பகுதி – 1
‘புனைவுத்தருணங்களைக் குறுக்கி உணர்ச்சிகளின் உச்சநிலைகள் மோதிக்கொள்ளும் கணங்களை மட்டும் பக்கம்பக்கமாக விரித்துப்பரப்பியிருக்கிறார் தஸ்தயேவ்ஸ்கி. ஒரு ஊசிமுனையை மைதானமாக ஆக்குவதுபோல…’ என அசடன் நாவலைப் பற்றி குறிப்பிடுகிறார் ஜெ. மிக மிகச் சரியான கூற்று. பிற எந்த நாவல்களை விடவும் அசடனை மிக மிக வேறுபடுத்திக் காட்டுவது என்பது இந்த ஊசி முனையில் விரவும் மைதானம் தான். பொதுவாக ஒரு நாவலில் வரும் பாத்திரங்களின் வளர்சிதை மாற்றங்களே அந்நாவலின் மையத் தரிசனத்தையும், நாவலின் வடிவையும், ஒருமையையும் தீர்மானிக்கும். எந்த நாவலை எடுத்துக் கொண்டாலும் வளரும் பாத்திரங்கள், மாறாத நிலையான பாத்திரங்கள் (இவை பெரும்பாலும் உப பாத்திரங்கள்) என இரண்டுமே இருக்கும். அதன் முதன்மையான கதாபாத்திரங்கள் அனைத்துமே வளர்ந்து மாறுபவையே. அவை எதிர்கொள்ளும் சிக்கல்கள், அடையும் அனுபவங்கள், அறியும் தரிசனங்கள், இவற்றினூடான ஒரு நிகர் வாழ்வு இவையே வாசகர் பெறுபவையாக இருக்கும். இதற்கு நேர் மாறான ஒரு அமைப்பையே அசடன் கொண்டுள்ளது. இதன் பாத்திரங்கள் எதுவும் மாறுவதில்லை, சிதைந்து வளர்வதில்லை. அறிமுகமாகையிலேயே முழுமையானவனே இதன் நாயகன் மிஷ்கின். ரோகொசின், நாஸ்தாசியா, அஃகலெயா, எபான்சின் சீமாட்டி, ஹிப்போலித் என பிற முதன்மை பாத்திரங்களும் அவ்வாறே.
இவர்களுக்கிடையே நிகழும் முரண்பாடுகளும் மிகத் தீவிரமானவை என சாமானிய தளத்தில் கூற இயலாது. இன்னும் குறிப்பாக இதன் மைய பெண் கதாபாத்திரங்களின் தன்னிச்சையான, கணிக்க இயலாத, உணர்ச்சிவசப்பட்ட முடிவுகளை புரிந்து கொள்வதும் சற்றே சிக்கலானதே. உண்மையில் இவற்றை உணர்ந்து கொள்ள இந்த நாவல் இயங்கும் உச்ச நிலை உணர்வுகளின் தளத்தில் வாசகரும் இயங்கியாக வேண்டும். இப்புடவியின் ஆதார விசைகளில் மிக மிக வலுவான விசை என்பது அணுக்கருவுக்குள் நேர்மின் துகளுக்கும்(Protons), மின்நடுநிலை துகளுக்கும்(Neutron) இடையேயான ஈர்ப்பு விசையே. ஆனால் இந்த விசையை நாம் உணர இயலாது. ஏனென்றால் இது மிகமிகக் குறுகிய வெளியில் (1 Femto Meter – 0.000000000000001 மீட்டர்கள்) செயல்படுவது. இந்த நாவலும் அத்தகைய மிக மிகக் குறுகிய உணர்வு உச்சங்களில் நின்று, அதனூடாக பயணம் செய்தால் மட்டுமே அடையும் அனுபவங்களை நல்குகிறது. அணுவுக்குள் ஒரு அண்டத்தை உருவாக்கியது போன்ற ஒரு நிகழ்வு இந்நாவல். அவ்வகையில் இது ஒரு இலக்கிய சாதனை என்றே சொல்லலாம். எனவே தான் 1868 ஆம் ஆண்டு எழுதப்பட்ட இந்த நாவல் இன்றளவும் வாசிக்கபடுகிறது. இது விவாதிக்கும் உணர்வு உச்சங்கள் இன்றைக்கும் பொருந்துபவையே.
தஸ்தயேவ்ஸ்கியே கூறுவது போல இந்நாவலில் ஒரு முழுமையான, நேர்நிலையான, அபூர்வமான அழகுடைய ஒரு ஆன்மாவை உருவாக்கியிருக்கிறார். இதன் நாயகன் இளவரசன் மிஷ்கின் தன்னகங்காரம் இல்லாத ஒருவன். தன்னைப் போலவே அருகாமையில் இருக்கும் அனைத்து மனிதர்களையும் நேசிப்பவன். அப்படிப்பட்டவன் ஐரோப்பாவின் உயரமான ஆல்ப்ஸ் மலைகளில் இருந்து மக்கள் நெருக்கம் மிகுந்த சமவெளியான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கிற்கு வருகிறான். இம்மக்கள் திரளில், அவனை சந்திப்பவர்களிடத்தில் அவன் ஏற்படுத்தும் தாக்கம் என்ன, இந்த காரியவாத உலகத்தில் வாழ்வதற்குரிய அடிப்படை தேவைகளன்றி வேறெதையும் வேண்டாத இந்த அபூர்வ மானுடன் அடைவது என்ன என்பதையே விரிவாக ஆராய்கிறார் தஸ்தயேவ்ஸ்கி.
