அருண்மொழியின் ஊராக இருந்தாலும் திருவாரூர்,மன்னார்குடி போன்ற ஊர்களை நான் தவிர்க்கக் காரணம் அங்கே செல்ல ரயில் இல்லை என்பதே. திருச்சி வரை ரயிலில் செல்லலாம். ஆனால் நள்ளிரவில் சென்று இறங்கி விடியவிடிய காத்திருந்து பேருந்தில் ஏறவேண்டும். இங்கிருந்து நேரடியாக பேருந்துகள் உண்டு. ஆனால் கூடுமானவரை பேருந்துகளைத் தவிர்ப்பது என் வழக்கம்.முதுகுவலிதான் காரணம். படுத்துக்கொண்டே செல்லும் பேருந்துகள் பரவாயில்லை. ஆனால் பேருந்திலேறியதுமே பதற்றம் வந்து சிறுநீர் கழிக்க இறங்கி ஓடிக்கொண்டே இருக்கும் வழக்கம் உண்டு. ரயிலில் அந்தச்சிக்கல் இல்லை.
ஆகவே “வெண்ணைத்தாழிவிழாவுக்கு மன்னார்குடிக்கு வருகிறீர்களா?” என விஜயராகவனும் பின்னர் டோக்கியோ செந்திலும் அழைத்தபோது தயங்கி கடைசிநாள் வரை இழுத்து அதன்பின்னர் சரி என்றேன்.அதன்பின்னர் பேருந்து முன்பதிவுசெய்தோம். மன்னார்குடி அருண்மொழியின் சொந்த ஊர். அருண்மொழியின் அம்மாவின் ஊர் புள்ளமங்கலம். அது மன்னார்குடிவட்டம்தான். அவள் பத்துவயதில் அந்தத் தேர்விழா பார்த்திருக்கிறாள்.
22 காலையில் தஞ்சை சென்றிறங்கினோம். விடியல் நான்கு மணிக்கு டோக்கியோ செந்தில் காரில் வந்து அழைத்துக்கொண்டார். மன்னைகிராண்ட் விடுதியில் அறை. ஏற்கனவே ஈரோட்டில் இருந்து விஜயராகவன் வந்து அங்கே தங்கியிருந்தார். கிருஷ்ணனும் ராஜமாணிக்கமும் பாரியும் மணவாளனும் முன்னரே வந்து பூர்ணா விடுதியில் தங்கியிருந்தனர். காலையில் சென்னை செந்தில் வந்திறங்கினார். காளிப்பிரசாத்தின் சொந்த ஊர் மன்னார்குடி. அவரும் அவர் மனைவியும் குழந்தைகளும் வந்திருந்தனர். மன்னார்குடிக்காரரான நண்பர் சாந்தமூர்த்தி வந்திருந்தார்.
காலையுணவுக்கு செந்தில் வீட்டுக்குச் சென்றோம். அவருடைய வீடு 140 ஆண்டுகள் பழையது. தாழ்வாரம், திண்ணை, அங்கணம், உள்சுற்று, கொல்லைச்சுற்று என பல அடுக்குகளாக அமைந்தது. திண்ணையில் ஜமுக்காளம் விரித்து அமர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது காலப்பயணம் செய்து ஜானகிராமனின் உலகுக்குச் சென்றுவிட்டோம். அக்கால தஞ்சை எழுத்தாளர்களைப்பற்றித்தான் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். .
மன்னார்குடிக்கு 2010 அக்டோபரில் வந்தேன். பொன்னியில் செல்வன் படம் தயாரிப்புத்திட்டம் இருந்தபோது இடம்பார்ப்பதற்காக. உடன் மணிரத்னம் இருந்தார். அவர் பெயர் சொல்லாமல் தஞ்சைத்தரிசனம் என்ற தலைப்பில் பயணக்குறிப்பாக எழுதியிருக்கிறேன். அதற்கு முன்பு ஒருமுறை வந்ததுண்டு. மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயம் மிகப்பெரியது. பெரும்பாலும் பக்தர்கூட்டம் இல்லாமல் ஓய்ந்து கிடப்பது. அந்தப் பயணத்தில்கூட ஆலயம் முழுக்க நிறைந்துகிடந்த கிளிக்கூச்சலைப் பற்றித்தான் எழுதியிருந்தேன்.
