வெ.ஸ்ரீராம்

sreeraam

இனிய ஜெயம்

மொழிபெயர்ப்பாளர் மற்றும் எழுத்தாளர் எம் ஏ சுசிலா அவர்களுக்கு ஒரு விழா குறித்த செய்தி அறிந்து மகிழ்ந்தேன் . இந்த மாதம் இங்கே கடலூரில் ,கவிஞர் கனிமொழி முன்னெடுக்கும் ஆம்பல் இலக்கியக் கூடுகை வழியே மொழிபெயர்ப்பாளர் வெ.ஸ்ரீராம் அவர்களுக்கு ,அவரது மொழிபெயர்ப்புகள் மீது ,ஒரு கூடல்  ஏற்பாடு செய்திருந்தோம் .

சுந்தர ராமாமி தனது ஜே ஜே சில குறிப்புகள் வழியே ,நவீன தமிழ் இலக்கியத்தின் கருத்தியல் மையமமாக உயர்ந்தது இலக்கிய வரலாறு .அந்த நாவல் துவங்குவதே ஆல்பெர் காம்யு பெயரில் இருந்தே . ஜே ஜே சில குறிப்புகள் வாசித்து நீண்ட நாள் கழித்து ,ஆல்பெர் காம்யு  வெ.ஸ்ரீராம் மொழிபெயர்ப்பு வழியே எனக்கு அறிமுகம் ஆகிறார் .

அதன் பின் அவர் வழியே ,ழாக் ப்ரெவர் , சார்த்தார் , என ஒவ்வொருவராக அறிமுகம் ஆகினர் . ஜே ஜே சில குறிப்பிகள் நாவலில் இருக்கும் ஒரு அந்நியத்தன்மை ,அல்லது காம்யு வில் இருக்கும் ஒரு உலகப் பொது  தன்மை  இவை கூடி ஜே ஜே சில குறிப்புகள் ,அந்நியன் இவற்றை என் அகம் ஒரே வரிசையில் வைத்திருந்தது .  உண்மையில் ழாக் ப்ரெவர் ,காம்யு இவர்கள் எல்லாம் மொழி பெயர்ப்பின் வழியே இங்கே வந்தவர்கள் எனும் உணர்வே எனக்கு இல்லை .அந்த அளவு வாசகனின் அக மொழிக்கு  சிறிய இடரும் விளைவிக்காத மொழி பெயர்ப்புகள் அவை .

ஒவ்வொரு இலக்கிய கூடுகை முடிந்த பின்னும் நண்பர்கள் கூடி ஓரிரு மணிநேரம் அந்த கூடுகையின் மனநிலையை கொண்டாடும் முகமாக பேசிக்கொண்டிருப்பது வழக்கம் . அப்படி ஒரு சமயம் கூடல் முடிந்ததும் ,அருகிலிருக்கும் கடற்க்கரை சென்று அமர்து ,ழாக் ப்ரெவர் கவிதைகள் வாசித்து அதன் மேல் உரையாடல் நிகழ்ந்தது .அப்போது பேச்சு சுவாரஸ்யம் வெ ஸ்ரீராம் அவர்கள் மொழிபெயர்ப்பு மீது ஒரு கூடுகை நிகழ்த்துவது என்பதில் நிறைந்தது .அது சில மாதங்கள் கடந்து இந்த மாதம் நிறைவேறியது .

உண்மையில் இன்று வந்து குவியும் மொழிபெயர்ப்புகளில் கணிசமானவை குப்பை .  காரணம் என்ன ?

முதல் காரணம் மூன்றாம் தர  மொழிபெயர்ப்பாளர்கள் ,எந்த ஆசிரியரை மொழி பெயர்க்கிரார்களோ அவர்களின் ,வாசகனாக இல்லாமல் வெறும் மொழி பெயர்ப்பாளனாக மட்டும் இருப்பது .  இந்த மொழி பெயர்ப்பாளர்கள் கையாள்வது மொழி பெயர்க்க வேண்டிய சொற்களை மட்டுமே என்று இருக்கிறது . அவர்களுக்கு தாஸ்தாவெஸ்கியும் ஒன்றுதான் பழைய டெலிபோன் டைரக்டரியும் ஒன்றுதான் .

