மீறலும் ஓங்குதலும்

pm antony

1986 ல் கேரளத்தை ஒரு கருத்துரிமைப்பிரச்சினை உலுக்கியெடுத்தது. மலையாளத்தின் முதன்மையான நாடக இயக்கத் தலைவரும் தீவிர இடதுசாரியுமான பி.எம்.ஆண்டனி  ‘கிறிஸ்துவின்றே ஆறாம் திருமுறிவு’ [கிறிஸ்துவின் ஆறாவது புனிதப்புண்] என்னும் நாடகத்தை எழுதி இயக்கி அதில் கிறிஸ்து ஏசுவாக நடித்து அரங்கேற்றம் செய்தார். இந்நாடகம் ஆலப்புழா மாவட்டத்தில் எட்டு இடங்களில் நடைபெற்றது. திரிச்சூரில் மேலும் பத்து இடங்களில் நடைபெறவிருக்கையில் இது தடைசெய்யப்பட்டது.

இந்நாடகத்தின்  முகப்புவாசகமே உத்வேகமூட்டுவதாக இருந்தது. “தேவகுமாரன் அல்லாத ஏசு. வேசியல்லாத மேரி மக்தலேனா, காட்டிக்கொடுக்காத யூதாஸ், திருடனல்லாத பரபாஸ்”. ஏசு சிலுவையில் அறையப்பட்டபோது அவர் உடலில்  ஐந்து புண்கள் உருவாயின. ஆறாவதாக ஒன்று இதயத்தில் இருந்தது என்பதே நாடகத்தின் கருப்பொருள். மேரி மக்தலேனா ஏசுவின் காதலியும் மாணவியுமாக இருந்தாள் என நாடகம் குறிப்பிட்டது.

இது திருச்சபையை கொந்தளித்தெழச் செய்தது. ஆர்ச் பிஷப் மார் ஜோசப் குண்டங்குளத்தின் தலைமையில் கிறித்தவ சபைகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பெரும் போராட்டத்தை முன்னெடுத்தன. அப்போது கேரளம் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசால் ஆளப்பட்டது. கே.கருணாகரன் முதல்வர். அரசில் முதன்மையான கூட்டாளி கிறித்தவர்களின் அரசியல் அமைப்பும் திருச்சபையால் மறைமுகமாகக் கட்டுப்படுத்தப்படுவதுமான கேரள காங்கிரஸ். ஆகவே அரசால் நாடகம் தடைசெய்யப்பட்டது.

ஆனால் உயர்நீதிமன்றம் அந்தத்தடையை ரத்துசெய்தது. நாடகத்தில் கிறிஸ்து இழிவுபடுத்தப்படவில்லை, மாறாக அவர் ஒரு பெரும்புரட்சியாளராகவும் ஞானியாகவும்தான் காட்டப்படுகிறார் என அது கருதியது. நிகழ்காலத்தைய கிறிஸ்துமத நம்பிக்கைகளை அந்நாடகம் எவ்வகையிலும் கேள்விக்குரியதாக்கவில்லை என்றும்  அந்நாடகம் பேசியவை வரலாற்றாய்வாளர்களால் தொடர்ந்து  சொல்லப்படுவனவே என்றும் அது சொன்னது

ஆனால் அரசு  ‘சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகிறது’ என அறிவித்து  உதவி ஆட்சியர்களின் அதிகாரத்தைப் பயன்படுத்தி மாவட்டவாரியாக நாடகத்தைத் தடைசெய்தது. நாடகநடிகர்கள் மேல் தொடர்ச்சியாக வழக்குகள் போடப்பட்டன. நாடகம் போடப்பட்ட இடங்களில் பாதிரியார்களும் கன்யா ஸ்திரீகளும் வந்து போராட்டம் செய்தனர்.  மும்பையில் நாடகம் நடக்கவிருந்தபோது அங்கும் போராட்டமும் அடிதடியும் நிகழவே மும்பை அரசு நாடகத்தைத் தடைசெய்தது.

