அஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்

gk-1

 

நண்பர் நிர்மால்யா இக்கடிதத்தை அனுப்பியிருந்தார்.

 

 ஊட்டி

29 03 2018

அன்புள்ள  ஜெயமோகனுக்கு,  வணக்கம்.

கடந்த  16அம்  தேதி  மறைந்த   மலையாள  எழுத்தாளர்  எம்.சுகுமாரன்  அவர்களைப் பற்றிய  குறிப்பு   தங்கள்  தளத்தில்  இடம்  பெறுமென்று   எதிர்பார்த்திருந்தேன். ஏமாற்றத்தை  உணர்கிறேன்.

எழுத்திலும்  தனிப்பட்ட  வாழ்க்கையிலும்  வெளிப்படுத்திய  அரசியல்  உணர்வும் நேர்மையும்  நவீன  மலையாள  இலக்கியத்தில்   தனித்தன்மை  வாய்ந்த  குரலாக சுகுமாரனை  அடையாளம்  காட்டின.     அவர்  அரசியல்  சார்ந்த  நவீனத்துவத்திற்கு அடித்தளமிட்ட  இலக்கியவாதி.  அரசியல்  நிலைபாட்டைக்  காரணம்  காட்டி, ஜனாதிபதியின்   நேரடித்  தலையீட்டில்  பணிநீக்கம்  செய்யப்பட்ட  முதல்  மத்தியஅரசுப் பணியாளர்  சுகுமாரன்.   பின்னர் மக்கள்திரளிடருந்து   ஒதுங்கி,  அங்கீகாரங்களின் இடைவெளியைப்  பேணி  வாழ்ந்து  வந்த  அவரின்  தனிமைவாழ்க்கை  கூட  கேரளப் பண்பாட்டுத் தளத்தில்  பெரும்  அதிர்வை  எழுப்பியது.

 1963  முதல்  திருவனந்தபுரம் அக்கவுண்ட்  ஜெனரல்  அலுவலகத்தில்  குமாஸ்தாவாகப்  பணியாற்றி  வந்த  சுகுமாரன் 1974  நடவடிக்கைகளின்  பேரில்   பணியிடருந்து  வெளியேற்றப்பட்டார்.  நெருக்கடிநிலையின்  போது   ‘விடியலைக்  காண  உறக்கத்தை  இழந்தவர்கள்’  (இக்கதை  என் மொழிபெயர்ப்பு  நூலான சிவப்புச்சின்னங்கள்  தொகுப்பில்  இடம்  பெற்றுள்ளது)  சிறுகதையை எழுதியதற்காக  காவல்துறையினரின்  தீவிரக்  கண்காணிப்புக்கு ஆளானார்.

பின்னர் எழுதப்பட்ட  கதைகள்  உருவகங்களாலும்  குறியீடுகளிலுமான  உத்தியைக் கொண்டிருந்தன. பித்ருதர்ப்பணம்,  சங்ககானம்,  உணர்த்துப்பாட்டு  அகிய  அவரது  கதைகள் திரைப்படங்களாக  ஊடுக்கப்பட்டன.   ‘சேஷக்கிரியா’,  ‘கழகம்’ மிகச்சிறந்த திரைபடங்களுக்கான  மாநில அரசின்  விருதைப்  பெற்றன. ‘சிவப்புச்சின்னங்கள்’  மத்திய சாகித்ய  அகாதெமி  விருதைப்  பெற்றது.

எம்.சுகுமாரன்  இந்திய இலக்கியத்தில்  போற்றிப்புகழ  வேண்டிய  எழுத்தாளர் அல்லாவிடினும்  மதிக்கப்பட  வேண்டிய  எழுத்தாளர்  என்பதே  என்  கருத்து.மலையாள  இலக்கியத்தோடும்  பண்பாட்டோடும்  நெருங்கிய  உறவைப்  பேணிவரும் தாங்கள்  அவரை  ஒர்   இலக்கிய  அளுமையாக  எற்கவில்லையோ?  எம்.  சுகுமாரன் தவிர்க்கப்பட  வேண்டிய எழுத்தாளர்  எனில்  தங்கள்  கருத்தறிய  ஆவலாக  உள்ளேன்.

