«

»


Print this Post

பயணம் கடிதங்கள்


yya

 

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

 

ஒரு இடைவெளிக்குப் பிறகு எனது மின்னஞ்சலில் தங்களது வலைத்தளத்தின் கடிதத்தை பார்த்ததில் மகிழ்ச்சி. தங்களின்  இமயத்தனிமை   படிக்கிறேன். தங்களின் வெளிப்படையான உண்மையான எழுத்துதான் , உங்களிடம் எங்களை அழைத்து வருகிறது.

 

உங்களுக்கு நான் என்ன சொல்ல இருக்கிறது. சீரியஸான கட்டுரையின் வாசகன் என்றாலும், தமாஷாக ஒரு குறிப்பு. என்னைப்போலவே உங்களுக்கும் செல்ஃ பி எடுக்கும்பொழுது சிரிக்கத் தெரியவில்லை. எனக்கு என் மகன் , ஜெய் செல்ஃபிக்கு எப்படி சிரிப்பது என்று சொல்லிக்கொடுத்தான். அவன் வயதில் உள்ள அஜிதனோ, சைத்தன்யாவோ தங்களுக்கு சொல்லிக்கொடுத்துவிடுவார்கள்.  தங்களது குழந்தைகளுக்கும், அருள் மொழிக்கும், தங்களுக்கும் எனது அன்பும் மரியாதைகளும்.

 

வ. சௌந்தரராஜன்

ஆஸ்டின்

 

அன்புள்ள சௌந்தர ராஜன்

 

செல்பி எடுக்க தன்னைத்தானே நோக்கி மகிழவேண்டும். எப்போதும் அது முடிவதில்லை. இளமையில்தான் அது இயல்பாகவே இயல்கிறது

 

ஜெ

 

அன்புள்ள ஜெ

உங்கள் நினைவாற்றலைப் பற்றி இருவிதமான பிம்பங்கள் உள்ளன, இரண்டுமே நீங்களே உருவாக்கியவை. ஒன்று, மிகவும் கூர்மையான நினைவாற்றல் கொண்டவர், நினைவின் நதியில் போன்ற ஆக்கங்களில் நீங்கள் சந்தித்த கலைஞர்களின் ஒவ்வொரு சொல்லையும் முகபாவனைகளையும் எழுதமுடிந்தவர். மற்றது, உலகியல் தளத்தில் சற்று கவனமில்லாமல் பெட்டிகள் செருப்புகளை தொலைத்து பஸ்சை தவறவிடுபவர்.

(உங்களை உலகியல் தளத்தில் கறாரானவராகவும் இலக்கிய விவாதங்களில் அவ்வப்போது நினைவு தவறுபவராகவும் பார்க்கும் தரப்பும் உள்ளது).

நான் படித்தவரையில் நீங்கள் உங்கள் பயணக்காட்சி நினைவுகளை மனதில் மட்டுமே ஏற்றி வார்த்தையில் உருவாக்கி கொண்டுவருவீர்கள். புகைப்படங்கள் என்றால் அது உங்கள் கூட வரும் நண்பர்கள், பிள்ளைகள், வசந்தகுமார் போன்றவர்கள் எடுப்பது மட்டுமே.

இந்த இமைய தனிப்பயணத்தில் முதன்முறையாக நிறைய படங்கள் எடுத்தீர்கள் என்று தோன்றுகிறது. செல்பேசியில் எடுத்த அழகான படங்கள்.

இது வாசகர்களுக்கான வெறும் sharing மட்டுமா, இல்லை உங்கள் நினைவுகளை தக்கவைக்கும் முயற்சிகளில் ஒரு பரிணாம மாற்றமா? (எழுத்தாளனுக்கும் வயதாகிறதில்லையா!!).

ஒரு வாசகனாக,  இனிமேல் உங்கள் எழுத்துக்களுடன் படங்களின் visual linguistics-ம் காணக்கிடைக்கும் என்று நம்பலாமா?

அனைத்துக்கும் கீழே, ஒரு ஆன்மாவயமான தனிப்பயணத்தில் பொருண்மையான படங்கள் எடுத்துவைத்துக்கொள்வது ஒரு சிறு துணுக்கை உருவாக்குகிறது.