இறுதியாக நாடெங்கும் இந்நாடகம் தடைசெய்யப்படவேண்டும் என கோரி உச்சநீதிமன்றத்தை அணுகியது திருச்சபைத் தரப்பு. அரசுகள் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படுகின்றன என்று சொல்லி அக்கோரிக்கையை ஆதரித்தன. விளைவாக உச்சநீதிமன்றம் நாடகத்தைத் தடைசெய்தது. அதைக் கண்டித்து திரிச்சூரில் தீவிர இடதுசாரிகள் கருத்துரிமைகாக்க ஒரு கருத்தரங்கை நடத்தினர். அதில் ஆந்திரமாநில புரட்சிப்பாடகரான கத்தர் கலந்துகொண்டார். பார்வையாளனாக நானும் பங்கெடுத்தேன். இந்நாடகம் தடைசெய்யப்பட்டதைப்பற்றி ஒரு நாடகத்தை பிரபல நாடக ஆசிரியர் ஜோஸ் சிறைக்கல் நடத்தினார். அந்நாடகம் தடைசெய்யப்பட்டு அவரும் கைதானார்.

தொடர்ச்சியாக எதிர்ப்புகள் வந்துகொண்டே இருந்தநிலையில் பி.எம்.ஆண்டனி  விசுத்தபாபம் [ தூயபாவம்] என்னும் நாடகத்தை எழுதி அரங்கேற்றினார். அதற்கும் கிறித்தவ சபைகளிடமிருந்து மிகக்கடுமையான எதிர்ப்பு வந்தது.  இறுதி அடியாக அரசு 1988 ல் ஒரு கடும் நடவடிக்கையை எடுத்தது. கயிறுத் தொழிற்சாலை உரிமையாளராகிய சோமராஜன் என்பவரை தீவிர இடதுசாரியினர் 1980 ல் கொலைசெய்த ஒரு வழக்கு முன்னரே நீதிமன்றத்தில் இருந்தது. அதில் ஆண்டனியின் பெயரும்  சேர்க்கப்பட்டது. முதற்தகவல் அறிக்கையில் இல்லாதிருந்த அவர் பெயரை எழுதிச்சேர்த்ததை அன்று ஊடகங்கள் கடுமையாகக் கண்டித்தன.

ஆலப்புழா அமர்வு நீதிமன்றம் ஆண்டனி அக்குற்றத்தில் பங்கெடுத்ததற்கு ஆதாரமில்லை, அவருடைய பேச்சுக்களால் குற்றத்திற்குத் தூண்டுதல் அளித்தார் என்று மட்டும் குற்றம்சாட்டி ஆறுமாதச் சிறைத்தண்டனை அளித்து, அத்தண்டனையை அவர் முன்னரே அனுபவித்திருந்தமயால் அவரை விடுதலைசெய்தது. அக்குற்றம் நடந்த அன்று அவர் வேறு ஊரில் நாடகம் நடத்திக்கொண்டிருந்தமைக்கான சான்றுகள் பல இருந்தன. ஆனால் 1989ல் உயர்நீதிமன்றத்தில் உடனடியாக நடந்த மறுவிசாரணையில் எந்த ஆதாரமும் கருத்தில்கொள்ளப்படவில்லை. அவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

kazantzakis_nikos
நிகாஸ் கஸன்ஸகிஸ்

அன்று எழுத்தாளர்கள், கலைஞர்கள் ஒருங்கிணைந்து எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். நானும் தமிழில் இரண்டு கட்டுரைகள் எழுதி எழுத்தாளர்களின் ஆதரவைத் திரட்டினேன். தொடர்ச்சியான போராட்டங்கள் நிகழ்ந்தன. 1987ல் ஆட்சிக்கு வந்த ஈ.கே.நாயனாரின் இடதுசாரி அரசு ஆண்டனிக்குத் தண்டனைக்குறைப்பு அளித்தது. 1993ல் அவர் வெளியே வந்தார்.

