கிளம்புதல் குறித்து… அனோஜன் பாலகிருஷ்ணன்

ano

அன்புள்ள ஜெயமோகன்,

சில நாட்கள் இணையத்தளத்தில் எந்தப்பதிவுகளும் இருக்காது என்று நீங்கள் அறிவித்தவுடன் அதைப் புரிந்துகொள்ள முடிந்தது. உள அலைக்கழிப்பபையும் அதன் தேடலையும் அத்தனை சீக்கிரம் மற்றவர்களுக்கு விளங்கப்படுத்திவிடவும் இயலாது. இலக்கற்ற ஒரு பயணம் என்றவுடனே என் எண்ணம் ஏனோ குளிர்மையும், சில்லிட்டு வீசும் காற்று நிரம்பிய இமயமலையை நோக்கியே சென்றது. என்ன ஆச்சர்யம் அதுவே நிகழ்ந்திருக்கின்றது.

இணையப்பதிவேற்றம் இல்லாதபோது பழைய கட்டுரைகளை மீண்டும் மீண்டும் வாசித்துக்கொண்திருந்தேன். நான் மட்டுமல்ல பலரும் அவ்வாறுதான் இருந்திருக்கிறார்கள் என்று நண்பர்களுடன் கதைத்தபோது தெரிந்தது. அடுத்த வெண்முரசு புத்தகம் எதிலிருந்து ஆரம்பிக்கும் யார் பார்வையில் முதன்மைப்படுத்தி எழுதப்படும் என்று நமக்குள் ஓர் விளையாட்டு. ‘வெண்பா கீதாயன்’ அதில் புலியாக இருந்தாள். எங்கிருந்து ஒவ்வொரு வெண்முரசு புத்தகத்திற்கும் தலைப்பு வருகிறது என்றும் வர்ணனைகள் எப்படியெல்லாம் உங்கள் பயணத்திலிருந்து பெற்று படைப்பாக்கத்தில் தொகுத்து எழுதுகிறீர்கள் என்றும் அவள் சொன்னபோது அவளின் கூர்மையான அவதானங்களைக்கண்டு வியந்தேன். தத்துவங்களுக்கூடாக தன் புரிதலை விரிந்து அவள் சொன்னதை வாயைபிளந்து மௌனமாகக் கேட்கவே என்னால் இயன்றது. இளைய வாசகர்களின் நுண்ணுணர்வை வெறும் ஃபேஸ்புக் விளையாட்டுத்தனத்தில் வைத்து மட்டும் புரிந்துகொள்ளவும் இயலாது என்பது ஒருபக்க உண்மையாகத் தோன்றுகிறது.

‘அவதூறுகள் ஏன்?’ என்கிற உங்கள் பழைய கட்டுரையை வாசித்தபோது. மிக உற்சாகமான மனநிலைக்குச் செல்ல நேர்ந்தது. ஈழத்திலுள்ள முன்னோடிகளின் புனைவுகளை நோக்கிச் சென்று வெறும் தரவுகளையும் உணர்ச்சி கொந்தளிப்பையும் கண்டு கண்ணீர் உதிர்த்து ஈழம் கிட்டத்தட்ட ஓர் இலக்கியப் பாலைவனம் என்பதை மீண்டும் மீண்டும் சொல்ல எண்ணற்ற வசகைகளையும் தனிமனித அவதூறுகளையும், சிறுவன், இந்தியக்கைக்கூலி என்ற விசித்திர பட்டங்களையும் சுமக்க நேருகின்றது. இருந்தபோதும் அதைச் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டும் என்கிற ஓர்மையை ‘அவதூறுகள் ஏன்?’ போன்ற கட்டுரைகள் உற்சாகம் புரவி வேகத்தில் ஓடத் தந்துவிடுகின்றன.

அன்புடன்

அனோஜன் பாலகிருஷ்ணன்

ttttt

அன்புள்ள அனோஜன்,

உண்மையில் கிளம்பிச்செல்வது போல இனிய செயல் ஏதுமில்லை. நெடுநாட்களாக திட்டமிடாத கிளம்புதல்கள் இல்லாமலிருந்தது. பதிலுக்கு உள்ளொடுங்கி எண்ணங்களில் பயணம்செய்துகொண்டிருந்தேன். அனைத்துப் பயணங்களிலும் நண்பர்கள் உடனிருந்தனர். அவர்கள் அணுக்கமானவர்கள் என்பதனாலேயே நான் தனித்த பயணங்களை எண்ணவில்லை. இம்முறை சென்றுவந்தபின் தோன்றுகிறது, இது பிறிதொன்று என. இதில் சொல்லொழிந்த கணங்கள் வாய்க்கின்றன. இயற்கையுடன் வெறுமே உடனிருக்கமுடிகிறது. இனி இதுவும் அவ்வப்போது வேண்டும் என எண்ணிக்கொண்டிருக்கிறேன்

செல்லும்போது அடுத்த நாவல்பற்றிய எண்ணமே இல்லை. மீளும்போதும். ஆனால் எழுதத் தொடங்கியபின்னர்தான் அங்கே அந்தத் தனிமையில்தான் அவை உருவாகியிருக்கின்றன என்ற எண்ணத்தை அடைந்தேன்

உங்கள் தொகுப்பை வாசித்துக்கொண்டிருக்கிறேன். விரைவில் எழுதுகிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஸ்டெர்லைட் – விளக்கங்கள்
அடுத்த கட்டுரைபசவமதமா?