முஞ்சவானின் உச்சிமுனையில் சிவக்குறியருகே ஊழ்கத்தில் அமர்ந்திருந்த யமன் அந்தச் சிறகொலி கேட்டு விழிதிறந்து சினத்துடன் எழுந்தார். அவர் அருகே இருட்குவையெனக் கிடந்த எருமை விழிமணிகள் மின்ன முக்ரையோசை எழுப்பி தலைகுனித்து பாய்ந்தது. நாரதர் தன் வீணையை மீட்டியபடி அசையாமல் நின்றிருந்தார். அந்த இசையைக் கேட்டு மெல்ல விசையழிந்து தலை தாழ்த்தி அமைதி கொண்டது எருமை. சினம் தணிந்த யமன் “நாரதரே, நீர் ஏன் இங்கு வந்தீர்? என் தவம் முழுமைகொள்வதை தடுக்கிறீர். விலகிச்செல்க!” என்றார்.
நாரதர் “உங்கள் தவம் முழுமைகொள்ளவியலாது என்று உணர்ந்தமையால்தான் வந்தேன், காலரே” என்றார். யமன் புரியாமல் “ஏன்?” என்றார். “கடமைகளை கைவிட்டுவிட்டு எவரும் தவத்தை முழுமைசெய்ய இயலாது, காலத்துக்கரசே” என்றார் நாரதர். “என்னால் என் கடமையை செய்யமுடியவில்லை என்பதனால்தான் இங்கு வந்து தவம் மேற்கொண்டேன்” என்றார் யமன். நாரதர் “ஏன் என்று சொல்க! நான் அதற்கு ஏதேனும் வழியுள்ளதா என்று நோக்குகிறேன்” என்றார்.
“இல்லை, இதற்கு படைத்தல் காத்தல் அழித்தல் என மூன்றுதொழில்களில் ஒன்றை இயற்றும் முதன்மைத்தெய்வமே மறுமொழி சொல்ல இயலும்” என்றார் யமன். “அவர்களுக்கே நோக்கம் உள்ளது. வழிகளும் அவர்களிடமே. நாமனைவரும் அவர்களின் கருவிகள்.” நாரதர் “ஆம், ஆனால் முத்தெய்வங்கள் மட்டிலுமே அறிந்த மெய்மையை பிறிதொருவர் அறிவது எளிதல்ல. அவர்கள் அதை உங்களிடம் சொல்லும் தருணம் எது, அங்கு சென்றணையும் வழி எது என்று நான் உரைக்கவியலும்” என்றார்.
“ஆம், எவ்வண்ணமாயினும் நான் இனி இவ்வண்ணம் மேலே செல்லவியலாது. என் தவம் முழுமைக்கு முன் கலைந்தது என்பதே என்னுள் இருக்கும் அலைவால்தான். அது என் கடமையைக் கைவிட்டு வந்தமையால்தான் என உணர்கிறேன்” என்றார் யமன். “சொல்க அரசே, புடவிநெசவின் முதன்மைச்சரடுகளில் ஒன்றாகிய உங்கள் தொழிலைக் கைவிட்டு இங்கு வந்தது எதற்காக? உங்கள் விழிகூர்ந்து புவியை நோக்குக! அங்கே இறப்பு இல்லாமலாக எஞ்சியதென்ன என்று அறிக!” என்று நாரதர் சொன்னார்.
சற்று இமைதாழ்த்தி புவியை நோக்கிய யமன் “ஆ!” என அலறியபடி எழுந்துவிட்டார். “நாரதரே, என்ன இது? இங்குள்ள கொடுநரகங்களிலும் இத்தகைய பெருந்துன்பம் இல்லையே?” என்றார். “ஆம், இங்குள்ளவர்கள் தாங்கள் துன்பம்கொள்வது ஏன் என்று அறிந்தவர்கள். அது நெறியே என ஏற்றவர்கள். மூலம் அறியா துன்பம் நூறுமடங்கு விசைகொண்டது. முடிவறியா துன்பம் ஆயிரம் மடங்கு விசைகொண்டது. வணங்கிக்கோர தெய்வமொன்றில்லா துயரோ பன்னீராயிரம் மடங்கு கொடியது” என்றார் நாரதர்.
“அங்கு துயரில் ஒடுங்கி அமர்ந்திருப்பவை பழிசேரா உள்ளங்கள். தவம்சேர்ந்த முனிவர். முலைநிறைந்த அன்னையர். அவர்களுக்கு இதை நீங்கள் இழைக்கலாமா?” என்று நாரதர் கேட்டார். “உளம் கனிக, அரசே. அவர்கள் கோரும் அமுதை அளியுங்கள். அழுக்குடை அகற்றி நீராடி எழுதல் உயிர்களின் முதன்மையுரிமை அல்லவா? அவர்கள் குரலென நான் கைகூப்பி விழிநீருடன் இறைஞ்சுகிறேன். அவர்கள் சார்பாக உங்கள் அடிபணிந்து மன்றாடுகிறேன்.”
“உங்கள் சொல்லையே ஆணையெனக் கருதுபவன் நான்” என்றார் யமன். “ஆனால் நான் அரியணை அமர்ந்து அறம்புரக்கையில் என் உள்ளத்தின் துலாமுள் அசைவற்றிருக்கவேண்டும். இல்லையேல் அறம்பிழைத்துவிடுவேன். இங்கு ஒரு அணுவிடை அறம்பிழைக்குமென்றால் விண்மீன்கள் திசைமீறிச் சிதறும். கோள்கள் முட்டி உடையும். வான்வெள்ளம் வற்றும். திசைத்தீ எழுந்து சூழும். ஐயமற்று அமர்ந்தால் மட்டுமே என்னால் அறம்பெருக்க முடியும். என் உள்ளத்தில் அமைதியின்மை திகழ்கிறது. இன்று நான் என்னை நம்பவில்லை.”
