புடவி என வளர்மாற்றம் கொண்டது. அவியக்தம் என்றும் வியக்தம் என்றும் அதை அறிஞர் சொல்கிறார்கள். தெளியாப் பொருளுக்கும் தெளிபொருளுக்கும் நடுவே நிகழ்வதொன்றே. அதை செயல் என்றார் கபிலர். விவர்த்தம் எனும் அச்செயல் காலமற்றது. செயல்கள் என பெருக்குவது உயிர்களின் சித்தம். சித்தம் கடந்து செயலென்று அதை காண்பவர் தெளிபொருளில் தெளியாததை காணக்கூடும்.
செயல்கள் உடலால் மட்டும் ஆற்றப்படுவதில்லை. மூடிய பேழைக்குள் வைரம் ஒளிவிளையாடிக்கொண்டிருக்கிறது. உடற்குடத்திற்குள் இதயம் புரவியெனப் பாய்ந்து செல்கிறது. செயலை அஞ்சி செயலின்மையை விரும்பி ஐம்புலன்களை அடக்கி உள்ளத்தால் அனைத்தையும் இயற்றுபவனை பொய்யொழுக்கம் கொண்டவன் என்றே சொல்லவேண்டும். நிழல்கண்டு காமம் கொள்ளினும் உவகையும் துயரும் நிகரே.
அகன்றமைந்த பெருநகர் ஒன்றை நான் கண்டிருக்கிறேன். அதன் எல்லைகள் படைக்கலமேந்திய வீரர்களாலும் வழிநடத்தும் முரசுகளாலும் தொலைவை நோக்கும் ஒற்றர்களாலும் சூழப்பட்டுள்ளன. அவ்வட்டத்திற்குள் ஆயிரம் ஆலயங்களில் தெய்வங்களுக்கு ஓயாமல் பூசெய்கை நிகழ்கிறது. அதற்கும் அப்பால் உள்வளையத்தில் அறிஞர் அமர்ந்து பறவைக்கூட்டம்போல் ஓசையிட்டு சொல்லாடுகிறார்கள்.
அதற்கும் அப்பாலுள்ள வட்டத்தில் ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் முனிவர்களை கண்டேன். தங்கள் உள்ளத்தை சொல்லின்மையாக்கி, காலத்தை இனிய சுழியென்றாக்கி, அவர்கள் அமர்ந்திருந்தனர். இளையவளே, அதற்கும் அப்பால் அமைந்த அறையில் மாறா புன்னகையுடன் முனிவர் ஒருவர் அமர்ந்திருந்தார். அவர் முற்றிலும் தனிமையில், முழுமையான செயலின்மையில், தன்னையும் தான் அறியாதவராக அமர்ந்திருந்தார்.
அலைஓயாத பெருங்கடல்மேல் வாழ்பவன் நான் என்று ஒரு மாலுமி சொன்னான். கரையிலமர்ந்திருந்த இல்லறத்தான் புன்னகைத்து அலை ஓயாத புவிமேல் நானும் வாழ்கிறேன் என்று சொன்னான்.
பெருங்கடல் தாண்டி வந்தமர்ந்த பறவையிடம் கடலோரம் அலையெண்ணி அமர்ந்திருந்த இல்லக்கோழி கேட்டது, எந்த அலையிலிருந்து நீ பறக்கத் தொடங்கினாய் என்று. தொடங்கிய அலையிலேயே எப்போதும் பறந்துகொண்டிருக்கிறேன் என்று அது மறுமொழி சொன்னது.
என் மூதாதையான சுதிருதி தன் வாழ்வின் இறுதியில் அனைத்து நகர்களையும் தன் மேல் ஏந்திய பெருங்குமிழி ஒன்றை கண்டார். புன்னகையுடன் ஆம் என்று சொல்லி விழிமூடினார்.
என் மூதாதையான மரு அன்னையின் சிறுமுலைக்காம்பில் சொட்டிநின்ற பால்துளி ஒன்றைக் கண்டு இளங்கன்று ஒன்று வாழ்த்துவதை ஒருநாள் கேட்டார். ‘பரம்பொருள் பள்ளிகொள்ள முடிவிலியென விரிந்தவளே, என் பசிக்கென துளிவடிவில் ஊறும் உன் பெருங்கனிவுக்கு அப்பால் பொருள் என ஒன்று கொண்டிருக்கிறாயா?’ அவர் இங்கு நிகழும் பெருங்களியாட்டில் தன்னை நிறைத்துக்கொண்டார்.