 

மதுசூதன் சம்பத்

 

அன்புள்ள மது

 

நான் தனியாகச் சென்றமையால் புகைப்படங்கள். பதிவுசெய்வதற்காக அல்ல. ஒரு சின்ன உடைவு தேவையாகும்போது மட்டும். ஆகவேதான் பெரும்பாலும் எதையுமே படமெடுக்கவில்லை. மொத்தமே இரண்டுமுறைதான் படங்களை எடுத்தேன். அந்தப்படங்கள் மேல் எனக்குப் பெரிய மதிப்பும் இல்லை. சும்மா செல்பேசி கிளிக்குகள்தான்.

 

நான் எப்படிப்பட்டவன் என்பதை நண்பர்கள் ஒருவகையில் எதிரிகள் இன்னொருவகையில் வகுத்துக்கொள்கிறார்கள். இயல்புதான் அது. நினைவில் நிற்பவை மறப்பவை பற்றி எனக்கே ஆச்சரியங்கள் உண்டு. பொதுவாக மனிதர்களை நினைவில் வைத்திருக்கிறேன். பல்லாயிரம்பேரை. ஆனால் அவர்கள் சொன்ன ஏதேனும் கருத்துடன் அடையாளப்படுத்தி மட்டுமே. எக்கருத்தும் சொல்லாதவர்கள் நினைவில் நிற்பதில்லை. நான் எந்தக் கருத்தைப்பற்றி சற்றேனும் சிந்திக்கிறேனோ அதையே நினைவில் நிறுத்திக்கொள்கிறேன் என நினைக்கிறேன்

 

ஜெ

 

அன்பு ஜெ,

 

கீழ் உள்ள கடிதம் எழுதி 4 வருடம் ஒடி விட்டது என்பது மலைப்பு.

 

முழுமையின் அருகில் இருக்கிறீர்கள் ஜெ… நாளை எவ்விதம் என்பதும் ஊழ் என்பது எது என்றும் தெரியாத பயம். 2 முதல் 5  நாவல்கள் வரை அடுத்த வருடம் கடைசி வரை கூட நாட்கள் செல்ல கூடும். இந்த இறுதி மாதங்களுக்கு தடை என சலனம் என தொந்திரவு என எதுவும் அண்ட விட வேண்டாம்…. நீங்கள் பேச வேண்டியதும் சொல்ல வேண்டியதும் நிறைய தடவை பல பல வகையில் செஞ்சாச்சு. வெண்முரசு முடித்து எழுத வேண்டியவை பெரிய மலை என கிடக்கிறது. உந்தி உந்தி செலுத்தி , சென்று திரும்ப வந்து , மீண்டும் முன் செல்வதால் பயம் இல்லை எனினும் அறுந்து விட கூடாது என்ற கவலை மனதுள் வந்ததால் இந்த கடிதம்.. உடலின் வயதை மனது மிக அழகாக மறைத்து விடுவதால், நலம் பேணவும்.

 

திரும்பி வரும் தொலைவு மட்டும் செல்லவும் தயவு செய்து….

 

அன்புடன், லிங்கராஜ்.

 

அன்புள்ள லிங்கராஜ்

திரும்பிவருவது நல்லதுதான். இங்கே செய்வதற்கேதும் இருக்கையில். எவ்வளவுநாள் இருக்குமென தெரியவில்லை

 

ஜெ.

அன்புள்ள ஜெயமோகன்,

 

இமையத் தனிமை படித்த பொழுது சம்சாரா திரைப்படத்தின் இக்காட்சி ஞாபகத்திற்கு வந்தது. வலைதளத்தில் மீண்டும் எழுத ஆராம்பித்ததில் மிக மகிழ்ச்சி.

https://youtu.be/4TrvRe9hMN0

 

தத்தாப்பிரசாத் தியாகராஜன்

தொடர்புடைய பதிவுகள்

  • தொடர்புடைய பதிவுகள் இல்லை

Permanent link to this article: https://www.jeyamohan.in/107432/