இணைப்புகளின் வலைப்பாதை

sengamalathayar-rajagopalan1

நல்லிடையன் நகர்-2

நல்லிடையன் நகர் -1

அன்புள்ள ஜெ ,

நல்லிடையன் நகரில் ஸ்ரீராஜகோபாலனை பற்றி எழுதியிருந்தீர்கள். இந்தக்கோயில் சாக்தத்துடன் இணைத்து சொல்லப்படுகிறதே, ஸ்ரீவித்யா  ராஜகோபாலன் என்று சொல்கிறார்கள். சாக்தம் வைணவத்துடன் இணைத்து சொல்லப்படுவது  எவ்வாறு.  சில  இடங்களில்  சம்மோஹன  கிருஷ்ணன் என்று சொல்கிறார்கள், இவையெல்லாம் பிற்கால இணைப்புகளா? வைணவ தத்துவங்கள் இதையெல்லாம் அங்கீகரிக்கிறதா?

தாமரைக்கண்ணன், பாண்டிச்சேரி

photo

அன்புள்ள தாமரைக் கண்ணன்,

வரலாற்றுரீதியாக என் புரிதல் இது. ஏறத்தாழ ஐந்தாம் நூற்றாண்டுவரை இந்துமரபின் உட்பிரிவுகளான ஆறுமதங்களும் தனித்தனியாகவே இருந்தன. சைவம், வைணவம், சாக்தம், கௌமாரம், காணபத்தியம், சௌரம்.

இவற்றில் சைவத்திற்குள் காபாலிகம், காளாமுகம், மாவிரதம், பாசுபதம், பைரவம், மாகேஸ்வரம் போன்ற பல உட்சமயப்பிரிவுகள் முற்றிலும் தனித்தனியாக இயங்க அது ஒரு மதக்குழுமம் போலவே செயல்பட்டது. ஒவ்வொன்றுக்கும் சிவஉருவகமே வேறு. வழிபாட்டுமுறைகள் வேறு

வைணவத்திலேயே வாசுதேவ வழிபாடு, நாராயண வழிபாடு, மால்வழிபாடு போன்றவை தனித்தனியாக இயங்கின என்று சுவீரா ஜெயஸ்வாலின் நூலில் காண்கிறோம் [வைணவத்தின் தோற்றமும் வளர்ச்சியும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்] விஷ்ணுவின் அடையாளங்கள் தனித்தெய்வங்களாக இருந்திருக்கின்றன. துணைத்தெய்வங்கள் தனியாக இருந்திருக்கின்றன.

அக்காலகட்டத்தில் சூரியவழிபாடு மையமான பெரிய மதமாக இருந்திருக்கிறது. இந்தியா முழுக்க கொனார்க் போன்ற மாபெரும் சூரியன் ஆலயங்கள் இருந்தன. தமிழகத்திலெயே சூரியனார்கோயில் போன்ற ஊர்கள் உள்ளன

சாக்தம் இவற்றில் அளவில் பெரியது. இந்தியா முழுக்க ஆயிரக்கணக்கான தாய்த்தெய்வங்கள் இருந்தன. அவை சாக்தமாக இணைந்தன. ஒவ்வொரு பகுதிக்கும் தனித்தனியான சாக்த மதப்பிரிவுகள் இருந்தன. சாக்த மரபிலேயே ரகசியச்சடங்குகள் கொண்ட தாந்த்ரீகப்பிரிவுகள் இருந்தன. அவற்றுக்குள் இடம் வலம் என்னும் போக்குகள் இருந்தன.

இந்தமதங்களின் பரிணாமம் ஒன்றுபோலவே. மார்க்ஸியர்கள் அளிக்கும் சித்திரம் புறவயமான பொருளியல்சூழல் காரணமாக அது உருவானது என்பது. அதை முழுதேற்கவேண்டியதில்லை என்றாலும் பொருளியல் மாற்றத்திற்கு அதன் விளைவான அரசியல்மாற்றத்திற்கு இவ்விணைவுகளில் வலுவான பங்கு உண்டு என்பதே என் எண்ணம்

பேரரசுகள் உருவாகி வணிகம் வளர்ந்து நிலப்பகுதிகள் ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளத்தொடங்கியபோது இவ்வழிபாட்டுமுறைகள்  பொதுவான அடையாளங்களுடன் இணைந்து  ஒற்றை மதங்களாக வளர்ந்தன. அதற்கான தேவைகள் இருந்தன. உலகமெங்கும் இணைவே வளர்ச்சியின் வழி [இங்கே திராவிடவாதிகள் இதை ஒரு சதிக்கோட்பாடாகச் சொல்ல, தற்குறிகளாகிய உள்ளூர் மார்க்ஸியர் அதை ஏற்றுச்சொல்லும் அவலம் உள்ளது]

பிற ஞானமரபுகளுடன் உரையாடி தத்துவங்களைக் கடன்கொண்டும், வளர்த்துக்கொண்டும் ஒவ்வொன்றும் தங்களைத் தொகுத்துக்கொண்டன. அதற்கேற்ப புராணங்களை உருவகித்துக்கொண்டன. வழிபாட்டுமுறைகளை மாற்றியமைத்துக்கொண்டன.

