இலக்கிய டயட் – மாதவன் இளங்கோ

de

பேலியோ -ஒரு கடிதம்

பேலியோ -நியாண்டர்செல்வன்

இலக்கிய டயட் -பரிந்துரை

அன்பு ஜெயமோகன்,
பிச்சைக்காரன் அவர்களின் கடிதமும் அதற்கு உங்கள் பதிலையும் கண்டேன். உணவுமுறையைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது என்னுடைய மனைவியும் இதையேதான் சொல்லிக்கொண்டிருந்தாள். குறிப்பிட்ட உணவுமுறையில் உள்ள நல்ல அம்சங்களைக் கடைப்பிடிப்பதைத் தவிர்த்துவிட்டு, எது அவர்கள் வேண்டுவதோ அவற்றை மட்டும் பற்றிக்கொள்கிறார்கள் என்று. இலக்கிய டயட் கடிதத்துக்கான பதிலில் இணையதள வாசகர்களைச் சாடும் முகமாக என்னைப் போன்ற எளிய குறுங்கட்டுரையாளர்களைச் சாடியிருக்க வேண்டாம். ;-) உங்கள் முழுக்கட்டுரையையும் வாசித்து, அசைபோட்டு, அதன் சாரத்தை உள்வாங்கி, சுருங்கச் சொல்லி உங்கள் கட்டுரையின் இணைப்போடு பகிர்கிறேன். கடந்த வாரம்கூட அதைச் செய்தேன். அதற்கு எனக்கு வந்த எதிர்வினைகளில் தகவலின் சாரம் அவர்களுக்குள்ளும் ஓரளவுக்கு இறங்கியிருப்பதாகவே உணர்கிறேன். என் போன்ற இலக்கிய டயட் வல்லுநர்களை நீங்கள் மறைமுகமாகத் தாக்குவதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :-) Jokes aside, குறுங்கட்டுரைகள்கூட வாசிக்கப்படுவதில்லை என்பதே நிதர்சனம்.
India is an extroverts-dominated country. நமக்குத் பேச்சுத்தான் எல்லாமே. அது போதும். ‘கற்றலின் கேட்டல் இனிது’ என்பதுபோல பிறர் சொல்வதைக் கேட்டோ, கவனித்தோ அறிவைப் பெறுவதும் எனக்குப் பிடித்ததே. ஆனால், இன்றைக்கு பெரும்பாலான நேரம் பேச்சு சினிமாவையோ, வீடு, மனை விற்றல்-வாங்கலையோ, அரசியலையோதான் சுற்றி வருகிறது. இலக்கியமும், வரலாறும், அறிவியலும், தத்துவங்களுமா பேசுகிறோம்? ஒரு காலகட்டத்தில் சினிமாவில் போதிக்கப்படுவது மட்டுமே அறிவாக இருந்த நிலைமை சற்றே மாறி, பின்பு முகநூலிலும், வாட்சேப்பிலும் பகிர்ந்து கொள்ளப்படும் பத்திகளில் சுருங்கி, தற்போது மீம்ஸ்கள் மட்டுமே நம் சமூகத்தின் அறிவை வளர்ப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. (meme=’சாயலி’ என்று அழைக்கலாமா?) இவையனைத்துமே ‘நுனிப்புல் மேய்வது’ போலத்தான் என்றாலும், நுண்ணறிவை வளர்த்துக்கொள்ள இவை சிறிதும் உதவாது என்றாலும், மேயப்படும் அந்த நுனிப்புல்லிலாவது குறைந்தபட்ச ஊட்டச்சத்துக்களைச் சேர்ப்பதன் அவசியத்தையும் உணர்கிறேன். நேற்றுக்கூட ஒரு சிறுகதையைப் பகிர்ந்து, “இது சிறுகதை மட்டுமல்ல, ‘சிறிய’ கதையும்கூட. வாசியுங்கள் நண்பர்களே!” என்று மன்றாடினேன். தனிப்பட்ட முறையில், ஒரு சில தேர்ந்தெடுத்த தளங்களுக்கு