மகாபாரதம் அரிய உண்மைகள்

maxresdefault (2)

இனிய ஜெயம்

தமிழ் சிந்தனையாளர் பேரவை என்றொரு தளம் யூ டியூப் இல் கண்டேன் .அதில் இருந்த ஒரு அதிபயங்கர ஆய்வு  என்னை அப்படியே புரட்டிப் போட்டு விட்டது .

நோவா குமரிக்கண்டத்தை சேர்ந்தவர் .

சகுனி யூதன் .

இங்கிருந்தோர் யூத பிராமணர்கள் .

கிருஷ்ணன் தமிழர் .

பாரதப்போர் நிகழ்ந்து கவ்ரவர்கள் புதைக்கப்பட்ட இடம் நம்மூர் ஆதிச்ச நல்லூர் .

இந்த சிந்தனையாளர் எப்படியாவது சீமான் வசம் சேர்ந்தால் மட்டுமே , மலரும் தமிழ் தேசியம் வழியே  இத்தகு ”மறைக்கப்பட்ட ”உண்மைகள் எல்லாம் வெளியே கொண்டு வர முடியும் .

தவிர்க்காமல் முழுமையாக பார்க்கவும் .இது வரை நீங்கள் சந்தித்த நகைச்சுவை களங்களில்,  என்றும் தலையாய ஒன்றாக இனி இதுவே இருக்கும் .

அதாவது மொத்த பாரதப் போரும் திருநெல்வேலி மற்றும் மலபார் ,இரண்டு நிலங்களுக்கு இடையே ,அரசுக்கு இடையே நடந்தது .

இதை முன்பே நீங்கள் பார்த்திருந்தால் , இமயத்தில் இருந்து திரும்பி வந்திருக்கவே மாட்டீர்கள் இல்லையா . :)

கடலூர் சீனு

***

அன்புள்ள சீனு

இந்த நகைச்சுவைப் படம் எனக்கு வியப்பளிக்கவில்லை. இது இங்கே பல வடிவங்களில் நிகழ்ந்துகொண்டிருப்பதுதான். ஒவ்வொருநாளும் இங்கே அருகிலுள்ள கிறித்தவ தேவாலயங்களில் நிகழும் சொற்பொழிவுகள் காதில் விழுகின்றன. இதையெல்லாம் மிஞ்சும் அபாரமான கற்பனைகள், சதிக்கோட்பாடுகள், சாத்தானின் லீலைகள். கர்த்தராகிய ஏசுவே மோடியை ஆட்சிக்குக் கொண்டுவந்தார் என்ற நாலுமாவடி மோகன் லாஸரஸின் பேருரையை கேட்டிருப்பீர்கள். இலங்கைப்பிரச்சினை முதல் ஐஎஸ்ஐஎஸ் வரை அனைத்தும் யூதர்களால் என்னும் இஸ்லாமிய வகாபிய மெய்ஞானங்கள் இன்னொரு பக்கம். எதிர்கோஷ்டியே யூதர்களால் ஆனது என சமீபத்தைய வெடிகுண்டு ஒன்றை வாசித்தேன்.சளைக்காமல் இந்து ஆன்மிகப் புளுகுகள். நாஸாவால் நிரூபிக்கப்படும் வேதமெய்ஞானங்கள். [ நம்மூரில் இந்து ஆன்மிக உளறல்களைத் தவிர பிற அனைத்து உளறல்களும் முற்போக்கே]

இந்த தமிழ்த்தேசிய உளறல்களும் அதே வடிவில் அமைவது தற்செயல் அல்ல. இது இங்கே எளிதில் வெற்றிபெறும் என நிரூபிக்கப்பட்ட வடிவம். கீழே உள்ள பார்வையாளர் எண்ணிக்கையை, கருத்துரைகளைப் பாருங்கள். வேறு எந்த அறிவார்ந்த செயல்பாட்டுக்காவது இந்த எண்ணிக்கை வந்துள்ளதா? பெரியார்பிறந்த புனித மண்ணில் அவருக்காவது இதில் கால்வாசிப்பேர் இருப்பார்களா? இது மதத்தின் செயல்முறை. நம்பிக்கையைக் கோருவது. எந்த அளவுக்கு டுபாக்கூரோ அந்த அளவுக்கு ஆவேசமாகக் கூவுவது. ‘நீ நல்லவன், தூயவன், நீ கடவுளுக்கு அணுக்கமானவன், தேர்ந்தெடுக்கப்பட்டவன்: மற்ற அனைவரும் புறச்சாதியினர், மிலேச்சர் , காஃபிர்’ இதுதான் இந்தக் கருத்துக்களின் ரத்தினச்சுருக்கம். அந்தப்பிறரே உன் துயருக்குக் காரணம். நீ அவர்களை எதிர்த்து ஒழிக்கவேண்டும் என்றால் அது ஓர் இயக்கமாக ஆகிவிடுகிறது. மதமாக மலர்கிறது.

தமிழ்த்தேசியத்தின் சாராம்சம் இனவாதம். அது மதமாக தன்னை உருமாற்றிக்கொள்ளாமல் நிலைகொள்ள முடியாது. ஏனென்றால் அடிப்படையில் அது அறிவியல்தளம் அற்றது. வெற்று நம்பிக்கை மற்றும் ஆணவம் சார்ந்தது. தாழ்வுணர்ச்சியும் அதன் மறுபக்கமாகிய உயர்வுணர்ச்சியும் கலந்த ஒரு விந்தையான நிலைபாடு.  அது ஒருவகை மதக்குறுங்குழுவாக மட்டுமே முன்னெழமுடியும்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-2
அடுத்த கட்டுரைஎம்.வி.வியும் கோயாவும்