இந்த வளர்ச்சிப்போக்கில் சைவம் வைணவம் சாக்தம் மட்டுமே தனிப்பெருமதங்களாக நீடித்தன. முருகவழிபாடான கௌமாரமும் பிள்ளையார் வழிபாடான காணபத்யமும் சைவத்துடன் இணைந்தன. சௌரம் மீண்டும் சிலகாலம் நீடித்து கிபி எட்டாம்நூற்றாண்டுக்கு முன்பு பிரிந்து சைவத்துடனும் வைணவத்துடனும் கலந்தது. இரு மதங்களிலும் சூரியவழிபாட்டின் அம்சங்கள் இன்றுள்ளன

சாக்தம் மேலும் நீடித்தது. ஆனால் பக்தி இயக்கக் காலகட்டத்தில், பத்தாம்நூற்றாண்டுக்குப்பின், சைவமும் வைணவமும் மிகப்பெரிய மதங்களாக எழுந்தபோது சாக்தம் வலுவிழந்து அதுவும் இரண்டாகப்பிரிந்து இரு மையமதங்களிலும் இணைந்தது. கேரளம் வங்கம் அஸாம் போன்ற இடங்களில் பழைய சாக்தத்தின் சில பிரிவுகள் தனித்தியங்கினாலும் மையப்போக்கில் சைவ,வைணவப் பெருமதங்கள்தான் உள்ளன.

ஆகவே இன்றுள்ள சைவம் வைணவம் இருமதங்களிலுமே சாக்த அம்சங்கள் உண்டு. வைணவத்தில் உள்ள ஸ்ரீவித்யா உபாசனை போன்றவை சாக்தத்திலிருந்து கொண்டவை. சைவத்திற்குள் வெளிப்படையாகவே சாக்த அம்சங்கள் நீடிக்கின்றன. சிவசக்தி மோதல், சக்தியில்லையேல் சிவமில்லை போன்ற கதைகள் இந்த மோதலையும் இணைப்பையும் குறிப்பவை. வைணவத்திலேயே லட்சுமிக்கு முக்கியத்துவம் அளிக்கும் பிரிவுகளும் அளிக்காத பிரிவுகளும் இன்றுமுள்ளன.[நவக்கிரகங்கள், சக்கரத்தாழ்வார் வழிபாடு முதலியவை]

இந்த மாபெரும் வரலாற்றுப் பரிணாம அடிப்படையில்தான் ஒவ்வொரு ஆலயத்திற்கும் உரிய தனித்தன்மைகள் அமைகின்றன. சில ஆலயங்கள் தேவிக்கு முக்கியத்துவம் உடையவை. சில ஆலயங்களில் சக்கரம் அல்லது சூரியன்  போன்ற தெய்வங்கள் முதன்மைகொண்டிருக்கும். இவை முன்பு அந்த தெய்வங்களுக்குரியவையாக இருந்திருக்கலாம்.

பொதுவாக இங்கே நாம் காணும் ஆலயங்களெல்லாம் மிகச்சிறியவையாக இருந்து பத்தாம்நூற்றாண்டுக்குப்பின் பெரியதாகக் கட்டப்பட்டவை. அப்போதுதான் சைவ வைணவப்பெருமதங்கள் இன்றைய வடிவில் உருவாகின்றன. ஆகவே அவ்வாலயங்கள் அந்த வழிபாடுகளுடன் இணைத்தே இன்றையவடிவில் கட்டப்பட்டிருக்கும்.

ஓர் ஆலயத்தின் வழிபாட்டுத் தனித்தன்மையை, அங்குள்ள தெய்வங்களின் சிறப்பை இந்த பின்னணியில் பார்ப்பது என் வழக்கம். இது வரலாற்று நோக்கு என்பதையும் அந்த ஆலயத்தை வழிபாட்டாளர் பார்க்கும் ஆழ்படிம நோக்கு இதுவாக இருக்கவேண்டியதில்லை என்றும் உணர்ந்தே இதைச் சொல்கிறேன்.

கேரளத்திலுள்ள பெரிய ஆலயங்களில் ஒன்றைப்பார்க்கலாம். உதாரணம் கொடுங்கல்லூர், செங்கன்னூர். இவை பகவதி ஆலயங்கள். அவ்வாறே அழைக்கப்படுகின்றன, வழிபடப்படுகின்றன. ஆனால் ஆலயத்திற்குச் சென்றால் நேர் எதிரே இருக்கும் மையக்கருவறை சிவனுக்குரியது. செங்கன்னூரில் கருவறை வட்டவடிவமானது. வட்டமாகச் சுற்றிச்சென்றால் நேர்பின்பக்கம் மேற்குநோக்கி பகவதி.

