இளைய யாதவர் தன் குடில்வாயிலில் வந்து நின்றபோது முற்றத்தின் நெடுமரத்தின் அடியில் வெண்ணிற அசைவை கண்டார். “அங்கரே, தாங்கள் அல்லவா?” என்றார். “ஆம், நானே” என்று கர்ணன் சொன்னான். மேலும் கேட்காமல் இளைய யாதவர் பேசாமல் நின்றார். அருகணையாமல் ஏதும் சொல்லாமல் கர்ணனும் நின்றான். நெடுநேரம் கழித்து கர்ணன் பெருமூச்சுவிட்டான். அவ்வோசை மிக உரக்க என ஒலித்தது. “உள்ளே வருக, அங்கரே” என்றார் இளைய யாதவர். அவன் சிலகணங்கள் தயங்கியபின் மீண்டும் குடில்வாயில் வழியாக வெளியே சரிந்திருந்த செந்நிற வெளிச்சத்திற்கு வந்தான்.
இளைய யாதவர் உள்ளே செல்ல அவனும் தொடர்ந்தான். அவர் மீண்டும் தர்ப்பைப் பாயில் அமர அவன் நின்றுகொண்டிருந்தான். “அமர்க!” என்று இளைய யாதவர் சொன்னார். அவன் பெருமூச்சுடன் அமர்ந்தான். “நீங்கள் நிற்பீர்கள் என நான் அறிவேன்” என்றார் இளைய யாதவர் “ஏன்?” என்றான் கர்ணன். “பெரும்பாலானவர்கள் தத்துவத்தில்தான் எதையும் அறுதியாகச் சொல்லமுடியாது, உலகியலில் அனைத்தையும் உறுதிபடச் சொல்லமுடியும் என நம்புகிறார்கள். அது பிழை, தத்துவம் அருவமானது, உச்சி என்பதனால் சுருங்கிய தளம்கொண்டது, அங்கே உறுதிபட சிலவற்றை சொல்லிவிடமுடியும். உலகியல் எதையுமே வகுத்துரைக்கமுடியாது.”
“இதை அறியாத எவரும் உலகியலில் இல்லை” என இளைய யாதவர் தொடர்ந்தார். “ஆயினும் மானுடர் உரக்க வாழ்க்கை குறித்து அறிக்கையிடுவதும் ஆணையுரைப்பதும் உண்டு. அவ்வாறு குரலெழுந்தாலே அவர் தனக்காகத்தான் அதை சொல்கிறார் என்று பொருள். மிக ஆழத்திலிருக்கும் ஓர் ஐயம் கொண்ட செவிக்காக.” இளைய யாதவர் புன்னகைத்து “நீங்கள் செல்லும்போதே சென்றுவிடமாட்டீர்கள் என அறிந்தேன். திரும்பிவர பொழுதளித்து இங்கே அமர்ந்திருந்தேன். இக்காட்டின் எல்லையை கடந்திருக்கமாட்டீர்கள், நெடுந்தொலைவு சென்றீர்களா?” கர்ணன் புன்னகைத்து “சிலநூறு காலடிகள்” என்றான். “அத்தனை தொலைவுதான் எனில் எளிதில் கடந்துவிடலாம்” என்றார் இளைய யாதவர் சிரித்தபடி.
இளைய யாதவர் “அத்தனை சொல்லியும்கூட உங்கள் துயரை நீங்கள் சொல்லவில்லை, அங்கரே” என்றார். “பிறிதொன்றை மறைக்கும்பொருட்டே அதையெல்லாம் இங்கு சொன்னீர்கள். ஒன்றன்மேல் ஒன்றென சொற்றொடர்களை அள்ளிப்போட்டீர்கள்.” கர்ணன் சீற்றத்துடன் “எவர் சொன்னது?” என்று கூவியபின் மெல்ல தளர்ந்து “ஆம்” என்றான். “ஆம்” என பெருமூச்சின் ஒலியில் சொல்லிவிட்டு தலையை அசைத்தான். “சொல்லுங்கள் அங்கரே, நீங்கள் கொண்டிருக்கும் துயர்தான் என்ன?” என்றார் இளைய யாதவர்.
