மாவோயிச வன்முறை

அன்புள்ள ஜெ.எம்,

நீங்கள் சமீபகாலமாக எழுதியிருந்த சில அரசியல் கருத்துக்களை ஒட்டி இந்த வினாவை கேட்கத்தோன்றியது. ஒரிசா , பிகார், மத்தியப்பிரதேசம் மற்றும் வங்கத்தில் இன்று வலுவாக உருவாகியிருக்கும் மாவோயிஸ அரசியலைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

 

அன்புராஜ்

 

சென்னை

 

அன்புள்ள அன்புராஜ்,

பல்வேறு அரசியல் சமூக பிரச்சினைகளும், கூட்டுஉளவியல்கூறுகளும் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்துள்ள இவ்விஷயத்தில் ஒரு ஒட்டுமொத்தக் கருத்தை எளிதில் சொல்லிவிடமுடியாது. எப்படிச் சொன்னாலும் யதார்த்த உணர்வுடன் சொல்லப்படுகையில் அந்தக்கருத்து பல்வேறு சமநிலைகளைக் கண்டுகொண்டு முன்வைப்பதாகவே இருக்கும். அதை முன்வைத்து அதன் எல்லா பக்கங்களையும் விளக்குவது பெரிய வேலை.

அத்துடன் எதையும் ஆழமாகப் புரிந்துகொள்ளாமல் ஒருவரியை பிடித்துக்கொண்டு பேச ஆரம்பிக்கும் ஒரு தரப்பு எப்போதும் காத்திருக்கிறது என்ற தயக்கம் வேறு . அதுதான் இவ்விஷயத்தில் கருத்து சொல்வதில் இருந்து என்னை தடுத்துக்கொண்டிருந்தது. இப்போதும் ஐயமே. இருந்தாலும் முயல்கிறேன்.

என்னுடைய கருத்துக்களை அரசியல் நோக்கர் என்ற நிலையில் இருந்து சொல்லவில்லை. அரசியலை அவ்வாறு அலசி ஆராய்வது என் வழக்கம் அல்ல, வேலையும் அல்ல. வழக்கமாக அவ்வாறு செய்பவர்கள் ஒரு அரசியல் குழுவாகச் செயல்படக்கூடியவர்கள் மட்டுமே. அவர்களுக்குத்தான் அந்த அவகாசமும், கூட்டான உழைப்பும் இருக்கும். அதேசமயம் சாதாரணமாக நாளிதழ்களை வாசித்துவிட்டு கருத்துச்சொல்லும் பலரில் ஒருவனாகவும் நின்று இதை எழுதவில்லை.

நான் எழுத்தாளன் என்ற தகுதியில் நின்று முதலில் இதை சொல்ல முயல்கிறேன். எழுத்தாளனாக மனித மனங்களை உய்த்துணரக்கூடியவன், வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக பார்க்கும் கண் கொண்டவன் என்ற முறையில். அடுத்ததாக இந்திய வரலாற்றைத் தொடர்ந்து கற்றுவருபவன் என்ற முறையில். மூன்றாவதாக பல்லாண்டுகளாக இந்திய நிலப்பகுதியில் சர்வசாதாரணமான ஒரு பயணியாகச் சுற்றி இந்த மண்ணின் யதார்த்ததை நேரில் கண்டுகொண்டிருப்பவன் என்ற முறையில்.


பீர்க்கோப்பைப் புரட்சி

இந்த விஷயத்தைப்பற்றி நாம் காணநேரும் விவாதங்களில் உள்ளடங்கி இருக்கும் ஒர் உளவியல்கூறு உள்ளது. இன்றைய இந்தியா இரண்டாகப் பிரிந்து கிடக்கிறது. ஒன்று அடிப்படைத்தேவைகளுக்கே போராடும் ஏழைகளின் இந்தியா. இன்னொன்று நவீன திறந்தநிலைப் பொருளியலின் சாத்தியங்களை பயன்படுத்திக்கொண்டு வளர்ந்த உயர்நடுத்தர வர்க்கத்தின் இந்தியா. மாதம் 2000 ரூபாயில் வாழும் மக்கள் ஒருபக்கம், மாதம் ஐம்பதாயிரம் வாங்கும் மக்கள் இன்னொரு பக்கம்.