இப்போது நேர்மாறாக ஆலயமும் சூழ்ந்திருக்கும் தேர்வீதிகளும் முழுக்க மக்கள்த்திரள். சூழ உள்ள அனைத்துச் சிற்றூர்களிலிருந்தும் அலையலையாகக் கிளம்பி வந்து நகரை நிறைத்திருக்கிறார்கள் மக்கள். மன்னார்குடியில் 21 நாள் திருவிழா. அதில் 18 நாள் பிரம்மோத்ஸ்வம். இந்த அளவுக்கு நீண்ட திருவிழா வேறெந்த ஆலயத்திலுமில்லை என்று மன்னார்குடி நண்பர் சொன்னார். நாங்கள் சென்றது இருபதாம்நாள். ஒவ்வொருநாளும் காலையிலும் மாலையிலும் திருவிழா நிகழ்ச்சிகள். அன்றுகாலையில் வெண்ணைத்தாழி மாலையில் பொற்புரவி எழுந்தருளல்.
கிபி 1125 வரை சோழநாட்டை ஆண்ட குலோத்துங்க சோழனால் செங்கற்றளியாகக் கட்டப்பட்டது இந்த ஆலயம். அன்று இதற்கு ராஜாதிராஜ சதுர்வேதிமங்கலம் என்று பெயர். தொடர்ந்து சோழமன்னர்களும் தஞ்சை நாயக்கர்களும் பின்னர் மதுரைநாயக்கர்களும் இதைவிரிவாக்கிக் கட்டியிருக்கிறார்கள். தமிழகத்தின் பெரிய ஆலய வளாகங்களில் ஒன்று இது. ஹொய்ச்சாள அரசர்களும் விஜயநகர மன்னர்களும் கோயிலுக்குக் கொடையளித்திருக்கிறார்கள்.
தஞ்சை நாயக்கர் காலகட்டத்தில்தான் இந்த ஆலயம் இன்றிருக்கும் பேருருவை அடைந்தது. இன்று இந்த ஆலயத்தின் சிறப்பாகக் கருதப்படும் மாபெரும் சுற்றுமதிலும் மையக்கோபுரமும் ஆயிரங்கால் மண்டபமும் 1673 வரை தஞ்சையை ஆண்ட விஜயராகவ நாயக்கரால் கட்டப்பட்டவை. தஞ்சையின் கடைசி நாயக்க அரசரான விஜயராகவநாயக்கர் கலைகளிலும் இசையிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். முப்பதுக்கும் மேற்பட்ட தெலுங்கு நூல்களை இயற்றியவர். ராஜகோபாலசாமி ஆலயத்திற்கு ஆற்றிய திருப்பணிகள் காரணமாக மன்னார்தாசன் என்றே அறியப்பட்டவர்.
மதுரையை ஆண்ட சொக்கநாத நாயக்கர் தஞ்சையை படையெடுத்துவந்து கைப்பற்றி தஞ்சைநாயக்கர் வம்சத்தை அழித்தார். தன் தந்தை ரகுநாதநாயக்கரைப் புகழ்ந்து விஜயராகவ நாயக்கர் எழுதிய ரகுநாதாப்யோதயம் என்னும் சம்ஸ்கிருத காவியத்தில் மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்திற்கு அளித்த கொடைகள், திருப்பணிகளைப்பற்றிக் குறிப்பிடுகிறார்.
நாயக்கர்காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட மண்டகப்படி ஒழுங்குகள் திருவிழாவில் இன்றும் பேணப்படுகின்றன. வெண்ணைத்தாழித் திருவிழா யாதவர் குலத்திற்குரியது. மாலையில் பொற்புரவி கள்ளர்குலத்திற்கு உரிமையானது. வெண்ணைத்தாழித் திருவிழா ஒரு விளையாட்டு. கண்ணனைச் சிறுவனாக உருவகித்து வெண்ணையால் எறிந்து துரத்திவிளையாடுவது. ‘வெண்ணைதானே கேட்டாய், இதோ’ என ஆய்ச்சியர் வெண்ணையால் அடிப்பது என்பது அந்த பாவனை. பொற்பல்லக்கில் தெருக்களில் சுற்றிவந்து வீட்டுமுகப்புகள் தோறும் எழுந்தருளும் கண்ணன் மேல் வெண்ணையை வீசுகிறார்கள்.
ஜமுக்காளத்தில் தலையணைகள் போட்டு அமர்ந்து ஓய்வாகப் பேசிக்கொண்டிருந்தோம். கோடைவெயில் கொளுத்தத் தொடங்கியிருந்தது. அவ்வப்போது காபி. ஜானகிராமன் பாணி வாழ்க்கை என்றால் கூஜாவில் அதை அருகே வைத்துக்கொள்ளவேண்டும். சீவல், வெற்றிலை எல்லாம் தேவை. ‘சீட்டுக்கச்சேரி’. கூடவே கொஞ்சம் ஊர்வம்பு.
