இமையம் என்னும் சொல்

dsc_0223-3

 

அன்புள்ள ஜெ,

உங்கள் இமையத்தனிமை கட்டுரையில் இமையம் என்று சொல்லியிருந்தது தவறு, சரியான சொல் இமயம் என்பதுதான், உங்கள் ஆசானுக்குச் சொல் என்று என் அலுவலக நண்பர் சொல்லிக்கொண்டே இருந்தார். நையாண்டியாகவும் இமையம் என்ற சொல்லைவைத்துப் பேசினார்.  வயதானவர், நன்றாகத் தமிழ் தெரிந்தவர். இலக்கணத்திலே ஆர்வம் கொண்டவர். நான் பார்த்தபோது முன்பு பழைய கட்டுரையில் இமயச்சாரல் என்றுதான் பயன்படுத்தியிருந்தீர்கள். இப்போதுதான் இமையம் என எழுதியிருக்கிறீர்கள். எது சரியானது? தவறான சொல்லாட்சி என்றால் திருத்திக்கொள்வீர்களா?

மகேந்திரன்

 

அன்புள்ள மகேந்திரன்,

பொதுவாகச் சொல்லிலக்கணம், உச்சரிப்புமுறை என்றெல்லாம் மிகையாகப் பேசுபவர்கள்  மொழி என்னும் மாபெரும் பண்பாட்டுவெளியை, அங்கே சொல்லும் பொருளும் திரண்டுவரும் இயக்கத்தை அறியாத மொக்கைகளாகவே இருப்பார்கள்.  அறிவார்ந்த அடிப்படைத் தகுதி இல்லாமல் மொழியறிஞராகக் காட்டிக்கொள்ளச் சிறந்த வழி இப்படி அவ்வப்போது சொற்களைப் பொறுக்கிப்பார்த்து,  ஏதேனும் ஒர் அகரமுதலியைக்  கையில் வைத்துக்கொண்டு கருத்துக்கள் சொல்வது.

உண்மையிலேயே மொழியிலக்கணமும் உச்சரிப்புமுறையும்  சார்ந்த ஆர்வம் கொண்டவர்கள் இப்படிப்பட்ட உறுதியான கருத்துக்களைச் சொல்லமாட்டார்கள். அச்சொல்லாட்சி எங்காவது இருக்கிறதா என சிலநாட்கள் அமர்ந்து நூல்களில் தேடிப்பார்ப்பார்கள்.  அதைப் பொதுவெளியில் கேட்டால்கூட நையாண்டி, மேட்டிமைநோக்குடன் எழ  மாட்டார்கள். ஐயமாகவே முன்வைப்பார்கள்.

ஏனென்றால், கொஞ்சம் தமிழ் தெரிந்தவர்கள் இந்நீண்ட மொழிமரபில் பலவகையான ஒலிப்புகள், பொருட்கோடல்கள் இருக்கும் என்னும் தெளிவை அடைந்திருப்பார்கள். மீறல்களுக்கு இடமளிக்கும் படைப்பூக்கம் வழியாகவே இந்த மொழி காலத்தைக் கடந்துவந்துள்ளது. இது இலக்கியச் செயல்மொழியே ஒழிய இலக்கணக்கட்டமைப்பு அல்ல.

ஆகவே அந்த மூத்த மொழியறிஞரை விட்டுவிடுங்கள், அவருடைய தொடர்பு அறிவுவளர்ச்சிக்கு உகந்தது அல்ல. அது ஒருவகைத் திண்ணைச்சொறி.

ஒரு சொல் தொன்றுதொட்டு  ஒருவகையில் புழக்கத்தில் இருக்குமென்றால் அதை அவ்வகையிலேயே பயன்படுத்தவேண்டும் என்ற எண்ணம் எனக்கு உண்டு. என் எழுத்தில்  தனித்தமிழ் நோக்கிய அணுக்கம் தொடக்கம் முதலே உண்டு என்றாலும் நான்  தனித்தமிழ் சார்ந்த நிலைபாட்டைக் கொள்வது கொற்றவை எழுதும்போதுதான்.