“ஏன்? என்ன நிகழ்ந்ததென்று சொல்க! நான் உங்களுக்கு வழிகாட்டக்கூடுமென்று ஊழ் இருக்கிறது. இல்லையேல் தேவர்க்கிறைவனின் நாவில் எனக்கான ஆணை எழுந்திருக்காது” என்றார் நாரதர். யமன் பெருமூச்சுடன் சற்றுநேரம் அமர்ந்திருந்தார். “சொல்க, நெறியிறையே! சொல்வடிவில் எழுவதெல்லாம் மெய்யே. பொய்யென்று உரைக்கப்படுவதும் மெய்யின் நிழல்மட்டுமே” என்றார் நாரதர். யமன் பிறிதொரு பெருமூச்சுடன் சொல்லத் தொடங்கினார்.
“நாரதரே, சிலகாலம் முன்பு நான் ஒருமுறை சித்திரபுத்திரனின் அலுவல்நிலைக்குச் சென்றிருந்தேன். அங்கே அவரும் அவருடைய பல்லாயிரம் உதவிக்கணக்கர்களும் அமர்ந்து முடிவிலா ஏடுகளாலான மகாசங்கிரகம் என்னும் நூலை எழுதிக்கொண்டிருந்தனர். வாழ்ந்தோர் வாழ்வோர் இயற்றிய இருபாற்பட்ட செயல்களையும், அவற்றின் விளைவுகளையும் அதில் பதிவுசெய்திருந்தனர். விளையாட்டாக நான் என்னுடைய கணக்கை எடுத்துப் பார்க்கவேண்டும் என்றேன். சித்திரபுத்திரன் அது முறையல்ல என்றார். நான் அரசன் என்பதனால் அதை வலியுறுத்தினேன். அவர் அந்த ஏட்டை புரட்டினார்.”
“எண்ணற்ற நற்செயல்களின் தொகையாக இருந்தது என் கணக்கு. நோயால் மூப்பால் துடித்து கண்ணீருடன் ஏங்கிய பலகோடி உயிர்களுக்கு இனிய விடுதலையை அளித்து அவர்களின் வாழ்த்துக்களை பெற்றிருந்தேன். பொன்னிற எழுத்துக்களாலான பதிவுகளை உவகையுடன் நோக்கியபடி ஏடுகளை புரட்டிச் சென்றுகொண்டிருந்தபோது ஒரு பெரும்பழி என் கணக்கில் இருப்பதைக் கண்டு திடுக்கிட்டேன். நீல நிறத்தில் பொறிக்கப்பட்டிருந்த அக்குறிப்பைப் படித்து துயருடன் அமர்ந்துவிட்டேன். பதிவுசெய்திருந்தவர்கள் அனைவரும் அதை மறந்துவிட்டிருந்தனர். ஆனால் பழி ஒரு விதை, அதன் தருணம் வரை தவம் மேற்கொள்வது.”
“திரேதாயுகத்தில் நிகழ்ந்தது அது” என யமன் தொடர்ந்தார். “அன்று விண்வடிவப் பேருருவன் ராமன் என்னும் மானுடனாக மண்ணில் பிறந்திருந்தான். அயோத்தியின் தசரதனுக்கு மைந்தனாகி, தந்தை சொல்பேண தம்பியும் துணைவியும் உடன்வர கானேகினான். வாலியை கொன்றான். வாலரை தொகுத்தான். அரக்கர்கோன் கவர்ந்துசென்ற துணைவியை மீட்க படைதிரட்டிச் சென்றான். இலங்கையை வென்று ராவணனையும் தம்பியரையும் கொன்று அவளை மீட்டு மீண்டும் நகர்புகுந்தான். தம்பியர் அறுவருடன் அரியணை அமர்ந்து ஆயிரமாண்டுகாலம் நல்லாட்சி அளித்தான். நிலம்பொலிந்து குடிகள் மகிழ, சொல்பெருகி அந்தணர் வணங்க,அறம் வளர்ந்து முனிவர் வாழ்த்த அரசுவீற்றிருந்தான்.”
அந்நாளில் என்னை பிரம்மன் அழைத்தார். தந்தையின் காலடியில் பணிந்து நின்ற என்னிடம் “உன் கடமையை நிறைவேற்றும் காலம் வந்துள்ளது, மைந்தா. மண்ணில் எழுந்த விண்ணவன் அங்கே பல்லாயிரம்கோடி முகமும் வடிவும் கொண்டு நிறைந்திருக்கும் மாயையில் தன்னை மறந்துவிட்டார். செயல்விளைவின், இன்பதுன்பத்தின், நன்றுதீதின் முடிவிலாச் சுழலில் சிக்கியிருக்கிறார். அவர் விண்மீளும் நாள் வந்துவிட்டது. சென்று அழைத்துவருக!” என ஆணையிட்டார். நான் திகைத்து “உலகங்களை ஆளும் முதற்பெருந்தெய்வத்திற்கே இறப்பாணையுடன் செல்வதா? என்ன சொல்கிறீர்கள்?” என்றேன். “எவராக இருப்பினும் அது உன் கடமை” என்றார் பிரம்மன்.
