பயணம் கடிதங்கள்

ttttt

இமையத் தனிமை – 3

இமையத் தனிமை – 2

இமையத் தனிமை -1

 

அன்புள்ள ஜெ,

 

மீண்டும் நீங்கள் பயணம் செல்வது எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை கொடுக்கிறது.உங்கள் இமயத்தனிமை புறப்பாடு 3 என எனக்குப் பட்டது. மூன்றும் கலந்து கால ஒழுக்கின்றி அனைத்தும் கலந்தே என்னால் உணர முடிந்தது.
குளிர் என்றவுடன் இரண்டாம் புறப்பாடு (?) அதில் இரயிலில் ராதே கிருஷ்ணா பக்தர்கள் நடுவில் குளிர் தாங்காது நின்ற அந்த காட்சி வந்து சென்றது. புறப்பட்டு கொண்டே இருக்கிறீர்கள்.

ஆழ்ந்த இனிமையான பயணங்கள் உங்களுக்கு உரித்தாகுக

 

அன்புடன்

ஸ்ரீதர்

 

 

அன்புள்ள ஜெ மோ,

 

இமயத்தனிமை வாசிக்க கொஞ்சம் பயம் வந்து போனது. அது என் சொந்த வாழ்வின் நிகழ்வால். நானும் என் சகோதரனும் சிறுவயது முதலே ஆன்மிகம் திணிக்கப்பட்ட வளர்க்கப்பட்டோம். 20 வயதில் எனது தம்பி தியானம் செய்யப்போகிறான் என்று மருத்துவாழ்மலை சென்று எதிர்பாராத விபத்தில் சிக்கிவிட்டான். உயிர்பிழைத்தான் முழு நேர ஜோதிடன் ஆகிவிட்டான்.  நான் மூத்தவன் என்பதால் பொறுப்புகளை களைய முடியவில்லை, தம்பிக்கு இருந்த அதே விரக்தி வெறுமை எனக்குள்ளும் இருந்தது. நானும் கோவில்களை சுற்றி வந்தேன். ஆபத்தான பகுதிகளை தவிர்த்தேன்.  விவேகானந்த கல்லுரியில் பணியாற்றிய போது தனிமையும் அதன் பலமும் உணர்ந்தேன், சாங்கிய காரிகை கற்ற பிறகே பணம் சம்பாதிப்பது என் கடமை என் உணர்ந்து சென்னை கிளம்பினேன்.

 

தங்கள் படைப்பையே வாசகனாக வாசித்து ரெட்டை மனநிலை ஏற்பட்டு தனிமை கண்டு திரும்பியுள்ளீர்கள். தங்கள் எழுத்தில் பக்குவத்தோடு ஒரு விரக்தியும் தெரிகிறது. தங்கள் மனைவி மீது எனக்கு மிகுந்த மதிப்பும் ஏற்படுகிறது. பற்றற்ற வாழ்வை ஒரு ஆண் வாழ்வதைவிட பெண் உணர்வதும் வாழ்வதும் கடினம். உலகியல் நோக்கோடு பார்த்தால் , தங்களை பார்க்காத பழகாத எனக்கே கொஞ்சம் வலிக்கிறது தங்கள் இமாலயத்தனிமை. தத்துவார்த்தமாக பார்த்தால் இது உம் படைப்பின் தேவை மற்றும் பிரதிபலிப்பு.உளவியல் ரீதியாக இது உம் தேவை.

 

குருவருளும் திருவருளும் என்றும் உங்களுடன் இருக்கட்டும், நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்றும் உங்களுக்கும், உங்கள் மனைவி மக்களுக்கும் தொடரட்டும்.

 

என்றும் அன்புடன்

பகவதி

 

அன்புள்ள ஜெயமோகன்,

 