இரண்டாவது காரணம் மொழிபெயர்க்கப்படும் நாவல் பேசும் கருப்பொருள் சார்த்த அறிவு இன்மை . உதாரணமாக ஒரு செஸ் ஆட்டக்காரனை பற்றிய நாவல் எனக் கொண்டால் ,அந்த நாவல் நிகழும் பண்பாட்டில் செஸ் என்னவாக வளர்த்து வந்திருக்கிறது ,அந்த நாவல்  அங்கிருந்து இங்கே  வருகையில் இங்கே செஸ் வளர்ந்து வந்து என்னவாக இருக்கிறது என்ற இருமுனை புரிதல் அவசியம் .  இந்த மூன்றாம் தர மொழிபெயர்ப்பாளர்கள் வசம் இத்தகு உழைப்புகள் இல்லை .

மூன்றாவது காரணம் .  உணர்வு சார்ந்த சொரணை இன்மை .  ஒரு புனைவோ ,கட்டுரையோ அது எந்த உணர்வு தளத்தின் மேல் கட்டப்படுகிறது என்ற அடிப்படை மீது சொரணை இன்மை .சிறந்த உதாரணம் விஜய பத்மா மொழிபெயர்ப்பில் வெளியான மணற்குன்றுப் பெண் நாவல் .  மூல நாவலின் திகில் தன்மை எங்கோ அவிந்து போய்,  அந்த பொறிக்குள் நிகழும் சம்பவங்கள் அனைத்தும் ,கார்டூன்  தனமாகவும் கோமாளித் தனமாகவும் மாறி இருந்தது .இந்த சொரணை இன்மையின் விளைவே.  இரண்டாவது உதாரணம் ப்ரவாகன் மொழிபெயர்த்த பில் ப்ரைசனின் அனைத்தயும் குறித்த சுருக்கமான வரலாறு . மூல நூலில் நிகழும் ஆச்சரியமும் ,நகைச்சுவையும்  கை தவறி கூட தமிழ் மொழி பெயர்ப்பில் நிகழ்ந்து விடக் கூடாது என ப்ரவாகன் மிகுந்த கவனம் எடுத்திருப்பதாக தெரிகிறது .

நான்காவது காரணம் .மொழி அழகு மீதான சொரணை இன்மை .  ராமச்சந்திர குகா அவர்களின் மொழி அழகும் சரளமும் , போப்பு மொழிபெயர்த்த நுகர்வெனும் பெரும்பசி நூலில் எங்குமே காணக் கிடைக்காது .  முதல் வாசிப்பில் அந்த நூல் ஏதோ ஒரு அல்ஜீப்ரா கணக்கு தேற்றத்தின் தமிழ் வடிவம் என்றே நினைத்தேன் .

ஐந்தாவது காரணம் , எடிட்டர்  இல்லாத குறை . ஒரு மொழிபெயர்ப்பாளர் தனது மொழி பெயர்ப்பை விவாதித்து செம்மை செய்ய , இங்கே மொழிபெயப்பு எடிட்டர் யாரும் இல்லை .

ஆறாவது காரணம்  இம்ப்ருமென்ட் செய்வது .அதாவது மூல ஆசிரியர்க்கு விவரம் பத்தாது.ஆகவே மொழி பெயர்ப்பாளர் அந்த விவர அறிவை உயர்த்தி உதவுவார் .உதாரணம் சமீபத்தில் வாசித்த வெ.நி .சூர்யா மொழிபெயர்த்த ஆக்டேவியா பாசின் இந்த கவிதை

நீரின் சாவி

ரிஷிகேஷத்திற்கு பிறகு

கங்கை இன்னும் பசுமை.

சிகரங்களில் உடைகிறது கண்ணாடி தொடுவானம்.

நாம் நடக்கிறோம் பளிங்குகளின் மேல்.

மேலும் கீழும் அமைதியின் மிகப்பெரிய வளைகுடா.

நீலவெளிகளில் வெண்பாறைகளும் கருமேகங்களும்.

நீ சொன்னாய்:

இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது

அன்றிரவு நான் எனது கைகளை உனது முலைகளில் கழுவினேன்

*Le pays est plein de sources எனும் பிரெஞ்சு வாக்கியத்தை (The country is full of sources ) “இந்த தேசம் நீரால் நிரம்பியிருக்கிறது” என மொழியாக்கம் செய்திருக்கிறேன்.

வெ.நி .சூர்யா . சோர்ஸ்ஸஸ் எனில் வளங்கள் .என்பதை எவரும் அறிவர் .வளங்கள் எனில் நதி ,மலை ,வனம் ,மண் என மொத்தமாக எல்லாமும்தான் . மூல ஆசிரியர் வளங்கள் என்றே குறிப்பிட ,நமது மொழி பெயர்ப்பாளர் ,வளங்களில் இருந்து நீர் எனும் ஒரே ஒரு வளத்தை பிரிக்கிறார் .

