லக்ஷ்மி மணிவண்ணன் எழுதிய இக்கட்டுரை விந்தையான சில உணர்வுகளை எழுப்பியது. இன்றில்லை, என்றேனும் இவற்றை விரிவாக எழுதியாகவேண்டும் என நினைத்துக்கொண்டேன். 2000 த்தில் நான் வீடுகட்டினேன். அத்தனை கடன்களையும் வாங்கி எல்லா தவணைகளையும் கட்டியபின் மாதம் 1700 ரூபாய் மட்டுமே கையில்வரும், எனக்கும் அருண்மொழிக்கும் சேர்த்து. குழந்தைகள் பள்ளியில் படிக்கும் காலம். சுவரில் முட்டிக்கொண்ட திகைப்பு. நான் எவரிடமும் பொருளுக்கு நிற்கலாகாதென்பதனாலேயே கஞ்சனாக என்னை மாற்றிக்கொண்டவன். அந்நிலையை கற்பனை செய்திருக்கவில்லை
ஒருமாதம்தான். மலையாள மனோரமாவிலிருந்து அழைத்தார்கள். “வீடுகட்டினீர்களாமே?” என்றார்கள். “ஆமாம்” என்றேன். “சொல்லவேண்டாமா? கடன் என்ன?” .நான் சொன்னேன். “சரி, பாஷாபோஷிணியில் மாதம் ஒரு கட்டுரை எழுதுங்கள்” நான் தயங்கி என்னால் மலையாளத்தில் எழுதுவது கடினம் என்றேன். எழுதிப்பழக்கமில்லை. “ஒருபக்கம் போதும்” என்றார்கள். அந்தத்தொடர் ஐந்தாண்டுக்காலம் வந்தது. மாதம் இரண்டாயிரம் ரூபாய்.
அடுத்தமாதமே மாத்யமம் இதழிலிருந்து அழைப்பு. அதே கேள்வி. அதில் ஒரு தொடர் எழுதினேன். அதற்கும் மாதம் இரண்டாயிரம் ரூபாய். அதுதான் பின்னர் சங்கசித்திரங்கள் ஆகியது. என் கையில் மீண்டும் மிகையாகப் பணம் நின்றது. நான் நெடுநாட்களாக எண்ணியிருந்த ‘ஆடம்பரப் பொருட்களான’ வண்ணத்தொலைக்காட்சி போன்றவற்றை அப்போதுதான் வாங்கினேன். வீடுகட்டி கடனில் உழன்று வெறுத்துப்போயிருப்பேன். என்னை மலையாள இதழ்கள் காப்பாற்றின. இன்றுவரை நான் மலையாளத்தில் எழுதாத மலையாள எழுத்தாளன் அவர்கள் நோக்கில். என்னை அவர்கள் கைவிட்டதேயில்லை. அன்று அவர்கள் உதவியதனால்தான் காடு, ஏழாம் உலகம், கொற்றவை என எழுதிக்கொண்டே இருக்க முடிந்தது.
திரைத்துறைக்கு என்னை அழைத்தவர் லோகிததாஸ். நான் தயங்கியபோது அவர் சொன்னார், “ஜெயமோகன் வாழ்க்கையில் இதுவரைச் சந்திக்காத மதிப்பும் செல்வமும் இங்கிருந்து வரும். இது கலைமேல் குறைந்தபட்ச ஆர்வம் கொண்டவர்கள் மட்டுமே புழங்கும் உலகு” நான் இன்று அதை லோகியிடம் மானசீகமாகச் சொல்லிக்கொள்ளாத நாளே இல்லை. 2009 ல் கைவிடப்பட்ட ஒரு படத்திற்காக நீண்டநாட்கள் தாண்டி எஞ்சிய ஊதியத்துடன் தேடிவந்த தயாரிப்பாளர் என்னிடம் சொன்னார் “என்ன இருந்தாலும் சரஸ்வதியோட பணம் சார்”.
