வெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-8

wild-west-clipart-rodeo-31விண்ணின் மூச்சுலகில் அப்போதும் வசுஷேணர் எஞ்சியிருந்தார். வேறு ஒரு காலத்தில் விழிநிலைக்க அமைந்து அனைத்தையும் நோக்கிக்கொண்டிருந்தார். அவருக்கு முன்னும் பின்னும் வாழ்ந்தவர்கள் அனைவரும் மூச்சுலகிலிருந்து வேறுலகுகளுக்கு எழுந்துசென்றபின் அவர் மட்டும் அங்கே எஞ்சினார். அவர் எவரென்று அங்கிருக்கும் பிறரும் அறிந்திருக்கவில்லை. அங்கு அவ்வாறு நின்றுவிட்டவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு முற்றிலும் தனித்துவிடப்பட்டு வான்தெளிந்த கோடைகால இரவுகளில் மட்டும் நடுங்கும் சிறு விண்மீன் என மண்ணில் சிலர் விழிகளுக்கு தென்பட்டனர். அவர்களை அண்ணாந்து நோக்கியவர்கள் அவ்விண்மீன்கள் உணர்த்திய பெருந்தனிமையை நெஞ்சுணர்ந்து அகம்நடுங்க விழிவிலக்கிக்கொண்டனர்.

வசுஷேணர் மண்ணிலிருந்து எழுந்து மூச்சுலகை அடைந்தபோது விம்மி அழுதுகொண்டிருந்தார். மூச்சுலகில் அவரை எதிர்கொண்ட கந்தர்வனாகிய சுகாலன் “அழுதபடிதான் நீங்கள் இங்கு வரமுடியும் அரசே, வருக!” என வரவேற்றான். “நான் ஏன் இத்தனை துயர்கொண்டிருக்கிறேன்?” என்று வசுஷேணர் கேட்டார். “நீங்கள் காம்பு கனிந்து உதிரவில்லை” என்று சுகாலன் சொன்னான். “ஏன்?” என்று வசுஷேணர் மீண்டும் கேட்டார். “களம்கொண்டு செல்லும் அம்புகள் முற்றொழியாமல் பாசறை திரும்புபவர்களுக்கு போர் முடிவதேயில்லை” என்றான் சுகாலன். அவர் பெருமூச்சுடன் “என்னால் எதையும் வகுத்துக்கொள்ள முடியவில்லை” என்றார்.

நூற்றகவை நிறைந்த நாள் கழித்து மூன்று மாதங்களுக்குப் பின் அஸ்தினபுரியிலிருந்து அவர் சதசிருங்கத்திற்கு கிளம்பும்போது அந்தணர்தலைவர் முந்தையநாளே அவர் அறைக்கு வந்து “அரசே, கானேகுதல் என்பது அரசர்களின் வழக்கமான கானுலா அல்ல. இது துறவு. இதுவரை அரசர் என்றும் குருகுலத்தவர் என்றும் குடித்தலைவர் என்றும் அமைந்து நீங்கள் கொண்ட அனைத்தையும் முழுமையாகத் துறந்து கிளம்புவதே இதன் நெறி. உங்கள் பெயரும் இனி உங்களிடம் இருக்கலாகாது. நீங்கள் விரும்பும் எதையும் உடன் கொண்டுசெல்லவேண்டாம். விருப்பங்கள் பற்று வளர்ப்பவை. நீங்கள் வெறுப்பவற்றையும் வைத்துக்கொள்ளவேண்டாம். அவை மும்மடங்கு பற்றை வளர்ப்பவை” என்றார். அவர் “ஆம், அமைச்சர் சொன்னார்” என்றார்.

கிளம்புவதற்கு குறிக்கப்பட்ட நாளின் முதற்காலைப் பொழுதின் இருளில் அவர் அரண்மனையிலிருந்து இறங்கி வந்து முற்றத்தில் நின்றார். அயல்நகர்களை ஆண்ட தம்பியர் வந்திருந்தனர். விருஷசேனனும் பிற மைந்தரும் ஓசையற்ற நிழல்களாக அரண்மனை முற்றத்தில் கூடியிருந்தனர். உரிய பொழுது அணைந்ததும் அந்தணர்தலைவர் தௌம்யர் வேதமோதி கங்கைநீர் தெளித்து அவரை வாழ்த்தினார். முனிவரான கர்க்கர் மரவுரியை மரத்தாலத்தில் வைத்து அளித்து “இதை கொள்க! இதுவும் உடைமையாகாமலொழிக!” என்றார். “ஆம், உடைமை என ஏதும் கொள்ளமாட்டேன்” என்று மும்முறை சொல்லி அவர் அதை பெற்றுக்கொண்டார்.