நாவல் முழுக்க மிக நீண்ட உரையாடல்களால் ஆனது. நான்கு பகுதிகள் கொண்ட இந்நாவலின் ஒவ்வொரு பகுதியிலும் ஏதேனும் ஒரு விருந்து அல்லது சந்திப்பில் நிகழும் உரையாடல்கள் வழியாகவே நாவல் நகர்கிறது. இவ்வுரையாடல்களே இதன் வரலாற்று, தத்துவ தளங்களை நிறுவுகின்றன. அவற்றை எடுத்து விட்டால், இதன் கதைச் சுருக்கம் என்பது சில வலைப்பதிவுகளிலேயே அடங்கிவிடக் கூடியது தான். திருமதி M. A. சுசீலா அவர்களது வலைதளத்தில் அசடனைப் பற்றிய சில தொடர்பதிவுகளைத் தந்திருக்கிறார். அவற்றை வாசித்த பின் இந்நாவலை வாசிப்பதால் நாவல் இன்னும் துலங்குமே அன்றி, வாசிப்பின்பம் குறைவதில்லை. செவ்வியல் ஆக்கங்களுக்கேயான தனித்தன்மை இது. இதன் நான்காவது பகுதியின் இறுதியில், அக்கால ரஷ்யாவின் உயர் குடிகள் (கனவான்கள், தளபதிகள், இளவரசர்கள், சீமாட்டிகள், இளவரசிகள்) நிறைந்த ஒரு விருந்தில் தன்னை மீறிய நிலையில் மிஷ்கின் ஆற்றும் கத்தோலிக்க மதம், மரபான அனைத்தையும் மறுதலிக்கும் நிகிலிசம், அவற்றுக்கு மாற்றாக அமையக் கூடிய ருஷ்ய மரபான கிருத்தவம், அதை மீட்டெடுத்து பரப்பச் சாத்தியமான இந்த உயர் வர்க்கம், அவர்கள் ஆற்ற வேண்டிய பங்கு பற்றிய ஒரு நீண்ட உரை மிஷ்கினை, அவனது எண்ண ஓட்டங்களை, நாவலின் முக்கிய பாத்திரங்களுடனான அவனது உறவு போன்றவற்றை தெளிவாகப் புரிந்து கொள்ள உதவும்.
மிஷ்கினை பார்ப்பவர்கள் அனைவருமே உடனடியாக அவன் பால் ஈர்க்கப்படுகிறார்கள். அவனிடம் தங்கள் கீழ்மைகளைச் சொல்லி, அதனூடாக தங்கள் ஆன்மாவில் படிந்த கறைகளை நீக்கி விட வேண்டும் என முயல்கிறார்கள். அவனும் தான் கண்டடைந்த, மானுட உச்சம் என உணர்ந்த கருணை என்ற ஒன்றாலேயே அவர்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்தி விடலாம் என எண்ணுகிறான். அடிப்படையில் அவன் கருணை வாயிலாக மானுடர்கள் மீட்சி அடைவார்கள் என நம்புகிறான். அதன் அடிப்படையில் அவனுக்கு இவ்வுலகத்தைப் பற்றிய ஒரு கனவும் இருக்கிறது. அக்கனவை, தன்னைப் போலவே தன் அயலாரையும் நேசிக்கும் மானுடர்கள் நிறைந்த லட்சிய உலகை உருவாக்குவதில் தானும், ரஷ்யாவும் கணிசமான பங்களிப்பை நல்க வேண்டும் என்பதே அவன் லட்சியம். மிகச் சரியாக நாவலிலேயே அஃகலெயா அவனது தரிசனங்கள் என அழகுணர்ச்சி பற்றிய அவனது பார்வை, ரஷ்யாவின் தற்கால நிலை மற்றும் அதன் மகத்துவமான இறந்தகாலமும் அதை மீட்பதால் உலகிற்கு அது எதிகாலத்தில் அளிக்க இருக்கும் மீட்சியைக் குறித்த பார்வை மற்றும் மரணம் குறித்த அவனது பார்வை என மூன்றாக வகுக்கிறாள். இந்த பார்வைகளுடன் மோதும், முரண்படும், உடன்படும் மானுட உணர்வுகளின் நீண்ட பதிவாக இந்நாவல் விரிகிறது.
