அசடன் – மொழிபெயர்ப்பு – அருணாச்சலம் மகராஜன்

Ilya Glazunov வரைந்த தஸ்தயேவ்ஸ்கி ஓவியம்
Ilya Glazunov வரைந்த தஸ்தயேவ்ஸ்கி ஓவியம்

 

புத்தம் புதிய கலைகள் – பஞ்ச

பூதச் செயல்களின் நுட்பங்கள் கூறும,

மெத்த வளருது மேற்கே – அந்த

மேன்மைக் கலைகள் தமிழினில் இல்லை.

சொல்லவும் கூடுவ தில்லை – அவை

சொல்லுந் திறமை தமிழ்மொழிக் கில்லை

மெல்லத் தமிழினிச் சாகும் – அந்த

மேற்கு மொழிகள் புவிமிசை யோங்கும்

என்றந்தப் பேதை உரத்தான் – ஆ!

இந்த வசையெனக் கெய்திடலாமோ?

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் – கலைச்

செல்வங்கள் யாவுங் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்!

sketchdump___the_idiot_by_rabemar-d7a4fm7

என்ற பாரதியின் கூற்றை நடைமுறைப் படுத்துவதில் மொழிபெயர்ப்புகளின் பங்கு மகத்தானது. பாரதியின் கனவு அறிவியல் தமிழை நோக்கியதாக இருந்தாலும், அதை விட இலக்கியத்தில் அக்கனவு ஓரளவு மெய்ப்பட்டிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். அதற்காகவே நாம் நமது மொழிபெயர்ப்பாளர்களுக்கு நன்றி சொல்ல வேண்டும். கடந்த சில தினங்களாக ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரத்தில் உலாவிக் கொண்டிருக்கிறேன். தஸ்தாவெயஸ்கி விரிவான நில விவரணைகளைத் தராவிட்டாலும் தெருக்களையும், பங்களாக்களையும் கண் முன் கொண்டு வந்து விடுகிறார். அவர் அவ்வாறு விவரிப்பதை நமக்கும் கடத்தும் பெரும்பணியை அனாயாசமாகச் செய்துள்ளார் மொழிபெயர்த்த திருமதி. எம். ஏ. சுசீலா அவர்கள்.

 

மொழிபெயக்கப்படும் புனைவின் உணர்வு நிலை மற்றும் அது இயங்கும் பண்பாட்டுத் தளம் இரண்டும் மொழிபெயர்ப்பின் பெரும் சவால்கள் எனலாம். இவற்றை ஒழுங்காகக் கையாளாத மொழிபெயர்ப்புகள் பர பரவென்று நகரும் ஒரு அதிரடித் திரைப்படத்தை ஆவணப் படமாகப் பார்த்த உணர்வையே நல்கும்.

 

புனைவின் உணர்வு நிலை:

 

மொழிபெயர்ப்பதில், குறிப்பாக புனைவுகளை மொழிபெயர்ப்பதில் உள்ள மிகப் பெரிய சிக்கல் என்பது அந்த புனைவில் விரவி இருக்கும் உணர்வு நிலை. உண்மையில் மொழிபெயர்ப்பின் மிகப் பெரிய சவாலே இது தான் எனலாம். ஏனென்றால் வார்த்தைகளுக்குத் தகுந்த மாற்று வார்த்தைகளை இப்போது கூகுள் மொழிமாற்றியே கொடுத்து விடுகிறது. அப்படியென்றால் ஒரு புனைவை மொழிமாற்றி உதவியுடன் ஒரே இரவில் மாற்றி விடலாமே!! அதைச் சாத்தியமில்லாமல் ஆக்குவது புனைவின் உணர்வு நிலை தான். அதை உணர்ந்த ஒரு மானுடரே அதை பிறருக்கும் கடத்த இயலும். இந்த உணர்வு நிலை என்பது இரு வகைப்படும். ஒன்று உரையாடல்கள், உடல் மொழி போன்றவற்றில் வெளிப்படும் வெளிப்படையான, தெளிவான உணர்வு நிலை. கோபம், வருத்தம், மகிழ்ச்சி, இளிவரல் போன்றவை. அந்த உணர்வு நிலைக்கு உகந்த வார்த்தைகளைக் கண்டறிவதும், அதை மொழிவதிலும் மொழிபெயர்ப்பாளரின் பங்கு அளப்பரியது. ‘put it aside. Tell me what else’ என்ற ஒரு உரையாடலை என்ன நடந்தது என்பதை அறிய ஆர்வம் உள்ள ஒரு பாத்திரம் கூறுவதாகக் கொண்டால், ‘அதை விட்டுத்தள்ளுங்கள், மற்றவற்றைச் சொல்லுங்கள்’ எனலாம். அதே பாத்திரம் தான் மனதில் நினைத்த ஒன்றைப் பற்றி அறிய ஆவல் உந்த இந்த உரையாடலை மேற்கொள்வதாக இருந்தால், ‘அதைத் தூக்கி உடைப்பில் போடுங்கள், மேலே சொல்லுங்கள்’ என அவசரப்படுத்தும் தொனியில் பேசுவதாக மொழிபெயர்ப்பதே சரியாக இருக்கும்.