காலை பதினொரு மணிக்கு கண்ணன் பல்லக்கில் செந்தில் இல்லத்தின்முன் வந்தார்.தஞ்சைச் சந்திப்பிற்கு வந்திருந்த கதிரேசன் திருவாரூரில் இருந்து வந்திருந்தார்.பெண்களின் கூட்டம், நெரிசல். வெண்ணை பறந்துசென்று பல்லக்குடன் வந்த பூசகர், பல்லக்குதூக்குபவர்கள், அருகே நின்றிருந்த காவலர்கள், பூசைசெய்தவர்கள் அனைவரையும் மூடியது. ஏறத்தாழ ஐநூறாண்டுக்காலச் சடங்கு அதே கொண்டாட்டத்துடன் அன்றும் நிகழ்வது வியப்பூட்டியது. பக்தி, சடங்கு என்பதுடன் கலை உரிய முறையில் கலக்கும்போது ஏற்படும் அழிவின்மை இது. ராஜகோபாலனின் அலங்காரமும், அச்சடங்கிலுள்ள நாடகத்தன்மையும் மிக அழகானவை.
மொத்தமாகவே ஒரு விழாச்சூழல். தெருவிலிருந்து ஓசை எழுந்துகொண்டே இருந்தது. இப்போதெல்லாம் பொம்மை,பலூன் விற்பவர்கள் முழுக்க பிகாரிகள். இப்போது பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட ஒரு சிறு உருளை வந்திருக்கிறது. வாயில் வைத்து ஊதினால் எருமைபோல ஓசையிடுகிறது. ஆண்பெண் குழந்தைகிழம் வேறுபாடில்லாமல் வாங்கி ஊதி மகிழ்ந்தார்கள். தெருவெங்கும் எருமைத்திரள் என ஒரு மனப்பிராந்தி.
மதிய உணவுக்குப்பின் சற்று ஓய்வெடுத்துவிட்டு மன்னாகுடியிலிருக்கும் பழைமையான சமண ஆலயத்திற்குச் சென்றோம். மல்லிநாதர் மையவடிவாக அமைந்த செங்கற்றளி. பத்தாம்நூற்றாண்டில் கட்டப்பட்டது. வெவ்வேறு காலகட்டங்களில் திருப்பணிசெய்யப்பட்டு இப்போது டைல்ஸ் போட்டிருக்கிறார்கள். அங்கிருந்த பாபு என்னும் மணிகண்டன் என் வாசகர் என்று சொன்னார். கோயிலை சுற்றிக்காட்டி ஒவ்வொரு தெய்வமாக காட்டி விளக்கினார்.
மல்லிநாதரை தவிர வேறு பல சன்னிதிகள் உள்ளன. ஜினவாணி என்றபேரில் கலைவாணியை தெய்வமாக வணங்குகிறார்கள்.எட்டாவது தீர்த்தங்காரரான சந்திரப்பிரபரின் யட்சியாகிய ஜ்வாலாமாலினிக்கு தனி சன்னிதி உள்ளது. அய்யனார் வடிவில் அமைந்த தெய்வத்தை பிரம்மன் என்று சொன்னார்கள். இந்துக்கள் ஜ்வாலாமாலினி அம்மனை மட்டும் வந்து வணங்கிச் செல்கிறார்கள்.
கோயிலைச்சுற்றி முப்பது சமணக்குடும்பங்கள் உள்ளன. ஆண்டுக்கு ஒருமுறை நிகழும் திருவிழாவுக்கு வெளியூரிலிருந்து ஏராளமான சமணர்கள் வந்து கலந்துகொள்கிறார்கள். வெளியே தொன்மையான சமண மடம் ஒன்று பாழடைந்து கிடக்கிறது இருநூறாண்டுகள் பழைய செங்கல்கட்டிடம். சிறிய செங்கற்களை அடுக்கி சுண்ணாம்புக்காரை இடையிட்டு கட்டப்பட்ட தடிமனான சுவர்கள் கொண்டது.