மிஷ்கின் நாஸ்தாசியாவின் பால் அவளது புனிதமான அழகால் ஈர்க்கப்படுகிறான். அதைப் போன்ற புதிரான அழகுடையவள் என அஃகலெயாவைக் கூறுகிறான் அவன். அழகைக் குறித்த அசடனது பார்வை கிரேக்கத்தின் பார்வையே. அத்தனை கோர ட்ராய் யுத்தத்துக்குக் காரணமான, தன்னை விட்டு விட்டு வேறு ஒருவனுடன் உடன்போகிய தன் முன்னாள் மனைவியான ஹெலனை, தன் ஆத்திரம் தீர தானே கொன்றாக வேண்டும் என்ற வெறியுடன், ஓங்கிய வாளுடன் வரும் மெனலாவ்ஸ் முன், தன் ஆடையை நழுவவிடும் ஹெலனின் அழகு அவனது வாளை மழுங்கடித்த கதையை ஒடிசி சொல்கிறதல்லவா!! கிட்டத்தட்ட அதே போன்றதொரு நிகழ்வு அசடனிலும் வருகிறது. மிஷ்கினை அவனுக்கு நிச்சயம் செய்யப்பட்டிருந்த அஃகலேயாவுடனான திருமணத்தில் இருந்து பறித்தெடுத்து, திருமணம் செய்து கொள்ளவிருக்கும் நாஸ்தாசியாவின் மீது பெருங்கோபத்தில் இருக்கும் பாவ்லோவ்ஸ்க்கின் மக்கள் அவளது திருமண நாளன்று அவளது வீட்டின் முன் கூடியிருக்கிறார்கள். அவளை நிந்தித்துக் கொண்டும் இருக்கிறார்கள். அம்மக்கள் கூட்டத்தின் முன், தன் திருமண உடையில், சர்வலங்கார பூஷிதையாக வீட்டில் இருந்து வெளிவருகிறாள் நாஸ்தாசியா. அதுவரை கொந்தளித்துக் கொண்டிருந்த கூட்டம் அவளது அழகில் அமைதியாகிறது. என்ன ஒரு அழகு என பெருமூச்சிடுகிறது. அவளது கீழ்மைகளை நொடியில் மறக்கிறார்கள் மக்கள்.
இதில் ரஷ்யாவைக் குறித்த பார்வை என்பது உண்மையில் ஆன்மீகத்தைக் குறித்த ஒன்றே. அக்காலத்தில் ரஷ்யாவில் வேகமாகப் பரவி வந்த கத்தோலிக்க மதமாற்றத்திற்கும், சமயம் என்ற ஒன்றையே மறுதலிக்கும், வாழ்வின் பொருள் என ஒன்று இல்லை எனக் காணும் நிகிலிசத்திற்கும் மாற்றாக ரஷ்யாவின் மரபு வழி திருச்சபையை (Russian Orthodox Church) முன்வைக்கிறான் மிஷ்கின். வதைக்கப்பட்ட, சிதைந்து போய் உருக்குலைக்கப்பட்ட, இழிவுபடுத்தப்பட்ட ஒரு கிருஸ்துவை முன்வைக்கும் கத்தோலிக்க திருச்சபைக்கு நேர் எதிராக, ரஷ்ய மரபுசார் கிருத்தவம் பாதுகாத்து வைத்திருக்கும் ஒளி மயமான ஒரு கிருஸ்துவை முன்வைத்து, ரஷ்யர்களின் ஆன்மீக தாகத்தை தீர்த்து, அவர்கள் இழந்து போன வேர்களை மீட்டெடுப்பதன் மூலம் மீட்சியை அளிக்க வேண்டும் என அவன் அறைகூவுகிறான். அதை உலகெங்கும் ரஷ்யா எடுத்துச் செல்ல வேண்டும் என விரும்புகிறான். அவனளவில் அப்படிப்பட்ட ஒரு மீட்சியை அவனைச் சார்ந்தவர்களுக்கு அளிக்க வேண்டுமெனவே அவன் விரும்புகிறான்.
ஒரு வகையில் அவன் காதலிப்பதாகச் சொல்லும் இரு பெண்களும் இந்த இரு எதிர் குணங்களின் உருவகமாகக் கொள்ளலாம். நாஸ்தாசியா வாழ்வின் மீது வெறுப்புற்று இருப்பவள். அனைத்தையும் மறுதலித்து, ஒரு வித கலகம் செய்பவளாக, மரபென்று அமைந்த அனைத்தையும் கவிழ்த்துப் போட்டு கேலி செய்பவளாக, நிகிலிசத்தின் பிரதிநிதியாக இருக்கிறாள். மாறாக அஃகலெயா ஒளியின் உருவாக, கன்னி மேரியுடன் ஒப்பிடத்தகுந்தவளாகச் சித்தரிக்கப்படுகிறாள். ஆயினும் நாஸ்தாசியாவிடம் மிஷ்கின் காணும் அந்த தூய்மையை, தான் கொண்ட தன்னகங்காரத்தால் காண இயலாத அவளைக் கண்டு மிஷ்கின் திகைக்கிறான். எப்படி அவளால் அப்படி இருக்க இயல்கிறது என துயருறுகிறான். அந்த சிறு மாற்றம், அவளது தன்னகங்காரம் அது மட்டும் இல்லாமல் இருந்தால் அவளுக்கும், மிஷ்கினுக்கும் வேறுபாடு இல்லாது போயிருக்கும். அந்த சிறு தன்முனைப்பு, தான் செய்வதில் இருக்கும் சரியைக் குறித்த பார்வை, தனக்கு வரவேண்டியதன் தூய்மையைப் பற்றிய அக்கறை இவை அவள் பால் மிஷ்கினுக்குக் கூட சிறு விலகலை ஏற்படுத்தியிருக்கும். அவ்வகையில் இவள் கத்தோலிக்கத்தின் பிரதிநிதியாக வருகிறாள். இறுதியில் கத்தோலிக்கத் திருச்சபையில் சென்றும் சேர்கிறாள். இவ்விரண்டு பெண்களிடமும் அவன் தோற்கிறான். அதையே அவன் நாஸ்தாசியாவின் மரணத்தில் உறுதிப் படுத்திக் கொள்கிறான். அவளை மீட்க அவனால் இயலவில்லை. அஃகலெயாவை கத்தோலிக்கத்தை நோக்கிப் போகாமல் தடுக்க அவனால் இயலவில்லை. அது உண்மையில் அவன் கண்டடைந்த, அவன் முன்வைத்த தரிசனத்தின், தத்துவத்தின் தோல்வி. எனவே தான் அவன் மீளவியலாத உளச் சோர்வில் வீழ்கிறான். நாவலின் இடையில் ரோகொசின் வீட்டில் அவன் காணும் ஹோல்பெயினின் சிலுவையில் இருந்து இறக்கப்பட்ட ஏசுவின் படம் அவனுள் ஏற்படுத்தும் அதிர்வுகளை நாவலின் இறுதியில் அவன் முழுமையாக உணர்கிறான். அத்தனை வலியும், வேதனையும் அடைந்த ஒருவர் எப்படி மீண்டெழ இயலும் என்றே வினவுகிறான்.
