வாசிப்பு

DX5I_zjVMAEcbkg

அன்பு வணக்கங்கள்.

தங்கள் கடிதம் கண்டு மிக மகிழ்ச்சி அடைந்தேன்.  அதிலும் நீங்கள் உங்கள் அலைபேசி எண்ணையே பகிர்ந்தது ஒரு இன்ப அதிர்ச்சி! என்னுடைய தொடர்பு பட்டியலில் உடனேயே பெருமையுடன் சேர்த்துக் கொண்டேன்! ஆனாலும் உங்களை நேரடியாகத் தொடர்பு கொண்டு பேச என் இலக்கியத் தகுதி குறித்த தாழ்வு மனப்பான்மை தடுத்தது (கூடவே தவறான நேரத்தில் கூப்பிட்டுத் தொந்தரவு செய்து விடுவோமோ என்ற பயமும்!). என்றேனும் ஒரு நாள் அந்த எண்ணை அழைக்கும் தைரியம் வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்த வாரம் மீண்டும் புதிய வாசகர் சந்திப்பு ஏற்பாடு செய்திருப்பதைப் பற்றிய அறிவிப்பை (தொடர் பயணம் காரணமாக) இரண்டு நாள் தாமதமாகக் கண்டேன். ஒரு சேர மகிழ்ச்சியும் வருத்தமும் ஏற்பட்டது. என்னைப் போன்ற வாசகர்களுக்கு மீண்டும் உங்களுடன் பழக, பயில, ஒரு வாய்ப்பு என்பதில் மகிழ்ச்சி. இம்முறை இந்தியாவிலேயே இருந்தும், என் பிற பயணத் திட்டங்களால், அதில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் (எப்படி இருந்தாலும், என் வயது (38) காரணமாக அனுமதி கிடைத்திருக்குமா என்பது ஐயமே). எனினும், வேறு ஒரு வாய்ப்பு அமையும் என்று என்னை ஆற்றுப் படுத்திக் கொள்கிறேன்.

இனி, சில வரிகள் என் இலக்கியப் பயிற்சி பற்றி.. ஒரு மாணவன், ஆசிரியரிடம் தன் பயிற்சியின் தரம் பற்றி அறியும் நோக்கில் நான் சமீபத்தில் படித்த, படித்துக் கொண்டிருக்கும், படிக்க உத்தேசிக்கும், சில நூல்களைப் பற்றி, சில கருத்துக்களைச் சொல்ல விரும்புகிறேன். ஏதேனும் பிழை இருந்தால், ஒரு ஆரம்ப கட்ட வாசகன் என்ற முறையில் பொறுத்தருள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன் தொடர்கிறேன்.

சமீபத்தில் படித்தவை:

மங்கலத்து தேவதைகள் (வா.மு.கோமு): இந்த ஆசிரியரின் “எட்றா வண்டிய” என்றொரு நூல் இதற்கு முன் வாசித்துள்ளேன். மிக எளிமையான நாவல் எனினும், அதன் வட்டார வழக்குக்காகவும் (அதுவும் கொங்குப் பிரதேசத்தைச் சேர்ந்த எனக்குப் பரிச்சியமுள்ள வழக்கு), அதன் வெளிப்படையான கதை மாந்தர்களுக்காகவும் ரசித்தேன். ஆனால், இந்த நாவல் மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்தது. ஒரு மூன்றாம் தர மஞ்சள் பத்திரிக்கை மாத நாவலை வாசித்த அனுபவம் தான் கிடைத்தது. ஆசிரியர் ஒரு வேளை தனது நிறைவேறாத காம விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இதைப் பயன்படுத்திக் கொண்டாரா, அல்லது, பெருமாள் முருகனின் “மாதொரு பாகனை”ப் போல் ஒரு அதிர்ச்சி அலையை உருவாக்கி விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைத்தாரா என்று தெரியவில்லை. இதற்காக எனக்கு   பால் எழுத்து பிடிப்பதில்லை என்று அர்த்தமில்லை. சரியான இடத்தில் சரியான வர்ணனையுடன் வரும் காமச் சித்தரிப்புகள் எனக்கு மிகவும் பிடிக்கும் (உங்கள் இரவு நாவலில் வரும் படகுக் காட்சியைப் போல). ஆனால் கிட்டத்தட்ட நாவலில் உள்ள எல்லாப் பெண்களுமே வாய்ப்புக் கிடைத்தால் காமத்துக்காக எந்த எல்லையும் மீறுவார்கள் என்ற சித்தரிப்பு ஏனோ எனக்கு செரிக்கவில்லை. ஒரு வேளை என் ஆழ்மனதில் இருக்கும் MCP என்னையே அறியாமல் என் மனைவியை அந்த நாவலில் வரும் ஒரு பாத்திரமாக கற்பனை செய்து கொண்டு மனம் குமைகிறானா என்றும் என்னையே கேட்டுக் கொள்கிறேன்! (இல்லை என்று தான் தோன்றுகிறது!)