மாலையில் ஆலயத்திற்குச் சென்றோம். மன்னார்குடி ராஜகோபாலசாமி ஆலயத்தின் முகப்புக்கோபுரம் இங்கே சிறிதும்பெரிதுமாக 16 கோபுரங்கள் உள்ளன. ஏழு பிரகாரங்கள் ஏழு மாபெரும் மண்டபங்கள், ஒன்பது தீர்த்தங்கள் உள்ளன. 59 மீட்டர் உயரமான ராஜகோபுரத்தின் முதல் ஆறு நிலைகளில் சுதை, சிற்பங்கள் எதுவும் இல்லை. ஏழாவது நிலையில் இருந்தே சுதைச் சிலைகள் வடிக்கப்பட்டிருக்கின்றன. கீழிருந்து நோக்கினால் அவை வானில் பறந்தவைபோல மங்கலாகத் தெரிகின்றன. பார்ப்பதற்காக அல்ல, உணர்வதற்கான சிலைகள் என்று தோன்றியது.
இங்கே மூலவர் பரகால வாசுதேவன் .. வைகுண்டத்தில் அமர்ந்தகோலம். ராஜகோபாலன் என்பது உற்சவர்தான். அவர்தான் இடையன் கோலத்தில் வளைதடியுடன் நின்றிருக்கிறார். தாயார் பத்மாவதி, தமிழில் செங்கமலம். படிதாண்டாபத்தினி என்று தொன்மம். ஆகவே தாயாருக்கான திருச்சுற்று உற்சவம் அனைத்தும் ஆலயத்துக்குள்ளேயேதான். அம்மன் சிலையும் சரி வாசுதேவனின் மூலச்சிலையும்சரி பெரிய உருவங்கள். கரிய பளபளப்புடன் கூடிய பெருமுகங்களை அருகே நின்று நோக்குவது மெய்ப்புகொள்ளச் செய்யும் தருணம்.
இங்குள்ள மாபெரும் ஆயிரங்கால் மண்டபத்தைத்தான் பொன்னியின்செல்வனில் இறுதிக்காட்சியில் அருண்மொழி முடிசூடும் அரசவை மண்டபமாகக் காட்ட முடிவெடுத்திருந்தோம். மிகப்பிரம்மாண்டமான அரங்கு இது. இந்தியாவில் இருக்கும் தொன்மையான உள்ளரங்குகளில் இதுவே பெரியது என நினைக்கிறேன். இப்போது பயன்பாடில்லாமல் கைவிடப்பட்டு கிடக்கிறது. அன்று படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. பொன்னியின்செல்வன் கைவிடப்பட அதுவே காரணம்
இன்றுகூட இந்த மண்டபத்தில் ஆன்மிகநிகழ்ச்சிகள், கலைநிகழ்ச்சிகளை நடத்தலாம். பயன்பாட்டிலிருக்கையிலேயே இத்தகைய மிகப்பெரிய அமைப்புகள் அழியாமலிருக்கும். தமிழகத்தின் வேதனை பயன்பாட்டுக்குரிய இடங்கள் கைவிடப்படும். கலைக்கூடங்களை பயன்பாட்டிடங்களாக்கி அழிப்பார்கள்.
ஆலயத்திற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். நல்லகூட்டம். ஆங்காங்கே சிதறி அமர்ந்து பேசிச்சிரித்துக்கொண்டிருந்தனர். அனைவருக்கும் அது ஓர் அரியதருணமாக இருக்கும் என தோன்றியது. அந்தி மயங்கும் பொழுது. கோபுரம் இருளில் இருந்து விளக்கொளிகளுடன் எழுந்து வந்து விழிநிறைத்து நின்றது. தெருவெங்கும் சிரிக்கும் கூச்சலிடும் முட்டிமோதும் மக்கள். திருவிழாவில் பெண்களும் குழந்தைகளும்தான் முதன்மையாகக் கொண்டாட்ட மனநிலையில் இருக்கிறார்கள்.
அந்தியில் மண்டகப்படிக் குழுக்கள் மிகப்பெரிய மாலைகளுடன் வரத்தொடங்கினார்கள். மேளங்களை முழக்கியபடி, தங்கள் ஊரின் பெயர் கொண்ட பதாகைகளைத் தூக்கியபடி குத்துநடனமிட்டுச் சென்றனர். கள்ளர்களுக்குரிய விழா ஆதலால் அகமுடையாரும் யாதவரும் கலந்துகொள்வதில்லை. அவர்கள் ஓரமாக நின்று வேடிக்கை பார்க்கலாம். எப்படியோ ஒரு சாதிப்பெருமை நிகழ்வாக மாறிவிட்டிருக்கிறது. கள்ளர்பெருமை பாடும் கோஷங்கள், அறைகூவல்கள், வெறிநடனங்கள். அணியணியாகச் சென்றுகொண்டே இருந்தனர்
உண்மையில் தங்கக்குதிரை வாகனம் கிளம்புவதற்குள் சென்று மாலையை அளிக்கவேண்டும். ஆனால் ஏராளமான குழுக்கள் வந்தமையால் வாகனம் கிளம்பி நெடுநேரம் ஆனபின்னரும் நேர் எதிரே அலையலையாகச் சென்றுகொண்டே இருந்தார்கள். சுற்றுவலமே முடிந்தபின்னரும் வந்துகொண்டிருப்பார்கள் என்றார் நண்பர். அத்தனை தெருக்களிலும் மக்கள்தான். “கடவுளை கண்டவருமில்லை கள்ளனை வென்றவருமில்லை” என ஒரு கோஷம். என்ன அர்த்தம் என்று தெரியவில்லை.