மட்டும் அன்றாடம் விஜயம் செய்கிறேன். ஆனால், ஆயிரம்தான் விஷயங்கள் இணையதளத்தில் பொதிந்துக் கிடந்தாலும், புத்தகத்தைக் கையில் எடுத்துக்கொண்டு, சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிப்பது போல் வராது. எனவேதான் என்னுடைய வெண்முரசு வாசிப்புகூட பிரயாகையோடு நின்றுவிட்டிருக்கிறது. ஆனால், அதற்கு இதுமட்டும் காரணமில்லை. தொடர்ச்சியாக அதை வாசிப்பதென்பது புலி வாலைப் பிடித்த கதையாக இருக்கிறது. நான் வேகமாக வாசிப்பவன் இல்லை. எனக்குள் சாரம் இறங்க நேரம் ஆகும். பத்து பக்கங்கள் வாசித்துவிட்டு பல மணிநேர சிந்தனையில் ஆழ்ந்துவிடுபவன். உங்கள் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
நியாண்டர் செல்வன் அவர்களின் கடிதத்தையும் கண்டேன். உங்களுடைய தளத்தில் கடிதங்கள் பிரசுரிக்கப்படுவதில் இருக்கும் அனுகூலங்களில் ஒன்று இது. துறை வல்லுநர்களிடமே உடனடியாகத் தொடர்பு கிடைத்துவிடுகிறது. ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய டின்னிட்டஸ் பிரச்சினையைப் பற்றி உங்களுக்குக் கடிதம் எழுதியபோதே இதை உணர்ந்திருக்கிறேன். யோகம், ஆயுர்வேதம், மருத்துவம் என்று பல்வேறு துறை வல்லுநர்களிடமிருந்து கடிதங்கள் வந்தது. அதே பிரச்சினையில் உழன்று வரும் பல வாசகர்களிடமிருந்தும் எனக்குக் கடிதம் வந்தது. அவர்களில் பலருடன் இன்றளவும் தொடர்பிலிருக்கிறேன். அவ்வப்போது நலம் விசாரித்தும் வருகிறேன். இந்தியாவில் வசித்து வரும் ருவாண்டா தேசத்துப் பெண்ணொருத்தி என்னை அண்ணனாகவே பார்க்கிறாள். இது டின்னிட்டஸ் வழி உறவு. உங்கள் வாசகி ஒருவர் என் கடிதத்தைப் பார்த்துவிட்டு அறிமுகப்படுத்தி வைத்தார். இன்றைக்குக்கூட அவள் ஆப்பிரிக்காவுக்குத் திரும்பச் செல்வது பற்றி செய்தி அனுப்பிவிட்டு, என்னுடைய தொலைபேசி அழைப்புக்காக காத்திருப்பதாகச் சொன்னாள். நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். இன்னும் பல நண்பர்கள். ஒருகட்டத்தில் எனக்கு வந்தக் கடிதங்களுக்கு பதில் எழுதிச் சமாளிக்க முடியவில்லை. உங்கள் செயல்களை கவனித்து வருவதை அன்றாடச் சடங்காகக் கொண்டவன் என்கிற  முறையில், நீங்கள் செய்து வரும் அத்தனையும் அறிவேன். வெண்முரசெனும் எனும் மாமலையைத் தோள்களில் சுமந்துகொண்டு, இடையறாத இலக்கியச் செயல்பாடுகள், திரைப்படத்துறை என்று மும்முரமாக இயங்கிக்கொண்டு இருந்தாலும், அத்தனைக்கும் இடையே என் போன்ற எளியவர்களுக்கும் நேரம் ஒதுக்கி, சிரத்தையோடு பதிலளித்துக்கொண்டும், தொடர்ந்து உரையாடல்களையும் விவாதங்களையும் நிகழ்த்திக்கொண்டும் இருப்பது பாராட்டுக்குரியது. இதையெல்லாம் செய்வதற்கு இன்றைக்கு யாருக்கு நேரமிருக்கிறது? இருந்தாலும் எத்தனை பேர் செய்கிறார்கள்?