அடிப்படையில் மிஷ்கின் தன்னகங்காரம் அற்றவன். எனவே காம விழைவும் அற்றவன். அவன் தான் ஆற்ற வேண்டியவை என்பதைப் பற்றிய கருத்துக்கள் மட்டுமே கொண்டவன். அதைச் செயல்படுத்தத் தேவையான விழைவுகள் அற்றவன். செயல்படுத்தியே ஆக வேண்டும் என எந்த தன்முனைப்பும் அற்றவன். அவனுடைய யதாத்தம் அல்லது அவனது உலகு அவன் இணைய வந்த உலகோடு, அதன் யதார்த்தத்தோடு இயையவில்லை. அவன் அந்த உலகிலேயே இல்லை. அதற்கு வெளியில் இருந்து முயல்கிறான். எனவே தோற்கிறான். மீள்வதில்லை. இந்த இடத்தில் எனக்கு வெண்முரசின் கிருஷ்ணன் நினைவுக்கு வருகிறார். தன்னுடைய தத்துவங்கள், அறிதல்கள், செயல்கள் அனைத்தும் பொருளற்றுப் போன ஒரு தருணத்தில் அவரும் இத்தகையதொரு உளச் சோர்வில் வீழ்கிறார். இருப்பினும் அவர் இவ்வுலகியலில் இருந்தவர், அதற்கு அப்பாலும் சென்று நோக்கியவர். அவரிடம் செயலாற்ற வேண்டும் என்ற விழைவு இருந்தது, அதனுடன் இணைந்த தன்முனைப்பும் இருந்தது. அந்த பன்னிரு வருட ஜேஷ்டா தேவியின் ஆளுமையில் இருந்த காலத்தில் அவர் அடைந்த ஒன்று செயலிலிருந்து தன்முனைப்பை அகற்றியதே. அந்த தன்முனைப்பு முழுமையாக அகன்ற ஒரு தருணத்தில், தான் ஆற்ற வேண்டிய கர்மங்களை, அவற்றின் தேவையை உணர்ந்த தருணத்தில் அவர் மீள்கிறார். அதற்கு மானுடம் என்பதைத் தாண்டிய இயற்கையை, பிரபஞ்சத்தை, அதன் விதிகளை, வேண்டுதல் வேண்டாமை இலாத ஒரு பிரம்மத்தை பற்றிய ஒரு பரந்து விரிந்த தத்துவ வெளி கொண்ட கூர்மை அவருள் நிகழ்ந்ததே முக்கிய காரணம்.
[பகுதி – 2]
மிஷ்கினின் மரணம் குறித்த பார்வை நாவலின் துவக்கத்திலேயே வந்துவிடுகிறது. அது தஸ்தயேவ்ஸ்கியின் அனுபவமே. இள வயதில் வெற்றிகரமான முதல் நாவலுக்குப் (Poor Folk) பிறகு, அடுத்தடுத்த முயற்சிகளின் வரவேற்பின்மையால் துவண்டு, குறிக்கோள் இன்றி இருந்த அவர் ‘பெட்ராஷேவ்ஸ்கி வட்டம்’ என்னும் முற்போக்கு கொள்கைகள் கொண்ட ஒரு இலக்கிய வட்டத்தில் இணைந்தார். இவ்வட்டத்தின் முதன்மை குறிக்கோள் தடைசெய்யப்பட்ட மேற்குலகின்(ஐரோப்பா) தத்துவங்கள் மற்றும் இலக்கியங்கள் குறித்த வாசிப்பும், விவாதங்களுமே. (1848 ல் ஐரோப்பா முழுவதும் பல நாடுகளில் நிகழ்ந்த ஒரு ‘மானுட வசந்தத்தின்’ – புரட்சியின் – கீற்றுகள் தங்கள் நாட்டில் வந்துவிடக் கூடாது என்பதற்காக ஐரோப்பிய தத்துவங்கள், இலக்கியங்கள் ரஷ்யாவில் தடை செய்யப்பட்டிருந்தன. மேலும் ரஷ்யா தன்னை கீழை மரபு சார் கிருத்தவ நாடாக,கிரேக்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொண்ட நாடு. எனவே தான் இதர ஐரோப்பிய நாடுகள் மேற்கு எனப்பட்டன.) இக்குழும நண்பர்கள் பலருக்கு ரஷ்யாவின் ‘ஸார்’ அரச எதிர்ப்பும், ரஷ்யாவின் பண்ணை அடிமைமுறை (ஆண்டான்-அடிமை போன்ற ஒன்று. அமெரிக்காவின் பண்ணை கறுப்பின அடிமை முறை அளவு மோசமில்லாவிட்டாலும், மனித சுரண்டலை சட்டப்பூர்வமாக செய்த ஒரு முறை) ஒழிப்பும் இலட்சியங்களாகவும் இருந்தன. (மிஷ்கின் பேசும் பண்ணை அடிமைமுறை ஒழிப்பின் வேர் இங்கிருந்து தான்.) எனவே இயல்பாகவே இக்குழும நண்பர்கள் அரசால் கைது செய்யப்பட்டு மரண தண்டனையும் பெற்றனர். தனது மரணத்தை மூன்றடி தொலைவில் காண நேர்ந்த அனுபவம் தஸ்தயேவ்ஸ்கிக்கு வாய்த்தது. உண்மையில் அந்த மரண தண்டனை ஒரு பயமுறுத்தலுக்காக அரசரால் வழங்கப்பட்ட ஒன்று. அதிலிருந்து கட்டக் கடைசியாக அத்தண்டனை