மன்னாகுடியின் இப்போதைய அழகுகளில் ஒன்று புதிய யானையாகிய செங்கம்மா. இரண்டு வயது என்றார்கள். குட்டியானைகளுக்குரிய வகையில் தலைநிறைய முடி. கிராப் வெட்டிவிட்டதுபோல. மண்டையை ஆட்டிக்கொண்டு உற்சாகமாக குதிரை வாகனத்திற்கு முன்னால் சென்றுகொண்டிருந்தது. பொன்முலாம் பூசப்பட்ட பெரிய குதிரைச்சிலைமேல் ராஜகோபாலன் அமர்ந்திருந்தார். அதை விரைந்துகொண்டுசெல்லும்போது புரவி காற்றில் தாவுவதாகவே தோன்றும்,
இங்குள்ள சுவாமி அலங்காரம் என்னைப்போன்ற சேரநாட்டினருக்கு கொஞ்சம் ஆச்சரியம்தான். நம் அரசர்களின் அணிகள் முகலாயருக்குப்பின் முழுமையாகவே மாறிவிட்டன. பாரசீக சரிகையாடைகளும் தலைப்பாகைகளும் அங்கிருந்து டெல்லிபாதுஷாக்களுக்கு வந்து தென்னகத்து நாயக்க அரசர்களுக்கும் சரபோஜிகளுக்கும் உரியவையாக ஆயின. பொற்பட்டுப்பின்னக்களும் பெரிய மடிப்புகளும் கொண்டவை. அந்த அரச அணிக்கோலத்தையே சுவாமிக்கும் செய்திருந்தனர். கேரளத்தில் தெய்வங்களுக்கு அதற்கும் முன்பிருந்துவரும் அலங்காரங்கள்தான். இஸ்லாமியப் பண்பாட்டுச் சாயல்கொண்ட ஆடையணிகள் கதகளியில் வரும் தெய்வங்களுக்குத்தான்.
இங்குள்ள பல்லக்கே வேறுவகையானது. சப்பரம் என்பதற்கு எங்களூரில் ஓர் அழகு உண்டு. இங்குள்ள பல்லக்கு சரபோஜிகளின் அரசப்பல்லக்கின் சாயல் கொண்டிருக்கிறது என தோன்றியது. ,நாநூறாண்டுகளுக்குமுன்பு மன்னார்குடி தெருவீதிகளில் பெண்கள் பக்கவாட்டில் சரிந்த கொண்டையுடன் தெருநிறைய நின்று கண்ணன் மேல் வெண்ணை வீசியிருப்பார்கள்!
இரவில் விடுதிக்குச் செல்லும் வரை கால் ஓய நடந்துகொண்டிருந்தோம். திருவிழா என்பது ஒரு கூட்டுக்கொண்டாட்டம். எதற்காகக் கொண்டாடுகிறோம் என்றெல்லாம் இல்லை. இட்லி சாப்பிடுவதையே படு உற்சாகமாக கூச்சலிட்டுக் கொண்டாடிக்கொண்டிருந்தனர். இப்பகுதியின் சிறப்பு அசோகா எனப்படும் இனிப்பு. கேசரிக்கும் அல்வாவுக்கும் நடுவே ஒருமாதிரி இருக்கும். அதை ஏராளமானவர்கள் அள்ளி சோறுபோல தின்பதைக் கண்டேன்.
திருவிழாவின் சிறப்பு அனுபவங்களில் ஒன்று இரவு தூங்கும்போதும் திருவிழாவுக்குள் இருந்துகொண்டிருப்பதாகத் தோன்றுவது. அரைத்துயிலில் முழவுகளும் கொம்புகளும் ஓசையிட்டுக்கொண்டிருந்தன. கனவுகளுக்குள்ளும் திருவிழா நடந்துகொண்டிருந்தது
[மேலும்]