 

இரண்டாவது புனைவின் பொதுவான உணர்வு நிலை. அதை உணர அப்புனைவு முன்வைக்கும் தரிசனம், அதன் பேசுபொருள் குறித்த ஆழமான புரிதல், அப்புனைவின் மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய முழுமையான வாசிப்பு தேவை. இந்த புனைவு சார் உணர்வு நிலையே அப்புனைவின் மொழியையும், அப்புனைவில் பயின்று வரும் புனைவு எதார்த்தத்தையும் தீர்மானிக்கும். அவ்வாறு ஒன்றைக் கண்டடைவதே மொழிபெயர்ப்பின் அடுத்த முக்கியமான சவாலை வெல்வதற்குரிய வழி.

 

பண்பாட்டுத் தளம்:

 

இத்தகைய அயல் தேச புனைவுகளை மொழிபெயர்க்கையில் மொழிபெயர்ப்பாளர்களுக்கு முன்னுள்ள மிகப் பெரிய சவால் என்பது அக்கதை நிகழும் நிலம், கலாச்சாரம், கதை மாந்தர்கள் மற்றும் உணர்வு நிலைகள் அனைத்துமே அந்நியம் என்பதே. அந்த நிலத்துக்கும், பண்பாட்டுக்கும் இயைந்த ஒரு புனைவு மொழியே மூலத்தில் வழங்கப்பட்டிருக்கும். அதை இங்கே மாற்றுகையில் ‘அபஸ்வரமாக’ ஒலிக்கவே சாத்தியங்கள் அதிகம். மொழிபெயர்க்கப்படும் மொழியில் மொழிபெயர்ப்பாளர்களுக்கென்று தனித்த ஆளுமையும், ஆழ்ந்த வாசிப்பும் இருந்தால் ஒழிய இச்சவால் வெல்லப்படுதல் அரிது. இதை வெல்ல மொழிபெயர்ப்பும் அதற்கே உரிய மொழியைக் கண்டடைந்திருக்க வேண்டும். அது மூலத்துடன் பெரிதும் ஒத்துப் போவதாகவும் இருக்க வேண்டும். உதாணரத்துக்கு அசடனில் மிக விரிவான நீண்ட உரைகள் கதையாடல்களாக வருகின்றன. இன்னும் சொல்லப்போனால் ஒரு நாளின் நிகழ்வுகள் தான் அதன் முதல் பகுதி, கிட்டத்தட்ட 210 பக்கங்கள் நீளும். இத்தகைய தருணங்களில் மிகச் சரியாக கோர்வையான, சிக்கலற்ற நடையைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் அவற்றை அபாரமான வாசிப்பின்பத்துக்குரிய ஒன்றாக்கியிருக்கிறார் சுசீலா அவர்கள்.

 

அதே போன்று புனைவு மொழியாக ஒரு வித செவ்வியல் உரைநடைத் தமிழைத் தேர்ந்தெடுத்ததும் அவரது வாசிப்பனுவத்தைக் காட்டுகிறது. இந்த தமிழ் கதையின் காலத்தை இறந்த காலத்தில் நடந்த ஒன்றாக இயல்பாகவே வாசகருக்குக் கடத்தி விடுகிறது. அது மட்டுமலாமல் மூலத்தில் பயின்று வரும் கதையாடல்களை இயல்பாக வாசகரை ஏற்கவும் வைத்து விடுகிறது. இல்லாவிட்டால் ‘என் பிரியத்துக்குரிய சீமாட்டியே’ போன்ற விளிப்புகள் வாசகரை சிரிக்கவல்லவா வைத்திருக்கும். அத்தகைய ஒரு விளி வருவதற்கு முன்பே ‘மாண்புமிகு தளபதி’, ‘மேன்மைமிகு இளவரசர்’ போன்றவை வந்து விடுவதால் வாசகர் இதை அந்த புனைவின் மொழியாகக் கருதி விடுகிறார்கள். இந்த புனைவு மொழியும், புனைவின் யதார்த்தமும் சரியாக கண்டடையப்பட்டு கடத்தப்பட்டு விடுவதாலேயே அசடன் என்ற இப்பேரிலக்கியத்தின் தரிசனம் நமக்கு முழுமையாகக் கிடைக்கிறது. அதுவே மொழிபெயர்ப்பாளராக சுசீலா அவர்களின் வெற்றி எனலாம்.

susila

வாசிப்பின்பம்:

 