ஆனால் தன் வாய்க்குள் சிறிய அருமணி ஒன்றை அவர் கரந்திருந்தார். அதை அவரன்றி எவரும் அறிந்திருக்கவில்லை. அவர் அன்னை அவருக்கு அணிவித்த குண்டலங்களில் ஒன்றிலிருந்த மணி அது. அவரைப் பெற்றதுமே சேடியிடம் கொடுத்து அங்கநாட்டுக்கு அனுப்பியபோது அடையாளம் காணும்பொருட்டு அன்னை அணிவித்தது அக்குண்டலம். அவனை புரவிச்சூதரான அதிரதர் எடுத்து வளர்த்தபோது சூதனல்ல என்று ஒவ்வொருகணமும் அடையாளம் காட்டியது. அதனாலேயே அவனை அவர்கள் மணிகர்ணன் என்றழைத்தனர்.

அன்னையின் ஒற்றர்கள் அதனூடாகவே அவனை கண்டடைந்தார்கள். அன்னையின் மூத்தவராகிய மதுராவின் வசுதேவர் அவனை அன்னையிடம் அழைத்துச்சென்றபோது அவனை அப்பால் கண்டதுமே அன்னை ஓடிவந்து அவன் குண்டலங்களைத்தான் முதலில் தொட்டுநோக்கினாள். மறுகணம் அள்ளி உடலுடன் சேர்த்துக்கொண்டு கதறி அழுதாள். அவன் தலைமுகர்ந்து தோள்களை வருடினாள். “உன் காதுமணிகள்… அவை இரு விழிகளுடன் இணைந்து ஒளிவிட்டன. நீ எவரென்று காட்டின” என்றாள். அவனை அவள் கர்ணன் என்றழைத்தாள்.

பின்னர் அணிகளும் மணிகளுமாக பொலிந்தபோதும் அன்னை அணிவித்த அந்த முதல் நகையையே தன் அடையாளமென வசுஷேணர் கொண்டிருந்தார். அந்தச் செவியணியாலேயே கர்ணர் என்று குடிகளால் அழைக்கவும்பட்டார். ஒருபோதும் அதை கழற்றியதில்லை. அந்த அருமணிகளைப்பற்றி அன்றாடமென சூதரும் புலவரும் புகழ்மொழி பாடினர். அவர் கனவில் அவரெழுகையில் அந்த மணிக்குண்டலத்தின் ஒளியையே முதலில் கண்டார்.

முந்தையநாள் இரவில் அமைச்சர் சௌனகர் வந்து மறுநாள் அணிகளை கழற்றிவிடவேண்டும் என்று சொன்னபோது முதலில் எண்ணத்திலெழுந்தது அந்தக் குண்டலங்களை கழற்றவேண்டுமா என்றுதான். ஆனால் மெலிந்த கழுத்தில் முடியற்ற வறுந்தலை நடுங்கிக்கொண்டிருக்க, களைப்பில் இமைகள் சரிந்து தழைய, பற்களில்லாத வாய் தாடைதொங்கித் திறந்திருக்க நரைத்த இமைகளுக்குக் கீழே வெளிறிய விழிகளுடன் அவர் வெறுமனே நோக்கிக்கொண்டிருந்தார். அன்றிரவெல்லாம் துயிலாமல் இருளில் படுத்திருந்தார். அரண்மனையின் ஓசைகள் மிக அண்மையிலெனக் கேட்டன. அத்தனை ஒலிசூழ்ந்ததே தான் அதுவரை அறிந்த அமைதி என அன்று உணர்ந்தார்.

மறுநாள் பிரம்மப்பொழுதில் அவரை அணியறைக்கு கொண்டுசென்று அமரச்செய்து ஒவ்வொரு பூணாகக் கழற்றியும் உருவியும் வெட்டியும் எடுத்தனர் அணியர். நூறாண்டுகளாக ஒவ்வொருநாளும் அவர்கள் அணிவித்ததுபோலவே அமைதியாக, பிழையற்ற அசைவுகளுடன், அணிகளை நீக்கினர். அவர்கள் இறுதியாக குண்டலங்களைக் கழற்றி அணிப்பேழையில் வைத்துவிட்டு பின்விலகி “முழுமை, அரசே” என்றனர். அச்சொல் அவரை திடுக்கிடச் செய்தது. ஆடியில் தன் முதிய முகத்தை, வளைந்த வெற்றுடலை நோக்கினார். ஒவ்வொருநாளும் அணிகளைத்தான் நோக்கிக்கொண்டிருந்தோம் என்று உணர்ந்தார். முன்பு உடல் ஓங்கி அழகுகொண்டிருந்த நாளில் அணிகள் விழிகளுக்கு பட்டதேயில்லை என்று எண்ணிக்கொண்டார்.