“அதை எவ்வண்ணம் நான் செய்யமுடியும், தந்தையே?” என்று நான் கேட்டேன். “நீயே செல்லவேண்டும். உன் வழக்கமான வடிவில் அல்ல. அவர் முனிந்தால் நீ அழிந்துவிடுவாய். அரசனுக்கு அறமுரைக்க அவைக்குச் செல்லும் முனிவரின் தோற்றம் கொள்க! தகைசான்றோன் மட்டுமே அறியவேண்டிய நுண்சொல் ஆகையால் தனியறையில் பேசவேண்டும் என்று கோருக! அங்கே மெல்ல நெறியுரைத்து அறம்விளக்கி மெய்மை நோக்கி செல்க! அவரை மூடியிருக்கும் மாயையின் திரையை கிழித்தகற்றுக! தான் யாரென்றும் எவ்வண்ணம் அவ்வுருக்கொண்டு வந்தார் என்றும் எதை இயற்றினார் என்றும் உணர்ந்தால் மீள்வதைப்பற்றி அவரே முடிவுசெய்வார்” என்றார் பிரம்மன்.
என் தலைதொட்டு வாழ்த்தி “மேடையேறி நடிப்பவரை தன்னுரு மீளச்செய்வதே இது. அறிக, மேடையில் நடிக்கையில் தன்னிலிருந்து துளியொன்றை எடுத்துத் தீட்டி கூராக்குகிறார்கள் நடிகர்கள். தனக்கு மீள்கையில் தான் சூடிய அது பொருளிழந்து உதிர்வதாக உணர்ந்து துயர் கொள்கிறார்கள்” என்றார். “நடிப்பதென்பது விழிப்புநிலைக் கனவு. கனவுகளுக்குள் உலவுகையில் கனவென்று தெரியாதவர் எவருமில்லை. ஆனால் கனவுகளின் ஆற்றல் என்பது உள்ளேயே கட்டிவைக்கும் அழகும், உணர்வெழுச்சியும் அவற்றுக்குண்டு என்பதுதான். விழித்தெழுகையில் கனவு கலையும் வெறுமை மீதான அச்சமே கனவுக்குள் மீளாது புதையும் விழைவென்றாகிறது.” நான் தலைவணங்கினேன்.
தவமுனிவர் என உருக்கொண்டு அயோத்தியை அடைந்தேன். அரசவைக் காவலரிடம் நான் அதிபலன் என்னும் முனிவரின் மாணவன் என்றும், அறியாது பிறழ்ந்த நெறியை சீரமைக்கும் வழியை அரசருக்கு அறிவுறுத்த விரும்புவதாகவும் சொன்னேன். என் தோற்றமும் குரலும் அவைத்தலைவரான வசிட்டரை என்னை மாமுனிவர் என நம்பச்செய்தன. நிமித்திகர் என்னை நோக்கி “இவர் சாகாக்கலை அறிந்தவர், ஐயமில்லை” என்றனர். “நான் அறிந்த அக்கலையை அவையில் உரைக்கவியலாது, அரசரிடம் உதடுகளிலிருந்து செவிக்கு என மட்டுமே அளிக்கவியலும்” என்றேன்.
வசிட்டர் அதற்கு ஆவன செய்தார். ராமன் அப்போது கானுலாவுக்கு சென்றிருந்தான். நைமிஷாரண்யப் பெருங்காட்டில் அவன் தங்கியிருந்த கொடிமண்டபத்திற்கு என்னை இட்டுச்சென்றார். அங்கே லட்சுமணன் ராமனுடன் இருந்தான். என்னை அறிமுகம் செய்து என் நோக்கத்தை அறிவித்து ராமனின் ஒப்புதல் பெற்று வசிட்டர் அகன்றார். “முனிவரே, மெய்யை எத்தனை அறிந்தாலும் தீர்வதே இல்லை. எனக்கு நற்சொல்லளிக்கும் பொருட்டு தேடிவந்துள்ளீர். தங்கள் அடிபணிகிறேன்” என்று ராமன் சொன்னான்.
அக்கொடிமண்டபத்திற்கு கதவுகளேதும் இல்லை என்பதனால் நான் லட்சுமணனிடம் “நான் அரசருடன் சொல்லாடுகையில் எவரும் உள்ளே வரலாகாது. ஒரு சொல்லும் பிறர்செவிக்கு செல்லக்கூடாது. எனவே நீ வாயிலில் காவல்நிற்கவேண்டும். எவரையும் உள்ளே விடக்கூடாது. அறிக, என் சொல்லாடலுக்கு நடுவே புகும் எவரும் வாள்போழ்ந்து வீசப்படவேண்டியவரே” என்றேன். இளையவனிடம் ராமன் “அது என் ஆணை” என்று சொல்ல லட்சுமணன் “அவ்வாறே” என வணங்கி வாளுடன் வெளியே சென்று நின்றான்.
நான் ராமனிடம் மானுடவாழ்வின் நெறி என்னவென்று சொல்லத் தொடங்கினேன். “ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டிருப்பதனாலேயே புடவிச்செயல் முடிவிலாது நிகழ்கிறது. முடிவிலாதொழுகுவதன் துளியென்பதே ஒவ்வொன்றும் கொண்டுள்ள பொருள். தான் கொண்ட பொருள் தன்னில் தொடங்கி தன்னில் முடிவடையவில்லை என்னும் விடுதலையில் திளைத்து அமர்ந்திருப்பவை இங்கிருக்கும் அனைத்தும். அரசே, முடிவிலாது நிகழும்பொருட்டே ஒவ்வொன்றும் இங்கே வடிவமைக்கப்பட்டிருக்கிறது” என்றேன்.