“நான் சொல்லாத ஒன்று எஞ்சியிருந்தது என்று தோன்றியது” என்று கர்ணன் சொன்னான். “நான் உணர்ந்ததையே சொன்னேன். எனக்களிக்கப்பட்ட களத்தில் விழைவைத் தீட்டி வெற்றிநோக்கிச் செல்வதொன்றே நான் செய்யவேண்டியது. ஆனால் பிறிதொன்றும் இக்களத்தில் உள்ளது. என் மெல்லுணர்வுகள். என்னை அலைக்கழிப்பவை அவையே. இருநிலையில் இருந்தே என் வினாக்கள் எழுகின்றன. இருநிலையை வெல்லவே நான் இங்கு வந்தேன். ஒன்றை பற்றிக்கொள்ளவேண்டும் என விழைந்தேன். என்னைப் பற்றிக்கொள்ளும் அளவுக்கு அதை வலுவுள்ளதாக்க முயன்றேன்.”
இளைய யாதவர் அமைதியாக இருக்க கர்ணன் “நான் இன்று இயற்றவேண்டியது என்ன?” என்று தாழ்ந்தகுரலில் தன்னுள் என சொன்னான். “அவர்கள் என் தம்பியர். அவர்களை கொன்றுகுவிப்பதா? அக்குருதிமேல் நடந்துசென்று இன்னொரு இளையோனை அரியணை அமர்த்துவதா? அன்னையை பெருந்துயரிலாழ்த்தி கொன்றுவிட்டு வென்றேன் எனக் களியாடுவதா? அங்கு நின்றிருப்போர் யார்? என் குருதியினர், என் மைந்தர். அவர்களை வென்று நான் கொள்ளப்போவது என்ன?”
“யாதவரே, வஞ்சத்தை தீர்த்துக்கொள்ளும் கணமொன்றுக்காக என்னுள் நஞ்சு நீறிநீறிக் காத்திருந்தது. கௌரவர் அவையில் அத்தருணம் அமைந்தபோது என்னுள் இருந்து கீழ்மகன் ஒருவன் எழுந்து அதை கொண்டாடினான். ஆனால் அதற்கென நான் எஞ்சிய வாழ்நாளை நிகரீடென்று அளிக்கநேர்ந்தது. நீங்கள் அறிந்திருக்கமாட்டீர்கள், இப்பதினாறாண்டுகளில் நான் ஒருமுறைகூட என் ஆடிப்பாவையை தன்வெறுப்பின்றி நோக்கியதில்லை. நீராட இறங்குகையில் உள்ளிருந்து என்னை நோக்குபவனின் முகத்தில் காறி உமிழ்ந்துவிட்டே மூழ்கி எழுவேன். சென்ற ஆண்டுகளில் ஒருமுறைகூட கிழக்கெழும் எந்தையின் முன் நான் கைகூப்பி நின்றதில்லை.”
“வெற்றிக்கென்றே செயலாற்றுகின்றனர் மானுடர். ஆனால் வெற்றி எனக்கொள்வது என்ன?” என்று கர்ணன் தொடர்ந்தான். “பிறப்பிலேயே ஒருவனின் வாழ்க்கை பெருந்தோல்வி என வகுக்கப்பட்டுவிட்டதென்றால் அவன் கொள்ளும் வெற்றிகள் அனைத்தும் அத்தோல்வியை மேலும் வளர்ப்பவை அல்லவா? வில்லேந்தி செருகளம் சென்றால் உண்மையில் என் மீதே நான் அம்புபெய்வேன். நான் சேர்த்துவைத்திருக்கும் நஞ்சை என்மேல் பெய்துகொள்வேன். இக்கணம் வரை நான் வாழ்ந்த வாழ்வெல்லாம் வெறும் எதிர்க்குரல் மட்டுமே. இனிஎழும் போரும் அவ்வாறே. எனில் இருத்தலுக்கென்ன பொருள்?”