இந்த ஆறு  அடிப்படை பிழைகள் வழியேதான் தமிழ் தவிர பிற மொழி அறியா என் போன்ற அப்ராணிகள் தலையில் இந்த மொழிபெயர்ப்பு பொதிகள் வந்து விழுகிறது .  இது என் போன்ற வாசகனை மட்டும் அல்ல ,அந்த மூல நூலின் ஆசிரியனையும் , நமது கலாச்சாரத்தின் திராணி இன்மை வழியே ,மொழி பெயர்க்கப்படும் கலாச்சாரத்தையும் அவமதிக்கும் செயல் இது .

இத்தகு பிழைகளில் இருந்து வெளியில் நிற்கும் சொற்பமான மொழிபெயர்ப்பாளர்களே நமது தமிழ் இலக்கியப் பரப்பின் வளங்களின் ஒருவர் எனக் கொள்ள முடியும் . அவர்களில் ஒருவர் வெ.ஸ்ரீராம் அவர்கள் .

நிகழ்விலும் ,நிகழ்வுக்கு வெளியிலான உரையாடலிலும்  வெ ஸ்ரீராம் அவர்கள் ,தான் மொழி பெயர்த்த ஆசிரியர்கள் உருவாகி வந்த சமூக ,அரசியல் ,தத்துவ பின்புலம் ,அதன் பின்னணியிலான அவர்களின் ஆக்கங்கள் ,அது உலக மொழிகளிலும் தமிழிலும் நிகழ்த்திய தாக்கங்கள் ,  அந்நியன் நாவல் முதல் மெர்சோ மறு விசாரணை நாவல் வரை நாவலுக்குள் தத்துவப் பார்வை புரண்டு நகர்ந்த விதம் என பலதும் ,சுருக்கமாகவும் ,செறிவாகவும் ,தனது மெல்லிய ,கனிந்த குரலில் பகிர்ந்து கொண்டார் .

ழாக் ப்ரெவர் கவிதைகள் குறித்து கண்டராதித்தன் அவர்களும் , அந்நியன் நாவல் குறித்து வாசகர் அன்பு வேந்தன் [இவர் மதுரையில் இருந்து வந்திருந்தார் ]  மொழியாக்க சிக்கல்கள் குறித்து க்ரியா பதிப்பகத்தை சேர்ந்த ராஜன் அவர்கள் பேசினார்கள் . நிகழ்வின் முக்கிய அம்சம்   மீள முடியுமா நாடக மொழி பெயர்ப்பு மீது தனது  விமர்சனப் பார்வையை முன் வைத்த  நண்பரும் கவிஞருமான மனோ மோகன் அவர்களின் உரை .

https://www.youtube.com/watch?v=E6cxQv_DksE

இறுதில் மொழிபெயர்ப்பாளர் ஜி குப்புசாமி அவர்கள் ,மொழியாக்க சிக்கல்கள் குறித்து பேசினார்கள் .குறிப்பாக மொழிபெயர்ப்பில் பொதுவாக கைநழுவி விடும் த்வனி குறித்து பேசினார் .சுரா ஆங்கிலம் வழி மொழி பெயர்த்த ழாக் ப்ரெவரின் கவிதை ஒன்று ,அதே கவிதையை பிரெஞ்ச்சில் இருந்து வெ.ஸ்ரீராம் மொழியாக்கம் செய்த பிரதி ,இரண்டையும் வாசித்து ,இந்த த்வனி  அழகு குறித்து பேசி  ஜி கே நிகழ்வை நிறைவு செய்தார்கள் .

https://www.youtube.com/watch?v=P3uxc_PcSQM

மொழியாக்கம் குறித்த பயிற்சி பட்டறை என்றே சொல்லிவிடலாம் எனும் வண்ணம் அமைந்து விட்ட நிகழ்வு .

உண்மையில் மிகுந்த பொருள் செலவில் நிகழ்ந்த கூடுகை இது .விருந்தினர்கள் எந்த வசதி குறைவும் அணுகி விடா வண்ணம் ,போக்கு வரத்து , தங்குதல் ,உணவு .என அனைத்து எல்லைகளிலும் கவனத்துடன் செயல்பட்டார் கனிமொழி . வந்திருந்த அனைவருக்கும் அவரது இல்லத்தில் இருந்து ,இல்லத்தினரே சமைத்த பாயசம் உள்ளிட்ட அசைவ உணவு ,அவர்களே பரிமாறினார்கள் . அனைவரையும் தக்க கவனத்துடன் வரவேற்று ,நிகழ்வை நடத்தி , விடை கொடுத்தார்கள் .