கைவீசி அணியரை அகலச்சொல்லிவிட்டு ஆடியை நோக்கிக்கொண்டு அமர்ந்திருந்தார். விழிகள் அத்தனை மங்கலானவையா? தோள்கள் இத்தனை வளைந்து முன்குவிந்துள்ளனவா? தாடைக்குக் கீழே இத்தனை தொங்கல்களா? பெருமூச்சுடன் எழப்போனபோது குண்டலங்களின் நினைவு வந்தது. பேழையைத் திறந்து அவற்றை நோக்கினார். இரு விழிமணிகள் என அவை கிடந்தன. விழிகள்போல் அவை ஒளியிழந்திருக்கவில்லை. பலமுறை கைநீட்டி, தயங்கி, பின் துணிந்து அவற்றை எடுத்தார். பின் ஒன்றை திரும்ப உள்ளே போட்டார். சௌனகரின் காலடியோசை கேட்டதும் எடுத்ததை வாய்க்குள் போட்டுக்கொண்டார்.

மரவுரி அணிந்து தேரிலேறி நகர்நீங்கும்போது அவர் வாய்க்குள் அந்த மணி இருந்தது. திரும்பிப்பார்க்கலாகாது என்று அவரிடம் மீளமீள அறிவுறுத்தியிருந்தனர். திரும்பிப்பார்க்கிறாரா என்று பல விழிகள் கூர்ந்திருக்கும் என அறிந்திருந்தார். திரும்பிப்பார்த்துவிடுவோம் என்னும் அச்சமும் கொண்டிருந்தார். ஆனால் தேர் நகர்ந்ததும் அவர்கள் அனைவரையும் ஏமாற்றிவிட்டோம் என்னும் மெல்லிய உவகையே அவருள் எழுந்தது. நீங்கள் எவருமறியாத ஆழம் கொண்டவன் நான் என எண்ணிக்கொண்டார்.

காட்டுக்குள் புகுந்த பின்னரே மணியை வெளியே எடுத்தார். அதை நோக்கிக்கொண்டிருந்தபோது எரியாத, அணையாத சிறுசுடர் என்று தோன்றியது. அதை திரும்பி வீசி எறிந்தால் அஸ்தினபுரி எரிந்தழிந்துவிடக்கூடும். அது ஒரு படைக்கலம், எப்போதும் துணையிருக்கட்டும், இருண்ட காட்டில் அது விளக்காகட்டும் என எண்ணியபடி கைகளை மூடினார். எண்ணமெங்கும் எழுந்த ஏக்கத்தால் உளம் கரைந்து விழிநீர் உகுக்கலானார். சதசிருங்கத்தை அடைந்தபோது உலர்ந்த விழிநீர்த்தடங்களுடன் தேருக்குள் சுருண்டு துயின்றுகொண்டிருந்தார். கனவுக்குள் அன்னை அவர்முன் அந்த மணியை நீட்டிக்காட்டி “உண்ணுக மைந்தா, இது அமுதத்துளி” என்றாள்.

சதசிருங்கத்தில் அவர் அந்த மணியை தன்னுடனேயே வைத்திருந்தார். ஒரு சரடில் கட்டி தன் கழுத்தில் அணிந்துகொண்டார். தனித்திருக்கையில் அறியாது அவர் கை அதை நெருடிக்கொண்டிருந்தது. சதசிருங்கத்திற்குச் சென்ற நாற்பத்தாறாம் நாள் அங்குள்ள ஏரியில் நீராடும்பொருட்டு இறங்கினார். மூழ்கி எழுந்தபோது கால்தடுக்கவே நிலைதடுமாறி விழப்போனபோது கைபட்டு கழுத்திலிருந்த சரடு அறுபட்டது. பதற்றத்துடன் அதை அள்ளிப்பற்றியபோது பக்கவாட்டில் விழுந்து அங்கிருந்த சேற்றில் கையும் காலும் சிக்குண்டு நீருக்குள் அமிழ்ந்தார். இறுதிமூச்சின்போது அந்த மணி அவர் கையில் இருந்தது.