உண்மையில் நியாண்டர் செல்வன் அவர்களின் கடிதம் எனக்கு மகிழ்ச்சியளித்தது. வல்லமை கூகுல் குழுமத்தில் இருந்தபோது அவரை செல்வனாக அறிவேன். அவருக்குக் கடிதம் எழுதுவதற்காக மின்னஞ்சலை இணையத்தில் தேடினேன். கிடைக்கவில்லை.  ஒருவேளை என்னுடைய அஞ்சல்பெட்டியிலேயே எனக்கு வந்த கடிதங்களில் எங்காவது இருக்குமா என்று தேடியபோதுதான் இதை அறிந்தேன். அவர் குறிப்பிட்டிருக்கும் பயனற்ற உணவுகளைத் தவிர்த்து விடுவது நலம். மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணம் அவர் திறந்த மனதுடன் எல்லா உணவுமுறைகளும் வேண்டாத உணவுகளைத் தவிர்க்கச் சொல்வதால், ஏதேனும் ஒன்றைப் பின்பற்றுவது நல்லது என்று கூறியது. டின்னிட்டஸ் பிரச்சினைக்குப் பிறகே நான் சீரான உணவுமுறைக்கு முக்கியத்துவம் கொடுத்து எங்களுக்கான உணவுமுறையை வடிவமைத்துக்கொண்டோம். சைவ பேலியோவின் பல அம்சங்கள் அதில் இருக்கிறது. ஆனால், சீரான வாழ்க்கைமுறையும் அதிமுக்கியமானதே.
‘Agrarians are the first vegetarians’ என்பதை அவர் தவறாகப் புரிந்துகொண்டிருக்கக்கூடும். சைவம் என்றால் பண்பாடு சார்ந்த, மதம் சார்ந்த, அதுவும் ‘சுத்த சைவம்’ என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. ஆசியாவிலோ அல்லது மத்திய ஆசியப் பகுதியிலோ ஏற்பட்ட சூழல் மாறுபாடுகளின் காரணமாக கி.மு 25000 மற்றும் கி.மு 15000 ஆண்டுகளுக்கு இடையே ‘ஏ’  இரத்தவகை  தோன்றியிருக்கலாம் என்று கூறுகிறார் டி’ஆடாமோ. அவர் குறிப்பிட்டுள்ள ஆண்டுகளில் எனக்கும் சந்தேகம் இருக்கிறது. பத்தாயிரத்திலிருந்து பதினைந்தாயிரம் என்பதே சரியாக இருக்கும். வேட்டையாடித் திரிந்துகொண்டிருந்தவர்கள் ஒரு நிலையான இடத்தில் குடியேறி, கால்நடைகளை வளர்த்து, தாவரங்களைப் பயிரிட்டு, விளைந்ததை உண்டு வாழ்ந்து நிரந்தர வாழ்க்கைக் கட்டமைப்புகளை ஏற்படுத்திக்கொண்டார்கள். ‘பெரும்பாலும்’ தங்கள் நிலத்தில் விளைந்ததை உண்டு வாழ்ந்தவர்கள் என்றால் அவர்களை முழுச் சைவர்கள் என்று பொருள்கொள்ளக்கூடாது. விவசாயமே அவர்களின் கலாச்சார அம்சமே அன்றி  அகிம்சையல்ல. இன்றைய விவசாயிகளோடும் அவர்களை ஓரளவுக்கு ஒப்பிட்டுப் பார்க்கலாம்.
அவர்களுடைய வாழ்க்கை முறையில், குறிப்பாக உணவு முறையில் ஏற்பட்ட முழுமையான மாற்றத்தின் காரணமாக செரிமான அமைப்பிலும், நோய் எதிர்ப்பு அமைப்பிலும் ஏற்பட்ட திடீர்மாற்றத்தின் விளைவாகப் பிறந்ததுதான் இரத்தவகை ‘ஏ’; இதன் மூலம் தானியங்களையும் இன்னபிற உணவுகளையும் உட்கிரகிக்கும் தன்மையை இந்த உடல் பெற்றிருக்கிறது என்று நிறுவுகிறார் டி’ஆடாமோ. எனவேதான் அவர்களுக்கு வேறுவகை உணவுமுறையைப் ( நியோலித்திக்?) பரிந்துரைக்கிறார். இரத்தவகை ‘ஓ’ வகையினருக்கு அவர் பரிந்துரைக்கும் உணவுமுறை கிட்டத்தட்ட ‘பேலியோ’ உணவுமுறையை ஒத்ததாக இருக்கிறது. ஒவ்வொரு வகையான உணவிலும், எவற்றை எடுத்துக்கொள்ளலாம், எவற்றைத் தவிர்க்கலாம் என்று பட்டியலிட்டிருக்கிறார்.