பொருளென்று அங்கிருந்தும் அறிவென்று இங்கிருந்தும் சந்திக்கும் புள்ளியிலேயே அனைத்தும் நிலைகொள்கின்றன. நிகர்விசைகொண்ட இரு களிறுகளால் இழுக்கப்படும் வடத்தின் மையம் அது.
அறியப்படும் இவையனைத்தும் அறிவென்பதனால் அறியப்படுவதனால் அறிவு உருவாகவில்லை என்றே பொருள். அறிவன்றி இங்கு பிறிதேதுமில்லை. அறிவுக்குள் அறிவென்று அமைந்தவையே அனைத்தும். தனித்தன்மைகள் அறிதலினால் எழுகின்றன. அறிதலுக்கு அப்பால் பெரும்பொதுமையின் அமைதலும் அறிவே.
அறியப்படாமையும் அறியவொண்ணாமையும் அறிவுகடந்தமையும் அறிவே. அறிவிலமர்ந்தவர் அறிவென அதையே கொள்வர். அறிபொருள் அறிவோன் அறிவு எனும் மும்மையழிந்த நிலையில் அது நிலைகொள்கிறது.
சுழற்சிக்கு நடுவே மையம் அசைவின்மை கொண்டிருக்கிறது. ஆழம் அலையின்மையால் இறுகியிருக்கிறது. அப்பாலிருப்பவனே அனைத்தையும் அறிபவனாகிறான். செயல்களுக்குள் செயலற்றிருப்பவனே செயலாற்ற வல்லவன்.
நிலமறைந்து பாயும் சிம்மத்தில், முகக்கை சுழற்றிப் பாயும் களிற்றில், சீறிப்படமெடுக்கும் நாகத்தில் எழுகிறது இப்புவியாளும் பெருவிசை. புரவியின் கால்களில், கழுகின் சிறகில், தவளையின் நாவில் வெளிப்படுகிறது. அது தெய்வங்களுக்குரியது. அதனால் ஆற்றப்படுகின்றன அனைத்துச் செயல்களும். அனைத்து அறங்களும் அதனால் நிலைநிறுத்தப்படுகின்றன.
அவ்விசை உணரப்படுகையில் மானுடருக்குரியவையாகின்றது. காமம் சினம் விழைவு என சொல்கொள்கின்றது. அனைத்தையும் மறைக்கும் திரையாகின்றது. அனைத்தும் தானாகித் தோன்றுவதனூடாக பிறிதெதையும் காட்டாதவையாகின்றது.
ஐம்புலன்களையும் ஆளும் காமமும் சினமும் விழைவும், கால்களும் விழிகளும் அற்றவை. ஆணவமே அவற்றின் ஊர்தி. ஆணவத்தை வென்றவன் அம்மூன்றையும் ஆள்கிறான். காற்றிலா கருவறையில் நிலைகொள்ளும் சுடர் என அகம் கொண்டிருப்பான். அவன் காண்பவை துலங்கும்.
முன்பு இலங்கையின் தலைவனாகிய ராவணன் பெருவேள்வி ஒன்றை இயற்றினான். அதில் அவன் தன் செல்வங்கள் அனைத்தையும் ஆகுதியாக்கினான். தன் உறவை, துணையை அவியென அளித்தான். பின்னர் தன் தலைகளை ஒவ்வொன்றாக அறுத்து அனலோம்பினான். காமம், சினம், விழைவு எனும் மூன்று தலைகளை அளித்தான். மறுபக்கத்திலிருந்து கல்வி, புகழ், பற்று என்னும் மூன்று தலைகளை மீண்டும் வெட்டியிட்டான்.
பின்னர் ஆகூழ், போகூழ், அறம் என்னும் மூன்று தலைகளையும் வெட்டி அவியூட்டினான். வேள்விமுழுமை பெறாமை கண்டு திகைத்தபின் தன் பத்தாவது தலையையும் வெட்டி எரிபலி அளித்தான். அந்தத் தலையே தன்னிலை. அது நீங்கிய பின்னரே வேள்வித்தீயில் அவனுக்குரிய தெய்வம் எழுந்தது.
தன்னிலையை இழந்தவன் பாம்புகளைப் பிடாரன் என மும்முக விசையை ஆள்கிறான். காட்டெரியின் நடுவே கரும்பாறையென நிலைகொள்கிறான். அனைத்துத் துயர்களையும் இடர்களையும் கனவிலெனக் கண்டு விழித்துக்கொள்கிறான்.
அனைத்தையும் சுவைத்த பின்னும் தனக்கென சுவையேதுமில்லாதிருக்கும் நாக்கு அவன். புதுச் சுவையை நாடுபவன். இனிமையில் முற்றிலுமாகத் திளைக்க அறிந்தவன். தன்னில் தான் இன்புறுபவன்.