இடைவெளியில் இருந்து சீக்கிரமே மீண்டு வந்ததற்கு வாழ்த்துக்கள்.  நீங்கள் பெரிய எழுத்தாளர் ஆகியும் இப்படி வெளிப்படையாக இடைவெளி எடுத்ததையும், அந்த அனுபவத்தை மனப்பூர்வமாக பகிர்ந்து கொள்ள ஆரம்பித்து இருப்பதையும் பார்த்து பிரிமிக்கிறேன்.  நானும் உங்கள் இணையதளத்தின் தினசரி வாசகன்.  அதனால் சில நாட்கள் மிகவும் ஏமாற்றமாக இருந்தது.  ஆனால் உங்கள் மனப்போராட்டத்தை என்னால் உணர முடிந்தது ஓரளவுக்கு.  நான் தொழிலை சாதாரண தொழிலாக நடத்தாமல் அறத்துடன் நடத்த வேண்டும் என்று சிறிய அளவில் கடந்த 15 வருடங்களாக போராடிக்கொண்டிருக்கிறேன்.  இந்த சிறிய முயற்சிக்கே பல மனப்போராட்டங்களை சந்தித்துள்ளேன்.  பல நாட்கள், இரவுகள் தனிமையில் மனம் அலைக்கழிந்திருக்கிறேன்- நான் பண்ணுவது சரியா, இப்படி தொடர்ந்து பண்ண முடியுமா, ஏன் இப்படி பண்ணுகிறேன், புகழுக்கா, பெருமைக்கா, அல்லது ஒரு நல்ல நோக்கமா என்று.  இரண்டு வருடம் முன்பு எனக்கு உங்கள் தளம் அறிமுகமாகி பின்பு உங்கள் அறம் புத்தகத்தை படித்தபின்  என் மனப்போராட்டத்திருத்துக்கு ஒரு தெளிவு கிடைத்தது.  சோற்றுக்கணக்கு கெத்தேல் சாகிப்பை என் தொழில் குருவாக நினைக்க ஆரம்பித்தேன்.  சில சோதனைகளை சிறிது எளிதாக சந்திக்க முடிந்தது.  நம்பிக்கையுடன் முயன்று கொண்டிருக்கிறேன்.  என் சிறு முயற்சியே எனக்கு மனப்போராட்டத்தை தரும் போது உங்களது மாபெரும் இலக்கிய முயற்சிகள் எப்படிப்பட்ட  மனப்போராட்டங்களை தரும் என்று புரிகிறது.

 

நேற்றிலிருந்து ஒரு கேள்வி, எப்படி உங்களால் இந்தமாதிரி ஒரு இடைவெளி எடுக்க முடிகிறது, எப்படி சீக்கிரமாக மீண்டு வர முடிகிறது என்று?

 

இதைப்பற்றி பல மணி நேரம் சிந்தித்தேன்.  எனக்கு கிடைத்த பதில் உங்களை போன மாதம் சந்தித்த அனுபத்தில் இருந்து வந்தது.

 

உங்களை நானும் என் தம்பி சிவாவும் நாகர்கோயிலில் உங்கள் வீட்டில் போன மாதம் சந்தித்தது எங்களுக்கு மிகப் பெரிய அனுபவம்.  அதை அமெரிக்கா திரும்பி வந்தும் பல நாட்கள் நினைத்து கொண்டிருந்தேன்.  புது வாசகர்களாகிய எங்களை வரவேர்த்து இரண்டு மணி நேரம் பேசியது உங்கள் பெருந்தன்மை.  அதற்கும் சமமான பெருந்தன்மையை உங்கள் மனைவி அருண்மொழியிடம் கண்டோம்.  நமது பேச்சு நெடு நேரம் நீடித்தும், நாங்கள் புது வாசகர்களாயினும் பொறுமையுடன் எங்களை உபசரித்து, எனக்கு இருமல் வந்த போது உடனே சுடு தண்ணீர் கொடுத்ததை என்னவென்று சொல்வது.  அது மட்டுமல்ல, கடைசியில் வந்த உங்கள் மகன் அஜிதன் அந்நியர்களாகிய எங்களிடம் கனிவாக நடந்து கொண்டது மிகவும் மன நிறைவாக இருந்தது.  இப்படி ஒரு குடும்பம் வாய்த்தது உங்கள் பாக்கியம், உங்களைபோல் ஒரு குடும்பத்தலைவன் கிடைத்தது அவர்கள் பாக்கியம்.  உங்களைப்போல் ஒரு எழுத்தாளன் இந்த உலகுக்கு கிடைப்பது அபூர்வம், அதை விட அபூர்வம் ஒரு பெரும் எழுத்தாளனுக்கு ஒரு நல்ல குடும்பமும் அமைவது.  இப்படி எழுதுவதே மிகுந்த மன நிறைவை அளிக்கிறது.  இப்பொழுது புரிகிறது எப்படி இந்தமாதிரி ஒரு இடைவெளி எடுக்க முடிகிறது உங்களால், எப்படி சீக்கிரமாக மீண்டு வர முடிகிறது என்று.

 

இந்த வருடம் கனடா மற்றும் அமெரிக்கா வரும் எண்ணம் உள்ளது என்று சொன்னீர்கள்.  வந்தால் சான் ஹோஸே வர முயலுங்கள்.  இல்லையென்றால் நான் நீங்கள் இருக்கும் ஊரில் வந்து பார்க்க முயல்கிறேன் உங்களுக்கு நேர இருக்குமினில்.  இத்துடன் நாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை அனுப்புகிறேன்.