இரத்தவகை உணவுமுறை பிழையானதாகவேகூட இருக்கலாம். எனக்கும் இது புதியது. மேலும், என்னுடைய முந்தைய கடிதத்தில் கூறியதுபோல நான் இந்தத் துறையில் வல்லுநர் இல்லை. எனக்கிருப்பதெல்லாம் கேள்விகள் மட்டுமே. மற்றெனைய உணவுமுறைகளைப் போலவே இதையும் மெய்ப்பொருள் காணவிழையும் பொருட்டு சந்தேகக் கண்கொண்டே ஆராய்கிறேன். ஊட்டச்சத்து நூல்களை வாசித்து விட்டு,  இங்கே நண்பர்கள் சிலருடன் விவாதித்து, FIT FOOD, SKIN FOOD, HEART FOOD, LIVER FOOD என்று பல்வேறு பட்டியல்களைப் போட்டு மற்றவர்களிடம் பகிர்ந்து வந்தபோது, என்னுடைய நண்பர் ஆலின் “இந்தப் புத்தகத்தைப் படித்து விட்டு எல்லோருக்கும் பகிரலாமா வேண்டாமா என்று முடிவு எடுத்துக்கொள்” என்று அறிவுறுத்தினார். பரிந்துரை செய்தவருக்கு 52 வயது. அவர் என்னருகே நின்றால் நானும் அவரும் ஒத்த வயதுடையவர்களாகத் தெரிவோம். ஒரு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, ஆனால் தினமும் சைக்கிளில்தான் அலுவலகத்துக்குச் செல்கிறார்.
ஒவ்வொரு வகையினரும் என்ன மாதிரியான உடற்பயிற்சிகள் செய்யலாம் என்று இந்தப் புத்தகம் பரிந்துரைப்பது அனுபவ ரீதியாக எனக்கு சரியென்று பட்டது. என்னுடைய தந்தையார் யோகா பயிற்சியாளர் என்பதால் சிறு வயதிலிருந்தே பிரம்ம முகூர்த்தத்தில் விழித்து யோகா செய்யும் வழக்கம் எங்களுக்கு இருந்தது. இன்றளவும்கூட மூச்சுப் பயிற்சியையும், ஒரு சில யோகப் பயிற்சிகளையும் செய்வதுண்டு. பெல்ஜியத்துக்கு வந்த பிறகு டாய்ச்சி வகுப்புகளுக்குக்கூட சென்றிருக்கிறேன். ஆனால், எனக்கு என்னவோ ஓடுவதிலும், நடப்பதிலும், உடற்பயிற்சிக் கூடத்தில் தீவிர பயிற்சி செய்வதிலும், யோகாவை விட களரிப் பயட்டு போன்ற தீவிர பயிற்சிகளில்தான் உற்சாகம் அதிகமாகக் கிடைப்பதை உணர்ந்திருக்கிறேன். அது ஏன் என்று எனக்குத் தெரியாது. அதற்கு விடையளிக்கும் விதமாக, டி’ஆடாமோ ‘ஓ’ வகையினருக்கு உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், தற்காப்புக் கலை, ஓட்டம், போன்ற தீவிர பயிற்சிகளைப் பரிந்துரைக்கிறார். இதற்கு நேர்மாறாக என் மனைவியோ பலமுறை உடற்பயிற்சிக் கூடத்தில் உறுப்பினராகி, பின்பு தொடர்ந்து செல்ல முடியாமல் நின்றுவிட்டிருக்கிறாள். அவளுக்கு ஓடுவது, தீவிர உடற்பயிற்சிகள் மேற்கொள்வதைவிட, மெதுவாகச் செய்யும் பயிற்சிகளே தனக்கு ஏதுவாக உணர்கிறாள். டி’ஆடாமோ, ‘ஏ’ வகையினருக்கு யோகா, டாய்ச்சி போன்ற உடலை, மனதை அமைதிப்படுத்தும், மையப்படுத்தும் பயிற்சிகளே உகந்தது என்கிறார். கடைக்குட்டிகளான, ‘பி’ மற்றும் ‘ஏபி’ வகையினருக்கு நீந்துதல், சைக்கிள் ஓட்டுதல், விளையாடுதல் போன்றவற்றுடன் யோகப்  பயிற்சிகயையும் பரிந்துரைக்கிறார்.