மூச்சுலகை அடைந்தபோது அவர் அந்த மணி தன் கழுத்தில் இருப்பதை உணர்ந்தார். சுகாலனிடம் “பொருட்களை கொண்டுவர முடியுமா?” என்று கேட்டார். “இது அப்பொருளின் பிறிதொரு வடிவம். இங்கிருக்கும் உங்கள் உடல்போல” என்று அவன் சொன்னான். அவ்வுலகில் அமைந்து அவர் ஒவ்வொரு கணமும் என அஸ்தினபுரியை நோக்கிக்கொண்டிருந்தார். ஒவ்வொருவர் அருகிலும் எண்ணியதுமே செல்ல முடிந்தது. ஒரே தருணம் அனைவருடனும் இருக்கமுடிந்தது. அவர்கள் எண்ணுவதையும் கேட்கமுடிந்தது.

ஆனால் அவர் குரலை அவர்கள் கேட்கவில்லை. அவர் தொடுகையை உணரவுமில்லை. மிக அரிதாக, முழுத்தனிமையில் இருக்கையில் எண்ணங்கள் ஓடிஓடிக் களைத்து நின்று மீண்டும் மீளும் இடைவெளியின் கணத்தில் அவர்கள் ஓர் விந்தையான சிலிர்ப்பாக அவர் அருகமைவை உணர்ந்தனர். கனவுகளில் எங்கெங்கோ எதிரொலித்து உருமாறிச் சென்றடைந்த அவர் குரலை கேட்டனர். ஒருபோதும் எண்ணிய எதையும் அவரால் அவர்களிடம் உரைக்கமுடியவில்லை.

விருஷசேனனின் இறப்போ, இளையோரின் மறைவோ அவரை வருத்தவில்லை. ஆனால் ஒவ்வொரு தருணத்திலும் அவருக்கு சொல்வதற்கொன்று இருந்தது. அதை சொல்லத்துடிப்பதே அவர் துயரென்றாகியது. மூன்று தலைமுறை கடந்தபோது ஜனமேஜயன் அவையில் அவருடைய பெயர் அரிதாகவே பேசப்பட்டது. ஐந்து தலைமுறைக்குப் பின் குடியவைகளில் அவருடைய வாழ்க்கையை எவரும் அறிந்திருப்பதாகவே தெரியவில்லை. அரசர்களின் பெயர் நிரையில் ஒன்றுடன் ஒன்று பின்னி ஒழுகிச்செல்லும் ஒலியில் அவர் பெயரும் மின்னி மறைந்தது.

ஒவ்வொரு முறையும் அவையில் நிமித்திகன் எழும்போது அவர் அணுகி செவிகூர்ந்து நின்றார். தன் பெயர் ஒலிக்கையில் மெய்ப்புகொண்டு திரும்பி அவையை நோக்கினார். ஒருவர்கூட அதை செவிகொள்ளவில்லை என்று கண்டதும் சினம்கொண்டு பற்களை கடித்தார். பின்னர் விழிநனைய துயரடைந்தார். ஒவ்வொருவரின் அருகிலாகச் சென்று நின்று “என்னை நினைவுகூரவில்லையா நீ? உன் மூதாதை எனக்கு அணுக்கன். உன் தந்தையை நான் அறிவேன்” என்றார். “ஏன் மறக்கிறீர்கள்? ஒவ்வொன்றும் மறக்கப்படும் வெளியில் எதை நிலைநிறுத்துவீர்கள்?” என கேட்டார்.

“மூச்சுலகிலிருந்து மண்ணுக்குச் சென்று இங்கு மீள்கிறார்கள் மானுடர். இங்கிருக்கும் அவர்களின் இருப்பு ஒரு தகவு. மண்ணில் அவர்கள் நிகழ்வு. உள்ளத்திலுள்ள எண்ணம் போன்றது மூச்சுலக இருப்பு. அது சொல்வடிவுகொள்வதே மண்வாழ்க்கை. சொல்லென்றாகாத எண்ணமே இங்கு மானுடரென மீள்கிறது” என்று சுகாலன் சொன்னான். “ஆற்றல்மிக்க எண்ணக்குவையென இங்கிருந்தீர், வசுஷேணரே. அங்கே உங்களில் ஒரு துளியே வெளிப்பட்டது. எஞ்சியவை இங்கு மீண்டன. அவற்றின் எடையே இங்கு உங்கள் இருப்பு.”

“ஆனால் நான் பெரும்வில்லவனாக இருந்தேன். கல்விப்பெருமையும் கொடைச்சிறப்பும் கொண்டிருந்தேன்” என்று வசுஷேணர் சொன்னார். “மண்ணிலுள்ள அத்தனை விதைகளும் காடென்று எழும் வாய்ப்புள்ளவையே. கோடிகளில் சிலவே முளைத்தெழுந்து கிளைபரப்பி பூத்துக் காய்த்து காடாகின்றன” என்றான் சுகாலன். “முளைக்காதவை தெய்வங்களால் கைவிடப்பட்டவை.” வசுஷேணர் சினத்துடன் “நான் உலகை வெல்லும் ஆற்றல் கொண்டிருந்தேன்” என்று கூவியபின் அச்சொல்லின் வெறுமையை உணர்ந்து பெருமூச்சுவிட்டார்.