“நேற்று இரவு எழுந்து என் அம்பொன்றை எடுத்து கழுத்தில் வைத்தேன். ஒருகணம் அதை அழுத்தியிருந்தால் போதும். அப்போது எண்ணினேன், அதை பலமுறை அவ்வாறு வைத்திருக்கிறேன் என. ஒவ்வொருமுறையும் ஒருகணத்திற்கு முன் நின்று பின்வாங்கியிருக்கிறேன். அந்த ஒற்றைக்கணத்தில் நின்று இத்தனைநாள் உயிர்வாழ்ந்துவிட்டேன். இம்முறை அந்த ஒற்றைக்கணத்தில் எழுந்தது ஓர் எண்ணம். விடையின்மை ஒன்றை எஞ்சவிட்டுச் சென்றால் எங்கும் அமைதியிழந்தே இருப்பேன் என்று. வாழ்ந்தறிவதே அவ்விடை என்றால் அதை அடைந்துவிட்டுச் செல்வோம் என்று. இன்னும் இழிவும் இதைவிடப்பலமடங்கு துயரும் வரவுள்ளது என்றால் அதுவே ஆகுக என்று.”
“பின்னர் அம்பை அறையில் வீசிவிட்டு மஞ்சத்தில் சென்றமர்ந்து மதுவருந்தினேன். மெல்ல என் தசைகள் தளர்ந்தன. படுத்து உடலை நீட்டிக்கொண்டபோது உங்களை எண்ணினேன். அக்கணமே எழுந்து இங்கு வரவேண்டுமென உளம்பொங்கியது. நூறுமுறை தவிர்த்து பின் துணிந்து இதோ வந்தணைந்துள்ளேன்” என்று கர்ணன் சொன்னான். “என்னுள் எழுந்ததை முழுக்க சொல்லிவிட்டேன்” என்று பெருமூச்செறிந்தான். “ஆம், முதலில் எழுந்தது இதன் நுரை” என்று இளைய யாதவர் புன்னகை செய்தார்.
கர்ணன் அப்புன்னகையால் இயல்படைந்து “கூறுக யாதவரே, எனக்கு நீங்கள் காட்டும் வழி என்ன?” என்றான். இளைய யாதவர் சுற்றிலும் நோக்கியபின் கைநீட்டி அங்கே கிடந்த சிறுகுச்சியை எடுத்து சாணிமெழுகப்பட்ட மண்ணில் வளைந்து செல்லும் கோடு ஒன்றை வரைந்தார். “இதை தொடுங்கள், அங்கரே” என்றார். கர்ணன் அவர் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு அதன்மேல் கையை வைத்தான். அது நெளிவதுபோலத் தோன்றியது. ஆடும் அகல்சுடரின் விழிமாயம் என நினைத்தான். நெளிவு மிகுந்து கோடு நீண்டு இரு சுவர்களையும் தொட்டது. அவன் கைகளை எடுத்துக்கொண்டான்
அது இருளுக்குள் மெல்லிய நீரொளி எழும் உடல்கொண்ட நாகமென்றாகியது. மேலும் மேலுமெனப் பருத்து சுவர்களைத் தொட்டபடி வளைந்து அந்த அறையை நிறைத்தது. அதன் சுருள்கள் காட்டாற்றின் சுழி எனப் பெருகின. அதன் நடுவே அவர்கள் அமர்ந்திருந்தனர். நாகத்தின் தலை அடிமரம்போல் மேலெழுந்தது. அதன் படத்தின் தசைவளைவுகள் நெளிந்தன. அனல்நா பறக்க இமையாவிழிகள் ஒளியுடன் நிலைநோக்கு கொண்டிருந்தன. அதன் சீறல் ஓசை தன் மேல் காற்றெனப் பதிவதுபோல் கர்ணன் உணர்ந்தான்.