அறிவியல் முழுமையாக அங்கீகரிக்காவிட்டாலும் உடற்பயிற்சிகள் பற்றி அவர் கூறியிருப்பது மட்டுமாவது சொந்த அனுபவத்தில் எனக்கு இது சரி என்று படுகிறது. இதை ஒரு பைபிளாக எடுத்துக்கொள்ளாமல், வழிகாட்டுதலாக வேண்டுமானால்வைத்துக் கொள்ளலாம். யாரையும் கேட்கத் தேவையில்லை. நம் உடலோடு பேசிக்கொண்டாலே போதும், அது ஆயிரம் செய்திகள் சொல்லும். எது சரி எது தவறு என்பதை அறிவுறுத்தும். நமக்கு அந்த விழிப்புணர்வு இல்லை. அவ்வளவே. அது ஆதிமனிதர்களுக்கு இருந்தது. எந்த உணவுமுறையும் பைபிள் அல்ல. ‘கீட்டோ’, ‘பேலியோ’, ‘தாவர உணவுமுறை’ என்று எத்தனையோ வகையான உணவுமுறைகள். நாளைக்கு இந்தப் புத்தகத்தை வாசித்துவிட்டு வேறொருவர் ‘நியோலித்திக்’ உணவுமுறையைக் கொண்டுவரலாம். நான் பின்தொடர்ந்து வரும் மருத்துவர் எரிக் அண்மையில் தன் தரப்புக்கு, உடல் அமைப்புக்கு ஏற்ற உணவுமுறையை முன்வைக்கிறார். புத்தகமும் வெளிவந்துவிட்டது. அவர் கீட்டோ உணவுமுறைச்  சார்பாளர். இருந்தாலும் உடலமைப்பு சார்ந்து தனிப்பட்ட உணவு திட்டத்தின் அவசியத்தைப் பேசுகிறார். அவரைப் போன்ற வல்லுநர்கள் அனைவருமே அமைதியாகப் பேசுபவர்களே. ஆனால் பின்பற்றுபவர்களிடம்தான் சற்று கவனமாக இருக்கவேண்டியிருக்கிறது. அலுவலகத்திலேயே என்னைச் சுற்றி அத்தனை உணவுமுறைகளைப் பின்பற்றி வருபவர்களும் இருக்கிறார்கள். மோடி ஆதரவாளர்களும், எதிர்ப்பாளர்களும் உரையாடிக்கொண்டு இருக்கும்போது எப்படி அந்த இடத்தைவிட்டே தூர ஓடிவிட வேண்டுமோ, அதேபோல நானும் என் நண்பன் கூனும் (Koen) டயட்டர்ஸ் ஒன்றாகக் கூடுமிடங்களில் இருந்து ஸ்தானத்யாகேன துர்ஜனா என்று ஓட்டம் பிடித்துவிடுவோம். தனிப்பட்ட முறையில் அவர்கள் நல்லவர்கள். ஒன்றாகக் கூடி உனவுமுறைகளைப் பற்றி அலசும் சமயங்களில் மட்டுமே அவர்களுக்குள் சற்று உக்கிரம் கூடிவிடுகிறது. இதில் நான் கூன் கட்சி. “Mijn dieet. Mijn gezonde verstand” என்று அவன் அழகாகச் சொல்லுவான். (இதை அவனுக்கு காண்பிப்பதற்காக டச்சு மொழியில் எழுதியிருக்கிறேன். மன்னிக்கவும். ஆங்கிலத்தில்: “My diet. My common sense.”)
கீழ்வரும் வரிகள் விசிஷ்டாத்வைதம் பற்றிய கட்டுரையில் நீங்கள் எழுதியவை :
“பல்வேறு தத்துவதரிசனங்கள் இங்கே உள்ளன. ஆனால் அவற்றுக்கு இடையே உரையாடலே இல்லை. ஒவ்வொரு தரிசனமும் ஒரு மதமாக ஆகி தங்கள் தரப்பை மட்டுமே குருபரம்பரையாகக் கற்று அதையே நம்பிக்கொண்டு முன்செல்கிறது. வரலாற்று நோக்கே காணக்கிடைப்பதில்லை. ஒட்டுமொத்தப்பார்வை உருவாவதில்லை. ஆகவே விவாதங்கள் பரஸ்பர நிராகரிப்பாகவே நிகழ முடிகிறது. அவை விதண்டாவாதங்களாக ஆகி மனக்கசப்பை நோக்கிச் செல்கின்றன.”
இந்த இடத்தில் ‘தத்துவ தரிசனங்களை’ நீக்கி விட்டு ‘உணவுமுறைகள்’ என்று மாற்றி,  இனி வரப்போகும் உணவுமுறைகள் பற்றிய   என்னுடைய கட்டுரையில் இந்தப் பத்தியைச் சேர்த்துவிடலாம்.
உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன். கடந்த வருடம் தாவர உணவுமுறையை பின்பற்றி வரும் என்னுடைய அலுவலக நண்பர் குகை மனிதர்களான நியாண்டர்தால்கள் எல்லாம் சைவர்கள் (தாவர போஜனிகள், சைவத்தை மதத்தோடு குழப்பிக் கொள்ளக்கூடாது என்பதற்காக) என்பது ஒரு ஆராய்ச்சியில் நிரூபணம் ஆகியிருக்கிறது என்று ஒரு போடு போட்டார். செய்தியைத் தேடி வாசித்தால், நினைத்தது போலவே அவர் கூறியது தவறுதான். ஆனாலும் அதில் கடுகளவு உண்மையும் இருக்கவே செய்தது.
கெய்த் டாப்னி என்கிற தொல்பொருள் ஆய்வாளர் அவர்களுடைய உதவியாளர்களுடன் ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஐரோப்பாவில் வாழ்ந்த மூன்று நியாண்டர்தல் இன மனிதர்களின் பற்காரைகளை ஆராய்ச்சி செய்து வந்திருக்கிறார். அவற்றில் ஒரு நியாண்டர்தால் மனிதன், நான் வசிக்கும் பெல்ஜியம் நாட்டிலுள்ள ஸ்பா என்கிற நகருக்கு அருகே உள்ள குகையிலும், மற்ற இரண்டு மனிதர்களை ஸ்பெயின் நாட்டிலுள்ள எல் சீட்ரோன் குகையிலும் கண்டுபிடித்திருக்கிறார்கள். நம் ‘பெல்ஜியம் தேசத்து’:-) நியாண்டர்தால் மனிதர் பெரும்பாலும் மாமிச உணவை உட்கொண்டவர் என்றே ஆராய்ச்சி கூறுகிறது. ஆடுகளிலிருந்து காண்டாமிருகங்கள் வரை அத்தனையையும் வெளுத்துக் கட்டியிருக்கிறார் என்பதற்கு டி.என்.ஏ சான்றுகளைக் கண்டறிந்துள்ளார்கள். ஆனால், நம் ஸ்பானிய நியாண்டர்தால் மனிதர்தான் ஆராய்ச்சியாளர்களுக்கு ஆச்சர்யத்தைத் தந்திருக்கிறார். அவருடைய பற்காரைகளைச்  சோதித்துப் பார்த்ததில் மாமிச உணவு அருந்தியதற்கான டி.என்.ஏ தடயம்  இல்லை என்றும், அவர்கள் பெரும்பாலும் காளான்கள், பைன் பருப்புகள், பாசி மற்றும் மரப்பட்டைகளை உண்டதற்கான தடயங்களைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதை வாசிக்கும்போது, நல்லவேளை ஆதிமனிதன் ‘ஆலும் வேலும் பல்லுக்குறுதி’ என்று பல் துலக்காமல் விட்டு வைத்தான். இல்லாவிட்டால் இதையெல்லாம் நாம் எப்படித் தெரிந்துகொள்வது. அதிலும் அந்த பெல்ஜியம் நியாண்டர்தால் மனிதரின்  பற்களின் புகைப்படங்களைப் பார்த்தால் அவை மிகுந்த ஆரோக்கியத்துடனும் வலிமையுடனும் இருப்பதாகத் தெரிகிறது. பேசாமல் நானும் ஆதிமனிதனைப்போல பல் துலக்குவதை நிறுத்திவிடலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். வருங்கால ஆராய்ச்சிகளுக்காவது உதவும். மேலும், குகை மனிதர்களின் வாழ்க்கைமுறையை பிரச்சாரம் செய்வதாகவும் இருக்கிறேன்.