சினிமா இல்லையேல் இன்று என்னவாக இருப்பேன்? பிள்ளைகளின் படிப்பு உட்பட்ட செலவுகள் தலைக்குமேல் நின்றிருக்கும். அலுவலகவேலை தனியார் மயமானபின் உச்சகட்டப் பொறுப்பாக மாறிவிட்டிருக்கும். ஒருநாளுக்கு 12 மணி நேரம் வேலைபார்த்து, பணம் போதாமல் கடன் வாங்கி, அதன் மன உளைச்சல்களுடன் எழுதமுடியாத ஏக்கத்துடன் வாழ்ந்து கடந்திருப்பேன். இத்தனை பயணம் செய்திருப்பேனா? இத்தனை எழுதி இவ்வளவு பாதிப்பை உருவாக்கியிருப்பேனா? வெண்முரசை நினைத்துக்கூட பார்த்திருப்பேனா? முன்னோடிகள் அனைவருமே நாற்பது வயதுக்குள் சோர்ந்து, சூழலால் கைவிடப்பட்டு நின்றுவிட்ட வரலாறு கொண்டது தமிழிலக்கியம். அதற்குமேல் சிறுமைகள், கசப்புகள். எளியோனாக நின்று அவற்றை எதிர்கொள்வது கடினம்
ஒருமுறை அரங்கசாமி சொன்னார், ’வேலையை விட்டதுமே உங்க உடல்மொழி மாறிட்டுது சார். ஒரு கம்பீரம் வந்துவிட்டது’ அது உண்மை. வேலையில் நான் ஒட்டியதே இல்லை. ஆனால் அது என்னை வரையறைசெய்துகொண்டே இருந்தது. குமாஸ்தா என்பது ஒரு வேலை அல்ல, ஒரு சமூகநிலை. அதற்குரிய உணர்வுகள், பாவனைகள், கட்டாயங்கள் பல உண்டு. நான் சினிமாவினூடாக உடைத்து வெளிவந்தது அந்த அடையாளத்தைத்தான். சினிமாவில் ஒவ்வொரு இடத்திலும் என் வாழ்நாளில் அடைந்த உச்சகட்ட மதிப்பை அடைகிறேன். அதன்பின்னரே வெண்முரசு எழுதும் அகத்தருக்குநிலை எனக்கு அமைந்தது.அளிப்பவனாக ஆனேன். என்னிடம் இருக்கும் குறைந்தபட்ச செல்வம் எனக்கு அளிக்கும் தன்னம்பிக்கை ஒரு தெய்வம் அளிப்பதற்கு நிகர்.
பொதுவாக தமிழ்ச்சூழலை இரண்டாகப் பிரிக்கலாம். எழுத்தாளரைப் புரப்பவர்கள் இங்கு என்றுமுள்ளனர். நானறிந்த எந்த எழுத்தாளரும் கைவிடப்பட்டதில்லை. அந்த உள்வட்டமே இன்றுவரை இங்கே கலைகளின் காவலர்கள். அதற்கு வெளியே உள்ள இன்னொரு பெரியவட்டம் எழுத்தாளர்கள், கலைஞர்கள் வறுமையில் இருக்கவேண்டும், வளைந்து நிற்கவேண்டும் என விரும்புகிறது. அனைவருக்கும் முன்னால் என்னை நிமிர்ந்து நிற்கச்செய்தது சினிமா. என் பொருளியல்நிலை தமிழ்ச்சூழலை வைத்துப்பார்த்தால் பெரிதல்ல. ஆனால் இந்த தன்னிமிர்வே சாதாரணர்களைப் பதறச்செய்வதைக் காண்கிறேன். எழுத்தாளனுக்கு வறுமையே அழகு என எண்ணிய அவர்களின் உள்ளம் நிலையழிகிறது. அவர்களின் ஆற்றாமையை பொருமலை எவ்வகையிலேனும் அவ்வப்போது சந்தித்துக்கொண்டுமிருக்கிறேன். புன்னகையுடன் கடந்துசெல்கிறேன்.
பெரியன இய்ற்ற உள்ளே ஒன்று தருக்கி நின்றிருக்கவேண்டும் என்பது விதி. சினிமா இல்லையேல் எங்காவது பணத்தின் பொருட்டு குறுகியிருப்பேனா? புறத்தே குறுகுகையில் அகம் வீம்புக்குத் தருக்கலாமே ஒழிய இயல்பாக நிமிர இயலாது. சமீபத்தில் என்னிடம் நிதி உதவி கோரிய ஓர் எழுத்தாளர் சொன்னார் ‘வேறெங்கு கேட்டிருந்தாலும் நான் குறுகவேண்டியிருக்கும். என்னைப்போன்ற ஒருவரிடம் கேட்கிறேன். ஆகவே குறைவில்லை’ அதை புரிந்துகொள்கிறேன். நான் கேட்டிருந்தால் அவரைப்போன்றவரிடமே கேட்டிருப்பேன். அது என் பணம் அல்ல, எங்கள் பணம். கம்பனுக்கு சடையப்பன் ‘கொடுத்திருக்க’ மாட்டான், ‘படைத்திருப்பான்’.
சினிமாவுக்கு முன் அலுவலகத்திற்குள் என்னைக் குறுக்கிக்கொண்டுதான் இருந்தேன். ‘நீங்க எழுத்தாளரா? சரி ஒழுங்கா வேலையச்செய்ங்க. அது வரைக்கும் எனக்குப்பிரச்சினை இல்லை. ஓக்கே?” என எத்தனை முறை கேட்டிருப்பேன். அது என்னை பாதிக்காத படி ஒரு விலகலை கடைப்பிடித்தேன் என்றாலும் அதிலிருந்து தப்பவில்லை. அதிலிருந்து வெளிவந்தபின்னரே நான் விரிந்தேன். வெண்முரசின் ஒரு நாவலை என்னை எழுத்தாளனாக நிலைநிறுத்திய லோகி, பாலா, வசந்தபாலன் முதல் மணிரத்னம், சங்கர் வரையிலான அனைத்து இயக்குநர்களுக்கும் சமர்ப்பணம் செய்யவேண்டும். தமிழகத்திற்கு நான் கொடுத்திருக்கிறேன், ஒன்றும் பெற்றுக்கொண்டதில்லை. உலகியலில் நான் கடன்பட்டவர்கள் சினிமா இயக்குநர்கள் மட்டுமே.