“என் பெயர் கார்க்கோடகன், நான் உன்னை நன்கறிவேன்” என்றது நாகம். “நீயும் ஆழத்தில் என்னை அறிந்திருப்பாய்.” கர்ணன் அதை நோக்கிக்கொண்டிருந்தான். உதடுகள் அசையாமலேயே அதனுடன் அவன் உரையாடினான். “ஆம்” என்றான். “என்னை அறியாத மானுடரே இருக்கவியலாது” என்று கார்க்கோடகன் சொன்னது. “சொல்க, எதன்பொருட்டு என்னை அழைத்தாய்?” கர்ணன் “நான் அழைக்கவில்லை” என்றான். “உன்பொருட்டு அவர் அழைத்தார். நீ கோருவதை உனக்கு அளிக்கும்படி சொன்னார்” என்றது.
திகைப்புடன் “நான் கோருவது எது?” என்றான் கர்ணன். “உன்னைத் தீண்டும்படி” என்றது கார்க்கோடகன். “இல்லை” என அவன் சொல்வதற்குள் மரக்கிளை வளைந்து வந்து அறைந்ததுபோல அவன் தலைமேல் அது அறைந்தது. அதன் பற்கள் அவன் நெற்றியில் பதிய அவன் மல்லாந்து விழுந்தான். அது அவன் மேல் கரிய சுருள்களாக எழுந்து நின்றது. மணிவிழிகள் ஒளிர “நீ கோரியது அளிக்கப்பட்டது” என்றது.
கர்ணன் அதன் சுருள் நடுவே நீருக்குள் என அமிழ்ந்துகொண்டே இருந்தான். அதன் உடல் நீர்த்தண்மை கொண்டிருந்தது, நீர்மைகொண்டு அணைத்தது. ஆழத்தில் கிடந்தபடி அவன் மேலே நோக்கிக்கொண்டிருந்தான். வாளுடன் வரும் குந்தியை அவன் நோக்கினான். “அன்னையே!” என்று அழைத்தபடி தன் கைகால்களை உதறினான். “அன்னையே, இங்கிருக்கிறேன். அன்னையே..” குந்தி அவனை குனிந்து நோக்கியபடி அணுகிவந்தாள். அவள் விழிகளின் சினமும் வஞ்சமும் நீரொளியாகத் தெரிந்தன. கையில் வாள் மின்னியது.
அவன் “அன்னையே!” என்று உடல்நெளித்தான். குந்தி தன் கையிலிருந்த வாளை ஓங்கினாள். “அன்னையே” என அவன் ஓசையின்றி கூவினான். அவளுடைய கையில் ஓங்கி எழுந்த வாள் அசைவற்று நின்றது. பின்னர் அவள் அதை வீசிவிட்டு முகம்பொத்தி அழுதபடி முழந்தாளிட்டு நீருக்குள் அமர்ந்தாள். அவளருகே சுருள்களென எழுந்த கார்க்கோடகனின் பெரும்பத்தி நாக்குபறக்க விழிகள் ஒளிகொள்ள அணுகிவந்தது. “கொலைசெய்க… அது ஒன்றே வழி. கொன்று முன்செல்க!” அவள் இல்லை இல்லை என தலையை அசைத்தாள். “நேற்றை கொல். நாளை என எழ அதுவே வழி…” என்றது நாகம்.
“சீ!” என சீறியபடி அவள் அதை கையால் உந்தினாள். முறிந்த மரமென அது நீரில் அலையிளக விழுந்து மூழ்கி மறைந்தது. கைகளை நீருள் விட்டுத் துழாவியபடி அவள் பதற்றத்துடன் சுற்றி வந்தாள். அவள் கைகள் ஆழத்திற்கு நீண்டு வந்து நெளிவதை, விரல்கள் தவிப்பதை அவன் கண்டான். கால்களால் அடித்தளச்சேற்றை உந்தி உதைத்து நீந்தி எழுந்து அணுகி அதை தொட்டான். அவள் கை விசைகொண்டு வந்து அவனை பற்றிக்கொண்டது. இழுத்து நீர்ப்பரப்புக்குமேலே தூக்கியது. அவன் மூச்சிரைக்க நின்றிருந்தான். அவள் அவனை இழுத்து தன் உடலுடன் சேர்த்து அணைத்துக்கொண்டாள்.