சொற்களைக் கூடுமானவரை ஆராய்ந்து தனித்தமிழ்ச் சொற்களைக்  கையாள்வேன்.ஆனால் சொல்லாராய்ச்சியை நம்பி எழுதமாட்டேன். அது படைப்பூக்கத்தைக் குறைத்துவிடும். சொல் தன்னிச்சையாக ஆழுள்ளத்தில் இருந்து எழவிட்டுவிடுவேன். அது ஒலிமாறுபாடோ பொருள்மாறுபாடோ கொண்டு என்னுள் பதிந்து அவ்வண்ணமே இயல்பாக வெளிப்படுமென்றால் அப்படியே அது இருக்கட்டும் என்பதே என் நிலைபாடு. அது படைப்புவெளிப்பாட்டின் ஒரு வழிமுறை. இலக்கியம் ஒருபோதும் செய்திக்கும் அலுவலுக்கும் உரிய  தரப்படுத்தப்பட்ட நடையில் அமையமுடியாது, அமையவும்கூடாது. அது புறச்சூழல் சார்ந்தது அல்ல, எழுத்தாளனின் அகமொழியின் ஒரு வெளிப்பாடு.

ஆயினும் புத்திலக்கியச் சூழலில் இருந்து பெற்று,  தொடர்ந்து  என்னுள் இருந்த தயக்கம்  தனித்தமிழ் நடை செயற்கையாக ஆகிவிடுமோ என்பது.  ஏனென்றால் இங்கே தனித்தமிழ்நடை மொழிப்பயிற்சி மட்டுமே கொண்டவர்களால் ஓர் அரசியல்நிலைபாடு என்ற முறையில் முன்வைக்கப்பட்டது. நுண்மைகள் அற்ற இரும்புநடை கொண்ட  ஏராளமான எழுத்துக்கள் இங்கே உள்ளன. தமிழ்க்கல்வி என அவற்றைக் கற்று மிகப்பெரிய ஒவ்வாமையை அடைந்தபின்னர்தான் புதிய இலக்கியத்திற்குள் வாசகன் நுழைகிறான்.

ஆகவே    மிகுந்த எச்சரிக்கையுடன்  பேச்சுமொழிக்கு அண்மையிலிருக்கும் நடையிலேயே நான் எழுதுகிறேன். பேச்சுமொழியில் புழங்கும் சொற்களை அன்றாட நடையிலும் அரிய தமிழ்ச்சொற்களை அறிவார்ந்த சொல்லாடலுக்கான நடையிலும் பயன்படுத்துகிறேன். இந்த இரட்டைநடை நெடுங்காலமாக என்னிடமிருக்கிறது என்பதை வாசகர் காணலாம்

தூயதமிழ்ச் சொற்களை பயன்படுத்திப் பயன்படுத்தி அவை என் உள்ளத்தின் மொழிக்கு அண்மையாக அமையும்போது, நானே அறியாமல் அவற்றைக் கையாளும்போது பொதுநடைக்கும் கொண்டுவருவேன். வெண்முரசுக்குப்பின் பழந்தமிழ்ச் சொற்களை அப்படியே எந்தத் தயக்கமும் இல்லாமல் ஆள்கிறேன். இமையம் என்னும் சொல் வெண்முரசில்தான் என்னால் பயன்படுத்தப்பட்டது. என் வாசகர்கள் அதிலுள்ள செம்மொழி நடைக்கு அண்மையில் வந்திருக்கிறார்கள். சொல்லப்போனால் இன்று என் வாசகர்கள் வெண்முரசின் நடையையே எனக்குரிய நடை என எண்ணுகிறார்கள்.

ஹிமம் என்றால் பனி. அது உறைந்திருக்கும் இடம். ஹிமம்+ ஆலயம் என்பதனால் ஹிமாலயம். தமிழில் இமாலயம். அதன் சுருக்கம் இமயம். இந்த எண்ணத்தில் பெரும்பாலான பிற்காலத்தைய கவிஞர்கள், அறிஞர்கள் இமயம் என்று சொல்லியிருக்கிறார்கள். நானும் இமயம் என்றே எழுதிவந்தேன். ஆனால் தமிழின் சரியான சொல்லாட்சி இமையம் என்பதே. தொன்றுதொட்டு அச்சொல்லே கையாளப்படுகிறது.

இமையம் வடசொல்லில் இருந்து  வந்த திசைச்சொல்  திசைச்சொற்கள் தமிழுடன் ஒலியிசைவு கொள்ளும்பொருட்டு மருவு கொள்ளலாம். அவ்வாறே இமையம் என்னும் சொல் உருவானது.

இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை அந்தணன்

உமை அமர்ந்து உயர் மலை இருந்தனனாக

என்ற கலித்தொகைப் பாடலிலேயே இச்சொல் பயின்றுவருவதைக் காண்கிறோம். ஏன் ஒலித்திரிபு கொண்டது என்பதையும் காண்கிறோம். இமையவில் என்னும் அசைக்கு எதுகையென இயைந்து உமையமர்ந்து என வரவேண்டியிருக்கிறது.