இரா.முருகன் குறுநாவல்கள்: இது எனக்கு செறிக்க சற்று சிரமமாக இருந்தது. சற்று சிரமப்பட்டு முழுவதும் படித்து விட்டேன் எனினும், இந்தத் தொகுப்பில் உள்ள எந்த கதையுமே எனக்குள் எந்த பாதிப்பையுமே ஏற்படுத்தவில்லை என்று தான் படுகிறது. ஆனால் குற்றம் நாவலில் அல்ல, எனது இலக்கிய வாசிப்பின் போதாதமையே என்று இப்போதைக்கு ஊகித்துக் கொள்கிறேன். சில வருடங்கள் கழித்து மீண்டும் ஒரு முறை படித்தால் சில புதிய சன்னல்கள் எனக்குத் திறக்கலாம். ஆனால், இப்போதைக்கு, எழுத்தாளர் ஜெயகாந்தன் விஷ்ணுபுரத்தைப் பற்றிச் சொன்னது (அந்த நாவல் இன்னும் எனக்குத் திறக்கப்படவில்லை) என்னைப் பொறுத்த வரை இதற்கும் பொருந்தும் என்று நினைக்கிறேன்.

வாழ்விலே ஒரு முறை: உங்களுடைய எல்லா கட்டுரைகளையும் படித்து விட்டதாக எண்ணிக் கொண்டிருந்த எனக்கு, இந்த நூலில் இருந்த மிகப் பெரும்பான்மையான கட்டுரைகள் புதியதாக இருந்தது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ஆனாலும், சிற்றிதழ் வாசகர்களுக்காக எழுதியதாலோ என்னவோ, சில கட்டுரைகள் சற்றுப் புரிந்து கொள்ள சிரமமாக `இருந்தது (உ.ம். கன்யாகுமரி உங்கள் அன்னையை நினைவுக்கு கொண்டு வந்தது பற்றிய கட்டுரை, நெல்லூரில் போலிசால் நக்சலைட்டைப் போல் நடத்தப்படும் கற்பனை!).. சாதாரணமாக உங்கள் கட்டுரைகளை வாசிக்கும் போது வராத “என்ன தான் சொல்ல வராரு இவரு” என்ற எண்ணம் சில இடங்களில் ஏற்பட்டதைத் தவிர்க்க முடியவில்லை! எனினும், தாய் மொழியில் வேகமாக வாசிக்க முடிவது போல, எனக்கு மிகப் பரிச்சயமான உங்கள் நடை மிக வேகமாக இந்த நூலை படித்து முடிக்க உதவியது.