குருகுலத்து அரசனாகிய பாண்டுவின் அரசி குந்தி சதசிருங்கமெனும் காட்டில் விண்புகுந்த தன் கொழுநனை எரியூட்டியபின் மைந்தரை அழைத்துக்கொண்டு அமைச்சர்களுடன் அஸ்தினபுரிக்கு திரும்பிவந்தாள். நியோகமுறைப்படி அவளில் கருக்கொண்டு மண்நிகழ்ந்து கணவனால் மைந்தர் என ஏற்கப்பட்ட நான்கு மைந்தர்கள் அவளுக்கிருந்தனர். பாண்டுவால் கைக்கொள்ளப்படுவதற்கு முன்பு அவள் ஈன்ற மைந்தனாகிய வசுஷேணன் அவர்களில் மூத்தவன். யுதிஷ்டிரனும் பீமனும் அர்ஜுனனும் அவள் சதசிருங்கத்தில் கருக்கொண்டு ஈன்ற மைந்தர். கணவனுடன் சிதையேறிய இளைய அரசி மாத்ரியின் மைந்தர்களாகிய நகுலனும் சகதேவனும் அவர்களுக்கு இளையோர்.
மூத்த மைந்தன் அவர்கள் அனைவரைவிடவும் உயரமானவனாக, அன்னையின் தோள்வரை தலையெழுந்தவனாக இருந்தான். அவள் அவனை கர்ணன் என்று அழைத்தாள். அவன் இளமையிலேயே உளமுதிர்வுகொண்டவனாக, வில்திறன் மிக்கவனாக இருந்தான். அவர்கள் வருவதை அஸ்தினபுரியில் இருந்த மூத்த அரசரான திருதராஷ்டிரரும் பிதாமகர் பீஷ்மரும் மாதுலர் சகுனியும் மைந்தர்களான கௌரவநூற்றுவரும் அறிந்திருந்தனர். அமைச்சர் விதுரரும் பீஷ்மரும் கோட்டைமுகப்புக்கே வந்து அவர்களை எதிர்கொண்டழைத்தனர். தொலைவில் அவனைப் பார்த்ததுமே பீஷ்மர் முகம் மலர கைவிரித்தபடி அணுகி தோள்வளைத்து உடலுடன் சேர்த்து தழுவிக்கொண்டார். “என்னைவிட உயரமானவனாக ஆவாய். எழுந்து புவியாள்வதற்காக விண்ணவர் அளித்தது உன் உயரம்” என்றார்.
அரண்மனை முகப்பில் சகுனி அவர்களுக்காக காத்து நின்றிருந்தார். அவர் அருகே நின்ற துரியோதனன் தேரிலிருந்து இறங்கிய கர்ணனைக் கண்டதுமே கைகூப்பியபடி அணுகி கால்தொட்டு வணங்கினான். அவனை கர்ணன் தன்னுடன் சேர்த்து தழுவிக்கொண்டான். மறுகையால் நாணத்துடன் அப்பால் நின்றிருந்த துச்சாதனனை இழுத்தணைத்தான். அவர்களை நோக்கி அப்பால் நின்றிருந்த சகுனியை அணுகி “வாழ்த்துக, மாதுலரே!” என கால்தொட்டு வணங்கினான். சகுனி புன்னகையுடன் “இக்கணம் வரை இருந்த ஐயங்கள் இப்போது அகன்றன” என்றார். “சிலர் தெய்வங்களாலேயே தெரிவுசெய்யப்படுபவர்கள்.”