நிறுத்தப்பட்டு, அவர் சைபீரியாவுக்கு சிறை தண்டனைக்காக அனுப்பப்பட்டார். இச்சிறையில் அவருடன் கூடவே பைபிளின் புதிய ஏற்பாடு வாயிலாக இயேசு கிறிஸ்துவும் இருந்தார். இக்காலகட்டத்தில் அவருடைய வலிப்பு நோயும் சற்று அதீதத் தொல்லையை அவருக்கு தந்தது. உண்மையில் சைபீரிய சிறையும், அதைத் தொடர்ந்த ராணுவப் பணி காலகட்டமும் அவரது நாற்றங்கால் எனலாம். இக்காலகட்டங்களில் அவரின் தேடல்கள் மிக விரிவாக அவரது நாவல்களில் பதிவாகி உள்ளன. அவரது நிலவறைக் குறிப்புகள் முதற்கொண்டு அவரது இருத்தலியல், வாழ்வின் ஒளிமிக்க பகுதிகளுக்கும், இருண்மை நிறைந்த பகுதிகளுக்குமான அலைதல், மானுடத்தை வரையறுப்பதற்கான தேடல், மீட்சிக்கான ஏக்கம் போன்றவை இக்கால கட்டத்திலே தான் வேர்விட்டிருக்கின்றன. தனது சகோதரன் உதவியால் அவர் பல புத்தகங்களை சிறைக்குத் தருவித்து வாசித்தார், தத்துவ நூல்கள் உட்பட. குறிப்பாக ஜெர்மானிய தத்துவ ஞானியான ஹெகலின் ‘The philosophy of history’ நூலை அனுப்பித்தரும் படியும், தனது முழு எதிர்காலமும் அதனோடு கட்டுண்டு இருப்பதாகவும் அவரது சகோதரருக்கு எழுதியுள்ளார். குற்றமும் தண்டனையின் நாயகன் ரஸ்கோல்நிகோவிடம் இருக்கும் ஹெகலின் பாதிப்புகள் பற்றி எழுதப்பட்டுள்ளன.
மேலைத் தத்துவத்தில் ஹெகலின் முக்கியமான பங்களிப்பு என்பது முரணியக்கம் (Dialectics) மற்றும் அதன் நீட்சியான பூரணம் (Absolute). பூரணம் என்பதை ஒத்திசைந்த, சமன்வயமுள்ள, எதையும் சாராத விடுதலையில் இருக்கும் நிலை என வரையறுக்கலாம். ஹெகல் இதை தர்க்கத்தின், அறிதலின் வழிமுறையாக, ஒரு கருவியாக முன்வைத்தார். ஒவ்வொன்றையும் அதன் பூரணத்தை நோக்கி சிந்தப்பதன் மூலம் முழுமையாக அறிந்துகொள்ளலாம் என வகுத்தார். தனது தத்துவ நோக்குகளை இந்த பூரணம் என்ற கருதுகோள் கொண்டே விவரித்தார். இதை சுருக்கமாக பின்வருமாறு கூறலாம். (இது முழுமையான விளக்கம் அல்ல. ஒரு சிறு அறிமுகம் மட்டுமே.) கருத்துக்கள் / எண்ணங்கள் / அறிதல்கள் / இருப்புகள் என எந்த ஒன்றும் மூன்று கணங்களை கொண்டுள்ளன. முதல் கணம் என்பது அது நிகழும் கணம் அல்லது அதை அறியும் கணம். இக்கணத்தில் அதைக் குறித்த ஒரு தெளிவான விளக்கமும், அதைத் தொடர்ந்த அதைப் பற்றிய ஒரு புரிதலும் அமையும். இதன் தொடர்ச்சியான இரண்டாவது கணத்தில் அதன் போதாமைகள், ஒற்றைப்படைத் தன்மை அல்லது அதன் உள்ளார்ந்த முரண்கள் எழுந்து வரும். இவை இயல்பாக அதன் எதிர் நிலை நோக்கிய அறிதலை நிகழ்த்தும். இந்த எதிர்நிலை என்பது முதல் கணத்தின் அறிதலை மறுதலிக்கும் அதே வேளையில், அதன் எல்லைகளை வரையறுக்கவும் செய்வதால் ஒரே நேரத்தில் அதை மறுப்பதாகவும், அதை நிலைநிறுத்தவும் செய்யும். எனவே இது முரண் என்றழைக்கப்படுகிறது. இதன் அடுத்த நிலை என்பது இந்த இரண்டாம் கண அறிதலின் முரண் நிலை. அறிதல் என்பது இத்தகைய முரண் நிலைகளின் இடையறாத ஊசலாட்டம். ஒவ்வொரு முரணும் ஒரு சிறு அளவு அறிதலை முன்னகர்த்தும் அதே வேளையில், அதன் நீண்ட பின்தொடர்ச்சியின் அறிதல்களையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த தொடர் முரண் இயக்கத்தின் இறுதியாக அமைவதே இந்த அறிதல்களின் தொகுப்பான பூரணம். இந்த பூரணம் என்பது ஆதி கணத்தின் அறிதலையும், அதிலிருந்து கிளைத்த முரண்களையும் உள்ளடக்கியதால் இதுவே முழு உண்மையாக இருக்க இயலும் என்றார் ஹெகல்.
