இடைவெளி -கடிதங்கள்

l

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

அன்புள்ள ஜெயமோகன்,

 

நீங்கள் யார், என் வாழ்க்கையில் உங்கள் இடம் என்ன என்று இந்த பதிமூன்று நாட்களில் தெரிந்து கொண்டேன்.பகலில் என் நேரத்தை என் பேத்தியோடு பகிர்ந்து கொள்ள நேர்வதால்,அதிகாலையில் அலாரம் வைத்து எழுந்து உங்கள்தளத்துக்குள் செல்வேன்.இந்த பதிமூன்று நாள் மவுனம் என்னை மிகவும் பாதித்து விட்டது.

 

 

“தினம் பூட்டிக் கிடக்கும் கோவில் கருவறையைக் கண்டு திரும்பிக் கொண்டிருந்தேன்.இரண்டு நாட்களாக வெளிக் கதவையும் பூட்டி விட்டார்கள்”. என்ற குறுஞ் செய்தியை நான் சுரேஷ் பிரதீப்புக்கு அனுப்ப அவர் பழைய கட்டுரைகளை படித்துக் கொண்டிருந்தேன்.அதுவும் இப்போது முடியவில்லை என்று புலம்பினார்.

 

 

இமையத் தனிமை எல்லா சிரமங்களையும் போக்கி விட்டது.இந்த தொடரில் உங்களை இன்னும் நெருக்கமாகஉணர முடிகிறது.நன்றி.

 

 

ஜெ.சாந்தமூர்த்தி ,

மன்னார்குடி.

 

அன்புள்ள ஜெ

 

இந்த இடைவெளியில் உங்கள் இணையதளத்தின் பழைய கட்டுரைகளைச் சென்று பார்த்துக்கொண்டிருந்தேன். ஒருகட்டுரையிலிருந்து தொடர்ச்சியாக இணைப்புக்கள் வழியாக எதிர்வினைகளையும் தொடர்கட்டுரைகளையும் வாசிக்க வாய்ப்பிருக்கிறது. ஒருமணிநேரம் வாசித்தால் ஒரு முழுநூலையே வாசித்துமுடித்த நிறைவை அடைகிறேன். முழுமையான ஒருபார்வை கிடைக்கிறது. மிக அரிதாகவே உணர்ச்சியின்மொழியிலே எழுதியிருக்கிறீர்கள். நான் நீங்கள் உணர்ச்சிகரமாக எழுதுபவர் என்ற பிராமையில் இருந்தேன் அது தவறு என்று தெரிந்தது.

 

சுருக்கமாக எழுதாததவர் என்றும் நினைத்திருந்தேன். நிறைய விஷயங்களை மிகச்சுருக்கமாகவே எழுதியிருக்கிறீர்கள். தகவல்கள் பொதுவாக குறைவு. தர்க்கரீதியான ஒரு முழுமையான பார்வையைத்தான் பெரும்பாலும் உண்டுபண்ணுகிறீர்கள். அதுக்குமேல் ஏதும் சொல்வதற்கிருக்கக் கூடாது என்பதுபோலச் சொல்லிவிடுகிறீர்கள். இந்தவகையான இடைவெளிகள் ஒருவகையில் நல்லதுதான். நம் பார்வையை பழையவற்றைநோக்கிச் செலுத்த உதவியாக உள்ளன

 

ஆர்..குமார்

 

அன்புள்ள ஜெ

 

உங்கள் இணையதளத்தில் ஒட்டுமொத்தமாக இருக்கும் கட்டுரைகளை தொடர்ந்து பதினைந்துநாட்களாக வாசித்துக்கொண்டிருந்தேன். பெரும்பாலான கட்டுரைகளில் இலக்கியம் பற்றியே பேசிக்கொண்டிருக்கிறீர்கள். இலக்கியமல்லாதவை குறைவு. வரலாறு தத்துவம் அடுத்து. கடைசியாகத்தான் அரசியல். கூடுமானவரை அரசியலைத் தவிர்த்தே வருகிறீர்கள் என்பதைக் கண்டேன். ஆனால் அரசியலைச்சுற்றித்தான் சர்ச்சைகள் வருகின்றன. ஆகவே நிறைய அரசியல் எழுதுகிறீர்கள் என ஒரு பிம்பம் எனக்கே கூட உருவாகிவிட்டது. இன்றைக்கு உயிர்மை, காலச்சுவடு போன்ர பத்திர்க்கைகள் உட்பட ஒட்டுமொத்தமாகப்பார்த்தால்கூட மிக அதிகமாக இலக்கியம்பற்றிய பேச்சுக்கள் உள்ள இடம் இந்த தளம்தான் என்று தெரிந்தது. நன்றி

 

இரவிக்குமார்

 

முந்தைய கட்டுரைவெண்முரசு–நூல் பதினேழு-‘இமைக்கணம்’-1
அடுத்த கட்டுரைவாசிப்பு