அன்றுமாலை அவர்கள் திருதராஷ்டிரரை சந்திக்க ஒருங்கு செய்யப்பட்டிருந்தது. கர்ணனின் காலடியோசை கேட்டே திருதராஷ்டிரர் உவகைக்குரலுடன் எழுந்தார். “களிற்றுக் காலடியோசை… இந்நகரை ஆளவிருக்கும் மாமன்னனுக்குரியது” என்றார். அருகணைந்த மைந்தனை அள்ளித் தழுவிக்கொண்டார். “என்னுடன் மற்போரிடுக, மைந்தா! உன் தோள்கள் எனக்கு நிகரானவை” என்றார். கர்ணன் நகைக்க அவர் அவனை தன் பெருங்கைகளால் சுற்றிப்பிடித்தார். நகைப்பும் கூச்சலுமாக அவர்கள் பொய்ப்போரிட்டனர்.
குடிப்பேரவையில் சிலர் கர்ணனின் குடிப்பிறப்பைக் குறித்து ஐயம் கொண்டிருந்தனர். விதுரர் அவையிலெழுந்து “மறைந்த அரசர் பாண்டுவால் முறைப்படி மகவேற்பு செய்யப்பட்டவர் இளவரசர் கர்ணன். குருகுலத்தில் அவரே முதல்வர். இக்குடியில் எவருக்கும் அவர்குறித்த மாற்று எண்ணம் இல்லை. இனி மறுப்புரைக்கும் உரிமை அந்தணர்க்கே உண்டு” என்றார். அந்தணர் தலைவரான தௌம்யர் “வேதமுறைப்படி மகவேற்புச்சடங்கு நிகழ்ந்துள்ளது. வேதத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர் அரசு அமரத் தகுதியானவரே” என்றார். அவையினர் வாழ்த்தொலி எழுப்பினர்.
இளையோர் நூற்றைவருக்கும் உகந்தவனாக இருந்தான் கர்ணன். பீமனுக்கும் துரியோதனனுக்கும் தோள்நிகர் கொண்ட மல்லன். அர்ஜுனனுக்கு வில்நிகர் கொண்ட கைவலன். யுதிஷ்டிரனுக்கு அணுக்கமான நூல்தேர்வோன். இளையோருக்கு தந்தைவடிவினன். இரு அன்னையருக்கும் விளையாட்டு மாறா மைந்தன். மகளிருக்கு கண்நிறையும் ஆண்மகன். அஸ்தினபுரியின் குடிகளுக்கு யயாதியும் குருவும் ஹஸ்தியும் பிரதீபனும் ஒன்றென எழுந்த அரசன்.
பதினெட்டாண்டு அகவை நிறைந்தபோது ஆன்றோர் கூடிய அவையில் பீஷ்மர் தலைமைதாங்க, திருதராஷ்டிரரும் சகுனியும் வாழ்த்த, தௌம்யர் வேதச்சொல் நிறைக்க, ஐம்பத்தாறு அரசர்களும் வந்து வணங்கியமர கர்ணன் அஸ்தினபுரியின் முடிசூடிக்கொண்டான். பாஞ்சாலத்து இளவரசி திரௌபதியை அவன் மணம்புரிந்தான். அவர்களுக்கு ஐந்து மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் தந்தையைப்போல் இனியோரும் ஆற்றல்கொண்டவருமாக இருந்தனர்.
மாமன்னர் வசுஷேணரின் ஆட்சியில் அஸ்தினபுரி வயல்கள் செழிக்க, அங்காடிகள் பெருக பொலிவுகொண்டது. பெருந்திறல்வீரர்களான தம்பியர் இருக்க அஸ்தினபுரியை வெல்லும் எண்ணமே எவருக்கும் எழவில்லை. அர்ஜுனன் கிழக்கையும் பீமன் மேற்கையும் துரியோதனன் தெற்கையும் நகுலசகதேவர்கள் வடக்கையும் முற்றிலும் வென்றனர். பாரதவர்ஷத்தின் அனைத்து அரசர்களும் அஸ்தினபுரிக்கு கப்பம் கட்டலாயினர்.