இந்த இரண்டாவது வர்க்கத்தில் ஒருபங்கினர் இந்தியாவின் இந்த இருநிலை யதார்த்ததை அறிவார்கள். அது பற்றிய குற்றவுணர்ச்சியுடனும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இந்த நிலையை மாற்ற ஏதும் செய்யும் மனநிலை கொண்டவர்கள் அல்ல. தங்களுக்குச் சிறிய இழப்பை அளிக்கும் ஒரு மாற்றத்தைக்கூட அவர்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இந்த இரட்டைநிலையை அவர்கள் ஒரு கருத்தியல்கழைக்கூத்து மூலம் கடந்து செல்கிறார்கள். அதை நாம் ‘பீர்க்கோப்பை புரட்சி ’ எனலாம்.  சாயங்காலம் கிளப்பில் ஒரு கோப்பை பீருடன் கூடி ஆவேசமாக ஏழை எளிய மக்கள் கிளர்ந்தெழுந்து வன்முறையில் ஈடுபடவேண்டியதன் அவசியம் பற்றி பேசும் அரசியல் இது.  ஓர் உக்கிரமான நிலைபாடு எடுப்பதன் வழியாக அன்றாட வாழ்க்கையின் மொண்ணைத்தன்மையில் இருந்து தப்பிவிடுவதாக ஒரு பிரமை இவர்களுக்கு.

பேசிப்பேசி கொஞ்சம் கொஞ்சமாக ஓரு மாற்று ஆளுமையை இப்படி இவர்கள் உருவாக்கிக் கொள்கிறார்கள். அதற்கும் இவர்களுக்கும் சம்பந்தமில்லை. அந்தப் போலிபிம்பத்தை ஒரு சித்திரம் வரைவதுபோலத் துளித்துளியாக வரைந்துகொண்டே இருப்பதுதான் இவர்களின் அரசியல். இவர்களின் ஒவ்வொரு அரசியல் கருத்தும், நிலைபாடும் எந்த வகையில் அந்தப் போலி சுய சித்திரத்துக்கு அது உதவும் என்ற கணக்கீட்டின் அடிப்படையிலேயே அமையும்.

இணையம் இத்தகையவர்களுக்கு ஒரு நல்ல ஊடகம். உண்மையான ஆளுமையை மறைத்துக்கொண்டு அந்த போலி ஆளுமையை இணையத்தில் திறமையாக உலாவரச்செய்ய முடியும். இணையத்தின் தமிழ் யதார்த்தத்துடன் சம்பந்தமே இல்லாத புரட்சிக்கொந்தளிப்புக்கு காரணம் இதுவே.


 

ஊடகப்புரட்சி

இன்று ஊடகங்களில் புரட்சி கக்கும் பல ஊடகவியலாளர்களை நான் தனிப்பட்டமுறையில் அறிவேன். அவர்களின் ஒருநாள் குடிக்கும் பணம் என் மாத வருமானம். ஆனால் அவர்கள் புரட்சியாளர்கள், நான் குட்டிபூர்ஷுவா! அவர்கள் ஏழைமக்கள் கிளர்ந்து ஆயுதம் எடுத்து போராடுவதை ஆதரிக்கிறார்கள், நான் எதிர்க்கிறேன். இந்த விசித்திரமான நிலையில் இருந்துகொண்டே நாம் பேசுகிறோம்.

பலவருடங்களுக்கு முன்னர் நான் இதே இணையதளத்தில் நாம் அன்றாடம் வாசித்து விவாதிக்கும் பல இதழாளர்களின் தனிப்பட்ட நேர்மை ஐயத்துக்குரியது என எழுதினேன். அப்போது பல கடுமையான கடிதங்கள் வந்தன. இன்று அலைவரிசை சம்பந்தமான உரையாடல்கள் வெளியாகும்போது முகத்திரை கிழிந்து நிற்பது உண்மையில் நம் இதழாளர்களே. அதைப்பற்றி மட்டும் இதழாளர்தரப்பில் கனத்த மௌனம் நிலவுவதை மூத்த இதழாளர்களே சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்.