சிறிது வெளிச்சம் (எஸ்.ராமகிருஷ்ணன்): தொடர்ச்சியாக சற்று அடர்த்தியான நூல்களையே படித்துக் கொண்டிருந்ததால் ஒரு மாற்றத்துக்காக இந்த நூலைத் தேர்ந்தெடுத்தேன். ஆனால் நான் எதிர்பார்த்தது போலவே எளிமையான கட்டுரைகளாக இருந்த போதிலும், ஒரு சில பக்கங்களுக்கு மேல் ஒரு அமர்வில் படிக்க முடியாதது ஒரு நகை முரணாக எனக்குப் பட்டது. விளைவாக, மிக விரைவில் படித்து முடிப்பேன் என்று நினைத்த புத்தகம் சற்று நீண்ட இடைவெளியில் தான் படித்து முடிக்க முடிந்தது. ஆனாலும், இதன் மிகப் பெரும்பான்மையான கட்டுரைகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தன. அவரே முன்னுரையில் சொல்வது போல், வாழ்க்கை என்னும் இந்த இடைவிடாத ஓட்டத்தில், சற்று நின்று நாம் கவனிக்க மறக்கும் சில அற்புதங்களை, அவலங்களை, நம்மை நாமே கேட்டுக் கொள்ள வேண்டிய சில கேள்விகளை, சில சிறுகதைகள், நாவல்கள்,நூல்கள், குறும்/திரைப்படங்கள் மூலமாக அவர் விளக்கியிருந்தது ஆனந்த விகடனுக்கே உரிய முறையில் வெகு சுவாரசியமாக ஆனால் ரத்தினச் சுருக்கமாக இருந்ததை வெகுவாக ரசித்தேன். இந்தியா வந்த போது இந்நூலின் இரு காப்பிகள் என் அண்ணனுக்கும் அக்காவுக்கும் அன்பளிப்பாக அளித்தேன் (ஆனால், அவர்கள் அதை வாசிக்க அவர்களுடைய வாழ்க்கை என்னும் ஓட்டப் பந்தயம் அனுமதிக்குமா என்பது சந்தேகமே!) எஸ்ரா இந்த கட்டுரைகளில் மேற்கோள் காட்டியுள்ள ஒரு சில நூல்கள்/திரைப்படங்களையேனும் படிக்க/பார்க்க வேண்டும் என்றொரு எண்ணம் உள்ளது. அதன் ஒரு தொடக்கமாக “Tuesdays with Morrie” என்னும் நூலை வாங்கிப் படிக்கத் துவங்கியுள்ளேன்.

ஐந்தவித்தான் (ரமேஷ் பிரேதன்): இந்த நூலின் ஆசிரியர்  விமலாதித்த மாமல்லன் மற்றும் உங்கள்   நன்கொடைகோரிக்கை வழியாகத் தான் எனக்குப் பரிச்சயமானார். ஐந்தவித்தான் என்ற பெயரால் கவரப்பட்டு இதை கிண்டிலில் வாங்கினேன் (இப்போது என் பெரும்பாலான வாசிப்பு கிண்டிலில் தான் நடக்கிறது, அச்சு இயந்திரத்தின் கண்டு பிடிப்புக்குப் பின் வாசிப்பு இயக்கத்தில் ஏற்பட்ட மிகப் பெரிய மைல்கல் இந்தக் கிண்டிலே என்பது என் கணிப்பு). இந்த நாவலும் எனக்கு முழுதுமாகத் திறந்து கொடுக்கவில்லை. முதல் பாகம் நன்றாகப் புரிந்த  போதிலும், இரண்டாம் பாகம் வெகு அடர்த்தியாகவும், சற்று சவ்வு போல நீண்டது போலவும் தோன்றியது. என் இலக்கிய வாசிப்பு முறையாகத் தொடங்குவதற்கு முன்பே, ஒரு அலுவலக நண்பரின் பரிந்துரையின் பேரில் படித்த “Zen and the art of motrocycle maintenance” என்ற புத்தகத்தை மீண்டும் நினைவுக்குக் கொண்டு வந்தது. அதில் ஆசிரியர் ஒரு அத்தியாயத்தில் அவர், அவரது  மகன் மற்றும் நண்பருடன் மேற்கொள்ளும் மோட்டார் சைக்கிள் தொடர் பயணத்தைப் பற்றியும், அடுத்த அத்தியாயத்தில் அவரது ஆழ் மன ஓட்டத்தில் தோன்றும் என்னைப் போன்றோருக்கு செரிக்க மிக சிரமமாக இருந்த தத்துவ விசாராணையையும் மாறி மாறி எழுதி இருப்பார். அந்த வாசிப்பில், பயணம் பற்ற அத்தியாயத்தை மட்டும் மிகுந்த விருப்பத்துடனும், தத்துவ விசாரணை (விவரணை?) பற்றிய கட்டுரையை சும்மா பேருக்காக மேம்போக்காகவும் படித்தேன். இந்த நாவலும் கிட்டத்தட்ட அதே நிலை தான். எனக்குப் புரிந்த வரை ஆசிரியர் கதை நாயகரின் மனதுக்குள் சென்று அவரது மனம் சமநிலையில் இருந்து சிறிது சிறிதாகப் பிறழ்வதை அவதானிப்பதாக எனக்கு பட்டது. ஆனால் அதன் இலக்கிய மதிப்பு என்ன என்பது உண்மையில் எனக்குப் புரியவில்லை.