“ஆகவே எக்கணத்திலும் வாழ்க்கை முடிவுற்ற நிலையில் இருக்கவியலாது. இங்கு எதுவும் நிறைநிலையில் எஞ்சுவதும் அரிது. ஒவ்வொன்றும் தன்னில் ஒருதுளியேனும் எதிர்காலத்தில் விட்டுவைத்ததாகவே அறியப்படுகிறது. எனவே முடித்து எழுவது எங்கும் எதிலும் இயல்வதேயல்ல. எச்சத்தை திரும்பி நோக்காது விட்டுச்செல்பவரே விடுதலையாகிறார்” என்றேன். நான் சொல்லிவருவதை அவன் உணர்ந்துகொண்டதை விழி காட்டியது.
“அரசே, தெய்வமேயென்றாலும் புவியில் பணிமுடித்து விண்ணேகுவது இயல்வதல்ல” என்று தொடர்ந்தேன். ராமனின் விழிகளில் மாயையின் திரை விலகுவதைக் கண்டு உளம் மகிழ்ந்தேன். “இப்புவி வாழவேண்டும் என்றால் தீமை எஞ்சியாகவேண்டும். விதைகளை விட்டுவிட்டு விழுவதே பெருமரங்களின் இயல்பு என்று அறிக!” என்று நான் சொன்னபோது அவன் ஒருகணம் விண்ணளந்தவனாக ஆனான். அக்கணம் லட்சுமணன் “மூத்தவரே, பொறுத்தருள்க!” என்று கூறியபடி உள்ளே வந்தான்.
அவனைக் கண்டதுமே மூத்தவனாக அவன் ஆனான். இளமைந்தனை நோக்கும் தந்தை என முகம் மலர்ந்து விழி கனிந்து அவனை நோக்கி “சொல்க, இளையோனே!” என்றான். அவன் கண்கள் இளையவனின் விரிந்த பெருந்தோள்களை, திரண்ட புயங்களை, அகன்ற மார்பை அளந்தளந்து அலைந்தன. அவன் மீண்டும் மாயைக்குள் முற்றமிழ்ந்துவிட்டான் என்றுணர்ந்து நான் அனல்கொண்டேன்.
நாரதரே, நாங்கள் பேசிக்கொண்டிருந்தபோது மாபெரும் தவச்செல்வரான துர்வாசர் அக்காட்டினூடாக வந்து குடில்முற்றத்தில் நின்றார். பலநாட்கள் நீண்ட கடும்பசி கொண்டிருந்தார். அப்போது ராமனைக் காணமுடியாது என்று லட்சுமணன் தடுத்தான். “இன்னும் ஒருநாழிகைப்பொழுது, முனிவரே… சற்று பொறுங்கள்” என்று கெஞ்சினான். பெருஞ்சின முனிவர் “நான் நான்குமாத நோன்பிருந்தேன். எட்டு நல்லியல்புகளும் நிறைந்த ஒருவன் கையால் முதற்கவளம் உணவுபெற்று உண்ணும்பொருட்டு தேடிச்சென்றேன். அயோத்தியில் ராமன் இல்லை என்று கண்டு இங்கு வந்தேன். கணமும் பசிபொறுக்க முடியாது. சென்று சொல் அவனிடம்!” என்று கூவினார்.
லட்சுமணன் மீண்டும் மீண்டும் அவரிடம் கெஞ்சினான். அவனுடைய மறுப்பு அவரை சினம்கொண்டு நிலைமறக்கச் செய்தது. “கீழ்மகனே, தவத்தோரின் பசிபோக்க முடியாத அளவுக்கு முதன்மையா அவனுக்கு அவைச்சொல்லாடல்? இக்கணமே அவன் வந்து எனக்கு உணவளிக்கவேண்டும். இல்லையென்றால் அவனையும் அவன் குலத்தையும் என் தவம்முழுதுறையும் தீச்சொல்லால் சுடுவேன். அவன் குடிகளை அழிப்பேன். அவன் நகரை இடிபாடுகளாக ஆக்கிவிட்டுச்செல்வேன். என் கையிலேந்திய இந்த தர்ப்பைமேல் ஆணை!” என்றார்.
அவரை அஞ்சிய லட்சுமணன் “பொறுங்கள் முனிவரே, இதோ சென்று சொல்கிறேன்” என்று சொல்லி உள்ளே வந்தான். என் சினத்தை நோக்கி அவன் கைகூப்பி உடல்வளைத்து “பொறுத்தருள்க, முனிவரே! பெருஞ்சினத்தவரான துர்வாசர் வந்து வாசலில் நிற்கிறார். அரசரின் கையால் உணவுண்டு தவத்திலமர்ந்த பசியை நீக்க விழைகிறார். அவர் சினத்தை அரசும் குடியும் தாங்காதென்பதனால்தான் உள்ளே வந்தேன். வேறுவழியில்லை” என்றான். “அரசர் என அவர் முதற்கடமை அதுவென்பதை அறிவமைந்தவரான நீங்களும் மறுக்கமாட்டீர்கள் அல்லவா?”
ராமன் உடனே “ஆம், அதுவே முதற்பணி” என்றபின் எழுந்து என்னிடம் “சற்று பொறுங்கள், முனிவரே” என்று கூறிவிட்டு வெளியே சென்றான். முனிவரை வரவேற்று சொல்லும், நீரும், இருக்கையும் அளித்து வணங்கி உணவிட்டு நிறைவூட்டி, நற்சொல்பெற்று மகிழ்ந்து அவன் திரும்பிவர மூன்றுநாழிகைப் பொழுதாகியது. அவன் முகம் நகைசூடிப் பொலிந்திருப்பதைக் கண்டதுமே அவன் என் சொற்களில் இருந்து நெடுந்தொலைவு சென்றுவிட்டான் என்று உணர்ந்தேன். அருகணைந்து என்னை வணங்கி “பொறுத்தருள்க முனிவரே, அரசன் என நான் கொண்ட கடமை இது. இதன்பொருட்டே குடிகள் எனக்கு வரியளிக்கிறார்கள். அந்தணர் எனக்கு இதற்காகத்தான் முடியளித்தனர்” என்றான்.
