நல்லிடையன் நகர் -கடிதங்கள்

316a92f2-1d09-4c41-8d78-f17c3847c6ac.jpg

நல்லிடையன் நகர்-2

நல்லிடையன் நகர் -1

அன்புள்ள ஜெ,

சென்னைக்கு வந்தபின் மன்னார்குடியோடு தொடர்பு விட்டுப்போனது. பல வருட இடைவெளிக்குப்பிறகு சென்ற இந்த திருவிழா, நீங்களும் வந்ததால் இன்னமும் சிறப்பானதாக ஆகிவிட்டது. அம்மாவும் அப்பாவும் காசிக்கு இரண்டுவார பயணமாக சென்றிருந்தனர். நான் ஆர்த்தி மற்றும் குழந்தைகளுடன் அங்கு வந்திருந்தேன். அப்பாவின் நண்பர் வீட்டில் தங்கியிருந்தோம். முன்பு நாங்கள் வாடகைக்கு இருந்த வீட்டு உரிமையாளரும் அவர்தான். அவர் உங்கள் புத்தகங்களை இன்னும் வாசித்திருக்கவில்லை என்பதால் வரத்தயங்கிவிட்டார். அத்விகா, உங்களை நேரில் பார்த்ததும் குழம்பிவிட்டாள். திருவள்ளுவர், பாரதியார் கூட இப்படி புத்தகத்திலிருந்து எழுந்து வந்துவிடுவார்களோ என்ற சந்தேகம் அவளுக்கு.

மல்லிநாதர் கோயில் குறித்து உள்ளூர்வாசிகளுக்கு அதிகம் தெரியாது. சென்னையில் என் இருசக்கர வாகன பழுது பார்ப்பவர் சொல்லித்தான் மல்லிநாதர் பற்றி முழுமையாகத்தெரியும். அலுவலக நண்பர்கள் சிலர் ஆரணி, வேலூர் பகுதிகளில் உள்ள ஜைனர்கள், அவர்களின் இல்லத் திருமண விழாக்களில் கலந்துகொண்டு உறவினர்களுடன் உரையாடும்போதும், மல்லிநாதர் கோயில் பற்றி அறிந்திருக்கிறேன். முதன்முறையாக அந்த கோயிலுக்குள் வருகிறேன் என்றாலும் அதன் முக்கியத்துவம் அறிந்து வருகிறேன் என்ற எண்ணம் உவகையை அளித்தது. அத்விகாவும் அஸ்வத்தும் அந்த கோயிலின் கிணற்றை எட்டிப்பார்த்து விளையாடிக் கொண்டிருந்தனர். அவர்களையே கவனித்துக் கொண்டிருந்ததால் நீங்களும் மணிகண்டனும் பேசியதை கேட்கமுடியவில்லை. ஆர்த்திக்கு, நீங்கள் பேசியதில் பல தொடரமுடியவில்லை என்றாள். ராஜமாணிக்கம், கல்வெட்டு மற்றும் சிற்பங்கள் பற்றி விளக்கியது அவளுக்கு நன்றாக புரிந்தது.

அதன் பிறகு சென்ற ராஜகோபாலன் கோயிலும் அப்படியே. குழந்தைகள் வெளியே இருந்த கடைகளிலேயே நின்றுவிட்டனர். அதனால் தாமதமாகத்தான் வந்தோம். கோபில மற்றும் கோப்ரலய மஹரிஷிகளுக்கு தன் பிள்ளைப்பருவத்தின் விளையாட்டுக்களை கண்ணன் மீண்டும் தரிசனம் அளித்தது இந்தத்தலம் என்பது தலவரலாறு. பூதகி, காளிங்க நர்த்தனம் என அந்த கோலங்களை, நீலம் வாசித்த பின் மீண்டும் பார்ப்பது வேறுவகை புரிதலை அளிக்கிறது.

வெட்டுக்குதிரை புறப்பாட்டில், இந்தமுறை கள்ளர் சம்மூகத்தினர் சற்று அடக்கி வாசித்த்தாக பேசிக்கொண்டனர், திரு.நடராஜன் அவர்கள் இறந்துவிட்டதால், சிறிது சுணக்கம் என்றார்கள். அந்த கூட்டத்திற்கிடையே கடந்து சென்று உறங்க இரவு நேரமாகிவிட்டது. மறுநாள் தாராசுரம் வர இயலவில்லை. குழந்தைகள் காலை ஒன்பது மணிக்குத்தான் எழுந்தனர்.

உஙகளுடன் இருந்த சொற்ப நேரத்தில் திண்ணையிலும் அறையிலும் உரையாடியவை எனக்கு மிக முக்கியமானவை.

1) நாயக்கர் கால சிற்பங்களின் கருமையும் பிரம்மாண்டமும்

2) தஞ்சையில் கோலப்பொடி விற்றுச்செல்பவர்கள் சித்திரம் (அறம் கதையில் வரும் சம்பவம்) அதை தொடர்ந்து தஞ்சை எழுத்தாளர்கள்

3) ஒரு ஊடகமான இசையை இன்னொரு ஊடகமான ஓவியம் கொண்டு விளக்கமுடியும் என்றும் அதை எழுத்தில் கொண்டுவருவதாக நீங்கள் கூறிய உதாரணங்களும்

4) மெய் சிலிர்த்து, கண் கலங்கியது போன்ற இசை விமர்சன கட்டுரைகள்

5) இமையப்பயணம் மற்றும் நைமிசாரண்யம் பற்றிய அறிமுகம் மற்றும் அதை தொடர்ந்த திபெத்தின் வரலாறும் இன்றைய திபெத் இளைய தலைமுறையும்

6) எழுத்தாளனின் மரணம் என்கிற பதமும், பின்னர் ரஷ்ய இலக்கியமும் தஸ்தயேவ்ஸ்கியின் நாவல் மொழிபெயர்ப்புக்கு சுசீலாம்மாவின் அர்ப்பணிப்பும் பற்றிய உரையாடல்கள்

இவைகளைப்படித்து நான் தொகுத்து எழுத வேண்டும் என நினைக்கிறேன்
நம் குழும நண்பர் ஜோதி, நீங்கள் இமையம் பயணத்தில் இருந்த போது தன் திருமண பத்திரிக்கை அளிக்க உங்கள் வீட்டிற்கு வந்திருக்கிறார். திருமணம் காஞ்சியில். சென்ற ஞாயிறு மாலை வரவேற்புக்குச் சென்றேன். எந்த கோயிலுக்கும் செல்லவில்லை. எகாம்பரேஸ்வரர் கோயியில் ரிஷப வாகனத்தில் ஈஸ்வரன் புறப்பாடாக எதிர்கொண்டு வரவேற்றார். மக்கள் திரள், வேட்டு என இன்னொரு கோயில் நகரமாகவும் நல்லிடையன் நகரின் தொடர்ச்சியாகவும் இது அமைந்தது.

காளிப்பிரசாத்

***

முந்தைய கட்டுரைகவிதை மொழியாக்கம் -கடிதம்
அடுத்த கட்டுரைநாடோடிமன்னன்