பயணம் கடிதங்கள்

uu

அன்புள்ள ஜெ

 

மீண்டும் உங்கள் தளம் திறந்தது ஆறுதல் அளிக்கிறது. நான் தினமும் வந்து பழைய கட்டுரைகளை வாசித்துக்கொண்டிருந்தேன். வாசிக்காதவையே நிறைய உள்ளன. ஆனாலும் புதிய கட்டுரைகளுக்காக மனசு ஏங்கியது. இணையத்தில் நீங்கள் எழுதாதது பெரிய இழப்பு. ஏன் என்று யோசித்தேன். நீங்கள் எங்கேயோ இருக்கிறீர்கள். நான் இதுவரை ஒருவரிகூட உங்களுக்கு எழுதியதுமில்லை. ஆனால் உங்கள் இணையதளம் வழியாகத் தொடர்ந்து உங்களிடம் பேசிக்கொண்டிருக்கிறேன். அந்த உரையாடல் எனக்குத்தேவையாக இருக்கிறது. இரண்டு விஷயங்களுக்காக.

 

எனக்கெல்லாம் சூழலில் வெறும் உலகியல்விஷயங்கள்தான் எப்போதும். இலக்கியம் கலை தத்துவம் எதுக்கும் இடமில்லை. என்னைசுற்றி இருப்பவர்களுக்கு எந்த ஆர்வமும் இல்லை. நானும் இதுக்குள்தான் நாள்முழுக்க இருந்துகொண்டிருக்கவேண்டியிருக்கிறது. ஆனால் இந்த தளத்திலே காலையிலே வாசிக்கும் ஒரு கட்டுரை, வெண்முரசு என்னை ஒரு இலட்சிய உலகத்திலும் இருக்கவைக்கிறது. ஒதுக்கமான ஒரு மலையிலே சமணமுனிவர்களின் கல்லூரி போல ஒரு குகையிலே அறிவார்த விஷயங்களை மட்டும் ஆராய்ச்சி செய்தபடி வாழ்ந்துகொண்டிருப்பதாக நினைத்துக்கொள்வேன். அந்த ஆறுதல்தான் இந்தச்சின்ன வாழ்க்கைக்கு அர்த்தத்தை அளிக்கிறது.

 

ஆகவேதான் உங்கள் தளம் எனக்குத்தேவையாகிறது. அதிலே வரும் அரசியல் எதையும் நான் வாசிப்பதில்லை. எனக்கு இது ஒரு கல்விக்கூடம் மட்டும்தான். அந்த மானசீக உரையாடல் இல்லாமலானதுதான் சோர்வாக இருந்தது. இன்று மீண்டுவந்துவிட்டேன்

 

எஸ்

 

 

சார் வணக்கம்

 

நீங்களும் குடும்பத்தினரும் நலமென்றே நினைக்கிறேன். மார்ச் 6ஆம் தேதிக்கு பின்னர் இன்றுடன் 10 நாட்களாகி விட்டது  உங்கள் தளம் முடங்கி. பல வருடங்களாக  விடியும் பொழுதுகளெல்லாமே உங்கள் தளத்திலோ அன்றி வெண் முரசின் அன்றைய அத்தியாயத்திலோதான் துவஙகியது.  வெண்முரசு நாவலுக்கு இடையில் இடைவெளி இருந்ததெனினும் அப்போது உங்கள் தளத்தில் வாசிப்பேன் எனவே   காத்திருக்கும் காலம் வேகமாக ஓடிவிடும், ஆனால் இந்த முறை எந்த தொடர்பும் இல்லாததுபோல இருப்பதால்  பைத்தியம் பிடித்தது போல இருக்கிறது . எனக்கெல்லாம் உங்கள் தளம் வெறும் பொழுது போக்கும் தளமல்ல சார், வாழ்வினை நான் அறிந்துகொள்ள பேருதவி செய்த  எழுத்துக்கள் உங்களுடையது,உங்கள் எழுத்துக்களை வாசிப்பது மானசீகமாக  பெரிய  நம்பிக்கையையும் தைரியத்தையும் தந்துகொண்டிருக்கும் எனக்கு.

 

 

தினம் இப்போது தளத்திற்கு வந்து பார்த்து ஏமாற்றமடைகிறேன்

மளிகைக்கடைகளில் ‘’இன்று ரொக்கம் நாளை கடன்’’ என்றெழுதி இருப்பதுபோல எப்போது திறந்தாலும் சிறிய இடைவெளி என்பதை வாசிக்கையில் மனம்  சோர்ந்து போகின்றதுமிகுந்த சுயநலமாகத்தான் இதை உணருகிறேன். இம்மாபெரும் படைப்பில் இருக்கும் உங்களுக்கும் மாற்றமும் ஓய்வும் வேண்டுமென்பதை மனம் உணருகிறது     எனினும் வாசிக்காமல் இருப்பதும், தளம் இன்னும் இயங்கத்துவங்காமல் இருப்பதும் பெரும் வேதனையாக இருக்கிறது.