“ஆனால் அது மாயை. அதில் திளைக்கிறாய். இனி நான் சொல்ல ஏதுமில்லை. கிளம்புகிறேன்” என்றேன். “என் பிழைபொறுக்கவேண்டும், முனிவரே. நடந்த பிழைக்கு என்ன நிகர்செய்யவேண்டும் என சொல்லுங்கள். அதை தலைக்கொள்கிறேன்” என்றான். அவன் போர்த்திக்கொண்டிருக்கும் அந்த மாயையை அகற்றவியலாது, கிழித்துவீசுவதே முறை என எனக்குத் தோன்றியது. சினம் ஓங்க “நான் சொன்ன சொல் நிற்கவேண்டும். என் சொல்லாடலை கலைத்தவன் வாள்போழ்ந்து வீசப்படவேண்டும்” என்றேன். “என்ன சொல்கிறீர்கள், அறிவரே? அவன் என் உயிருக்கு நிகரான இளவல்” என ராமன் கூவினான்.
லட்சுமணன் “நான் பிழைசெய்தவன். இக்கணமே அதற்கு சித்தமாகிறேன்” என்று கூறி தன் உடைவாளை உருவினான். ராமன் “இளையோனே…” என அலறியபடி அவ்வாளை பாய்ந்து பிடித்தான். “இளையோனே, நீ இல்லாமல் நான் எப்படி உயிர்வாழ்வேன்? வேண்டாம்” என கண்ணீருடன் கதறினான். உடல் பதற குரல் உடைய “அமைச்சரை அழைத்துவாருங்கள். இத்தருணத்தை எப்படிக் கடப்பதென்று அவரிடம் கேட்போம்” என்று கூவினான். கீழ்மகன் எழுதிய சுவையற்ற நாடகம்போன்ற அக்காட்சியைக் கண்டு சலிப்புற்று நான் அக்கணமே அங்கிருந்து வெளியேறி என் நகர் வந்தணைந்தேன். துயரும் கசப்புமாக அங்கே தனிமையில் இருந்தேன். கடன்முடிக்காமல் நான் திரும்பி வந்தது அதுவே முதல்முறை.
ஏவலர் ஓடிச்சென்று வசிட்டரை அழைத்துவந்தனர். “ஆவன செய்க, அமைச்சரே. என் இளவலை நான் எந்நிலையிலும் பிரியேன்” என்று ராமன் கதறினான். “அறிவருக்கு அரசர் அளித்த சொல் நிலைகொள்ளவேண்டும். அதுவே கோல்நெறி” என்று வசிட்டர் சொன்னார். “ஆனால் போழ்தல் என்பது மூன்றுவகை என நூல்கள் சொல்கின்றன. உடல்போழ்தல் முதல்முறை. பெற்ற கல்வியையும் செல்வத்தையும் நல்லூழையும் முற்றிலும் துறத்தல் இரண்டாவது போழ்தல். அரசே, குலத்திலிருந்து விலக்குதல் மூன்றாவது போழ்தல். நூல்களின்படி மூன்றும் நிகரே. பிற இரண்டில் ஒன்றை இளைய அரசருக்கு அளிக்கலாம்” என்றார்.
“அவன் கற்றவையும் ஈட்டியவையும் சேர்த்தவையும் உடனிருக்கட்டும். அவன் இக்குடியைவிட்டு நீங்கட்டும். செல்லுமிடம் சிறக்க அவனால் வாழவியலும்” என்று ராமன் சொன்னான். “அவனுடன் என் சொல்லும் தொடரும். அவன் கால்தொட்ட நிலமெல்லாம் நாடென்று பொலியும். அவன் குடிபெருகி காலத்தை வெல்லும்.” இளையோனை தோள்தழுவி “சென்று வருக இளையோனே, இங்கு உன் நினைவாகவே நான் இருப்பேன். நாம் சந்திக்கும் நாள் அமைக!” என்றான். இளவல் அவன் முன் தலைதாழ்த்தி கண்ணீர்விட்டான்.
அரசாணையின்படி அன்றே முரசுகள் முழங்க லட்சுமணன் குடிநீக்கம் செய்யப்பட்டான். தமையனை வணங்கி சொல்பெற்று லட்சுமணன் அயோத்தியிலிருந்து அகன்றான். அவன் துணைவி ஊர்மிளை விரித்த குழலும் மார்பின்மேல் பெய்த விழிநீருமாக அரண்மனை வாயில்வரை வந்து மயங்கிவிழுந்தாள். மைந்தர்கள் அங்கதனும் சந்திரகேதுவும் கோட்டைமுகப்புவரை அழுதபடி தொடர்ந்தனர். அவன் செல்லும் வழியின் இருமருங்கும் கூடிய அயோத்தியின் மக்கள் நெஞ்சிலறைந்து கதறினர். நாட்டின் எல்லைவரை சென்று நின்று கைவீசி கூவியழுதனர்.
