ஆன்மிகமும் அரசியலும்

ara

அன்புள்ள ஜெ

அரசியலைக் காவு கொள்ளும் ஆன்மீகம்

அரசியலை ஆணையில் வைப்பதின் வழியே விடுதலையை அடையமுடியும் என்ற நம்பிக்கையைச் சிதைத்து, ஒதுக்கப்படும் – ஒடுக்கப்படும் விளிம்பு மனிதர்களைச் சமயச்சொல்லாடல்களுக்குள் இழுத்துக்கொண்டே இருக்கின்றனர். நிகழ்கால உலகம் நவீனத்துவம், பின் நவீனத்துவம் என அரசியல் தத்துவச்சொல்லாடல்களை விவாதித்துக் கொண்டிருக்கிறது. உலகத்திலிருந்து இந்தியாவைத் துண்டித்துச் சமயம், ஒற்றைச் சமயம், அறுசமயம், பரசமயம் எனப் பேசவைக்கிறார்கள். அரசியல் நீக்கம் செய்து நிலவுடைமைக்காலத்திற்கு இழுக்கும் பின்னோக்கிய இழுப்பைத்தவிர வேறில்லை. –

அ. ராமசாமி

https://www.facebook.com/ramasamy.tamil/posts/1679363455433606

இவரை  போன்றவர்  கூட  ஏன் இப்படிச்  சிந்திக்கிறார்கள்? உலகமே  நவீiனத்துவம்  பின்னவீனத்துவம்  என்று தான் சிந்திக்கிறதா?   சீனா அரபு  பாரசீகம் எல்லாம்?

ஐரோப்பியத் தத்துவ மரபுக்கும்  மத தெய்வ நம்பிக்கைகளுக்கும்  ஆரம்பத்தில் இருந்து  ஒர்  இடை வெளி உண்டு  இங்கு அப்படியல்ல  இந்திய தத்துவ சொல்லாடல்கள் வழியாக உலகுடன் பேசவேண்டும்  உலகமும் பேசவேண்டும்  என்ற கனவே யாருக்கும் வராதா ?

நவீன உலக அறிவுத்தளத்தை எங்கள் மரபு வழியாக  இப்படி புரிந்து கொள்கிறவம்  மானுட எதிர்காலத்திற்கு  எங்கள் மரபின் வழியாக நாங்கள்  கண்டடைந்துள்ள பாதை சிந்தனை இது என்று யாரும் சொல்ல வர மாட்டார்களா ?

ஐரோப்பா சொல்வதை வாங்கி இந்தியாவுக்கு இது தீர்வு என்று சொல்லப்படுகிறது  ஐரோப்பா  மட்டும் எப்படி உலகத்துக்காக சிந்திக்கிறது

எம்.தட்சிணாமூர்த்தி

***

அன்புள்ள தட்சிணாமூர்த்தி,

முதன்மையாக உங்கள் உணர்வுகளை புரிந்துகொள்கிறேன்.ஆனால் நீங்கள் குறிப்பிடுவதுபோல மிக எளிமையாகப் பார்க்கவேண்டிய விஷயம் அல்ல இது. இதன் வரலாற்றுப்பின்னணி, இதன் தத்துவ உள்ளடக்கம், இதன் அறவியல் ஆகியவற்றை சற்றேனும் கருத்தில்கொள்ளவேண்டும்

உலகம் முழுக்கவே மதம் நேரடியாக அரசியலை ஆண்டது. உண்மையில் அப்போது இந்தியாவில்தான் மதம் நேரடியாக அரசியலை ஆளவில்லை. ஐரோப்பியக் கிறித்தவத் திருச்சபைகள் ஆளும்சக்திகள். இஸ்லாமிய அகிலம் கலிஃபாக்களால் ஆளப்பட்டது. திபெத்திலும் இலங்கையிலும் பௌத்த மடாலயங்கள் நேரிடையாக ஆட்சி செலுத்தின. இந்தியாவில் மதத்தின் சடங்குத்தளம் மட்டுமே பிராமணர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆன்மிகத்தளம் துறவிகளிடம். பிராமணர்கள் எப்போதும் அதிகாரத்தை நேரடியாகக் கையாளவில்லை. துறவிகள் அதிகாரத்திடமிருந்து தொலைவை தக்கவைத்துக்கொண்டனர்.

