எதிர்மறைத்தன்மை -கடிதம்

protest1

 

தமிழர்களின் உணர்ச்சிகரம்

நல்லிடையன் நகர் -1

நல்லிடையன் நகர்-2

ஆசிரியருக்கு,

 

வணக்கம். தமிழக திருவிழா பற்றி நீங்கள் எழுதினால் அது மிக சிறந்த திறப்பை வாசகர்களுக்கு அளிக்கும். 21ம் நூற்றாண்டின் மொழியில் இந்து பாரம்பரிய தொடர்ச்சியை தெரிந்து கொள்வது புதிய தலைமுறைக்கும் அவசியம்.காணொளி காட்சியாக பின்னனி கமெண்டரியுடன் விழாக்காட்சிகள் யூ ட்யூபில் இப்பொழுதெல்லாம் கிடைத்தாலும், அதை மரபில் நின்று நவீனத்தினை கையாளத் தெரிந்த மொழியில் சித்திரமாக எழுதப்படும் பொழுது அத்தியாவசியமாகின்றது.

 

தமிழர்களின் உணர்ச்சிகரம் அருமையான கட்டுரை. வலையில் வைக்கப்படும் நிறைய கருத்துகள் ஒரு வடிகாலாக வைக்கப்படுவதே தனி அனுபவத்தில் காண முடிந்தது. அன்றாட மிடில் க்ளாஸ் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருக்க ப்ரயத்தனபடுவதில் இருந்து வலையில் ஒரு விடுவிப்பு கிடைக்கின்றது என்றே படுகின்றது. வட்டிக்கு விடும் நண்பர், ஸ்டாக் மார்க்கெட்டில் கில்லி ஆடும் நண்பர் கம்யூனிசம், சோசியலிசம்  பேசுகின்றார், பிள்ளைகளை சிபிஎஸ்இல் படிக்க வைக்கும் நண்பர்கள் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் என்ன படிக்க வேண்டும், என்ன மொழியில் படிக்க வைக்க வேண்டுமென கொந்தளிக்கின்றார்கள். குழந்தை குட்டிகளுடன் கோவில், கோவிலாக போகும் நண்பர் ஐயமார் ஒழிகவென குதிக்கின்றார். ஓம் முருகா என தொட்டதற்க்கெல்லாம்  சொல்லும் நண்பர் சமஸ்கிருதம் ஓழிய வேண்டுமென்கின்றார், தென்னிந்தியா உடைய வேண்டுமென்கின்றார், கைலாயம் வடக்கே இருக்கிறதே என சொல்ல வேண்டியதாகின்றது. தமிழ் பெண்கள் இதில் எல்லாம் சிக்காமல் இருக்கின்றார்கள். தோழர்கள் எல்லாம் என் மனைவி கோவில் செல்வாள், பிள்ளைகளை சிபிஎஸ்இ படிக்க செய்கின்றாள், பணம் சம்பாதிக்க ஸ்டாக் மார்க்கெட்டில் பணம் போட சொல்கின்றாள் என எஸ்கேப் ஆக பெண்களைதான் பயன்படுத்துகின்றார்கள்.

 

மிடில் க்ளாஸ் வாழ்க்கையில் பாதுகாப்பாக இருப்பது கயிற்றின் மீது நடப்பது போல இருக்கவும், கயிற்றினை விட்டு இறங்காமல் தரையில் இருக்கும் பாவனையை காப்பாற்ற இணையம் ஒரு வகையில் ஏதுவாக இருக்கின்றது. தரையில் நடப்பதுதானே இயற்கை. குரோதம், கோபம், பிளவு எல்லாம் நோகாமல் வெளிப்படுத்த முடிகின்றது. இயல்பாக இவற்றினை கையாள மனபயிற்சி இல்லாத சூழலில் ஏதோ ஒரு வகையில் எதிர் கொள்ள வேண்டியதாகின்றது.

 

அன்புடன்

நிர்மல்.

 

அன்புள்ள ஜெ

 

எதிர்மறைத்தன்மை பற்றி எழுதியிருந்தீர்கள். நானே இதை வாசித்தபோது பலகோணங்களில் இதை முன்பே சிந்தித்திருப்பதைப்பற்றி நினைத்துக்கொண்டேன். ஃபேஸ்புக்கில் அக்கவுண்ட் வைத்திருந்து நிறுத்திக்கொண்டேன். எனக்கு இயற்கைவேளாண்மை விஷயங்களில் ஈடுபாடுண்டு. சிறிய அளவிலே செய்துபார்க்க நினைத்து செய்துகொண்டிருக்கிறேன். ஃபேஸ்புக் அதற்கு உதவும் என்று நினைத்தேன். ஆனால் ஃபேஸ்புக்கில் எழுதும்போது ஒரு விஷயம் கவனித்தேன். எதிர்மறையானவற்றை மிகுந்த கசப்புடன் எழுதினால்மட்டுமே வாச்கர்கள் இருப்பார்கள். வேறு எதைஎ ழுதினாலும் வாசிப்பு இருக்காது. சினிமா பற்றி எழுதினால் கூட வசைபாடினால்தான் ஆதரவு.

 

எதிர்மறை விஷயத்தையும் த்தூ என்ற பாணியிலே எழுதவேண்டும். அதுக்கு அதே மனநிலையில் ஒரு பத்து கமெண்ட். நூறு லைக்ஸ். அதோடு இதை எழுதினாயே ஏன் அதை எழுதவில்லை என்று கேட்பார்கள். எல்லாவற்றைப்பற்றியும் எழுதிக்கொண்டே இருக்கவேண்டும். நிறுத்தினால் அவ்வலவுதான். எதைவேண்டுமென்றாலும் திட்டலாம். காந்தி நேரு அம்பேத்கர் இந்தியா அமெரிக்கா எதை திட்டினாலும் ஆதரவு உண்டு. சீமான் பெரியார் கட்சிகளின் கொள்கைகளை நாம் எடுத்துக்கொண்டால் உலகமே நமக்கு எதிரான சதி என்று நினைப்பதற்கான லைசன்ஸ் வந்துவிடுகிறது.

 

ஏன் இதையெல்லாம் செய்கிறார்கள் என்று பார்த்தேன். எனக்குத்தெரிந்த வட்டத்திலேயே 99 சதவீதம்பேரும் மிகச்சின்ன அளவில் வேலைபார்ப்பவர்கள். நமக்கு கைகட்டி வேலைபார்க்கத்தான் தெரியும். வேலையில் சின்சியர். ஆனால் கவனம் கம்மி. ஆகவே திட்டுகள் கிடைக்கும். அந்த பணிவையும் ஒடுக்கத்தையும் இங்கே வந்து துள்ளித் தீர்த்துக்கொள்கிறார்கள். இங்கே ஒருவன் இந்தியப்பிரிவினை, தமிழ்த்தேசியம், இந்துத்துவ வெறி, முஸ்லீம்வெறுப்பு என்றெல்லாம் கத்தினாலே அந்த அப்பிராணியை யாரோ அடி நொறுக்கிக்கொண்டிருக்கிரார்கள் என்று அர்த்தம்

 

நான் ஒரே நாளில் ஒட்டுமொத்தமாக விலகிவிட்டேன். இப்போது மன அமைதியுடன் இருக்கிறேன்

 

கருணா

முந்தைய கட்டுரைமன்னார்குடி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇரண்டு முகம்