அண்ணா ஹசாரே மீண்டும்

hasare

அண்ணா ஹசாரே மீண்டும் காலவரையற்ற உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருக்கிறார். அனேகமாக தமிழ் ஊடகங்கள் அனைத்துமே அவரை புறக்கணித்துவிட்டிருக்கின்றன. ஏனென்றால் அவை இங்கே உருவாக்கும் அரசியல்களப் புனைவில் அப்போராட்டத்திற்கு இடமில்லை. மோடி X மோடி எதிர்ப்பு என்னும் ஒரு வரைவை அவை உருவாக்கி அனைவரையும் அதற்குள்ளாகவே சிந்திக்கவைத்துக்கொண்டிருக்கின்றன

 

மெய்யான காந்தியராக தன் கோரிக்கையில் உறுதிகொண்டு மீண்டும் மீண்டும் போராடிக்கொண்டிருக்கிறார் அண்ணா ஹசாரே.எல்லா காந்தியப்போராட்டங்களையும்போல இதுவும் இரண்டு முகம் கொண்டது. ஒன்று நேரடியான நடைமுறைக் கோரிக்கை. லோக்பால் அமைப்பை உருவாக்கி ஊழலுக்கு எதிரான ஒரு சட்டபூர்வ அரணை உருவாக்குவது அது. இரண்டு, அக்கோரிக்கையின் குறியீட்டுத்தன்மை. ஊழலுக்கு எதிரான ஒரு அறைகூவலாக அது நிலைகொள்கிறது. நம் சமூகத்தின் முதன்மைப்பிரச்சினையே ஊழல் என்பதை விடாது நினைவூட்டிக்கொண்டிருக்கிறது

 

காந்தியப்போராட்டத்தின் வழியில் ஒவ்வொருமுறையும் பேச்சுவார்த்தைக்கு இடமளித்து, எதிர்த்தரப்புக்கு வாய்ப்பளித்து அண்ணா ஹசாரே போராடுகிறார். எதிர்தரப்பை நம்புவது காந்தியின் வழி. அந்நம்பிக்கை பொய்க்கையில் மீண்டும் எழுவது அவருடைய முறை. இப்போதைய அரசு அனைத்து வாக்குறுதிகளையும், வாய்ப்புகளையும் தவறவிட்டிருப்பதனால் அவர் களமிறங்கியாகவேண்டியிருக்கிறது.

 

ஆனால் அண்ணா ஹசாரே காந்தி அல்ல. காந்திக்கு உறுதியான நாடளாவிய அமைப்பு ஒன்றை உருவாக்கும் வாய்ப்பு அமைந்தது, ஆற்றலும் இருந்தது. அவ்வாறு ஓர் அமைப்பை உருவாக்கவியலாமல் போராடும்போது அண்ணா ஹசாரே தனிமைப்படுகிறார். முதுமை அவரை தளர்த்துகிறது. அனைத்துக்கும் மேலாக இருமுனைகொண்டு உச்ச உணர்ச்சிகள் குவிந்துள்ள அரசியல்சூழலில் அவருடைய குரல் தனித்தொலிக்கிறது.

 

மேலும் ஊழலுக்கு எதிரான குரல் திட்டவட்டமான எதிரியைச் சுட்டிக்காட்டுதல்ல. வெறுப்பலைக்கு அதில் இடமில்லை. பெரும்பாலும் மக்களையே அது குற்றவாளிகளாக காட்டுகிறது. ஆகவே அதற்கு பெரிய ஆதரவும் இருக்க வாய்ப்பில்லை. முதல்முறை நாட்டை உலுக்கிய ஊழல்கள் வெளிவந்துகொண்டிருந்த காலம். ஆகவே எதிரி கண்ணுக்குத்தெரிந்தான். மக்களாதரவு எழுந்தது. இன்று அந்த எதிரிகள் ஒவ்வொருவராக சட்டத்திலிருந்து நழுவிக்கொண்டிருக்கிறார்கள். அண்ணா கோருவது அதற்கு எதிரான அமைப்புகளைத்தான். ஆனால் அதை கவனிக்கச்செய்வது கடினம்

 

ஆனால் எப்போதுமே காந்தியர்கள் தனித்துச்செயல்படத் தயங்கியவர்கள் அல்ல. அவர்களை சமகாலச்சூழல் கிறுக்கர்கள் என்றும் கோமாளிகள் என்றும் முத்திரை குத்துவதைப் பொருட்படுத்தியவர்களும் அல்ல. அவர்கள் நம் சமூக மனசாட்சியின் குரலென ஒலிப்பவர்கள். நம் கீழ்மைகளை, சுயநலங்களைக் கொண்டு அவர்களை நோக்கிக் கெக்கலி கொட்டும்போதும் அவர்களையே நம்பியிருக்கிறோம். அண்ணா வெல்லவேண்டும் என விழைகிறேன்

 

சில மாதங்களுக்கு முன் கேரளப் பொருளியலாளர் ஒருவர் சொன்னார், உலகிலேயே அதிகம் வரிவாங்கும் நாடுகளில் ஒன்று இந்தியா என. நாம் நேரடியாகவும் மறைமுகமாகவும் நம் ஊதியத்தில் கிட்டத்தட்ட பாதியை வரியாகக் கட்டிக்கொண்டிருக்கிறோம். ஆனால் இங்கே சாலைகள் தனியாரால் போடப்படுகின்றன, கட்டணம் பெறப்படுகிறது. துறைமுகங்கள், விமானநிலையங்கள் , கல்விநிலையங்கள், மருத்துவமனைகள் எல்லாமே தனியார். இத்தனை வரிகொடுத்தும் ஒரு நல்ல சாலைக்கு, குடிநீருக்கு, பொதுநீர்நிலைகள் பராமரிப்புக்கு, குப்பை அள்ளுவதற்கு நமக்கு அரசு இல்லை. நாம் திரும்பப்பெறுவது நூற்றுக்கு ஒரு ரூபாய்கூட இருக்காது

 

இந்தியாவின் உண்மையான பிரச்சினை இதுவே. பூட்டான் அல்லது ஸ்ரீலங்கா அல்லது நமீபியா போன்ற சிறிய நாடுகளைச் சென்று ஒருமுறை பார்த்துவந்தால்கூட நமக்கு இதுபுரியும். இதையன்றி அனைத்தையும் இங்கே அரசியலில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். நம் வரிப்பணம் கொள்ளை போகிறது. பலவகைகளில். அதற்குக் காரணம் ஊழல். அது இருக்கும் வரை எவர் அரசமைத்தாலும், எந்தக்கொள்கை பேசினாலும் இங்கே ஏதும் நிகழப்போவதில்லை.

 

நாம் நம் ஊழல்மனநிலையால், வெவ்வேறு காழ்ப்புகளால், இனம் சாதி மதம் சார்ந்த பற்றுகளால் ஊழல்வாதிகளை ஆதரிக்கிறோம் என்பதனாலேயே நமக்கு ஊழலைப்பற்றிப் பேசுவது பிடிப்பதில்லை. அதை எதிர்ப்பது கோமாளித்தனமாகத் தெரிகிறது. ஆனால் அதுவே தலையாய பிரச்சினை என நம்மிடம் ஓயாது ஒருகுரல் சொல்லிக்கொண்டே இருக்கவேண்டியிருக்கிறது அவ்வகையில் அண்ணா ஹசாரேயின் போராட்டம் அதன் பணியை ஆற்றிக்கொண்டே இருக்கிறது.

முந்தைய கட்டுரைஐரோப்பாக்கள்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-5