ஸ்டெர்லைட்

SterliteProtestMarch24MainPic (1)

 

ஒருமுறை தூத்துக்குடி சென்றிருந்தபோது ஸ்டெர்லைட் ஆலை இருக்குமிடம் வழியாகச் செல்லவேண்டியிருந்தது. கூடிப்போனால் இருபதுநிமிடம். என் வாழ்நாளின் மறக்கமுடியாத இருபது நிமிடம். மூச்சடைப்பு, குமட்டல், தலைசுற்றல். அத்தனை நாற்றம். ஆனால் அங்கே மக்கள் வாழ்ந்துகொண்டுதான் இருந்தார்கள்.

 

ஆலைகள் வேண்டாம் என நாம் சொல்லமுடியாது, அவை இல்லாமல் வாழமுடியாதென்னும் நிலையை நாம் தெரிவுசெய்து அதில் திளைக்கிறோம். அந்த ஆலை வேறெங்காவது, வேறுமக்களை அழிப்பதாக அமையட்டும் என்னும் ஐரோப்பிய,அமெரிக்க மேட்டிமைவாதம் நமக்குக் கட்டுப்படியாகாது. ஆனால் நாம் வாழ்ந்தாகவேண்டும். நம் காற்றை அழித்து நீரை மலினமாக்கி நோயை பெற்றுக்கொண்டு ஆலைகளை தாங்கிக்கொள்ளமுடியாது

 

ஸ்டெர்லைட் ஆலையின் பிரச்சினை அங்குள்ள காப்பு ஏற்பாடுகள் போதாது என்பது அல்ல. மக்கள்செறிந்து வாழும் அத்தகைய நகரமே அந்த ரசாயன ஆலைக்கு உகந்தது அல்ல. இங்கே காப்பு ஏற்பாடுகள் அனைத்தும் வெறும் காகிதப்பதிவுகளே. காசுகொடுத்தால் வாங்கிக்கொண்டு எதையும் அனுமதிக்கும் அதிகாரிகளாலும் அரசியல்வாதிகளாலும் ஆனது நம் அரசு. லாபத்தின்பொருட்டு எதையும் செய்பவர்கள் நம் வணிகர்கள். பொறுப்பின்மை என்பது இங்கே எங்கும் நிலவுவது

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையின் முந்தைய கழிவுகள் அப்படியே திறந்தவெளியில் விடப்பட்டு நெடுங்காலம் ஊரை சீரழித்தன என்பது வரலாறு. அதை இன்றும் அப்படியே விட்டுவிட்டு மீண்டும் காகிதச் சொற்கள் வழியாக பசப்பி அந்த ஆலையை விரிவாக்கம் செய்ய முயல்கிறது நிர்வாகம். மக்களின் போராட்டம் இன்றியமையாதது, வென்றாகவேண்டியது. இன்றைய சூழலில் அந்த ஆலை முழுமையாக மூடப்பட்டு, கழிவுகள் முற்றாக அகற்றப்படவேண்டும் என்பதன்றி தீர்வு ஏதுமில்லை

 

இந்தப்போராட்டமும் நம் ஊடகங்களால் வெற்றுக்கொண்டாட்டமாக ஆக்கப்படாமலிருக்கவேண்டும். மிகையான உணர்ச்சிவேகத்துடன் எழுந்து விரைவிலேயே அழியாததாக நீடிக்கவேண்டும்.தொடர்பற்ற அரசியல்கருத்துக்களை ஒலிக்கும் தரப்புக்கள் ஊடுருவி போராட்டத்தைத் திசைமாற்றி அழிக்காமலிருக்கவேண்டும்.இன்றையசூழலில் குறைவான இழப்புகளுடன் தொடர்ச்சியாக நிகழும் போராட்டங்களே வெற்றிபெற இயலும்.

 

ஜெ

முந்தைய கட்டுரைதெய்வங்கள் பேய்கள் தேவர்கள்
அடுத்த கட்டுரைஇமையம் என்னும் சொல்