பின்பு சுகாலனிடம் “கந்தர்வரே கூறுக, நான் இயற்றிய பிழைதான் என்ன?” என்றார். “முதற்பிழை உங்கள் பிறவிநூலில் இருந்தது, வசுஷேணரே” என்றான் சுகாலன். “ஊடு மட்டுமே கொண்ட நெசவென உங்கள் வாழ்க்கை அதில் வகுக்கப்பட்டிருந்தது. எதிர் இல்லாமல் உங்கள் உள்ளுறைந்த எதுவும் எழமுடியாமலாயிற்று. உங்களுக்கான களங்களே அமையவில்லை. கோடிகளில் ஒன்றென நிகழும் கொடிய ஊழ்கொண்டிருந்தீர்.” திடுக்கிட்ட உள்ளத்துடன், நடுங்கும் கைகளைக் கோத்தபடி, வசுஷேணர் நோக்கி அமர்ந்திருந்தார்.

“ஒன்று செய்திருக்கலாம், உண்மையில் அது ஒரு பெரும்வாய்ப்பு. அந்த ஊழையே உங்கள் எதிர் என கொண்டிருக்கலாம். பேராற்றல்கொண்ட எதிரி. நிலைக்கா விசைகொண்ட பாவு. நீங்கள் அதை தவறவிட்டீர்கள். குமிழியுடையும் நுரை என ஒவ்வொரு நாளும் அமைந்துகொண்டிருந்தீர்கள்.” துயருடன் தலைகுனிந்து “ஆம்” என்று வசுஷேணர் சொன்னார். “ஆனால் காலம் எதையும் தவறவிடுவதில்லை. ஒருவர் விட்டதை பிறிதொருவரைக் கொண்டு நிறைவேற்றுகின்றது அது. கீழே நிகழ்வன நீங்கள் எழுந்திருக்கவேண்டிய களங்கள். அதோ, நீங்கள் கொன்றிருக்கவேண்டியவர்கள் போரிட்டு இறக்கிறார்கள்.”

wild-west-clipart-rodeo-31சூரியபீடனின் மைந்தன் சத்யகர்ணன் தன் உடன்பிறந்தார் அனைவரையும் கொன்றழித்தபோது வசுஷேணர் பதறி அழுதார். தன் ஒரு மைந்தன் மட்டும் எஞ்ச பிற அனைத்து மைந்தரையும் அவர்கள் சொல்முளைக்கும் முன்னரே நாடுகடத்தியபோது ஒவ்வொருவருக்கும் பின்னால் சென்று ஏங்கி விம்மினார். அவர்கள் அறியா நிலங்களில் பசித்தும் வேட்டையாடப்பட்டும் நோயுற்றும் இறந்தபோது அருகே நின்றிருந்தார். ஸ்வேதகர்ணன் சத்யகர்ணனை சிறையிட்டபோது பதைத்தார். அஸ்தினபுரி குருதியில் நாளும் நனைந்தபோது அந்நகரெங்கும் பதறியபடி சுற்றிவந்தார். நள்ளிரவில் துயில்விழித்த சிலர் இருளுக்குள் அறியாப் பறவை ஒலியென எழுந்த விம்மலொன்றைக் கேட்டு மெய்ப்புகொண்டனர்.

குருவின் கொடிவழியில் போர் ஒருநாளும் ஓயவில்லை என்பதனால் அவர் விண்ணில் நிலைகொள்ளவேயில்லை. குருதிக்களங்கள். விழிநீரும் விம்மலும் நிறைந்த இல்லங்கள். அளியின்மையும் அறமின்மையும் ஆளும் நாட்கள். நிரமித்ரனின் மைந்தன் க்ஷேமகன் காட்டில் விஸ்ரவனை சந்தித்த தருணத்தில் அவர் அருகிருந்தார். விஸ்ரவனை அவர் நன்கறிந்திருந்தார். “மைந்தா, வேண்டாம். அவன் நஞ்சுகொண்ட நாகம்…” என்று கூவினார். க்ஷேமகன் மேல் பாய்ந்து அவனை உலுக்கினார். காட்டின் மென்குளிர்காற்றென்றே அவன் அவரை உணர்ந்தான். விஸ்ரவனும் க்ஷேமகனும் இணைந்து நடந்தபோது நெஞ்சிலறைந்து கதறியபடி உடன்சென்றார்.