Blood at the Root: A Racial Cleansing in America: இந்நூல் நான் இப்போது வசிக்கும் forsyth countyயில்  (ஜார்ஜியா மாகாணம்) 1912 முதல் கிட்டத்தட்ட 75 வருடம் கருப்பர்களையே தங்கவோ உள்ளே வரவோ கூட அனுமதிக்காமல் தங்கள் வெள்ளை இனவெறி உணர்ச்சிகளை சிறிது கூட மறைக்காமல் மார்டின் லூதர் கிங் வாழ்ந்த அட்லாண்டாவுக்கு மிக அருகிலேயே ஒரு “இனவெறி” சுயாட்சியை எப்படி இத்தனை ஆண்டுகள் வெற்றிகரமாக நடத்தினார்கள் என்பதைப் பற்றியது. இதை எழுதியதும் ஒரு வெள்ளையர் என்பது இன்னும் சுவாரசியம் சேர்க்கும் விஷயம். இந்த நூலை எழுதுவதற்காக ஆசிரியர் எடுத்துக் கொண்டுள்ள முயற்சிகள், அவரது பரந்துபட்ட ஆராய்ச்சி, இதில் சம்பந்தப் பட்டவரகள் அல்லது அவர்களது வாரிசுகளைத் தேடி கண்டுபிடித்து தரவுகள் மற்றும் பேட்டிகள் சேகரித்த விதம் ஆகிய அனைத்துமே நம் சொந்த தமிழ்  எழுத்துச் சூழலைக் குறித்து ஆற்றாமை கொள்ள வைக்கும் விஷயங்கள்! அதற்கும் மேல், இது தங்கள் சொந்தக் குடும்பத்தை சற்று மங்கலான வெளிச்சத்தில் காட்டும் நூல் எனத் தெரிந்தும், இந்த நூலாசிரியருக்கு பேட்டி கொடுத்தும், தங்கள் சேகரிப்புகளிலிருந்து அரிய தரவுகள், புகைப்படங்கள் ஆகியவற்றை பகிர்ந்து கொடுத்தும் உதவி செய்த அமெரிக்கர்களின் பெருந்தன்மை (அவர்கள் தான் டிரம்ப் போன்ற ஒரு பிரிவினை வாதியை ஆட்சிக்கு கொண்டு வந்தார்கள் என்ற போதிலும்), நம் ஊர் “மாதொருபாகன்” எதிர்ப்பு போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் தன்மானச் சிங்கங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் எரிச்சலாகத் தான் இருக்கிறது!