வெளிவந்த பின்னரும் ஆண்டனி தீவிர இடதுசாரிச் செயல்பாட்டாளராகவும் நாடக இயக்கத்தவருமாகவே செயல்பட்டார். கேரளம் முழுக்க சைக்கிளிலேயே சென்று வீதிநாடகங்களை போட்டார். மூன்றாம் அரங்கு என்னும் அவருடைய கருத்தியக்கம் நாடகத்தை மக்களிடம் கொண்டுசென்றது. 2005 ல் ஆறு மாதத்தில் 1500 முறை நாடக அரங்கேற்றம் செய்தார். ஒருநாளில் ஒன்பதுமுறைகூட நாடகம் போடப்பட்டது. 2011ல் ஆண்டனி மறைந்தார்.

நிகாஸ் கஸண்ட்ஸகீஸ் எழுதிய ‘The Last Temptation of Christ’ என்னும் நாவலை அடியொற்றி எழுதப்பட்டது பி.எம்.ஆண்டனியின் நாடகம். அந்தப்பெயரை நான் அப்போதுதான் கேள்விப்பட்டேன். அந்நாவல் எங்கும் கிடைக்கவில்ல, ஆனால் அனைவரும் தேடிக்கொண்டிருந்தனர். சட்டபூர்வமாக அது தடைசெய்யப்படவில்லை. ஆனால் நடைமுறைத் தடை இருந்தது. நூலகங்களில் இருந்து அது மறைந்தது. திரிச்சூரில் ஒரு கல்லூரி ஆசிரியரிடமிருந்து நான் அந்நாவலின் ஒரு பிரதியை வாங்கினேன்.

அது அந்நாவலின் சைக்ளோஸ்டைல் பிரதி. தட்டச்சு எழுத்துக்கள் வெட்டு இடைவெளியாகப் பதியும் ஒரு தாளில் தட்டச்சு செய்து அதை கரித்தாளுடன் சேர்த்து உருட்டி அச்சிடும் அத்தொழில்நுட்பம் ஒளிநகல் வந்ததுமே அழிந்துவிட்டது. ஆனால் அன்றெல்லாம் சைக்ளோஸ்ட் இலக்கிய இதழ்களே வந்தன. தீவிர இடதுசாரிகளின் தாள்வெளியீடுகள் எல்லாமே அந்த வகையில் அச்சிடப்பட்டவைதான்.

என்னை கொந்தளிக்கவும் பின் அமைதியிலாழ்த்தவும் செய்த நாவல் அது. இன்றுவரை மதம் சார்ந்த என் சிந்தனையில் அதன் ஆழ்ந்த பாதிப்பை காணலாம். எனக்குரிய கிறிஸ்துவை நான் அந்நாவலில் இருந்து உருவாக்கிக் கொண்டேன். வரலாற்றின் இடிபாடுகளில் இருந்து, மதத்தின் உறைநிலைப் பாவைகளில் இருந்து கிறிஸ்துவை மீட்டெடுக்கும் கஸண்ட் ஸகீஸைப்போல நான் காந்தியை, கிருஷ்ணனை மீட்டுக்கொண்டேன். இத்தொடரிலேயே அந்நாவல் பற்றி எழுதியிருக்கிறேன்.

ஓராண்டுக்குப்பின் சுந்தர ராமசாமியிடம் கஸன்ட் ஸக்கீஸ் பற்றிப் பேசியபோது  அவர் டி.எச்.லாரன்ஸின் Lady Chatterley’s Lover   இந்தியாவில் தடைசெய்யப்பட்டதைப்பற்றிச் சொன்னார். அன்று அந்நாவலின் கரித்தாள் கைப்பிரதியை ஒருவரிடமிருந்து பெற்று வாசித்தார் என்றார். அந்நாவலின் ‘சுதந்திரப் பாலுறவுச் சித்தரிப்புகளை’ வாசித்து மூச்சுமுட்டியதாகச் சொல்லி எனக்கு ஒரு பிரதி  கொடுத்தார்.

