எம்.ஏ.சுசீலா என் பத்தாண்டுகால நண்பர். மதுரை பாத்திமா கல்லூரியில் தமிழாசிரியையாக இருந்து பணி ஓய்வுபெற்று டெல்லிக்குச் சென்று வாழ ஆரம்பித்த பின்னரே அவர் எனக்கு அறிமுகமானார். நீண்ட கடிதம் ஒன்று அனுப்பியிருந்தார். அதில் தெரிந்த வினாக்கள் அனைத்துக்கும் அடியிலிருந்தது செயலின்மையின் சலிப்பு என எனக்குத் தோன்றியது. முன்னரே சிறுகதைத் தொகுதிகள் வெளியிட்டிருந்தாலும் ஒருவகை குடும்பப் பொறுப்புகள் முடிந்ததன் வெறுமைக்கு ஆளாகியிருந்தார்.
நான் எழுதிய பதில்கடிதத்தால் ஊக்கம்பெற்று தீவிரமாக மொழியாக்கத்தில் ஈடுபடத் தொடங்கியதாக சொன்னார். அதையொட்டியே எனக்கும் அவருக்கும் கடிதத் தொடர்பு நீடித்தது. தொடர்ந்து ருஷ்ய இலக்கியம் பேசப்பட்டாலும்கூட ருஷ்ய மேதையான தஸ்தயேவ்ஸ்கியின் வெண்ணிற இரவுகள் என்னும் சிறுகதைத்தொகுதியன்றி எதுவும் தமிழில் வெளிவந்ததில்லை. சுசீலாவின் மொழியாக்கத்தில் தஸ்தயேவ்ஸ்கியின் அசடன் [Idiot] குற்றமும் தண்டனையும் [Crime and Punishment] நிலவறைக் குறிப்புகள் [Notes from underground] ஆகியநூல்கள் வெளிவந்தன.
கடும் உழைப்பைக் கோரி நிற்பவை இவ்வாக்கங்கள். குறிப்பாக அசடன் பாவியல்பு மிக்கது, பிரெஞ்சு சொலவடைகளாலும் அவற்றின் மறுவடிவங்களாலும் ஆனது. மிகுந்த கவனத்துடனும் பொறுமையுடன் சுசீலா இவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார். வருந்தத்தக்க விஷயம் என்னவென்றால் இவற்றை வெளியிட சொந்தப்பணத்தை லட்சக்கணக்கில் திரும்பவராதபடி செலவழித்துமிருக்கிறார். [இப்போதுதான் நற்றிணை பதிப்பகம் மறுபதிப்புகள் கொண்டுவந்துள்ளது] பதிப்புரிமைத்தொகை , உழைப்புக்கு ஊதியம் என்றெல்லாம் பேசவே முடியாது தமிழில். இலக்கியம் மீதான அர்ப்பணிப்பே இதன்பின் உள்ள உந்துசக்தி. அது அவருக்கு வாழ்க்கையின் பொருளை அளித்தது என்று சொல்லலாம். மொழியாக்கத்தின் ஊக்கத்தால் ருஷ்யாவுக்கே பயணம்செய்து கதைநிகழ்ந்த இடங்களையெல்லாம் பார்த்துவந்திருக்கிறார்.
சுசீலாவின் மொழியாக்கத்தின் சிறப்பம்சம் அவை சீரான வாசிப்புத்தன்மையுடன் மூலத்திற்கு நேர்மையானவையாக அமைந்துள்ளன என்பதுதான். தமிழில் வெளிவரும் மொழியாக்கங்களில் வாசிப்புத்தன்மை என்பது மிக அரிது என்பதே இங்குள்ள நிலை. எந்த மொழியாக்கத்தையும் ஐம்பது பக்கம் வாசிக்காமல் வாங்கக்கூடாது என்பதுதான் வாசகர்களுக்கு நான் கூறும் அறிவுரை. சமீபத்தைய மொழியாக்கங்கள் பல தடிமனாக என் நூலகத்தில் காத்திருக்கின்றன. காகிதப்பலகைகள் என்றுமட்டுமே அவற்றை சொல்லமுடியும். சுசீலாவின் குற்றமும் தண்டனையும் நாவலை வெறும் மூன்றுநாட்களில் வாசித்ததை நினைவுறுகிறேன்.