அன்புடன்

நிர்மால்யா

*

இதை வாசித்தபோதுதான் மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன் மறைந்த செய்தியை அறிந்தேன். இத்தனைக்கும் சென்ற ஒருவாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட மலையாள எழுத்தாளர்களிடமும் இதழாளர்களிடமும் தொலைபேசியில் பேசநேர்ந்தது. அவர்கள் இச்செய்தியை நான் அறிந்திருப்பேன் என நினைத்திருப்பார்கள். எம்.சுகுமாரன் நான் இமையப்பயணத்தில் இருக்கையில் மறைந்திருக்கிறார். நெடுநாட்களாக நான் நாளிதழ்களை வாசிக்கவில்லை.

 

எம்.சுகுமாரனை நான் 1986ல் சந்தித்திருக்கிறேன். சுந்தர ராமசாமி நடத்திய காலச்சுவடில் எம்.சுகுமாரனின் ஒரு சிறுகதையை நான் மொழியாக்கம் செய்தேன். அதற்கு உரிமை பெறும்பொருட்டு. அவர் நோயுற்று இலக்கியத்திலிருந்து விலகியிருந்த காலகட்டம் அது. கடுமையான உடற்சோர்வும் உளச்சோர்வும். ஐந்துநிமிடங்கள் பேசியிருப்ப்போம். கிளம்பலாம் என்று தோன்றிவிட்டது. மீண்டும் சந்திக்கவில்லை.

 

அன்று எம்.சுகுமாரன் பலராலும் மறக்கப்பட்டிருந்தார். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி [மார்க்சிஸ்ட்] யிலும் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி [மாலெ]யிலும் தீவிரமாக பணியாற்றியவர். இடதுசாரி இயக்கங்கள் மீதான விமர்சனங்கள் காரணமாக அவர்கள் அனைவராலும் நிராகரிக்கப்பட்டார். ஆனால் தொண்ணூறுகளின் இறுதியில் நக்சலைட் காலகட்டம் ஒரு கடந்த காலக்கனவாக கற்பனாவாத ஒளி கொள்ளத் தொடங்கியது. அடுத்த தலைமுறையினர் அதை அறிய ஆவல்காட்டினர்.  ‘தலைமறைவு, போராட்ட, நினைவுகள்’  ஏராளமாக எழுதப்பட்டன. அந்த ஒளியில் எம்.சுகுமாரன் மீண்டுவந்தார்

 

ஒருவகையான உருவகக்கதைகள் அல்லது தேவதைக்கதைகள் எம்.சுகுமாரன் எழுதியவை. பெரும்பாலான கதைகள் சொன்னாலே வலுவாக தொடர்புறுபவை. ஆகவே வாய்மொழியிலும் நிலைகொண்டவை. மிகக்குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் மலையாள மொழியின் குறிப்பிடத்தக்கச் சிறுகதையாசிரியர்களில் ஒருவர்.மார்க்ஸியம் சார்ந்த, புரட்சிகர எழுத்து எப்படி இலக்கியமாக ஆகமுடியும் என்பதற்குச் சிறந்த உதாரணங்கள் அவருடைய கதைகள்.

 

நிர்மால்யா எம்.சுகுமாரனின் சிறுகதைகளை சிவப்புச்சின்னங்கள் என்றபேரில் சாகித்ய அக்காதமிக்காக மொழியாக்கம் செய்திருக்கிறார்.

 

ஜெ

29829968_2032739513668626_624698853_o

பிகு

 

 

மலையாளத்திலிருந்து தகழி, டி.பத்மநாபன், சி.வி.ஸ்ரீராமன், ஓ.வி.விஜயன் உள்ளிட்ட பலர் சிறுகதைகளை மொழியாக்கம் செய்திருக்கிறேன். அவை பெரும்பாலும் கலைமகள் குழுமத்தின் மஞ்சரி மாத இதழில் வெளிவந்தன. அவற்றை தேடிக்கண்டுபிடிக்கமுடிந்தால் தொகுக்கலாம்
முந்தைய கட்டுரைஇணைப்புகளின் வலைப்பாதை
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-7