ஹெகலின் இந்த முரணியக்கம் என்ற கருவியை நாம் இதன் கதாபாத்திரங்களை அணுகி அறிய பயன்படுத்தலாம். நாவலின் அனைவருமே தங்களுக்குள் இருந்து எழுந்து வரும் உள்ளார்ந்த முரண்களால் அலைகழிக்கப்படுகிறார்கள். அவர்களின் இறுதி விடுதலையை அடையவே போராடுகிறார்கள். குறிப்பாக நாஸ்தாசியா. ஒரு வகையில் பார்த்தால் அவள், மிஷ்கின், ரோகோசின் என்ற மூவரும் மேற்கூறிய ஹெகலின் முரணியக்கம் என்பதற்கு மிகச் சிறந்த காவிய எடுத்துக்காட்டுகளாக அமைகின்றனர். நாஸ்தாசியா தான் சுதந்திரமானவள் என்றே ரோகொசினிடம் கூறுகிறாள். ஆயினும் அந்த சுதந்திரத்தை, தன் மீட்பை அடைய அவள் தனக்குள் இருந்த மேன்மை, கீழ்மை இரண்டின் வழியாகவும் பயணிக்கிறாள். இரண்டுக்கும் இடையேயான ஊசலாட்டங்களாகவே அவளது செயல்கள், பேச்சுகள் அமைகின்றன. தான் ஒரு சபிக்கப்பட்டவள், கீழ்மையானவள் என எண்ணுகிறாள். தனக்கு மீட்சி, விடுதலை என்பது மரணம் மட்டுமே எனக் கருதுகிறாள். அப்படி இல்லை, அவள் ஒரு நரகத்தில் இருந்து புனிதமாக வெளிவந்தவள் என மிஷ்கின் அவள் பிறந்தநாள் விழாவில் கூறும் இடத்தில், அவன்பால் வருகிறாள். அவளது மேன்மைகளை அவன் மதிக்கிறான் என்ற எண்ணத்தில் அவன்பால் வரும் அவள், அவனது கருணையே அதற்கு காரணம் என்று உணரும் கணத்தில் அவனுடைய முரணான ரோகொசின்னுடன் செல்கிறாள். நாவலில் அவள் மிஷ்கின், ரோகொசின் இருவருக்கும் இடையேயும், தனக்குள்ளேயும் முரண்பட்டு ஊசலாடிக்கொண்டே இருக்கிறாள். தன்னுடைய கீழ்மைகளால், தான் புனிதமான மிஷ்கினுக்கு தகுதியானவள் இல்லை என எண்ணும் அவள், மிஷ்கினை தூய்மையானவள் என தான் கருதும் அஃகலேயாவுக்கு திருமணம் செய்து வைப்பதன் மூலம் மீட்படையலாம் என அதற்கு முயல்கிறாள். ஆயினும் அது கைகூடி வரும் நேரத்தில் அவளது தன்முனைப்பு, சுய கௌரவம் அவளை அத்திருமணத்தைத் தடுத்து நிறுத்த வைக்கிறது. மீண்டும் தன் கீழ்மையின் எல்லையைக் கண்டவள் தனது மீட்சி மரணம் மட்டுமே என்பதை உணர்கிறாள்.
