தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்

blob

மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,

தங்கள் தெய்வங்கள்,பேய்கள்,தேவர்கள் தொகுப்பை இந்த இணையதள இடைவெளி நாட்களில் படித்தேன்.இடைவெளிவிட்ட அத்தனை நாட்களையும் மிகச் சுலபமாக என்னால் கடந்து செல்ல முடிந்தது.ஏனெனில் கடந்த இரண்டு ஆண்டுகளாக அன்றாட செயல்களுள் முதன்மையானதாக அதுவே  இருந்திருக்கின்றது.எனக்குத் தெரிந்து நான் அதிகமாகவும் ஆழ்ந்தும் படிப்பது தங்கள் எழுத்துக்களைத்தான். மற்ற எழுத்தாளர்களின் சில படைப்புகளையே வாசித்துள்ளேன்.தங்கள் வாசகர்கள் சென்ற வாசிப்பு தொலைவுகளில் எனது, இறுதி இடம்தான் என அறிவேன்.சில நேரங்களில் உங்கள் எழுத்துக்கள் கொண்டு சேர்க்க முடியாத இடத்தை மற்றவை தர போவதில்லை என்ற எண்ணமே என் தாழ்வுணர்வை கடந்துசெல்ல துணைபுரிகிறது.

என்னை பொறுத்தவரை வேதங்கள்,வேதந்தங்கள் பற்றி எதுவும் தெரியாது.மிக அடிப்படைக்கூட.ஆனால் சொல்வளர்காடு மீள் வாசிப்பை முடித்தவுடன் ஏதோ பிடிபடுவதுபோல் உள்ளது.இவ்வெழுத்துக்கள் ஒன்று போதும்

இவ்வாழ்நாளின் கடைசிவரை அறிய,எதையோ எங்கோ சொல்லிக்கொண்டே போவீர்கள் எனத் தோன்றுகிறது.அனைத்து வினாக்களுக்கும் அடுத்தப் பக்க விடை இருந்து கொண்டே இருக்கிறது.உங்களிடம் வாசக சந்திப்பின்போது துரியம் என்பதற்கு விளக்கம் கேட்டேன்.மிக அழகாக விளக்கினீர்கள்.நன்றி.ஆனால் வீட்டிற்கு வந்து”திருமுகப்பில்” வாசிக்கும்போது அதற்கான விடையுடன் ரசிக்கும்படியான ஒரு பகடியும் சேர்ந்தே இருந்தது.

மன்னிக்கவும்.எழுதத்தொடங்கியது “நாட்டார் கதைகள்”தொகுப்பை பற்றியே.

முயன்றாலும் வெளிவரமுடியாத யட்சினி உலகுக்குள் தள்ளிவிட்டீர்கள்.எத்தனை நீலிகள்,யட்சினிகள்,ஆண் தெய்வங்கள்.ஆனால் அத்தனையிலும் மிகச்சிலவற்றை தவிர அனைத்தும் தாய்மை என்ற பீடத்தை நிலைகொள்ள செய்யவே தெய்வமானவர்கள்,சில யட்சிகளே காதலாலும் மற்றவையாலும்.எல்லா பெண்களுக்குள்ளும் இருக்கும் அன்னை எவற்றைவிடவும் தன் குழந்தை அன்பின் பொருட்டு எந்த அழிவையும் செய்யத் துணிவாள் என தோன்றியது.

வீட்டு காவல் தெய்வத்தை நெருக்கமாக“ஏடி யட்சி? மூதேவி, அறிவில்லையாடி உனக்கு? பிள்ளை போகுது பாத்துட்டு என்னடி செய்றே?”என கேட்கும் உரிமை நம் தலைமுறைக்கு வாய்க்கவில்லை. எதனை குறித்து இத்தனை தெய்வங்கள்?அருவத்துடன் வாழ்வது (நினைவில்) எப்படியிருந்திருக்கும்?.நம் சமூக மாற்றங்கள் மூதாதையர்களின் சில வாழ்வின் அழகியல்களை நம்மிலிருந்து விலக்கிவிட்டதா?

“மரண சிம்மாசன்ம்” இறுதியில் சிறிது பயத்தோடு நம்மையும் ஒப்பிட்டுப் பார்க்க வைக்கிறது.ஊழ் எனும் கழுமரம் விட்டு விலகமுடியாத கழுவன்கள்.