விஸ்ரவன் மறைந்த அரசன் நிரமித்ரனின் அரசி சௌரவைக்கு அவள் மணம் கொள்வதற்கு முன்பு சிறுமியாக இருக்கையில் முனிவர் ஒருவரின் குருதியில் பிறந்த மைந்தன். கலிங்க அரசனான அவள் தந்தை அக்குழவியை சேடி ஒருத்தியிடம் கொடுத்து கொல்லும்படி ஆணையிட்டு அனுப்பினார். அவள் அதை அயல்நிலத்து இசைச்சூதர் குழுவுக்கு விற்றாள். அவர்களிடம் சூதனென்று அக்குழந்தை வளர்ந்தது. விஸ்ரவன் என்று பெயர் பெற்றது.

விஸ்ரவன் நூல்கற்றான், ஆனால் இசையும் ஆடலும் அவனுக்கு அமையவில்லை. விற்கலையும் போர்க்கலையும் காவியங்களிலிருந்தே உளம்பட்டன. அரசுசூழ்தலை அவன் அரசும் அரண்மனையும் இல்லாமலேயே கற்றுத்தேர்ந்தான். வில் அவன் ஆழுளம்போல ஆயிற்று. ஒருமுறை மூங்கில் அம்பைக்கொண்டு பறக்கும் கிளி ஒன்றை அவன் வீழ்த்தியபோது உடனிருந்த முதிய நிமித்திகர் ஒருவர் “இவன் சூதனல்ல, ஷத்ரியன்” என்றார். “இவன் குருதியில் உள்ளது குலவித்தை. சொல்க, இவன் யார்?”

அவன் முன்னரே அதை ஒருவாறாக உய்த்தறிந்திருந்தான். அவன் அன்னை தயங்கியபடி அவனை அளித்தவள் கலிங்க அரண்மனையின் சேடி என்று சொன்னாள். அச்சேடி அவனை அளிக்கையில் அவன் உடலில் இருந்த சிறுபட்டாடையை அவள் அப்போதும் பேணியிருந்தாள். அதை பார்த்ததுமே முதுநிமித்திகர் “இவன் கலிங்கத்து இளவரசி சௌரவையின் மைந்தன். அவள் கருவுற்று மைந்தன் ஒருவனை ஈன்றாள், அவன் மகவுப்பருவத்தில் மறைந்தான் என்று ஒரு செவிச்செய்தி உள்ளது. அவனே இவன்” என்றார். மறுவினா இன்றி விஸ்ரவன் அது உண்மை என்று உணர்ந்தான்.

அந்த ஆடையுடன் அவன் அஸ்தினபுரிக்கு சென்றான். அங்கே பட்டத்தரசியென அமர்ந்திருந்த சௌரவையை இசைச்சூதன் என்று சொல்லி அணுகினான். கலையவையில் அவள் சேடியருடன் அமர்ந்திருக்க அவன் கலிங்கத்துத் தொல்கதை என தன் கதையை சொல்லத் தொடங்கினான். சொல்பெருகி கதை உருவம்கொண்டதுமே கேட்டிருந்த சௌரவை திகைப்பும் பதற்றமும் சினமும் கொண்டாள். அவன் கலிங்கத்தின் கதிர்க்கொடி பொறித்த அந்த ஆடையை தன் தலையணியாக கட்டியிருந்தான். கதை முடிவதற்குள்ளாகவே தலைநோவு கொண்டதாகச் சொல்லி அரசி கிளம்பிச் சென்றாள்.

அவன் தன் குடிலில் இருக்கையில் தேடிவந்த சௌரவையின் முதுசேடி அவன் எவரென்று வினவினாள். அவன் அந்த ஆடையைக் காட்டி “உங்கள் பேரரசியின் மைந்தன் நான்” என்று சொன்னான். “நகர் வேண்டேன், செல்வமும் வேண்டேன். அன்னை என ஒருமுறை அவர் அருகிருக்கவேண்டும். அவர் என்னை மைந்தா என்றழைக்கக் கேட்கவேண்டும். பிறர் அறியாமல் அக்கணமே இந்நகரிலிருந்து கிளம்பிச்செல்வேன். எனக்குரிய நிலத்தை நானே வென்றுகொள்வேன். அங்கு அவள் மைந்தன் என்று என் குலம் அறியப்படவேண்டும் என்பதே என் எண்ணம்” என்றான்.