நாஸ்தாசியாவின் கதையை அறியும் மிஷ்கின் அவளைத் தன் கருணையால் மீட்டெடுக்கலாம் என எண்ணுகிறான். முன்பே நாஸ்தாசியாவைப் போன்றே ஒரு பிரெஞ்சுக்காரனால் ஏமாற்றப்பட்ட மேரி என்ற பெண்ணிற்கு இத்தகைய ஒரு மீட்பை அவனும், அவனுடன் இருந்த குழந்தைகளும் சுவிட்சர்லாந்தில் அளித்திருக்கின்றனர். இப்பெண்ணும் தன் மீதே வெறுப்பு கொண்டு, தன்னைத் தானே மன்னித்துக் கொள்ள இயலாதவளாக, சுய வதை செய்து கொண்டிருந்த ஒருத்தி தான். மிஷ்கினால் நல்வழிப்படுத்தப்பட்ட குழந்தைகள் அவளது ஆன்மாவின் காயங்களை ஆற்றி, மன்னிப்பு என்னும் மேன்மையை அவளிடம் கொண்டு சேர்க்கிறார்கள். மரணிக்கும் போது மனநிறைவுடன் செல்கிறாள் அவள். அவளைப் பற்றிய அனுபவம் இருந்தமையாலேயே மிஷ்கின் மிகச் சரியாக அவள் ரோகொசினுடன் சென்றால் அவனால் கொல்லப்படுவாள் என்கிறான். தனது கருணையாலும், அவளை புரிந்து கொள்ளும் செயலாலும் அவளை வாழ்விற்கு மீட்கலாம் என நம்புகிறான்.
நாவலில் மிகக் குறைவாக பேசும் ஒரு பாத்திரம் என்றால் அது ரோகொசின் தான். உண்மையில் இருளான ஒரு பாத்திரமாக, மிஷ்கினின் முரணாக படைக்கப்பட்டுள்ளது இப்பாத்திரம். மிஷ்கினுக்கு நேர்மாறாக தன்முனைப்பும், விழைவும் கூடிய ஒருவன். ஆனால் நுட்பமாக பார்த்தால் இவன் மிஷ்கினின் ஆடிப்பாவை. வெண்முரசின் வாசகர்களுக்கு ஆடிப்பாவை என்னும் படிமம் புதிதல்ல. உண்மையில் நாஸ்தாசியாவினால் மிகவும் அலைகழிக்கப்படுபவன் இவனே. அவளின் காதலுக்கும், புறக்கணிப்புக்கும் இடையே அல்லாடுகிறான். அவள் அவனுடன் இருப்பது இறப்பை விடக் கொடியது என அவள் எண்ணுவதாலேயே என்ற முடிவுக்கே வருகிறான். அவள் மீதான காதலாலும், அவளை அடைந்தாக வேண்டும் என்ற தன்முனைப்பாலும் அவளுடன் செல்லும் இவன், நாவலின் போக்கில் அவள் எப்போது வேண்டுமானாலும் வந்து அடைக்கலம் கொள்ளக்கூடிய புகலிடமாக மாறுகிறான். அவள் ஒவ்வொருமுறை திரும்புகையிலும் அவன் அவளை கேள்வி கேட்பதில்லை. உண்மையில் அவளை அவளாகவே ஏற்றுக் கொண்டவன் இவனே. எனவே தான் மிஷ்கின் கூட ரோகொசின் அவளை விரும்புவதை ஏற்கிறான். அவனுக்குத் தடையாக இருக்க மாட்டேன் என உரைக்கிறான்.
இருப்பினும் ரோகொசின் அவளைக் கொல்கிறான். அதற்கு முன் மிஷ்கினைக் கொல்லவும் முயல்கிறான். இந்த இரு தருணங்களும், அதற்கான காரணங்களும் நாவலில் விரிவாக விளக்கப்படவில்லை. விவாதிக்கப்படவும் இல்லை. ரோகொசினின் இச்செயல்கள் அவனுள் உறையும் தீமையின் வெளிப்பாடே எனவும், அவன் ஒதேல்லோவில் வரும் லேகோவை ஒத்தவன் எனவும், எனவே தான் அவனது செயல்களுக்கு காரணங்கள் தரப்படவில்லை எனவும் எழுதப்பட்டுள்ளது. ஆனால் நாவலில் மிஷ்கினுக்கும், ரோகொசினுக்குமான உறவு தெளிவாகவே கொடுக்கப்பட்டுள்ளது. இருவரும் மாஸ்கோவில் தொடர்ச்சியான சந்திப்புகளை நிகழ்த்தியுள்ளனர். ரோகொசினின் இருளடைந்த வீட்டிற்கு வரும் மிஷ்கின் அவனுடனான உரையாடலின் இறுதியில் அவனுக்காக மிகவும் வருத்தப்படுகிறான். அவனுடைய வாழ்வே அவளால் சின்னாபின்னப் படுத்தப்பட்டு இருப்பதைக் கண்டு, அவனது எதிர்காலமும் அந்த வீட்டைப் போலவே இருளடைந்து இருப்பதைக் கண்டு, அவனும் வட்டிக்குப் பணம் கொடுக்கும் இழிந்த செயலைச் செய்வதால் கடுமையான சுயவதைகளைச் செய்து கொள்வதன் மூலம் தங்கள் ஆன்மாவைத் தூய்மை செய்து கொள்ளும் கோல்ப்சி இனத்தவனைப் போல தன்னைத் தானே வதைத்துக் கொள்வதைக் கண்டு வெகுள்கிறான். அப்படிப் பேசிக்கொண்டிருக்கையிலேயே ரோகொசினின் அறையில் இருந்த ஆறு அங்குல கத்தியை எடுத்து விடுகிறான். ஒன்றல்ல, இருமுறை. அந்த கத்தி அவன் கையில் வந்த தருணம் அவனுள் எழுந்த