வசுஷேணர் அதர்வம்தேர்ந்த அந்தணர் வழிகாட்ட, நூற்றைந்து இளையோரும் பெரும்படைகொண்டு துணைநிற்க அஸ்வமேத வேள்வி ஒன்றை நிகழ்த்தினார். கரியபெரும்புரவி பாரதவர்ஷத்தின் அனைத்து நாடுகளுக்கும் சென்று முடிமன்னர்களால் வணங்கப்பட்டு திரும்பிவந்தது. மன்னர்கள் அளித்த பெருஞ்செல்வத்தைக்கொண்டு அஸ்தினபுரியில் கங்கைக்கரையில் ராஜசூயப் பெருவேள்வியை நிகழ்த்தினார். கை ஓயும் வரை அந்தணருக்கும் புலவருக்கும் சூதருக்கும் அள்ளி அள்ளி பொன்வழங்கினார். மும்முடி சூடி அமர்ந்தார்.
வசுஷேணரின் புகழைப்பாடும் பதினெட்டு பெருங்காவியங்களை அவைப்புலவர் இயற்றினர். அவை குடிப்பேரவைகளில் அரங்கேற்றப்பட்டன. பாரதவர்ஷமெங்கும் புலவர்களால் பாடப்பட்டன. வெற்றிமட்டுமே நிகழ்ந்த அவர் வாழ்வைப்பற்றி சார்ங்கதரர் எழுதிய மகாவிஜயம் என்னும் காவியமே அவற்றில் ஒப்பற்றது என்று நூலோர் உரைத்தனர். அவரைப்பற்றிய சூதர்பாடல்கள் பாரதவர்ஷத்தின் அனைத்து நகர்களிலும் முச்சந்திகளிலும் புறக்கடைகளிலும் அன்றாடம் பாடப்பட்டன. நாடெங்கும் முனிவர்களுக்கு தவச்சாலைகள் அமைத்தார். வழிதோறும் வணிகர்களுக்குரிய அறச்சாலைகளை நிறுவினார்.
புவியில் நிகழ்ந்த பிறவிநூல்களிலேயே அரிதானது வசுஷேணருடையது என்றனர் நிமித்திகர். பிறவிக் கணம் முதல் ஒவ்வொன்றும் உகந்தவகையிலேயே அமைந்தது அது. கோள் எதிர் கோள் அமையாத பிறவிநூல் ஒன்று இருக்கவியலும் என்பதையே அயல்நிலத்து நிமித்திகர் அறிந்திருக்கவில்லை. அவர்கள் நாளுமென அவர் அவைக்கு வந்துகொண்டிருந்தனர். சிற்றவைகளில் அமர்ந்து அதை ஆராயந்து சொல்லாடினர். அதனை நுணுகி கூர்ந்து பிரித்து இணைத்து நோக்கி எங்கேனும் ஏதேனும் எதிர்நிலையைக் காணமுயன்று ஓய்ந்தனர்
“ஊழ் என்பது ஒருகையில் வாளும் மறுகையில் மலரும் கொண்ட விந்தைப்பெருந்தெய்வம்” என்றார் தென்தமிழ்நிலத்து நிமித்திகர் சாத்தனார். “நஞ்சும் அமுதும்கொண்டு அது வாழ்வை நெய்கிறதென்கின்றன நூல்கள். எவருக்கும் அது முற்றாக கனிந்ததில்லை. எவரையும் கைவிட்டதுமில்லை. இவரை மட்டும் பிச்சியான பேரன்னை என மடியில் அமரவைத்திருக்கிறது. தன் முலைகனிந்து ஊட்டிக்கொண்டே இருக்கிறது.”