அரசியிடம் சென்று சொல்லிவிட்டு மீண்ட சேடி அரசி அவன் எவரென்று அறிந்து அழுது துவண்டு மஞ்சத்தில் கிடப்பதாகவும் தன் மைந்தனை தனிமையில் பார்க்க விழைவதாகவும் சொன்னாள். மறுநாள் அந்தியில் கொடிமண்டபத்திற்கு அழைத்து வரும்படி அரசியின் ஆணை என்றாள். அவன் விழிநீர் உகுத்து “எப்போதும் என் அன்னையை நான் அகத்தே தேடிக்கொண்டிருந்தேன். அருகமர்கையில் என் பிறவிமுழுமையை அடைவேன்” என்றான்.

மறுநாள் அவன் சேடியால் அந்தியின் மெல்லிருளில் கொடிமண்டபத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டான். உள்ளம் உவகையால் கொப்பளித்துக்கொண்டிருந்தாலும் அரசுசூழ்தல் கற்ற அவன் அகவிழி எச்சரிக்கைகொண்டிருந்தது. அவள் நடைதயங்குவதிலிருந்து பிழை ஒன்றை அவன் உய்த்தறிந்தான். அவள் நிழலையே நோக்கிக்கொண்டு நடந்தான். அவன் நோக்கவில்லை என்று எண்ணி அவள் கையசைவு காட்டுவதை உணர்ந்த கணமே துள்ளி விலகினான். மறைந்திருந்த காவலர் வாள்களுடன் அவனை சூழ்ந்துகொள்ள அவன் அவர்களில் ஒருவனின் உடைவாளைக் கைப்பற்றி அவர்களை எதிர்கொண்டான். ஒருவனை வெட்டி வீழ்த்தியபின் தப்பி ஓடினான். அவனுக்குப் பின்னால் சௌரவையின் குரல் “விடாதீர்கள்… துரத்திப்பிடியுங்கள்” என்று கூவுவதை கேட்டான்.

நெஞ்சு முழுக்க சொட்டிப்பரவிய விழிநீருடன் விஸ்ரவன் காட்டுக்குள் புகுந்து ஒளிந்துகொண்டான். சௌரவையின் ஏவலரும் கலிங்க மன்னரின் ஒற்றர்களும் அவனை கொல்லும்பொருட்டு தேடி அலைந்தனர். அவன் மேலும் மேலுமென காட்டுக்குள் புகுந்து தென்றிசைக்குச் சென்றான். அங்கே அறியாது நாகர்நிலத்துள் புகுந்து அவர்களின் தெய்வச்சுனையருகே மயங்கிக்கிடந்த அவனை நாகர்கள் கண்டனர். அயலவர் தங்கள் எல்லை கடந்தால் அக்கணமே கொன்று வெளியே வீசுபவர்கள் அவர்கள். அவனைத் தொட்ட நாகர்களின் தலைவன் “பெருவலி கொண்டு அத்தனை தசைகளும் இழுபட்டு முறுக்கியிருக்கின்றன. இவனை முன்னரே ஏதோ நாகம் கடித்திருக்கிறது” என்றான்.

அவனை புரட்டிப்புரட்டித் தேடியபோது கடிவாய் எதையும் காணாது குழம்பினார்கள். “இவனுள் எரியும் அந்நஞ்சு எவருடையது? நம்மை மிஞ்சும் நஞ்சுகொண்ட நாகங்கள் உள்ளனவா இப்புவியில்?” என்றான் தலைவன். அவனை கொண்டுசென்று தங்கள் குடிலில் கிடத்தி நோய்நோக்கினர். விழித்தெழுந்த அவனிடம் அவனைத் தொட்ட அந்நஞ்சு எது என்றனர். அவன் கூறியதைக்கேட்டு தலைவன் சினந்தெழுந்து நின்று நடுங்கினான். “கொடிய நஞ்சு… மாற்றிலாதது” என்று அவன் சொன்னான்.

அவர்களிடமிருந்து நச்சுக்கலையை விஸ்ரவன் கற்றுக்கொண்டான். நஞ்சை தன் உடலில் நுழைத்து உருமாற்றம் அடைந்தான். ஓங்கிய கரிய உடலும் ஒளிகொண்ட கண்களும் கொண்டிருந்த அவன் குறுகிய சிறுதோற்றம் பெற்றான். பிறிதொருவனாக நெஞ்சுள் நொதிக்கும் நஞ்சுடன் அஸ்தினபுரி நோக்கி வரும் வழியில்தான் க்ஷேமகனை பார்த்தான். அவன் அணிந்திருந்த கணையாழியினூடாக அவன் எவரென்று அறிந்துகொண்டான்.