இதழாளர்களில் இருவகை உண்டு. ஒரு தரப்பு அவர்களின் சொந்த ஊதியத்துக்குள் அந்த பணிக்குரிய நேர்மையின் எல்லைக்குள் செயல்படுபவர்கள். இன்னொரு முக்கியமான சாரார் அரசியல்வணிகத்தையே இதழியலாக செய்பவர்கள். அரசியல்சதிகளுக்குள் தூதர்களாகச் செயல்பட்டு பணம் பண்ணுபவர்கள். டெல்லி இதழாளர்களிடம் பேசினால் ஒருவர் சீன லாபி ஒருவர் அமெரிக்க லாபி என்றுதான் ஒருவரை ஒருவர் சுட்டிக்காட்டவே செய்வார்கள்.

இவ்வாறு இதழியலுக்குமேலான இதழியல் செய்பவர்களே அதிகமும் ஊடகங்களில் ஒளிவிடுகிறார்கள். காரணம் அந்தந்த ‘லாபிகள்’ அவர்களை ஊடகங்களுக்கு முன்னால் கொண்டுவந்து நிறுத்துகின்றன. அவர்கள் கருத்துக்களைப் பரப்புகின்றன. அவர்களுக்கே பல்வேறு வெளிநாட்டுப் பயண வாய்ப்புகள், விருதுகள் கிடைக்கின்றன.

அவர்கள் முன்வைக்கும் அத்தனை கருத்துக்களும் அவர்களின் கால் எங்கே நின்றுகொண்டிருக்கிறது என்பதைச் சார்ந்தே உள்ளது. இதில் இரு போக்குகள் உண்டு. ஒருசாரார், தன் உண்மையான செயல்களை மறைக்க இதழ்களில் புரட்சி கக்கும் இதழாளர்கள். கணிசமான முற்போக்குக் குரல்களின் உள்ளே இருப்பது அதிகார தரகுவேலைகளே. இரண்டாவதாக, தங்கள் லாபிகளின் நோக்கங்களுக்கு ஏற்ப நுட்பமாக செயல்படுபவர்கள். அரசியல் சரிநிலைகள் என்ற பாவனையில் தங்கள் அரசியலை முன்வைப்பவர்கள். பொதுவாக இந்தியாவுக்கு எதிரான குரல்களே டெல்லி-மும்பை சார்ந்த ஆங்கில இதழாளர்களிடம் அதிகமாக ஒலிக்கின்றன. அதில்தான் காசு.

இவர்கள் எழுதுவதை அப்படியே விழுங்கி அதே மனநிலையை பங்குபோட்டுக்கொள்ளும் நடுத்தர, உயர்நடுத்தர வாசகர்கள் நம் சமூகத்தில் கணிசமானவர்கள் இருக்கிறார்கள். இந்துவிலோ டைம்ஸ் ஆஃப் இண்டியாவிலோ அவுட்லுக்கிலோ ஒரு மாவோசஆதரவுக் கட்டுரையை வாசித்து ஆவேசமாக ஆதரித்து பேசிவிட்டால் தங்களை முற்போக்கினராக எண்ணி நிறைவுகொள்ளக்கூடியவர்கள் இவர்கள்.

சிற்றிதழ்களிலும், இணையத்தில் புரட்சி மணக்க எழுதும் இடதுசாரிகளிலும் பெரும்பாலானவர்கள் இந்த இதழாளர்களின் வாசகர்களே. ஆங்கில இதழ்கள் கக்கும் எந்த விஷயமும் அப்படியே நம் சிற்றிதழ்களில் மறுசுழற்சி செய்யப்பட்டுவிடும். நம் சொந்த அவதானிப்புகளின் அடிப்படையில் நாம் சொல்லும் கருத்துக்களை இவர்களின் குற்றவுணர்ச்சி சார்ந்த உளச்சிக்கலே எதிர்கொள்கிறது. அதனுடன் விவாதிப்பது கடினமானது.

உண்மை பெரும்பாலும் கற்பனாவாத அழகு கொண்டதாக இருப்பதில்லை. கிளர்ச்சி ஊட்டுவதில்லை. பலசமயம் நம்பிக்கையிழப்பை உருவாக்குகிறது. அனேகமாக நம்மை சுயவெறுப்பு நோக்கிக் கொண்டுசெல்கிறது. ஆகவே அதை எதிர்ப்பதே பெரும்பாலானவர்களுக்கு வசதியானது.ஆனால் உண்மைக்கு மட்டுமே நடைமுறைப் பலன் உண்டு.

 


[மேலும்]

முந்தைய கட்டுரைஆ.மாதவன், தி ஹிண்டு சென்னை
அடுத்த கட்டுரைஅநுத்தமா