அசடன் கிட்டத்தட்ட 600 A4 அளவு பக்கங்கள் கொண்ட புனைவு. முழுக்க முழுக்க மானுட உள்ளத்தின் அனைத்துப் பக்கங்களிலும் ஒளி பாய்ச்சிக் கண்டடையும் முயற்சி. முன்பே கூறியது போல பக்கங்களுக்கு நீளும் பெரும் உரையாடல்கள் கொண்ட படைப்பு இது. சரளமான மொழிதலும், இயல்பான வார்த்தைத் தேர்வுகளும் இல்லாமலிருந்தால் இதை வாசித்திருக்கவே முடியாது. தங்கு தடையின்றி ஓடும் மொழியும், விரிவான சொல் தொகையும் இந்நாவலின் வாசிப்பின்பத்தை நல்கின எனத் தயங்காமல் சொல்லலாம். இவை மட்டும் இல்லாமலிருந்தால் இதைப் படிக்க மாதக்கணக்கில் கூட ஆகியிருக்கலாம்.

 

மிக எளிதாக நாம் நம் வாழ்வில் கண்ட மாந்தர்கள், ஏன் நம்மையே கூட இந்நாவலின் ஏதேனும் ஒரு பாத்திரத்தோடு அடையாளப்படுத்தி பார்க்கலாம். அதன் மூலமாக ஒரு விரிவான, புது நிலத்தில் வாழ்ந்த ஒரு அனுபவத்தை அடையலாம். ஒரே ஒரு வாழ்வு மட்டுமே விதிக்கப்பட்ட இந்த பிறவியின் அனுபவத்தை பன்மடங்காக்குவதே இலக்கியத்தின் முக்கியமான பங்களிப்பு என எழுத்தாளர் ஜெயமோகன் கூறுவது இதைத் தான். இத்தகைய அனுபவங்கள் ஆழ்மனதில் ஒரு அசைவை, அறிதலை உருவாக்கும் என்றால், அத்தகைய அறிதல்களை வாசகர் தாமே உணர்ந்து கொள்ள வைப்பவை என நாவலில் இருந்து வாசகர் கண்டடையும் மேற்கோள் சொற்றொடர்களைச் சொல்லலாம். வெண்முரசு இத்தகைய பல்லாயிரம் சொற்றொடர்களால் ஆன ஒரு பெரும்புனைவு. அசடனிலும் அத்தகைய மேற்கோள்கள் ஆகக்கூடிய பல சொற்றொடர்களை உணர்வுப் பூர்வமாக மொழிபெயர்த்துத் தந்துள்ளார் சுசீலா அவர்கள். எனக்கு அவ்வாறு பிடித்த ஒன்று என்றால் (பலவற்றில் மிகப் பிடித்தது) ‘குழந்தைகள் இருந்தால் ஆன்மாவின் காயங்கள் ஆறும்’.

 

மொழிமாற்றம் என்னும் புதுப்புனைவு:

 

மொழிபெயர்ப்பாளர் முழுமையான வாசகராக இருக்க வேண்டும் என்பது எந்த அளவு முக்கியமோ, மொழிபெயர்ப்பாளர் கறாராக மூலத்தோடு பொருந்தி இருக்கவேண்டும் என்பதும் முக்கியம். வாசகராக ஒரு புனைவை அனுபவித்து அதை அப்படியே மொழிபெயர்த்தால் புது புனைவு தான் கிடைக்கும். மூலம் எங்கோ நின்று கொண்டிருக்கும். எனவே மொழிபெயர்ப்பாளர் மூலத்தை சொல் சொல்லாக மொழிபெயர்த்தால் மட்டுமே அது மூலத்துக்கு நியாயம் செய்ததாக ஆகும். முன்பே குறிப்பிட்டது போல், அதன் உணர்வு நிலையை ஒரு வாசகராக உணர்ந்து, சொல் சொல்லாக மொழிபெயர்க்கப்படுகையிலேயே சிறந்த மொழிபெயர்ப்பு கைகூடும். அசடன் நாவலின் மற்றொரு சவால் என்பது அதன் மூல மொழியான ரஷ்ய மொழியில் இருந்து அது மொழிபெயர்க்கப்படவில்லை. ஆங்கிலத்தில் இருந்து தான் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அப்படியென்றால் இந்த மூலத்தோடு இயைந்து நிற்றல் என்ற பிரச்சனை இன்னும் பெரிதாகிறது. இச்சாவாலை சுசீலா அவர்கள் இந்த மொழிபெயர்ப்புக்காக இரு ஆங்கில மூலங்களைப் பயன்படுத்தியதன் மூலம் தாண்டி வந்திருக்கிறார். மிகவும் உழைப்பு கோரக் கூடிய பணி.

 

அசடன் என்னும் இப்பெருநாவலைத் தமிழுக்குத் தந்தமைக்கு சுசீலா அம்மாவுக்கு என் நன்றிகள்.

 

 

அசடன் வாங்க

 

எம்.ஏ.சுசீலாவுக்கு விழா

முந்தைய கட்டுரைநாயக்கர் கலை -கடிதம்
அடுத்த கட்டுரைசடக்கு – ஒரு மகத்தான முயற்சி