அதிகாரம் இங்கே ஷத்ரிய வைசிய சூத்திரர்களிடமே இருந்தது. ஷத்ரியர்கள் படைசார் அதிகாரத்தை, வைசியர் நிதியதிகாரத்தை, சூத்திரர் நிலம்சார்ந்த அதிகாரத்தை கையில் வைத்திருந்தனர் இந்தியா முழுக்க நிலக்கிழார்கள் சூத்திரர்களே. அவர்களின் அதிகாரம் கூட்டாக அரசை கட்டுப்படுத்தியதன் சித்திரத்தை நாம் வரலாற்றில் காணலாம். தமிழ் வரலாற்றில் வேளிர்களின் அதிகாரம் ஒரு பெருந்திரள் சக்தி. சோழர்காலகட்டம் அதன் உச்சம். பலசமயம் அதிகாரப்போர்கள் இவர்களுக்கிடையேதான் நிகழ்ந்தன. சூத்திரர்களான வேளிர்கள் மற்றும் ஆயர்கள் அமைத்த பல அரசுகள் பின்னர் பேரரசுகளாகியிருக்கின்றன. அவர்கள் ஷத்ரியர்களாக அறிவித்துக்கொண்டிருக்கின்றனர். மௌரியர்கள், யாதவர்கள், மராட்டியர்கள் நாயக்கர்கள் என இங்குள்ள ஷத்ரியர்கள் பெரும்பாலும் இப்படி எழுந்துவந்தவர்களே.

பொதுவாக இந்தியாவில் மதத்தின் அதிகாரம் ‘கருத்தியல் செல்வாக்கைச் செலுத்துதல்’ என்ற முறையிலேயே இருந்தது. தார்மிகமான அதிகாரத்துக்கு அப்பால் நேரடி அதிகாரம் புரோகிதர்களுக்கோ மதத்தலைவர்களுக்கோ அளிக்கப்பட்டிருக்கவில்லை. வரலாறு முழுக்க அரசர்கள் எளிதில் மதத்தின் அதிகாரத்தைக் கடந்துசென்றதைக் காணலாம். மதநிறுவனங்கள் அரசாலோ வணிகர்களாலோ நிலவுடைமையாளர்களாலோ பேணப்பட்டவர்களாகவே இருந்தன.

ஐரோப்பா மதத்தின் நேரடி அதிகாரத்தில் இருந்து நான்கு நூற்றாண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. மதத்துடன் இணையாத ஜனநாயகம் மெல்ல அங்கே உருவாகி வந்தது. இன்று அது ஒரு நிறுவப்பட்ட கொள்கையாகவே அங்கு உள்ளது, ஆனால் எங்கும் முழுமையாக அது நடைமுறையில் இல்லை. பிரிட்டனினோ பிரான்ஸிலோ அமெரிக்காவிலோகூட. அது ஓர் உயர் இலட்சியம் மட்டுமே. எங்கும் அரசியலில் மறைமுகமாகவேனும் மத ஆதிக்கம் இருந்துகொண்டேதான் உள்ளது. ஆனால் அந்த இலட்சியம் உயர்ந்தது, எதிர்காலத்திற்குரியது என நான் நம்புகிறேன். இந்தியர்களுக்கு  நவீன ஐரோப்பா அளித்த கொடை ஜனநாயக அமைப்பு. அதன் அடிப்படைக் கருத்தியல் மதச்சார்பின்மை.