நான் அதை ஆவலுடன் கொண்டுசென்று அவர் வீட்டு மாடியில்வைத்தே வாசித்துவிட்டு  “இதை பம்மன் எழுதியாயிற்றே சார்” என்று சொன்னேன். பம்மன் மலையாள பாலியல் நாவல்கள் சிலவற்றை எழுதியவர். ”கொச்சைப்படுத்தறேள்” என்று சு.ரா கொதித்தார். “இல்ல சார், உண்மையிலேயே இதை பம்மன் எழுதிட்டார். சரி, கிட்டத்தட்ட நூறு வருஷம் கழிச்சு எழுதினார். ஆனா நான் பம்மனைப்படிச்சிட்டுதான் லாரன்ஸ் கிட்ட போறேன். எனக்கு புதிசா இல்லியே” என்றேன்.

“அதெப்டி புதிசா இருக்கமுடியும்?” என்றார் சு.ரா. “தஸ்த்யவேஸ்கி இன்னமும் புதிசா இருக்காரே” என்றேன். சுரா சிவந்த முகத்துடன் பேசாமலிருந்தார். “மானுடத்தின் அறப்பிரச்சினைகளைப் பேசுற படைப்பு என்னிக்கும் புதிசா இருக்கும். மொழி, வடிவம் எல்லாத்தையும் தாண்டி ஒரு பெரும்படிமத்தை உண்டுபண்ணி நிறுத்தின படைப்பும் சாகாது. இது முதல்ல தனிநபர் எழுத்து. ரெண்டாவது ஒழுக்கப்பிரச்சினைகளைப் பேசுற படைப்பு. ஒழுக்கம் சார்ந்த கருவை எடுத்துக்கிட்ட எந்தப்படைப்புக்கும் ரெண்டு தலைமுறைக் காலத்துக்குமேல் மதிப்பில்லை” என்றேன்.

சில மாதங்களுக்குப்பின் தேவதச்சனை கோயில்பட்டியில் சந்தித்தபோது கஸண்ட் ஸகீஸின் Zorba the Greek  பற்றிச் சொன்னார். “அதுதான் உண்மையிலேயே அவரோட பெஸ்ட். உண்மையான விடுதலையைப் பத்தின நாவல்” என்றார். நான் அதை ஆற்றூர் ரவிவர்மாவின் வீட்டுக்குச் சென்று அங்கிருந்து எடுத்துக்கொண்டு சென்று வாசித்தேன். எனக்கு அந்நாவலும் முக்கியமானதென்றே பட்டது.  மேலும் அது நித்ய சைதன்ய யதிக்கு பிடித்த நாவல். நித்யா அவருடைய ஜெர்மனிய மாணவர் ஒருவருக்கு சோர்பா என பெயரிட்டிருக்கிறார்.பொதுவாக எழுபதுகளின் ஹிப்பி இயக்கத்தினரால் கொண்டாடப்பட்ட இருநாவல்களில் ஒன்று அது. இன்னொன்று ஜே.டி.சாலிங்கரின் The Catcher in the Rye. ஆனால் என்னை இன்றும் ஆட்கொண்டிருக்கும் நாவல் கிறிஸ்துவின் இறுதிச் சபலம்தான்.

ஆறாண்டுகளுக்குப்பின் தருமபுரிக்கு மாற்றலாகி வந்தபின் என் அடுத்த தலைமுறையினரான செங்கதிருக்கு டி.எச். லாரன்ஸின் நாவல்களை அளித்தேன்.  Sons and lovers  “சுவாரசியமான நாவல்…” என்றார்.  ஆனால் மீண்டும் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் 1997ல் அவர் வாசித்த கஸண்ட் ஸகீஸின் கிறிஸ்துவின் இறுதிச் சபலம் அவருக்கு வாழ்க்கையை மாற்றிய படைப்பாக இருந்தது. ஆம் , இது என்னுடைய சொந்த ரசனை அல்ல. இதுவே ஒரு கீழைமனதின் மதிப்பீடு என எண்ணிக்கொண்டேன்.