“அவன் துறக்கப்பட்டவன், வேட்டையாடப்பட்டவன், பழிசூடியவன். நெஞ்சு நச்சுக்கலமென்றானவன். அவனை நான் அறிவேன். மைந்தா, அவனை தவிர்த்துவிடு” என்று வசுஷேணர் கதறிக்கொண்டே இருந்தார். க்ஷேமகன் இருந்த இடத்திலேயே ஒருகணமும் நீங்காமல் இருந்தார். அவன் அவரை கேட்கவில்லை என்றாலும் பிறிதொன்றை அருகுணர்ந்து அமைதியிழந்தான். “எவரோ என்னிடம் எதையோ சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் என்று உணர்கிறேன். சற்றே துயின்றால்கூட எவரோ தொட்டு எழுப்புவதுபோல் உணர்ந்து விழித்துக்கொள்கிறேன்” என்று அவன் மருத்துவரிடமும் நிமித்திகரிடமும் சொன்னான்.

“நிறைகொள்ளாது நிலையழிந்த மூதாதை ஒருவரின் இருப்பை உணர்கிறேன், அரசே” என நிமித்திகர் சொன்னார். க்ஷேமகன் “அவர் பெயரென்ன? அவர் நிகழ்ந்த நாள்மீன் என்ன? அவர் அமைதிகொள்ள ஆவன செய்யவேண்டும்” என்றான். “அறியேன், மீளமீள களம்சூழ்ந்து நோக்கியும் காணமுடியவில்லை” என்றார் நிமித்திகர். அமைதியிழந்து நாட்கணக்கில் துயில்நீத்திருந்த அவனுக்கு அரண்மனை மருத்துவர் அகிபீனா அளித்தார். பின் அவன் அதற்கு அடிமையானான். விழிப்பும் துயிலும் வண்ணம் மயங்கிக்கலந்த வெளியில் வாழ்ந்தான்.

விஸ்ரவன் வாளுடன் க்ஷேமகனின் அறைக்குள் நுழைந்தபோது வசுஷேணர் அலறியபடி பாய்ந்து வந்து அவனை தடுத்தார். “இழிமகனே, நில். நில்!” என்று கூவியபடி அவன் காலில் விழுந்து பற்றிக்கொண்டார். விஸ்ரவன் கால்தடுக்கிய ஓசைகேட்டு க்ஷேமகன் எழுந்துகொண்டு “என்ன செய்தி?” என்று கேட்டான். வாள் சுழன்று அவன் தலையை வெட்டி ஓசையெழ நிலத்தில் உருட்டியது.

அவன் தலையை நோக்கிச் சென்று குனிந்து நெஞ்சிலடித்தபடி வசுஷேணர் கதறினார். தலையால் நிலத்தை அறைந்து துயர்வெறிகொண்டு கூச்சலிட்டார். மூச்சுலகில் அவர் கொண்ட கடுந்துயரை அருகே நின்று சுகாலன் நோக்கிக்கொண்டிருந்தான். வசுஷேணர் “எனக்கு இனி என்ன மீட்பு? நீரும் அன்னமும் அளிக்க என் குடியின் கைகள் எங்கே?” என்று அலறி அழுதார். தன்னைச் சூழ்ந்திருந்த மூச்சுவெளியை திரையொன்றைக் கிழிப்பவர்போல கைவீசிக் கலைத்தபடி துள்ளித்திமிறினார். “இல்லை. இதுவல்ல… இதுவல்ல” என்று கூவினார்.

மிக அப்பாலிருந்து “ஆம், அது அல்ல. ஆனால் அதுவும்தான்” என்று எவரோ சொன்னார்கள். கனவிலென அக்குரலை அவர் கேட்டார். வேறெங்கோ எவ்வகையிலோ நிகழ்ந்த நினைவொன்று எழ “யாதவரே, யாதவரே” என்று அலறினார். “என்னை மீட்டெடுங்கள்… யாதவரே, என்னை இம்முடிவிலாப் பாழிலிருந்து காத்தருளுங்கள்.” இளைய யாதவரின் கை வந்து அவர் தோளைத் தொட்டது. ஒற்றைக்காலூன்ற இடமிருந்த நீண்ட விளிம்பில் கீழே அடியிலாப் பாழ் வெறித்திருக்க நடந்துகொண்டிருந்த அவர் நிலைகொண்டார். “யாதவரே… போதும். யாதவரே, கைவிடாதீர்!” என்று கதறியபடி அக்கைகளை பற்றிக்கொண்டார்.

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனும் ஆர்ட்டிஸ்டும்  
அடுத்த கட்டுரைமன்னார்குடி -கடிதங்கள்