தமிழின் செவிக்க்கும் மரபுக்கு எற்ப இமையம் என்றே கம்பனால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இமையவில் வாங்கிய ஈசன் பங்கு உறை

உமையினை இகழ்ந்தனன் என்ன ஓங்கிய

கமை அறு சினத்தன் இக்கார்முகம் கொளா

சமையுறு தக்கனார் வேள்வி சாரவே

என கம்பன் இமையம் என்ற சொல்லை கையாள்கிறான். இவற்றிலெல்லாம் இமையம் என்றே வரமுடியும் என்பது யாப்பின் தளை அறிந்தவர்களுக்குப் புரியும்.

இமையம் என்ற சொல்லுக்கு நிகராக சிமையம் என்ற சொல்லையும் நாம் நூல்களில் காண்கிறோம். அச்சொல்லும் சிலநூறாண்டுகள் புழக்கத்திலிருந்தது.

இமையவர் உறையும் சிமையச் செவ்வரை

வெண் திரை கிழித்த, விளங்கு சுடர் நெடுங் கோட்டுப்

பொன் கொழித்து இழிதரும், போக்கு அருங் கங்கை

என்று பெரும்பாணாற்றுப்படையில் சிமையம் என இமையப் பெருமலை சொல்லப்படுகிறது. [இமையாதவராகிய தேவர்கள் வாழும் இமையம் என்னும் பெருமைமிக்க மலையிலிருந்து முகிலின் வெண்திரையை கிழித்தபடி, கதிரவன் திகழும் உச்சிமுடியின் பொன்னை அள்ளி இறங்கி அணையும் பெரும்போக்கு கொண்ட கங்கை]   

சில நூறாண்டுகளுக்குப்பின்னர்  கம்பனும் சிமையம் என்னும் சொல்லையும் பயன்படுத்துகிறான்

கமை ஒப்பது ஓர் தவமும், சுடு கனல் ஒப்பது ஓர் சினமும்

சமையப் பெரிது உடையான்; நெறி தள்ளுற்று, இடை தளரும்

அமையத்து, உயர் பறவைக்கு இனிது ஆறு ஆம் வகை, சீறா

சிமையக் கிரி உருவ தனி வடி வாளிகள் தெரிவான்

என்பது கம்பராமாயண வரி. சிமையக்கிரி வடிவில் அமைந்த அம்புகளைக் கொண்டிருந்தான் ராமன் என்று பொருள்.

சிமையம் என்ற சொல் இமையத்தில் அமைந்த உயரிய முடியாகிய கைலையை, அல்லது மேருவைச் சுட்டுவது என்றும் சொல்லலாம். மணிமேகலையில் இச்சொற்கள் இரண்டுமே உள்ளன.

சிமையம் ஓங்கிய இமைய மால்வரைத்

தெய்வக் கல்லும் தன்திரு முடிமிசைச்

செம்பொன் வாகையும் சேர்த்திய சேரன்

இமையம், சிமையம் என்னும் இவ்விரு சொற்களையுமே நாம் இன்றும் பயன்படுத்தலாம். அவை தமிழ்ச்சொற்கள், திசைச்சொல் இலக்கணப்படி அமைந்தவை.  இமயம் என பேச்சுவழக்கில் இருப்பதனால் அதைக் கையாள்வதிலும் பிழையில்லைதான்.

இமயம் எவ்வாறு இமையம் என அமைகிறது? உமா என்பது உமை என ஆவதன் ஒலியிலக்கணப்படித்தான். ஹிமா என்னும் ஒலி ஹிமை அல்லது இமை என்றே தமிழில் அமையமுடியும்.

நான் ஏன் இமையம் என்னும் சொல்லைக் கையாள்கிறேன் என்றால்  முதன்மையாக அது முன்னோடிகளின் நா தொட்ட சொல் என்பதனால். அடுத்தபடியாக, தமிழிலக்கணப்படி அமைவதனால். இறுதியாக ,எனக்கும் செவிக்கும் நாவுக்கும் இமையம் என்பதே சரியாக இருக்கிறது என்பதனால். இமயம் என்னும்போது தமிழ்ச்சொல்லுக்குரிய அழுத்தம் திகழாது போகிறது.

ஜெ

 

 

முந்தைய கட்டுரைஸ்டெர்லைட்
அடுத்த கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-4