 

நன்றி,

விஜய் சுப்ரமணியன்

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

 

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.. 13 நாட்களுக்கு பின் இன்று தளத்தில் உங்கள் இமைய தனிமை பதிவை பார்த்ததும் ஒரு நிம்மதி. 2009 ல் இருந்து உங்கள் தளத்தில் தினமும் ஒரு மணி நேரமாவது வாசித்து வருபவன்… கடந்த 8, 9 மாதஙகளாக அலுவலக வேலை காரணமாக வெண்முரசு மட்டும் தவறாமல் தினமும் படித்து விடுவேன்… மற்ற பதிவுகள், சனி , ஞாயிறு க்கு ஒதுக்கப் படும்..

என் பார்வையில், நீங்கள் வெண்முரசு எழுத ஆரம்பிக்கும் முன் ( 2014க்கு முன்) நிறைய கருத்தாழம் மிக்க தீவிரமாக இருந்த கட்டுரைகள் எழுதி வந்தது போல் தோன்றுகிறது.. ஒப்பு நோக்கில் 2014க்கு பின், அத்தகைய கட்டுரைகளின் எண்ணிக்கை குறைந்தது போல் தோன்றுவதுண்டு. ஆனால், வெண்முரசு பதிவுகள் இக்குறையை தேவைக்கு மேலேயே ஈடு கட்டி வந்திருக்கின்றன.. ஆகவே தினமும் இந்த 1 மணி நேரம் ஆசையோடு எதிர் பார்த்து வந்த நேரஙகளாக இருந்து வந்தன..

ஆகவே “ஒரு சிறு இடைவேளி” பதிவை பார்த்து என்னவென்று சொல்ல முடியாத உணர்வையே அடைந்தேன். கிருஷ்ணணின் வேதியர் சபை விவாதஙகளின் தீவிரம் அன்றும் மனதில் இருந்து அகலாமல் இருந்த்தது. எனக்கே இருந்த இந்த தாக்கம் எழுதிய தங்களுக்கு எவ்வளவு தீவிரமாக இருந்திருக்கும் என்றே அந்த இடைவெளி பதிவை பார்த்ததும் நினைத்தேன்.

கடந்த 9 மாதஙகளாக உங்களுக்கு எழுத வேண்டும் என்று பல முறை நினைத்தும், எப்போதும் எழும் தயக்கம், பின் நாளானதும் எழுத நினைத்த கருத்தின் காலம் கடந்து விட்டிருக்கும் அல்லது அப்படி ஒரு நியாயத்தை சொல்லி சமரச படுத்திக் கொள்வேன். என் மகன் இப்போது அசோகமித்திரன், தஸ்தோவ்ஸ்கி சிறுகதைகள் படிக்க ஆரம்பித்திருக்கிறான். இளம் வயதிலே இலக்கியங்கள் மேல் ஆர்வம் ஏற்பட்டிருப்பது மகிழ்வாக உள்ளது…

4 நாட்களாக தளமும் முழுதுமாக செயலற்று போனதால், பல சந்தேகங்கள்!.. எப்போதும் இவ்வளவு நாட்கள் தளம் மூடியது இல்லையே என்று… தங்களிடம் எப்போதும் கேட்க வேண்டும் என்று ஒரு கேள்வி மனதில் இருக்கும்.. உங்கள் “இடைவெளி” பயணம், தளம் மூடியது இரண்டும் இந்த மின்னஞசல் அனுப்ப உந்துதலாக அமைந்த்தன!..

உங்கள் வாசிப்பனுபவம், ஞானம், பயண அறிவு, இந்திய ஞானம், தத்துவ அறிவு அனைத்தும் பிரமிப்பூட்டுவன..இவற்றை அறிய ஆசை படவோ, கனவு காணவோ தான் என்னால் இயலும்.. நான் மேற்கொள்ளும் சின்ன சின்ன பயணஙகளும், வாசிப்புமே மனதை எங்கோ கொண்டு சென்று விடுகிறது… மீண்டு அன்றாட வாழ்விற்கு வர பெரும் பிரயத்தனமாகி விடுகிறது.. உங்கள் அனுபவங்களிருந்து எப்படி மீண்டு வர முடிகிறது.. அனைத்தையும் நிறுத்தி விட்டு கடந்து போகாமல் இருக்க எப்படி முடிகிறது?..

தால்ஸ்தாயின் போரும் அமைதியும் நாவலை படிக்க ஆரம்பித்திருக்கிறேன்.. வேலை நிலைமையால் மெதுவாக தான் படிக்க முடிகிறது.. அதனாலேயே, அதை முழுவதுமாக உள்வாஙக முடியாதோ என சந்தேகம் எழுகிறது.. இருந்தாலும் அதன் மகத்துவத்தை உணர முடிகிறது..

இடைவெளி முடிந்ததில் பெரு மகிழ்வுடனும், அடுத்த வெண்முரசு நாவல் பற்றிய அறிவிப்பின் எதிர்பார்புடனும்..

அன்புடன்

வெண்ணி

முந்தைய கட்டுரைஇரவு பற்றி…
அடுத்த கட்டுரைபீட்டரும் காடும்