சென்ற மாதம் அருண்மொழி சோர்பா தி கிரீக்கை வாசித்தாள். அவளுடன் அந்நாவலைப்பற்றிப் பேசியபோது அது மிகத்தெளிவாக நினைவில் எழுவதை உணர்ந்தேன். ஆனால் நாவல் என் உள்ளத்தில் சற்று பின்னுக்குச் சென்றிருந்தது. பொறுப்பேற்றுக்கொள்ளுதலை, கட்டுப்பாட்டை முதன்மையாக வலியுறுத்தும் ஐரோப்பியப் பண்பாட்டில் எழுந்த எதிர்க்குரல் அது. பொறுப்பிலிருந்து விடுதலை அடைதல், கட்டுப்பாடுகளற்றிருத்தல் அளிக்கும் ஆன்மிகமான மகிழ்ச்சியை பேசுகிறது. ஆனால் நாராயணகுருவின் மண்ணைச் சேர்ந்த எனக்கோ பாஷோவின் மண்ணைச்சேர்ந்த ஒருவருக்கோ அது எதை புதிதாகச் சொல்கிறது? இங்கிருந்துகொண்டு அவர்களைவிட கூர்மையாக அதை அடையாளம் காணமுடிகிறது அவ்வளவுதான்.

[அந்நாவலின் திரைவடிவில் ஆண்டனி க்வின் இறுதியில் ஆடும் நடனம் அதன் மையத்தரிசனத்தை அற்புதமாக விளக்குகிறது என்று நினைக்கிறேன். திரையில் இது அரிதாகவே நிகழ்கிறது]

ஆனால் லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆஃப் கிறைஸ்ட் என் உள்ளத்தில் ஒரு நாவலாக அல்ல, நிகரான தொன்மமாகவே மாறிவிட்டிருக்கிறது. கஸண்ட் ஸகீஸ் எழுதியதை விடமேலான ஒரு வடிவம் என்னுள் உள்ளது. எட்ட்டாண்டுகளுக்குப்பின் 1997ல் செங்கதிர் வாங்கிய பிரதியை நான் எடுத்துக்கொண்டு மீண்டும் வாசித்தேன். முதல்முறை மக்தலினா நோக்கி என் நோக்கு குவியம் கொண்டிருந்தது. அந்த வயது அப்படி. இரண்டாம்முறை மேலும் பெரிய படைப்பாக இருந்தது அது. இம்முறை அது யூதாஸின் கதை என்று நினைத்தேன்

யூதாஸ் அதில் கிறிஸ்துவின் இரட்டையன். மெய்யறிவனை எதிர்கொள்ளும் சாமானியன். இவ்வுலகில் தெய்வம் கண்கூடாகத் திகழ விரும்புபவன். அழிவின்மேல் ஆக்கத்தின் வெற்றி எப்போதும் நிலைக்கவேண்டும் என விரும்பும்  பேதை. அவன் கொந்தளிப்புகளுடன் இன்று மேலும் அணுக்கமாகிறேன். ஞானத்தைத் தொடர்பவனின் பெருந்துயர் அவனுடையது.

டி.எச்.லாரன்ஸும் தடைசெய்யப்பட்டார். இன்றைக்கு இணையப் பாலியல்கொந்தளிப்பின் காலகட்டத்தில் அதற்கு எந்த அதிர்ச்சி மதிப்பும் இல்லை. ஆனால் இன்றும் கிறிஸ்துவின் இறுதிச் சபலம் சீண்டுகிறது, நிலைகுலையச் செய்கிறது, கடந்துசெல்லவைக்கிறது. இன்றும் அதை இங்கே நாடகமாக போடமுடியாது. பி.எம்.ஆண்டனியைப்போல மிகப்பெரிய விலைகொடுக்கவேண்டியிருக்கும்.  ஏனென்றால் டி.எச்.லாரன்ஸ் அக்காலகட்டத்தின் ஒழுக்கவியலை மீறிச்செல்கிறார்.கஸண்ட் ஸகீஸ் மானுடசிந்தனையில் என்றுமுள்ள எல்லைகளில் இருந்து ஓங்கி எழுகிறார். மதவாதிகளை ஞானிகள் கடந்துசெல்வதுபோல.  பேரிலக்கியத்தின் பாதை அதுவே.

தடம் மே 1 இதழில் வெளிவந்த கட்டுரை/நத்தையின்பாதை

முந்தைய கட்டுரைஉள அழுத்தம் -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-44