அவன் தன்னில் தான் நிறைவுகொள்பவன். தன்னிலே தான் உவகையடைபவன். தானன்றி பிறிதிலானுக்கு செயலென்று ஏதுமில்லை. அவனே முடிவிலாது செயலாற்றுபவன். புடவியில் பிரம்மம் என உயிர்களில் அவன் உறைகிறான்.
பிறரை மட்டுமே எண்ணி அளிக்கையில், தன்னை மட்டுமே எண்ணி அன்புகொள்கையில், இரண்டும் எண்ணாமல் அறம்புரிகையில் செயல் வேள்வி என்றாகிறது. அனைத்தையும் அவியாக்கும் வேள்வி. அனைத்து தெய்வங்களும் பேணப்படும் வேள்வி. வேள்வியல்லா செயலனைத்தும் வீணே. வேள்வியன்னம் அல்லாதவை உணவே அல்ல.
செயலினூடாக செயலை கைவிடுக! செயல்நிறைவென்பது செயல்கடத்தலென்றாகுக! செயலில் எழும் அறிவும் செயல்மிச்சமே. எஞ்சாச் செயலே வீடுபேறளிக்கும் என்று அறிக!
செய்யப்படாத செயல் துன்பத்தை அளிக்கிறது. செய்துமுடித்த செயல் புதிய துன்பத்தை கொண்டுவருகிறது. செயலை அறியாமல் செயலாற்றுபவனே அத்துன்பத்தை தவிர்க்கிறான். முற்றிலும் நிகர்கொண்ட படையாழியே முழுவிசையில் சுழலும். தன்னை ஏந்தும் சுட்டுவிரல் அறியாதபடி எடையற்றிருக்கும்.
இங்கு செயல், மறுசெயல், தொடர்செயல் என இயங்கும் இந்தப் பெரும்பொறியை அமைத்த சிற்பி அதில் ஓசையின்றி உராய்வின்றி தான் எண்ணியதை முற்றியற்றும் உறுப்பையே விரும்புகிறான். அதை தன் வெற்றியென்று கொள்வான்.
அப்பொறியின் அமைப்பையும் இயக்கத்தையும் இலக்கையும் அவ்வுறுப்பு முழுதறியவியலாது. முற்றமைந்தால் அறியமுடியாது. பிறழ்வதனூடாகவே அதை அறியமுடியும். பிறழ்கையில் அது அமைந்திருக்கும் இடமே அதன் சிறையென்றாகும். அப்பொறியின் அனைத்து பிற உறுப்புகளாலும் அது உரசப்பட்டு அனல்கொள்ளும். அப்பொறியின் முழு எடையையும் தாங்கி உடைந்தழியும்.
தன் பணியை முற்றியற்ற அது அமையுமென்றால் அது அமைந்திருக்கும் இடமே முற்றிலும் உகந்ததென அறியும். அனைத்துறுப்புக்களும் அதற்கு உதவுவதை காணும். முழுமையுடன் பொருந்துவதனால் முழுமையின் ஆற்றல்கொண்டதாக மாறும்.
ஒரு செயல் அனைத்துச் செயல்களுடனும் முற்றிணைகையில் அது யோகம் என்றாகிறது. யோகமென அமைந்த செயலே செயல்களில் தூயது. செயல் சிறையிடுவது. யோகச்செயல் விடுவிப்பது.
ஆகவே அறிவமைந்தவளே, செயலில் அமைக! செயலால் எழுக! செயல் யோகமென்றாகுக!
இவ்வண்ணம் ஜனகர் கூறிமுடித்ததும் சுலபை கைகூப்பியபடி எழுந்தாள். தன் உடலின் எடையனைத்தும் நீங்கிவிட்டிருப்பதை அறிந்தாள். “அரசமுனிவரே, என் முதலாசிரியர் எனக்கு இப்பெயரை இட்டபோது இதன்பொருள் அறியாமல் வியந்தேன். பின் இதன் பொருள்முரணை எண்ணி கசந்தேன். இப்பொருளை வந்தடைய நான் பயணம் செய்துகொண்டிருந்தேன் என இப்போது உணர்கிறேன்” என்றாள்.
பின் இளங்காற்றில் சுருண்டெழும் புகைபோல அவள் மிதந்து பறந்து மிதிலையின் தெருக்களினூடாக விலகிச் சென்றாள். விதேகத்திலிருந்து வடக்குநோக்கிச் சென்று இமயமலையில் எழுந்த காஞ்சனசிருங்கம் என்னும் பொன்மலைமுடியில் சென்றமைந்தாள். பொன்வடிவம் கொண்டு நிறைவடைந்தாள்.