எண்ணங்கள் விவரிக்கப்படவில்லை. நிச்சயம் கத்தியை தலைமுடி சீவ யாரும் பயன்படுத்தப் போவதில்லை அல்லவா!! அந்த இருமுறையும் அவனிடம் இருந்து அதை வாங்குவதும், அதை ஒரு புத்தகத்தில் வைத்து தள்ளி விடுவதும் ரோகொசின் தான். இதன் தொடர்ச்சியாக தன் தாயிடம் அவனைக் கூட்டிச் செல்லும் ரோகொசின், அவனைத் தன் சகோதரனாகவே அறிமுகப்படுத்துகிறான். இதன் இறுதியில் விடைபெறும் சமயத்தில் அவர்கள் இருவரும் தத்தமது சிலுவையை மாற்றிக் கொள்கின்றனர். இது மிக மிக முக்கியமான செயல். இருவரும் தாங்கள் சுமந்து கொண்டிருந்த சிலுவையை மாற்றிக் கொள்கின்றனர். அதன் வாயிலாக நாஸ்தாசியாவின் மீட்பு என்னும் சுமையை மிஷ்கின் நிரந்தரமாக ரோகொசினுக்கு அளிக்கிறான். இந்த சிலுவை மாற்றத்துக்குப் பிறகே மிஷ்கின் சற்றே கூர்மையான மனிதனாக மாறுகிறான். தன்னை ஏமாற்ற நடக்கும் ஒரு மோசடிக்கு சரியான பதில் தருகிறான். தனக்கும் அஃகலெயாவுக்கும் இடையே குழப்பத்தை விளைவிக்கும் ஹிப்போலித்திடம் மிகக் கூர்மையாக ‘தாங்கள் அனுபவிக்கும் மகிழ்வுக்காக ஹிப்போலித் அவர்களை மன்னிக்கவேண்டும்’ என அவனது அழுக்காறைச் சுட்டுகிறான்.
உண்மையில் அவளின் மரணம் என்ற எண்ணம் நாவலில் மிஷ்கினிடம் மட்டுமே இருக்கிறது. இப்போது அது ரோகொசினுக்கு மாறுகிறது. நாவலின் இறுதியில் அவளைக் கொல்ல ரோகொசின் பயன்படுத்துவது மிஷ்கின் தன் அறையில் எடுத்த அந்த கத்தியைத் தான். அந்த மரணம் அவளின் பூரணம். அவளின் நிரந்தரமான விடுதலை. அவளே ஏங்கிக் கொண்டிருந்தது தான் அது. மிஷ்கினுக்கும், ரோகொசினுக்கும் இடையே அலைவுற்ற அவளின் ஆன்மாவின் முரணியக்கம் மிஷ்கினின் சிலுவை தாங்கிய ரோகோசின் கையால் இதயத்தில் ஏற்ற புண் மூலம் பூரணமடைகிறது. அக்காயம் ஒரு புற அறிகுறியே. அவள் அதற்கு முன்பே இதயத்தில் ரத்தம் வடிய இருந்தவள் தானே. எனவே தான் அவள் உடலின் உள்ளேயே ரத்தமானது வடிந்து விட்டிருப்பதாக, வெளியே மீச்சிறு கறையே இருந்து அவள் இன்னும் அழகாகவே இருப்பதாக தஸ்தாவெயஸ்கி முடிக்கிறார். வெண்முரசின் மழைப்பாடலில் பாண்டு தன்னைச் சுற்றி இருப்பவர்கள் அவனைக் கருணையாலேயே கொஞ்சம் கொஞ்சமாகக் கொன்று கொண்டிருப்பதாக விம்முவான். மிஷ்கினைத் திருமணம் செய்திருந்தால் நாஸ்தாசியாவுக்கு வாய்த்திருக்கக் கூடியது அதுவே. எனவே தான் ரோகொசின் மீது மிஷ்கின் கோபம் கொள்வதில்லை. அவனைச் சமாதானம் செய்கிறான். ஏனென்றால் அவன் இவனது முரண். இவன் அவனது முரண். இருவரும் இணைந்ததே, இருவரையும் உள்ளடக்கியதே அவர்களின் பூரணம். இறுதியில் தன் மடி மீது அவனைப் படுக்கவைத்து அவன் முகத்தோடு தன் முகத்தை வைத்துக் கொள்கிறான். இருவரின் கண்ணீரும் கலக்கின்றன.
***
உதவியவை:
http://www.notablebiographies.com/De-Du/Dostoevsky-Fyodor.html
http://www.efm.bris.ac.uk/het/hegel/history.pdf
http://www.inquiriesjournal.com/articles/543/dostoevskys-hegelian-parody-in-crime-and-punishment
https://plato.stanford.edu/entries/hegel-dialectics/
https://empyreantrail.wordpress.com/2016/09/12/dialectics-an-introduction/
http://sites.utoronto.ca/tsq/DS/02/147.shtml
https://ndpr.nd.edu/news/hegel-on-beauty/
https://en.wikipedia.org/wiki/Revolutions_of_1848
https://en.wikipedia.org/wiki/Petrashevsky_Circle
https://en.wikipedia.org/wiki/Serfdom_in_Russia
https://www.wikiart.org/en/hans-holbein-the-younger/the-body-of-the-dead-christ-in-the-tomb-1521
அசடன் வாங்க
எம்.ஏ.சுசீலாவுக்கு விழா