 

ஏதாவது ஒரு குறிப்பிட்ட தேதி சொல்லி அதுவரை இடைவெளி அப்படின்னு சொல்லி இருந்தாலும் அந்த நாளை எண்ணிக்கொண்டு காலத்தைக்கடத்தி இருப்பேன்

பழைய பதிவுகளை வாசிக்கிறேன் ஆனாலும் எல்லாம் எழுத்தெழுத்தாக மனப்பாடமாகியிருப்பதால் எப்போ மீண்டும் எழுதுவீங்கன்னு காத்துக்கொண்டிருகிறேன் என்னைபோல இன்னும் பலருடன்

Away from routine  வாழ்வில் பலமுறை   மிக எளிய தளத்தில் இயங்கும் எனக்கே  தேவையாயிருந்திருக்கிறது எனினும் உங்கள் எழுத்துக்களைபொருத்தவரை அவற்றிலிருந்து விலகுதல் சாத்தியமே இல்லாததால்       எல்லாரிடமும் எரிந்துவிழுகிறேன் காரணமின்றி.  வழக்கத்திற்கு மாறாக மாணவர்களையும் கடிந்துகொள்கிறேன்.

 

மிகபிரியமானவர்களைப் பிரிந்திருப்பது போலவும், பாதுகாப்பாக்க வைத்திருந்த அரியதொன்றை  தொலைத்துவிட்டது போலவும், ஸ்திரமாக ஒரு எடை நெஞ்சில் அழுத்திக்கொண்டே இருப்பது போலவும் ஒரே அவஸ்தையாக  இருக்கின்றது.

 

வாழ்வின் ஒரு இன்றியமையாத  பகுதியாகிவிட்ட உங்களின் எழுத்துக்களை மீண்டும் வாசிக்க காத்துக்கொண்டிருக்கிறேன்

 

 

அன்புடன்

லோகமாதேவி

 

 

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

 

வணக்கம்.

 

அப்பாடா! ஒரு வழியாக மீண்டும் உங்கள் தளத்திற்கு வந்துவிட்டீர்கள் !!.முதல் நாலைந்து நாட்களில் தங்கள் தளத்தில் உள்ள பழைய கட்டுரைகளை படித்து வந்தேன்.(இது எனக்கு வழக்கமானவொன்றுதான், வெண்முரசு நாவல்களுக்குள்ள இடைவெளியில் இப்படித்தான் படிப்பேன்)பிறகு என்னவோ தெரியவில்லை என்னிடமும் ஒரு வெறுமை சூழ்ந்துவிட்டது.கடந்தவார இறுதி நாட்களில் உங்கள் தளமும் முடங்கிப்போனதில் ஒருவிதமான

அமைதியின்மை என்னை அலைக்கழித்தது.இன்று உங்கள் கட்டுரையுடன் தளம் செயல்படத்தொடங்கியது எனக்கு மட்டில்லா மகிழ்ச்சியையளித்தது.

 

 

அன்புடன்,

 

அ .சேஷகிரி.

 

அன்புள்ள ஜெயமோகன் சாருக்கு

 

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். உங்கள் வலைத்தளம் திறக்க

முடியாமல் இருக்கிறது. புதிய பதிவுகள் இல்லை என்றாலும் பழைய

பதிவுகளைப் படித்து கொண்டிருக்கிறேன். அதற்கும் ஆபத்து வந்துவிட்டது.

எப்பொழுது சார் சரியாகும்? பயணங்களைப் பற்றி கனவிலும் நினைக்க

முடியாத, யாருடனும் படித்ததைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியாமல்

இருக்கும் என்னைப் போன்றவர்களுக்கு உங்கள் தளம் எப்படி ஒரு

இனிமையான அனுபவம் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஏதாகிலும்

செய்யுங்கள் சார்.

 

வாழ்த்துகளுடன்

டெய்ஸி

 

 

அன்புள்ள ஜெ,

 

‘ஒரு இடைவெளி’ படித்தேன். அந்த பதிவில் உள்ள “இலக்கற்ற பயணம்” என்ற வரிகள், என்னை  பேருவகை கொள்ளச் செய்கிறது. அதை, எல்லாம் வல்ல இயற்கையின் மேல் நம் ஆழ்மனம் கொண்டுள்ள நம்பிக்கையின் வெளிப்பாடாகவே பார்க்கமுடிகிறது.

 

நீங்கள் எங்கு சென்றாலும் அந்த இடம்  ஒரு மகரந்த காடாக மாறத்தான் போகிறது, இறுதியில் எங்களுக்கு தேன் கிடைக்கத்தான் போகிறது. எங்கோ  ஒரு ஆழமான கதை தவமிருந்து ஒரு கதாசிரியனை தேடியிருக்கிறது போலும். ஒரு கர்ம வீரன் இளைப்பாறுவது , வீரியம் விளைவதற்கு தான் என்று புரிந்து கொள்கிறேன்.

 

தங்களை நேரில் சந்தித்ததது என்னளவில் என் வாழ்வில் முக்கியமான நிகழ்வு  உங்கள் பயணம் முடிந்து, தேங்கிய அலுவல்களை எல்லாம் முடித்த பின், ஒரு நாள் உங்களை நாகர்கோவிலில் சந்திக்க விரும்புகிறேன்.  தங்களிடம் தெளிவு படுத்திக் கொள்ள  என்னில் சில கேள்விகள்  உள்ளன.

 

உங்கள் பயணம் இனிதே  ஆகுக, உங்களுக்கு தேவையான மௌன இடைவெளி கிடைப்பதற்கு வேண்டிக்கொள்கிறேன்.

 

அன்புடன்,

முனிஷ்

 

முந்தைய கட்டுரைசோ.தர்மன், காலச்சுவடு
அடுத்த கட்டுரைஇமையத் தனிமை – 2