இருண்மையும் தெய்வம்தான் இல்லையா?.ஒருநாளின் ஒரு மணித்துளியிலாவது நாம் ஜேஷ்டாதேவியின் தரிசனத்தை அடைகிறோம்.மனதின் கீழடுக்கிலிருந்து எழுந்து கடந்து செல்கிறாள் அல்லது கடந்து செல்வது போல் தெரிகிறாள்.இருந்துகொண்டே இருக்கிறாள் வாழ்வின் இறுதிவரை.அவளிருக்கும்போதே ஒளி தனக்கான மதிப்பீட்டை தக்கவைக்கிறது.இதில் குறிப்பிடப்பட்ட அனைத்து தேவதைகளும் பழிவாங்கும் , பலிகொள்ளும் இருண்மையிலிருந்து மானுடத்தின் மீது கருணைகொண்டு மேலெழுந்து காவல்தெய்வமென நிறைவடைந்தவர்கள்தானே.நாளை திருவட்டாறு சென்றால்கூட கால்களை தட்டும் வேர்கள் எங்கே என்றுதான் குனிந்து பார்க்க தோன்றும்.பிறகே கண் நிறைக்கும் அவனை தரிசனம் செய்யத் தோன்றுமோ என்னவோ.கேசனையும் கேசினியையும் நினைத்தாலே பெருமாள் நம்மை ஆட்கொள்வான் என தோன்றுகிறது.

முத்துப்பட்டனுடையதும் மார்த்தாண்ட வர்மாவுடையதும் மிகச் சிறந்த காதல் கதைகள்.

“கனிந்த நஞ்சு மணியாகி சுடர்விடும் என்பதைப்போல் அற்புதமான கவித்துவம் பிறிதில்லை.அதிலுள்ளது இந்து மெய்ஞான மரபின் சாராம்சமான தரிசனம்”

-இதைவிட சுருக்கமாக எதையும் புரியவைத்துவிட முடியாது.

ஒவ்வொரு கதையின் இறுதியிலும் குறியீடுகளை உடைத்து அதன் பொருளை நேரடியாகவே தந்து விடுகிறீர்கள்.குறிப்பாக காட்டிசக்கி அளிக்கும் அழிவுகள் இயற்கையை நாம் அழிப்பதன் விளைவு என்பதைபோல.

பூலங்கொண்டாள் கதையில் ஈவிரக்கம் இல்லாமல் ஊரையே தண்ணீரை தொடவிடாமல் தண்டிக்கும் அவள் கர்ப்பிணி பெண்ணின் நிலைகண்டு ஆவேசம் அணைவதே இத்தொகுப்பின் உச்சம் என தோன்றுகிறது.குழந்தைகளின் கொடைபெற்று குளிர்பவள் அறம் வளர்தாளகத்தான் இருக்கமுடியும்.

‘கனவின் கனி’ -வீரச்சின்னையா செல்லி-ஆண்டாளின் கதை போன்றது.மிகத்தீவிர நம்பிக்கைக்கான மிகப்பெரிய பலன்.

அறச்சீற்றம்  என்ற வார்த்தைக்கே அர்த்தம் அற்றுபோன நிகழ்காலத்திற்கு சில யட்சிகளும் நீலிகளும் தேவையாகின்றன.

நன்றிகளுடன்

விஜயல்ஷ்மி

சென்னை.

அன்புள்ள ஜெ

இணையத்தில் இறக்கிக்கொண்டு உங்கள் தெய்வங்கள்,பேய்கள்,தேவர்கள் தொகுப்பை வாசித்தேன். ஒரே பயணத்தில் வாசித்து முடித்தேன். நான் விட்டுவந்த என் மண்ணின் அகவாழ்க்கையை அப்படியே பார்ப்பதுபோலிருந்தது. சிவனும் விஷ்ணுவும் எங்குமுள்ள தெய்வங்கள். பூலங்கொண்டாளும் பொன்னிறத்தாளும் அந்த மண்ணுக்கு மட்டுமே உரியவர்கள். ஒவ்வொரு கதையும் மயிர்சிலிர்க்கும்படி தீவிரமானவை. அதேசமயம் ஒரு பயங்கரவசீகரமும் கொண்டவை. ஒவ்வொரு கதையிலும் உள்ள ஆழமான கவித்துவத்தை சொல்லாமல் லேசாகத் தொட்டுக்காட்டிவிட்டுச் செல்லும் உங்கள் சொல்முறையும், கதைகள் குவியும் உச்சங்கள் தொடுக்கப்பட்டு ஒரு ஒற்றைநூலாக ஆகியிருக்கும் அழகும்தான் இந்நூலின் வெற்றி. நீங்கள் எழுதிய நூல்களிலேயே முக்கியமானது இது என்றுசொல்வேன். நன்றி

குமரவேல்

அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’ வாங்க
===============================
அமேசானில் ‘தெய்வங்கள் பேய்கள் தேவர்கள்’
இது அக வெளி -லட்சுமி மணிவண்ணன்
முந்தைய கட்டுரைவெண்முரசு ஒலிவடிவம்
அடுத்த கட்டுரைஸ்டெர்லைட்