நிகழ்வு முடிந்து , அரங்க வாசலில் நின்று  உவகையும் ஆற்றாமயுமாக பேசிக்கொண்டிருந்தார் கனிமொழி .   உண்மையில் கடலூர் மாவட்டத்துக்குள் ஒரு இலக்கிய புரட்சியை வெடிக்க வைத்து விடுவது  என்பதே எங்கள் குறிக்கோள் . செயலுக்கு விளைவுகள் பூஜ்யம் . சுற்றி உள்ள எல்லா அரசு நூலகம் அனைத்துக்கும் தகவல் அனுப்பி ஆகி விட்டது . கல்லூரிகளுக்குள் நுழையவே முடியாது .இலக்கிய கூட்டம் என சொல்லி ,மாணவர்களை அழைக்க சென்றால் ,கல்லூரி தலைமை புள்ளை புடிக்க வந்தவனை போல நடத்தும் , வாட்சப்,முகநூல் வழி செய்தி பரவியும் அதே பதினெட்டு பேரே வந்தனர் . பொதுவாக இருபத்து ஐந்து பேரை எதிர்பார்க்கலாம் .இந்த பதினெட்டு ரிட்டேட் கோஷ்டி . நிகழ்ச்சி துவங்கி அமைப்பாளர் நண்பர்களே என துவங்கும்போது ,பெரும்பாலோர் காது மெஷினை எடுத்து மாட்டுவர் .விருந்தினர் விழிகளும் ,குரலும் அத்துடன் அணைந்து போகும் . மிச்ச ஏழு பேர் இளம் தலைமுறை .அங்கு மட்டுமே மாற்றம் என ஏதேனும் சாத்தியம் .அந்த ஏழு பேரைத்தான் இம்முறை காணவில்லை .ஏதோ அரசு பரிட்சை அன்று. இலக்கியத்துக்குத்தான் எத்தனை சோதனை .  இது வாசகர் நிலை எனில் ,விருந்தினர் வேறு நிலையில் , வருகிறேன் என இறுதி வரை சொல்லி இருந்த கார்த்திகை பாண்டியன் அவருக்கு பதிலாக அவரது கட்டுரையை அனுப்பி இருந்தார் . நண்பர் இதயத்துல்லா அதை வாசித்தார் .மற்றொரு கவிஞர் . அவர் பெருங் கவிஞர் போல, எனக்கு அறிமுகம் இல்லை .வருகிறேன் என ஒப்புக் கொண்டிருந்தவர் .வரவில்லை . காரணமாக அவர் அனுப்பிய செய்தி ,தமிழ் இலக்கிய வரலாற்றில் பொன் தகட்டில் ,வைர மணிகள் கொண்டு பொறிக்கப்பட வேண்டிய ஒன்று .அந்த செய்தி . ”நான் என் கொளுந்தியாளை பார்க்க செல்கிறேன் ”.

இந்த சூழலில்தான் சுருதி தொலைக்காட்சி அவர்களின் பங்கு மிக மிக முக்கியத்துவம் கொண்ட ஒன்று என ஆகிறது . இலக்கியத்துக்கான எந்த அறிகுறியும் அற்ற கடலூர் போன்றொதொரு வெற்று வெளியில்,நாளை எவரேனும்  இங்கே இது நடந்தது ,என உவகை கொள்ள , ஒரு ஆவணமாக சுருதி தொலைகாட்சியின் இந்த பங்களிப்பு அமையும்.

ஏதாவது பண்ணனும் அப்டின்னு பண்ணும் போது உற்சாகமா இருக்கு , என்ன பண்ணாலும் இங்க ஒண்ணும் நடக்காதோ அப்டின்னு தோணும் போது சோர்வா இருக்கு . கிளம்ப மனமின்றி  உயிர்கொண்டு உறுமிக்கொண்டிருந்த வாகனத்தில் அமர்ந்தபடியே கனிமொழி பேசிக்கொண்டிருந்தார் .

கிளம்பும்போது திரும்பி பார்த்து சந்தோஷ கிரீச்சிடும் குரலில் சொன்னார் ,

”நாம இப்டி ஒண்ணு பண்ணோம்னு ஜெயமோகன் சார் கிட்ட சொல்லு என்ன ”

சொல்லிவிட்டேன் .

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4
அடுத்த கட்டுரைஐரோப்பாக்கள்