தற்போது படித்துக் கொண்டிருப்பவை/படிக்கத் திட்டமிட்டிருப்பவை:

The story of my experiments with truth – M K Gandhi: முதல் முதலாக காந்தியடிகளின் எழுத்தை வாசிக்கும் முயற்சி. தற்போது அவரது தென்னாப்பிரிக்க வாழ்வைப் பற்றிய இரண்டாம் பாகத்தில் இருக்கிறேன். தனி அத்தியாயங்கள் 5 நிமிடத்தில் எளிதில் படித்து விடக் கூடிய அளவில் இருப்பினும், இந்த நூலின் எடை (கிண்டிலில் எந்தப் பெரிய நூலும் ஒரே எடை தான் என்ற போதிலும்!) சற்று அயர்ச்சியைத் தருக்கிறது. அத்துடன், இதன் கடினமான 19-ம் நூற்றாண்டு ஆங்கில நடையும் படிக்கும் வேகத்தில் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது. இருந்தாலும், நாம் தேசத் தந்தை என்று அழைக்கும் நம் தாத்தாவைப் புரிந்து கொள்ள இதை விடச் சிறந்த நூல் இல்லையாதலால் எப்பாடு பட்டேனும் இதை முடித்து விட வேண்டும் என்ற முடிவோடு இருக்கிறேன்.

இத்துடன் மேலும் படிக்க திட்டமிருக்கும் நூல்கள்: உங்களுடைய “இலக்கிய முன்னோடிகள்”, “நாவல் – கோட்பாடு”, லா.சா.ரா.வின் “அபிதா”, சுசீலா அவர்களின் “தஸ்தயெவ்ஸ்கி கதைகள்”,  நாஞ்சில் நாடனின் “கொங்குதேர் வாழ்க்கை”, ராமசந்திர குகாவின் “இந்திய வரலாறு – காந்திக்குப் பிறகு” – முதல் பாகம், மாயவலை (பா.ராகவன்), ஆதலினால் – எஸ்.ராமகிருஷ்ணன்.

உங்களுடைய “விஷ்ணுபுரம்”, “கொற்றவை” நாவல்கள் வெகு நாட்களாக என்னிடம் இருப்பினும், அதை படிப்பதற்கான பயிற்சி இன்னும் முற்றுப் பெறவில்லை என்று தோன்றுவதால், தற்போது அதை தள்ளிப் போட்டுள்ளேன். இம்முறை இன்னும் சில தலையணை புத்தகங்கள் (குற்றமும் தண்டனையும், போரும் அமைதியும், அ.முத்துலிங்கம் சிறுகதைகள் (பகுதி 1&2), அ.முத்துலிங்கம் கட்டுரைகள்) வாங்கியிருப்பினும், தற்போதைய லௌகீக நிர்பந்தங்கள் காரணமாக அவற்றுக்கு உடனே நேரம் ஒதுக்க முடியுமா என்பது சந்தேகமே (நீங்கள் அதை உங்கள் வாழ்க்கையில் செய்து காட்டியுள்ளீர்கள் என்ற போதிலும்).

மிக நீண்ட கடிதம், இருந்தாலும் என் ஆசிரியரிடம் இருக்கும் உரிமையில் உங்கள் நேரத்தில் சற்றை எடுத்துள்ளேன்.

உங்கள் அன்புக்கு நன்றி,

சிஜோ

***

அன்புள்ள சிஜோ மாத்யூ

தொடர்ந்து வாசிக்கிறீர்கள் என்பதும் வாசிப்பதைப்பற்றி மதிப்பீட்டுக் குறிப்புகள் எழுதுகிறீர்கள் என்பதும் மகிழ்ச்சி அளிக்கிறது. பொதுவாக இவ்வாறு நாம் நமக்கே என எழுதிக்கொள்ளும் குறிப்புகள், நாம் அணுக்கமானவர்களிடம் பேசும் இலக்கிய அரட்டைகள்தான் நம்மை இலக்கியத்தில் ஆழ நிறுத்துகின்றன. நம்முடைய கருத்துக்கள் வழியாகவே நாம் இலக்கியப்படைப்புக்களை நெடுங்காலம் நினைத்திருப்போம்

ஜெ

முந்தைய கட்டுரைஇடைவெளி -கடிதங்கள்
அடுத்த கட்டுரைநல்லிடையன் நகர் -1