குற்றவாளிகளின் காவல்தெய்வம்

063212_Police Rowdy 2

நாளிதழில் ஒரு செய்தியைப் படித்தேன். ரோந்துசென்ற அன்பழகன் என்னும் காவலரை சென்னையில் ரவுடிகள் ஓட ஓடத் துரத்தி வெட்டியிருக்கிறார்கள். இரவு 1130 மணிக்கு, ஏராளமான வீடுகள் அமைந்துள்ள இடத்தில். அவ்வீடுகளில் ஒன்றிலிருக்கும் ஒளிப்பதிவுக்கருவி வழியாக அவர்களின் முகங்கள் பதிவாகி அவர்களை கைதுசெய்திருக்கிறது காவல்துறை. அன்பழகன் அந்த ரவுடிகள் இருசக்கரவண்டிகளில் வந்தபோது நிறுத்தி முகங்களை புகைப்படம் எடுக்க முயன்றதுதான் காரணம்

அப்படியென்றால் அந்த இடத்தில் ஒரு சாதாரணக் குடிமகனின் நிலைமை என்ன? 1130 மணிக்குச் சாதாரணமாக இளைஞர்கள் வேலைமுடிந்து திரும்பி வருகிறார்கள். சரி, ஒரு இரவுநடை செல்லலாம் என என்னைப்போல ஒருவர் கிளம்பினால் என்ன பாதுகாப்பு? இதே வெட்டு அந்தச் சாமானியருக்கு விழுந்திருந்தால் காவல்துறை ஏதேனும் நடவடிக்கை எடுக்குமா? ரவுடிகளுக்கிடையே சண்டை என்பதுதான் அவர்களுடைய முதல்கோணமாக இருக்கும். இந்நிலையில் பெண்கள் வெளியே செல்வதைப்பற்றி எண்ணியும் பார்க்கமுடியுமா?

காவலர்கள் இங்கே எண்ணிக்கையில் குறைவு. காவல்துறையின் ஒரு பிரிவினர் குற்றவாளிகளுடன் ஒத்துழைக்கிறார்கள். காவல்துறையின் ஒருங்கிணைப்பின்மை சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாமலாக்கியிருக்கிறது. இதெல்லாம்தான் நமக்குச் சொல்லப்படுவது. என் நண்பர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கையில் சொன்னார், ஆனால் முதன்மைக்குற்றவாளி நீதிமன்றங்களே என. அச்செய்தியை, அல்லது இப்படி ரவுடிகள் பிடிபடும் எச்செய்தியையும் எடுத்துப்பாருங்கள். அந்த ரவுடிகள்மேல் நான்கு கொலைவழக்குகள் நிலுவையில் உள்ளன, எட்டு வழிப்பறிகள் நிலுவையில் உள்ளன என்று தவறாமல் சொல்லப்பட்டிருக்கும் என்றார்

நிலுவையில் என்றால் என்ன? கொலை, கொள்ளை செய்து பிடிபட்டதும் நீதிமன்றத்திற்குக் கொண்டுசெல்லப்படுகிறார்கள். ஜாமீன் வழங்கப்படுகிறது. பின்னர் விசாரணையே நடைபெறுவதில்லை. ஆண்டுக்கணக்கில் வாய்தாதான். குற்றவாளி மேலும் மேலும் கொலையும் கொள்ளையும் செய்கிறார். மீண்டும் மீண்டும் ஜாமீன். எந்தவழக்கும் முடிவடைவதில்லை. அவ்வப்போது விசாரணைக் கைதியாகச் சிறைசென்றதைத் தவிர்த்தால் அவர் தண்டிக்கப்படுவதேயில்லை.

கொலைவழக்குகள் பத்தாண்டுவரைக்கும்கூட நீடிக்கின்றன. சாட்சிகள் மறைகின்றன. விடுதலை. தமிழகத்தின் குற்றங்களில் பத்துசதவீதம்கூட பதிவுசெய்யப்படுவதில்லை. அவற்றில் பத்துசதவீதம்கூட தண்டிக்கப்படுவதில்லை என்றார் நண்பர். குற்றங்கள் பெருக, குற்றவாளிகள் சுதந்திரமாக அலைய இதுவே காரணம். சலித்துப்போய் ஓர் எல்லையில் காவல்துறை குண்டர்தடைச் சட்டத்தில் உள்ளே தள்ளுகிறது. நீதிமன்றங்கள் அதையும் உடைத்து அவர்களை வெளியே அனுப்புகின்றன.

எங்கு நீதிமன்றம் பொறுப்பில்லாமலிருக்கிறதோ அங்குதான் பொதுவெளிக் குற்றங்கள் பெருகுகின்றன என்று நண்பர் சொன்னார். அந்த உண்மையின் முன் திகைத்து அமரவே முடிந்தது

முந்தைய கட்டுரைஎம்.ஏ.சுசீலாவிழா கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைஉஷா ராஜ்