“அருகிருந்து அவர் வாழ்க்கையை பார்த்துக்கொண்டிருக்கிறோம். வாழ்நாள் முழுக்க அரசர் எண்ணியது நிகழாதொழிந்ததில்லை. அவருக்கு எதிர்ச்சொல் எழுந்ததில்லை. அவருக்கு எதிரியென்று எவரும் நின்றதில்லை. வெல்லவியலாதென்றும் அடையவொண்ணாதென்றும் எதையும் அவர் இப்பிறவியில் கண்டதில்லை. காலில் ஒரு சிறுமுள் தைத்தபோது அதை எடுத்த அவைச்சேவகனிடம் இந்த வலியைப்போன்ற ஒன்றையா நூல்கள் துயர் என்று சொல்கின்றன என்று அவர் வினவினார் என்று சூதர் கதை ஒன்று உள்ளது” என்றார் தலைமை அமைச்சர் சௌனகர்.
தெய்வங்களுக்குரிய பழுதிலாப்பெரும்பிறவி கொண்டிருந்தமையால் வசுஷேணரை முனிவர் வாழ்த்தினர். நலம் மட்டுமே நாடும் உள்ளம் கொண்டிருந்தமையால் அந்தணர் அவரை போற்றினர். வெற்றியை மட்டுமே அடைந்தவர் என்பதனால் அவரை படைக்கலங்களின் தெய்வம் என்றனர் ஷத்ரியர். பொருள்தெய்வம் தேடிப்பின் தொடர்பவர் என்றனர் வைசியர். ஒருமுறைகூட அறம் பிழைக்கா கோல்கொண்டவர் என்பதனால் குடிகள் அவரை குலதெய்வமென்றே வணங்கினர்.
ஒவ்வொருநாளும் வசுஷேணர் புகழ்மொழிகளை மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தார். அவை உண்மையிலேயே உளமுணர்ந்து உரைக்கப்பட்டவை என்பதனால் அவைமுகமன்களுக்குரிய பொருளின்மை கொண்டிருக்கவில்லை. எனவே அவை செவிகடந்து உளம்சென்று தொட்டன. உள்ளத்திலும் அவை ஒலித்தமையால் மேலும் அழுத்தம் கொண்டன. சொல்பவரின் கேட்பவரின் எண்ணப்பெருக்கை அவை ஆண்டன. பிறிதொன்று இல்லாமல் அவை அவரைச் சூழ்ந்திருந்தன. அவர் அவச்சொல்லையே செவிகொள்ளாது அரசுவீற்றிருந்தார்.
ஒவ்வொரு நாளுமென செல்வமும் நலமும் பொலிந்தன வசுஷேணரின் நாட்டில். இரவலரின்றி அவர் அறமியற்றுவது நின்றது. எதிரிகளின்றி அவர் வீரம் மறைந்தது. செய்வதற்கேதுமின்றி அவர் அவைகளில் அமர்ந்து கண்சோர்ந்தார். அமைச்சருடனும் தோழருடனும் அமர்ந்து நாற்களமாடினார். மீண்டும் மீண்டுமென ஒரே வாழ்க்கையில் அமைவதன் சோர்வை அகற்ற கானாடினார். மாற்றுருக்கொண்டு நாடுலாவினார். ஆனால் அவையும் மீளமீளச் செய்யப்படுவதே என்று உணர்ந்து மெல்ல அரண்மனைக்குள்ளேயே மீண்டும் அமைந்தார்.
“கருவறைத் தெய்வம் பீடத்தில் அமைந்தே உலகுபுரக்கிறது, அரசே” என்றனர் அவைப்புலவர். “அறம் நிலைத்த நாட்டில் தெய்வங்கள் பலிகொள்வதுகூட இல்லை” என்றனர். சூதர்கள் “அலையிலா பெரு நீர்நிலை இந்த அஸ்தினபுரி. அதன் நடுவே இதழ்குலையாது ஒளிகொண்டு நிற்கும் ஆயிரமிதழ்த்தாமரை நம் அரசர்” என்று பாடினர். ஒன்றும்குறைவிலாதமைந்த நகரையும் அதன் அரசனையும் காண விண்ணில் எப்போதும் தேவர்கள் வந்து நின்றிருந்தமையால் அஸ்தினபுரிக்குமேல் ஒளிமிக்க முகில்கணம் ஒன்று வெண்குடையென எப்போதும் நின்றிருந்தது.