லட்சுமணன் சரயு நதியின் கரையில் குசவனம் என்னும் சோலையில் குடில்கட்டி தங்கினான். அங்கே தவம்செய்ய எண்ணி அமர்ந்தாலும் அவனால் தமையனிலிருந்து உளம்விலக்க இயலவில்லை. தோல்வியடையும் ஊழ்கமே பெருந்துன்பம். அது நஞ்சென்றாகி பிற அனைத்தையும் எரிக்கத் தொடங்கிவிடுகிறது. லட்சுமணன் ஒவ்வொருநாளும் ஒவ்வொருகணமும் தன் தமையனையே எண்ணிக்கொண்டிருந்தான். துயர்கொண்டிருக்கையில் சென்றகாலங்கள் பெருகிக்கொண்டே இருக்கின்றன. தனிமையில் ஒவ்வொன்றும் நூறுமடங்கு எடைகொள்கின்றன. ஆற்ற பிறரில்லா துயரின் எரிக்கு காலமே நெய். வலிகொண்டவன் மேலும் மேலும் அவ்வலியையே எண்ணுகிறான். அதை வெல்லவும் தவிர்க்கவும் முனைந்து அதை பெருக்கி வாழ்வின் மையமாக்கிக் கொள்கிறான்.
லட்சுமணன் ஒருகணம் வெறுமையிலமைந்திருந்தால், ஒருமுறை முழுமையை எண்ணிச்சூழ்ந்திருந்தால் தான் எவரென்றும் நிகழ்வது என்னவென்றும் அறிந்து விடுபட்டிருக்கக்கூடும். ஆனால் மாயையை கைவிட்டுவிட்டு எழுவது எளிதல்ல. இரை கவ்விய பாம்பு அதை எண்ணினாலும் விடமுடியாது. ஒரு தருணத்தில் உளம்கொண்ட பெருந்துயரின் நஞ்சு கூர்கொண்டு தாக்க, தாளமுடியாத லட்சுமணன் எழுந்தோடி சரயுவிலிருந்த தீர்க்கபிந்து என்னும் ஆழ்ந்த சுழி ஒன்றில் பாய்ந்து உயிர்துறந்தான். அந்தச் சுழிக்கு அடியில் நீண்ட பெரும்பிலம் ஒன்று இருந்தமையால் அவன் உடல் மேலே வரவில்லை.
இளையோன் நகர்நீங்கிய நாள்முதல் உணவொழிந்து துயில்மறந்து தனியறையின் மஞ்சத்தில் கிடந்தான் ராமன். அணிகொள்ளவில்லை, அரியணை அமரவில்லை, குடித்தெய்வங்களைத் தொழுவதும் மறந்தான். மைந்தரோ தம்பியரோ அவனை ஆற்றமுடியவில்லை. அமைச்சர்களும் முனிவர்களும் அணுகவும் இயலவில்லை. எண்ணி எண்ணி சொல்பெருக்கி துயர்வளர்த்தான். நஞ்சென அவனுள் பெருகிய துயரால் கருமைகொண்டு வீங்கினான்.
மரத்தடிப்படகிலமைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த வேடர்கள் லட்சுமணன் நீர்மாய்ந்ததை கண்டனர். அச்செய்தியை அவர்களின் குலத்தலைவர்கள் அயோத்திக்கு ஓடிவந்து ராமனிடம் சொன்னார்கள். இளையோன் இறந்த செய்தியை முழுக்க கேட்பதற்குள்ளாகவே வெளியே ஓடி முற்றத்தில் நின்றிருந்த தேரிலேறி விரைந்தான். தம்பியரும் மைந்தரும் படைத்தலைவர்களும் காவலர்களும் அவனைத் தொடர்ந்து விரைந்தனர். பின்னால் சென்ற புரவியில் அமர்ந்திருந்த பரதன் “மூத்தவரே… நில்லுங்கள்… மூத்தவரே!” என்று கூவிக்கொண்டிருந்ததை அவன் கேட்கவில்லை.
அவிழ்ந்துலைந்த குழலும் கலைந்துபறந்த உடையும் புழுதிபடிந்த முகமும் விழிநீர் உலர்ந்த வெறிப்புமாக அவன் தேர்த்தட்டில் நின்றான். சரயுவைக் கண்டதுமே கைநீட்டி கதறியழுதபடி அருகே சென்றான். தீர்க்கபிந்துவை அடைந்ததும் “இளையோனே…” என்று கூவியபடி தேரிலிருந்தே அதன் நடுவில் பாய்ந்தான். நீரில் ஒரு குமிழியென அக்கணமே மறைந்தான். உடன் ஓடிவந்த தம்பியரும் மைந்தரும் திகைத்து நின்றனர். பரதன் நெஞ்சிலறைந்தபடி “மூத்தவரே…” என்று கதறியழுதான். அவனும் உடன்பாய்வதற்குள் சத்ருக்னன் அவன் கால்களைப் பற்றி மண்ணுடன் விழுந்தான்.
லட்சுமணன் நீர்பட்ட செய்தியை அறிந்து நான் திகைத்தேன். ராமனும் நீரில் மறைந்ததை எனக்கு ஏவலர் சொன்னபோது சொல்லிழந்து அரியணையில் அமர்ந்திருந்தேன். நீரில் மூழ்கியவர்களை அழைத்துவரும் ஜலன், தோஜன் என்னும் இரு எமகணங்களால் அவர்கள் இறப்புலகுக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்களை வரவேற்பதற்காக நான் என் நகரியின் எல்லையில் தலைக்குமேல் கைகூப்பியபடி நின்றிருந்தேன். விண்ணளந்தோனையும் அவன் அரவணையையும் கிழக்குவாயில் வழியாக கொண்டுவரவேண்டும் என விழைந்தேன். அவர்கள் காலடி படுவதனால் யமபுரி அருள்கொள்ளவேண்டுமென்று எண்ணினேன்.