கொடுங்கல்லூரில் மேற்குநோக்கிய பகவதியின் கருவறை நிரந்தரமாக மூடப்பட்டு இன்னொன்று தெற்குநோக்கி அமைக்கப்பட்டுள்ளது. அதுவே மையவாயில். ஆனால் கிழக்குநோக்கிய கருவறை ஒன்று உண்டு. அதில் சிவனே மையத்தெய்வம்.

நம் ஆலய வடிவமைப்புகளிலேயே எப்படி சாக்தம் சைவத்தால் உள்ளிழுக்கப்பட்டது என்பதைக் காணலாம். மதுரை மீனாட்சியின் ஊர். ஆனால் மையத்தெய்வமாக இன்று அமைந்திருப்பவர் சொக்கநாதர். சங்கரன்கோயில் உண்மையில் கோமதியின் ஆலயம்.

எப்போதும் உட்பிரிவுகள் தங்கள் தனித்தன்மையைத் தக்கவைப்பனவாகவும் மையத்தில் தத்துவதரிசனம் ஒற்றையாக முடிச்சிடப்பட்டதாகவுமே இந்துமரபு இருந்துள்ளது. இந்த இறையுருவகங்கள் அனைத்துக்குமே மையத்தில் வேதத்தின் பிரம்மம் என்னும் கருத்துரு இருந்தது.

எட்டாம் நூற்றாண்டில் சங்கரர் ஆறுமதங்களையும் ஒன்றென இணைக்கும் கொள்கையை உருவாக்கினார். ஷன்மதசங்கிரகம் என்னும் அந்த தத்துவ இயக்கம் பன்னிரண்டாம்நூற்றாண்டில் ஆறுமதங்களுக்கும் பொதுவான பூசகர்களான ஸ்மார்த்த மரபை உருவாக்கியது. இன்றுள்ள இந்துமதக் கட்டமைப்பு அதன்பின் உருவானது

இந்த இணைப்பு என்பது தத்துவத் தளத்தில் தொடர்ச்சியான விவாதம் வழியாக நிலைகொண்டது. புராணங்கள் அதற்கேற்ப மாறிக்கொண்டே இருந்தன.பத்தாம் நூற்றாண்டு முதல் பதினெட்டாம் நூற்றாண்டு வரை இந்தியாவில் பல்லாயிரக்கணக்கான புராணங்கள் உருவாயின. தலபுராணங்கள் எழுதிக்குவிக்கப்பட்டன. இத்தனை புராணங்களுக்கான தேவை இவ்வாறு இணைப்புகள் தொகுப்புகள்வ ழியாக உருவானதே

இது  தத்துவங்களும், வழிபாட்டு மரபுகளும், வெவ்வேறு பகுதிகளின் பண்பாட்டு மரபுகளும் ஒன்றோடொன்று கலந்து உருவான மாபெரும் வலைப்பின்னல். முன்முடிவுகள் , மூர்க்கமான பற்றுகள் ,  அரசியல் சார்ந்த குறுக்கல்நோக்கு, பழைமை வாதம் போன்றவை  இல்லாமல் அனைத்துக் கோணங்களிலும் தொடர்ச்சியாக நோக்கும் ஆய்வாளர்களால் மட்டுமே ஓரளவேனும் புரிந்துகொள்ள முடிவது. அத்தகைய சமநிலை, உள்நோக்கமற்ற பார்வை இன்று மிக அரிதாகிவிட்டது.

ஸ்ரீவித்யா [  http://www.hindupedia.com/en/Sri_Vidya ] போன்ற தனித்துவங்கள் எந்தெந்த ஆலயத்திற்கு உள்ளன, அவற்றுக்கான முறைமைகள் என்ன என்றெல்லாம் ஏராளமான ஆகமக்குறிப்புகளும் சடங்குவிவரணைகளும் வாசிக்கக் கிடைக்கின்றன.  மேலதிகமாக ஆர்வமிருந்தால் தொடர்ந்து செல்லலாம்.  நண்பர் அனீஷ்கிருஷ்ணன் நாயர் இதில் ஆழ்ந்திருப்பவர்

பலசமயம் இவை தத்துவத்தை கைவிட்டுவிட்டு ஆசாரவிவாதங்களாக, மூலநூல் ஒப்பீட்டு பூசல்களாக மாறிவிடும் என்பதே அபாயம். அது முடிவில்லா சுழற்பயணம். அவர்கள் இந்த வரலாற்றுநோக்கையே ஒப்புக்கொள்ள மாட்டார்கள். அவர்களின் வரலாறு வெளியே நிகழ்வதே அல்ல.

ஜெ

முந்தைய கட்டுரைஸ்டெர்லைட்- சூழியல் இயக்கங்களின் பணி
அடுத்த கட்டுரைஅஞ்சலி – மலையாள எழுத்தாளர் எம்.சுகுமாரன்