எம்.ஏ.சுசீலா பருவங்கள் மாறும் (1985), புதிய பிரவேசங்கள் (1994), தடை ஓட்டங்கள் (2001), தேவந்தி (2011) ஆகிய சிறுகதைத் தொகுதிகளையும் யாதுமாகி என்னும் நாவலையும் எழுதியிருக்கிறார். விடுதலைக்கு முன் தமிழ் நாவல்களில் பெண்கள் (1996), பெண் இலக்கியம் – வாசிப்பு (2001), இலக்கிய இலக்குகள் (2004), தமிழ் இலக்கிய வெளியில், பெண்மொழியும் பெண்ணும் (2006), ஆகிய கட்டுரைத் தொகுதிகள் வெளிவந்துள்ளன.
ஒவ்வொருவருக்கும் வாழ்க்கையில் இரண்டு தொடக்கங்கள் தேவை என்பது என் எண்ணம். பணி, குடும்பம் என ஒரு வாழ்க்கை. அது ஏறத்தாழ அறுபது வயதில் முடிவடைகிறது. அதன் பின்னர் ஓய்வு என நம் சூழல் சொல்கிறது. ஆனால் இன்று மேலும் இருபதாண்டு முப்பதாண்டு வாழ்க்கை எஞ்சியிருக்கிறது. மீண்டுமொரு தொடக்கத்தை நிகழ்த்தி அதில் தீவிரமாக செல்லாவிட்டால் வெறுமையே எஞ்சும். பெரும்பாலானவர்கள் அமர்ந்திருக்கும் நரகம் அது.
எம்.ஏ.சுசீலாவின் வாழ்க்கையின் வெற்றிகரமான, மகிழ்வான காலகட்டம் என்பது இந்த இரண்டாவது தொடக்கத்திற்குப் பின்னர்தான். அவரை காலம் நினைவுகொள்ளப்போவது இந்த முகமாகத்தான். முதன்மையாக பேராசிரியராக, பேச்சாளராக அறியப்பட்டவர் இந்த இரண்டாவது காலகட்டத்தில்தான் மொழிபெயர்ப்பாளராக ஆனார். சுசீலாவின் வாழ்க்கை அவ்வகையில் இங்குள்ள அனைவருக்கும் ஒரு பாடம், வழிகாட்டி.
எங்கள் அனைவருக்கும் நண்பரும் விஷ்ணுபுரம் கூட்டின் மூத்த உறுப்பினருமான சுசீலா அவர்களை கௌரவிக்கும் முகமாக ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். வரும் ஏப்ரல் ஏழாம் தேதி சென்னை ருஷ்யக் கலாச்சார நிலையத்தில் மாலை 6 மணிக்கு விழா நிகழ்கிறது. மிகயீல் கார்ப்பட்டோவ் [தென்னக ருஷ்ய கலாச்சார நிலைய துணைத்தலைவர்] . இந்திரா பார்த்தசாரதி ஆகியோர் எம்.ஏ.சுசீலாவை கௌரவிக்கிறார்கள். யுவன் சந்திரசேகர், ராஜகோபாலன், சுரேஷ்பிரதீப் ஆகியோருடன் நானும் பேசுகிறேன்.
நண்பர்கள் சிறில் அலெக்ஸ், சௌந்தர்ராஜன், காளிப்பிரசாத், ராகவ் ஆகியோர் பெருமுயற்சி எடுத்து இவ்விழாவை ஒருங்கிணைக்கிறார்கள். நண்பர்கள் அனைவரையும் விழாவுக்கு வருகைதருமாறு அழைக்கிறேன்.
குற்றமும் தண்டனையும் – நற்றிணைப் பதிப்பகம் வெளியீடு வாங்க
அசடன் வாங்க
அசடன் பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்
எம் ஏ சுசீலா விக்கி பக்கம்
அசடன்
குற்றமும் தண்டனையும்
வாசிப்புக் குற்றமும் விமர்சனத்தண்டனையும்