ஆனால் சித்திரபுத்திரன் “அரசே, அவர்கள் தெய்வங்களேயானாலும் மானுடவடிவில் இருக்கின்றனர். ஆகவே மானுடர்களுக்குரிய பிழைசரிகளின் கணக்குகளுக்கு உட்பட்டவர்கள். தெற்குவாயில் வழியாகவே அவர்கள் வந்தாகவேண்டும்” என்று கூறிவிட்டார். அவர்கள் தெற்குவாயில் வழியாக நுழைந்தபோது நான் சென்று வணங்கி “பொறுத்தருள்க, ஐயனே. பெரும்பிழை இயற்றிவிட்டேன்” என்றேன். ஆனால் அவன் புன்னகையுடன் என் தோளைத் தொட்டு “உங்கள் பிழை அல்ல, என் பிழையும் அல்ல. நிகழ்ந்தது நன்றே. என் இளையோன் மறைந்த துயர்சூடி அங்கே நாள்கழிக்காது உடன் மறையத் தோன்றியது என் நல்லூழே” என்றான்.
அவன் ராமனாகவே இருக்கிறான் என்று கண்டு நான் திகைத்துச் சொல்லிழந்தேன். சித்திரபுத்திரன் என்னிடம் “மாயை அவரில் எஞ்சியிருக்கிறது, அரசே. அது கலையும்பொருட்டே இங்கு வந்துள்ளார்” என்றபின் அவனிடம் “அயோத்தியின் அரசே, தவமின்றி உயிர்மாய்த்துக்கொள்வது அறப்பிழையென கொள்ளப்படும். துயர்கொண்டு இறந்தமையால் உங்கள்மேல் மாயையின் நிழல் எஞ்சியிருக்கிறது. இங்கு ஆயிரமாண்டுகாலம் இருளில் தவமிருந்து பிழைநிகர் செய்து வைகுண்டம் மீள்க!” என ஆணையிட்டார்.
“அதன்படி பாதாளத்தின் தென்மேற்குமூலையில் தனிமையில் தவமிருந்து தன்மேல் படிந்த மாயையின் கறையை அகற்றி விண்பாற்கடலை சென்றடைந்தார்” என்றார் யமன். “அந்நிகழ்வில் என் மீது பிழையில்லை என்று விண்ணளந்தோன் சொன்னதை நானும் ஏற்று அவ்வண்ணமே என் நெஞ்சை அமைத்துக்கொண்டிருந்தேன். ஆனால் கணக்குகளை பிழையின்றி யாக்கும் சித்திரபுத்திரனின் அலுவல்நிலை அவ்வாறு எண்ணவில்லை. என் நூலில் பெரும்பிழை என அதை பதிவுசெய்திருக்கிறது. அதைக் கண்டபின் நான் அகநிகர் குலைந்து துயர்கொண்டுவிட்டேன். அதன்பின் என் நெறிநிலை கைகூடவில்லை, என் தொழிலை தொடரவும் இயலவில்லை.”
நாரதர் “உங்கள் உளம் கோருவதென்ன?” என்றார். “வினாக்கள், ஒன்றிலிருந்து பிறிதொன்றென எழுபவை. விடைதேடிச் சலிக்கின்றது அகம். அவை தெளிந்து நான் நிலைகொள்ளாது மேலும் தொழிலியற்றினால் பெரும்பிழைகளை செய்யக்கூடும் என்று அஞ்சுகிறேன்” என்றார் யமன். “அரசே, ஒரு வினாவிலிருந்து பிறிதொரு வினா உடனே எழுமென்றால் அவையனைத்தும் ஒற்றைப் பெருவினா ஒன்றின் ஆடிப்பாவைப் பெருக்கென்றே கொள்ளவேண்டும். பெருவினாக்கள் என்றுமென்றிருக்கும் மலையடுக்குகளை நோக்கி ஒலிக்கும் கதறல்கள்போல. எதிரொலிகளைக் கடந்து அம்முதல்வினாவை சென்றடைக!” என்றார்.
“ஆம், இங்கிருந்து ஆற்றிய தவத்தால் அதை சொல்லென்றாக்கியிருக்கிறேன்” என்றார் யமன். “அதன் விடைதேடியே முக்கண்ணனை தவம் செய்கிறேன்.” நாரதர் நகைத்து “கடலில் தொலைத்ததை அனலில் தேடுகிறீர்கள், காலரே. எவரிடமிருந்து அந்த வினா எழுந்ததோ அவரிடமல்லவா உசாவவேண்டும்?” என்றார். திகைத்தபின் “ஆம், அது மெய்யே. நான் கோரவேண்டியது விண்ணளந்த பெருமாளிடம். இதோ வைகுண்டம் கிளம்புகிறேன்” என்று யமன் எழுந்தார்.
“நன்று, ஆனால் அவர் ஏதறிவார்?” என்று நாரதர் சொன்னார். “கடல் அலைகளை அறியாது. கரைநிற்பவர் அறிவதே அலையென்பது.” யமன் சோர்ந்து “ஆம்” என்றார். “சொல்லிலியில் எண்ணிலியில் காலமிலியில் வெளியிலியில் முழுதமைந்து விழிமயங்கும் மகாயோகப் பெருமாளிடம் எதை அறியமுடியும்?” என்றார் நாரதர். “நான் என்ன செய்வது, முனிவரே?” என்று யமன் கேட்டார். “ஒரு யுகம் பொறுத்திருங்கள். மீண்டுமொரு அலை நிகழட்டும். மண்ணில் அவன் பிறந்திறங்கி மெய்யறிந்தோனென்றாகி அதே நைமிஷாரண்யத்திற்குச் சென்று அதே குடிலில் எப்போது தங்குகிறானோ அப்போது சென்று உங்கள் ஐயங்களை கேளுங்கள். மெய்மை அறிவீர்கள்.”