இங்கே ஆன்மிகம் என்று சொல்லப்படுவது மதத்தை அல்ல என்றே நான் நினைக்கிறேன். மதம் என்பது தத்துவம், அறநெறி, வழிபாட்டுமுறை, அமைப்புகள் என நான்கு தளம் கொண்டது. அதிலிருந்து அறநெறிகளை மட்டும் பெற்றுக்கொள்வதையே ஆன்மிகம் என்று காந்தி சொன்னார். அந்தப்பொருளில் ஆன்மிகம் என்ற சொல் கையாளப்பட்டிருந்தால் அது இயல்பானது, எளிய மக்களிடம் நேரடியாக தொடர்புறுத்துவது. அரசியலில் தொன்று தொட்டு இருந்துவரும் அடிப்படை அறத்தின் இருப்பை அது குறிப்பிடுகிறது. இந்தியா போல இன்னமும் மக்கள் மதத்திற்குள் வாழும் நாட்டில் இன்றியமையாதது அது.

மதத்தின் அமைப்புகள் ஒருபோதும் அரசியலில் ஈடுபட அனுமதிக்கக் கூடாது. அரசுச் சடங்குகளில் மதத்தின் வழிபாட்டுமுறை ஊடுருவக் கூடாது. மதத்தின் தத்துவம் அரசியலின் தத்துவத்துடன் உரையாடலாமே ஒழிய அன்றாட அரசியலில் அதற்கு இடமிருக்கலாகாது. அவ்வாறு அமைவது பலமதச் சமூகங்களுக்கு ஊறுவிளைவிப்பது. மதச்சார்பின்மை என்பதன் பொருள் இந்த விலக்கம்தான்.

ஆனால் அ.ராமசாமியின் குறிப்பில் எனக்கு விந்தையாகப் படுவது மதத்தைப் பற்றிய பேச்சே எதிர்மறையானது என அவர் எண்ணுவதுதான். ஒரு மரபின் பண்பாடும் இலக்கியமும் தத்துவமும் மதத்தின் வடிவில் இருக்கையில் அதை முற்றாக தவிர்த்துச்செல்லவேண்டும், பேசவோ விவாதிக்கவோ கூடாது, அவ்வாறு பேசுவது பழைமைவாதம், புதிய ஐரோப்பியக்கொள்கைகளை அங்குள்ளோர் பேசும் அவ்வடிவில் இங்கும் பேசவேண்டும் என்னும் அவருடைய எண்ணம்  சென்ற பல ஆண்டுகளாக இங்கு நிகழ்ந்து எதிர்விளைவுகளை உருவாக்கிய ஒன்று. இவ்வாறு பேசுபவர்கள் இங்குள்ள சூழலுக்குச் சம்பந்தமற்ற குரல்களாக, வேறெங்கோ நோக்கி ஏதோ சொல்லிக்கொண்டிருப்பவர்களாக ஆகிறார்கள் என்பதே இதன் பெறுபயன்.

நவீனச் சிந்தனைகளும் கோட்பாடுகளும் ஒருபக்கம் , மதம் இன்னொரு பக்கம் என்னும் அவருடைய பகுப்பு எனக்கு என்னவென்றே புரியவில்லை. நவீனச் சிந்தனைகளின் பணியே மதம் என்னும் பெருந்தொகைக்குள் உள்ள கருத்துக்களையும் குறியீடுகளையும் மேலும் அணுகிப்புரிந்துகொள்வதும், அவற்றில் சாரமானவற்றை எடுத்துப் பயன்படுத்துவதும்தான்.

இது நம் கல்வியாளர்களின் பொதுவான வழி. இவர்கள் ஒவ்வொன்றையும் எளிய அரசியல்சரிகள், அன்றாட அரசியல்சிக்கல்கள் வழியாகவே அணுகுகிறார்கள். ஆகவே எந்த சிந்தனைக்கருவி கிடைத்தாலும் அதைக்கொண்டு எளிய அரசியல்சமன்பாடுகளையே சென்றடைகிறார்கள்

ஜெ

ஆசிய உற்பத்திமுறை-கடிதம்

பேராசிரியரின் குரல்

கொற்றவை – ஒரு விமர்சனப்பார்வை

ஒரு மாற்றுக்கருத்து

முந்தைய கட்டுரைநல்லிடையன் நகர்- கடிதம்
அடுத்த கட்டுரைஎம்.ஏ.சுசீலா விழா -புகைப்படங்கள்