“சுலபைக்கு ஜனகர் அருளிய செயல்மெய்மை இது, காங்கேயரே. இது உங்களுக்கும் வழிகாட்டும் சொல்லென்றமைக!” என்று இளைய யாதவர் சொன்னார். பீஷ்மர் கைகூப்பி “ஆம், என் உள்ளம் தெளிவுகொண்டது” என்றார். பின் எழுந்து நின்று தன் குழல்கற்றைகளை கையால் நீவி தோளிலிட்டபடி “நான் செல்கிறேன். உங்கள் சொற்கள் எனக்காகக் காத்திருந்தன என்று உணர்கிறேன்” என்றார். இளைய யாதவர் “ஆம், இத்தருணம் அவற்றுக்குரியது” என்றார்.
பீஷ்மர் கிளம்பும் அசைவு உடலில் கூடியபின் தயங்கி நின்று “நான் என்பொருட்டு கேட்கவில்லை, யாதவரே. விருப்பமற்றவனைக்கூட இழுத்துச் சென்று செயலில் தூண்டி பெரும்பழி கொள்ளச்செய்யும் அவ்வாற்றல்தான் என்ன?” என்றார். “ஏனென்றால் என் மைந்தன் துரியோதனனை நான் நன்கறிவேன். இப்போதும் அவனுள் விழைவு எழுந்து நிறைந்துள்ளது என நான் எண்ணவில்லை.”
இளைய யாதவர் “சத்வம், ரஜஸ், தமஸ் என்னும் மூன்று குணங்களில் விசைகொண்டது இரண்டாவதே. ரஜோகுணம் கொண்டவனே ராஜன் எனப்படுகிறான். அதுவே அனைத்துயிரையும் செலுத்தும் விசை. வெல்க, கொள்க, ஆள்க என அது ஆணையிடுகிறது. இங்கே செயலென்று சூழ்ந்திருப்பது அதுவே” என்றார்.
“அம்மூன்று இயல்புகளும் நிகர்கொண்ட நிலையே மெய்மை என்று அறிந்துள்ளேன். என்னுள் எழும் ரஜோகுணத்தைத்தான் என்றும் அஞ்சிக்கொண்டிருக்கிறேன். என்னுள் இருந்து சத்வகுணத்தை எழுப்பி கடந்துசெல்லவே முயல்கிறேன்” என்றார் பீஷ்மர்.
“காட்டெரியை அணைக்கும் வழி என்ன, காங்கேயரே?” என்றார் இளைய யாதவர். “காட்டெரியை உருவாக்குவது. உண்ண காடில்லாமலாகும்போது அதுவே அணையும்” என்றார் பீஷ்மர். “ரஜோகுணத்தை ரஜோகுணத்தால் வெல்லலாம். அதுவே உங்கள் வழி. வெல்வதற்கும் கொள்வதற்கும் ஆள்வதற்குமான விசையை அவற்றைக் கடப்பதற்கு என ஆக்கிக்கொள்க!”
“ஆம், அதுவே என் வழியாகுக!” என்றார் பீஷ்மர். “நன்று” என்று சொல்லி இளைய யாதவரும் எழுந்தார். அவர்கள் குடிலின் வாயில் நோக்கி நடந்தனர். முதற்காலையின் குளிர்காற்று எழுந்து அவர்களின் ஆடைகளை அசையச் செய்தது. விடிவெள்ளியை நோக்கியபடி சிலகணங்கள் பீஷ்மர் நின்றார். அவர் அருகே இளைய யாதவரும் நின்றார். “இன்னும் நெடுந்தொலைவு செல்லவேண்டியிருக்கிறது, இளைய யாதவரே” என்றார். “ஆம், வடக்குமுகம் கொள்ளவேண்டியிருக்கிறது” என்றார் இளைய யாதவர்.
அகம் அதிர்ந்து பீஷ்மர் திரும்பி நோக்கினார். இருவர் விழிகளும் தொட்டுக்கொண்டன. பீஷ்மர் புன்னகைத்தார். “ஸ்வேதவீரரே, மடியிலேறி விளையாட வரும் மைந்தர்களுக்கும் உங்களை கொல்லவருபவர்களுக்கும் வேறுபாடில்லை என்னும் உளநிலை போரில் உங்களிடம் அமையட்டும்” என்றார். பீஷ்மர் மேலும் புன்னகைத்த பின்னர் திரும்பி இருளில் நடந்து அகன்றார்.