“எப்போது நிகழும் அது?” என்று யமன் கேட்டார். “அறியேன். ஆனால் முதல்முறை வந்தவனில் நிகழாது எஞ்சியது மற்றும் ஒருவனாக மண்நிகழும் என்று உய்த்தறிகிறேன். அவன் கூறவியலாதவற்றை கூறுபவன், அவன் இயற்றாதொழிந்தவற்றை ஆற்றுபவன், அவன் அடையாதமைந்தவற்றை அடைபவன் வருவான். அவனை நாடுக!” யமன் “ஆம், அதற்காக காத்திருக்கிறேன்” என்றார். “அதுவரை உங்கள் தொழில்நிகழ்க! அதுவரை நிகழும் அனைத்து இறப்புகளும் முழுதமையா நிகழ்வுகளென்றாகட்டும். யமபுரிக்கும் மண்ணுலகுக்கும் நடுவே அர்த்தகால ஷேத்ரம் என்னும் தனி நகர் ஒன்றை அமையுங்கள். இனி இறப்பவை அனைத்தும் அங்கேயே தங்கட்டும். உங்கள் ஐயமகன்றபின் முழுதிறப்புக்கு உகந்தவர் யமபுரிக்கு வரட்டும். பிழையென இறந்தவர்கள் அங்கிருந்தே மண்மீளட்டும்” என்று நாரதர் சொன்னார். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் யமன்.
நாரதர் மண்ணுலகுக்கு மீண்டார். அவரை விண்ணிலேயே எதிர்கொண்ட பிரபாவன் நோயில் கருகியுதிர்ந்த இறகுகளும் சீழ்கொண்ட உடலும் கூர்மழுங்கிச் சிதைந்த உகிர்களும் கொண்டிருந்தது. “நற்சொல் பெற்று வந்துள்ளேன். யமன் தன் அவைமீள்வார். மண்மேல் சாவமுது பெய்திறங்கும்” என்றார் நாரதர். பிரபாவன் உடன் வர அவர் புவிமேல் நடந்தபோது சீழ்கட்டிச் சிதைந்த உடல்களை, மட்கிய தசைகளை, எரிந்துருகிக்கொண்டிருந்த எலும்புகளை கண்டார்.
தன் சிறுதுளையின் வாயிலில் அழுகி நீராகப் பரவிய உடலில் விழி மட்டுமே எஞ்ச தியானிகன் ஊழ்கத்தில் இருந்தது. “தியானிகரே, அணுகுகிறது இறப்பு. உவகை நிறையட்டும் எங்கும்” என்றார் நாரதர். “ஆம், இனி ஆழி சுழல்க!” என்றது தியானிகன். “நலம் சூழ்க!” என்று வாழ்த்தி நாரதர் விண்புகுந்தார். இந்திரனின் நகரை அடைந்து அவையிலிருந்த முனிவர்கள் கேட்க “துலா நிகர் செய்யப்பட்டது” என்று அறிவித்தார்.
அருகருகே அமர்ந்து தியானிகனும் பிரபாவனும் வானை நோக்கிக்கொண்டிருந்தன. அதுவரை கருமுகில்கள் மூடியிருந்த வானம் மெல்ல விரிசலிட்டு வாயில்திறக்க ஒளிபெருகி மண்ணில் படிந்தது. அதனூடாக ஒரு கரிய தேர் அணுகிவந்தது. வியாதி, ஜரை, உன்மாதை, பீடை, விஸ்மிருதி, பீதி, ரோதனை என்னும் ஏழன்னையர் இழுத்த தேரில் நீண்ட செங்கூந்தல் திசைமுடிவுவரை பறக்க, ஒருகையில் தாமரை மலரும் மறுகையில் மின்படைக்கலமுமாக மிருத்யூதேவி அமர்ந்திருந்தாள். அவள் உதடுகள் குருதிகொண்டவை என சிவந்திருந்தன. கண்கள் முலையூட்டும் அன்னையுடையவை என கனிந்திருந்தன.
நிழலற்ற உருவென அருகணைந்த அன்னை தன் மின்படையால் அவர்களை தொட்டாள். அறத்தோனாகிய தியானிகனை நெற்றியிலும் துணிந்தோனாகிய பிரபாவனை நெஞ்சிலும். அவர்கள் துள்ளித்துடித்து மெல்ல அடங்க குளிர்தாமரை மலரால் அவர்களை வருடினாள். வலியடங்கி முகம்மலர்ந்து புன்னகையுடன் தாயமுதுண்டு கண்வளரும் மகவினரைப்போல் அவர்கள் உலகுநீத்தனர்.
வாழ்வாங்கு வாழ்ந்தமைந்தமையால் பிரபாவன் தொல்குடியாகிய காசியில் அஜயன் என்னும் புகழ்மிக்க அரசனாகப் பிறந்தான். தியானிகன் நால்வேதம் உணர்ந்து ஏழு பெருவேள்விகள் இயற்றிய சுகிர்தன் என்னும் அந்தணனாகப் பிறந்து அவ்வரசனுக்கு நல்லமைச்சனானான். அவர்கள் இணைந்து ஆட்சிசெய்தமையால் காசி செல்வமும் அறமும் பொலிந்து சிறப்புற்றது.