இருநூறுக்கும் மேற்பட்ட நுண்ணுயிர் வகைகளை அவர்களுடைய பற்களில் கண்டறிந்துள்ளார்கள். குறிப்பாக ஒரு ஸ்பெயின் நியாண்டர்தால் இளைஞனின் பற்களில் சீழ்கட்டி இருந்திருக்கலாம் என்றும், மேலும் அவன் இரைப்பைக் குடல் அழற்சியாலும்  பாதிக்கப்பட்டிருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. அவனுடைய பற்காரைகளில் உள்ள டி.என்.ஏ இன்னும் சில சுவாரசியமான தகவல்களையும் சொல்லியிருக்கிறது. சாலிசிலிக் அமிலத்தைக் கொண்டுள்ள போப்லர் மரப்பட்டைகளை அவன்  உட்கொண்டிருந்திருக்கிறான். சாலிசிலிக் அமிலம் ஆஸ்பிரினுக்கான இயற்கை மூலங்களில் ஒன்று என்பதை அறிவோம். அதுமட்டுமல்ல, அவனுடைய பற்களில் பென்சிலியம் இருந்ததற்கான சான்றுகளும் கிட்டியுள்ளது. வயிற்றுவலிக்கு ஆன்டிபயாடிக் எடுத்துக்கொள்ளும் அளவுக்கு அறிவார்ந்தவர்களாக இருந்திருக்கிறார்கள் குகை மனிதர்கள் என்பது பிரமிப்பூட்டுகிறது.
இந்த ஆராய்ச்சியில் முத்தாய்ப்பாக இன்னொரு செய்தி. ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு நம்முடைய ஹோமோ சேப்பியன்ஸ் தாத்தாக்களின் பற்களிலிருந்து பெறப்பட்ட நுண்ணுயிர்களில் ஒன்றையும் அந்த நியாண்டர்தால் இளைஞனின் பற்களில் அடையாளம் கண்டிருக்கிறார்கள். இன்றைக்கும் நமக்கு பல் ஈறுகளில் தொந்தரவு கொடுத்துக்கொண்டிருப்பது இந்த நுண்ணுயிரிதான். நம் தாத்தாக்கள் அன்றைக்கே கலப்புத் திருமணம் புரிந்திருக்கிறார்கள் என்பதைத்தான் இது காட்டுகிறது. Inter-breeding Theory -யை உறுதிப்படுத்துவதாகவும் அமைகிறது இந்த ஆராய்ச்சி.
இந்தக் கதை மட்டும் தமிழ் திரைப்பட இயக்குநர்களுக்குக் கிடைத்தால் என்னவாகும் என்று யோசித்துப் பார்த்தேன். அதுவும் Replacement theory-யின்படி நம் ஹோமோ சேப்பியன்ஸ் தாத்தாக்கள் எல்லாம் தாதாக்களாகவும் இருந்திருக்கும் பட்சத்தில் நிச்சயமாக தமிழ் திரைப்பட உலகுக்கு ஏற்றதொரு நல்ல கதை கிடைக்கும். ஹோமோ சேப்பியன்ஸ் பெண்ணும், நியாண்டர்தால் ஆணும் காதலித்து, குகைகளில் முத்தமிட்டுப் “பைன் கொட்டைப் பல்லழகி..” என்று டூயட் பாடலெல்லாம் பாடி, இருவரும் காளான்களைப் பொறுக்கித் தின்றபடி காதல் வார்த்தைகள் பேசி, இறுதியில் நாயகன் நான்கு ஹோமோ சேப்பியன்ஸ் அண்ணன்களையும் அவர்களுடைய அடியாட்களையும் அடித்து நொறுக்கிவிட்டு நாயகியைத் தூக்கிக்கொண்டு ஓடியிருப்பான். இடையே ஒரு தாத்தா நாட்டாமை வேலையும் பார்த்திருப்பார். 
மானுட வரலாறு எத்தனை சுவாரஸ்யங்களைத் தன்னகத்தே தாங்கி வந்திருக்கிறது. வரலாறு தெரியாமல் உயிரியல் பிரச்சினைகளைக்கூட  தீர்க்க முடியாது என்பதுவும் நன்றாகத் தெரிகிறது. அடுக்குமாடிக் குடியிருப்பில் இன்று வாழ்பவர்கள் அதிக கலோரி உணவின்மீது இச்சை கொள்வதற்கு அடிப்படைக் காரணம்கூட நம் தாத்தா, பாட்டிகள் முப்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு சாவன்னா புல்வெளிகளில் இனிப்பான பழங்களை அதிகம் உட்கொண்டதுதான் என்று நிரூபித்திருக்கிறார்கள். அதுபோலவே நம்முடைய ஒவ்வொரு உடல் சார்ந்த பிரச்சினைக்கும், அவ்வளவு ஏன் ஸ்கிஸோஃப்ரினியா, ஆட்டிஸம் போன்ற உளவியல் சார்ந்த பிரச்சினைகளுக்குக்கூட நம் முன்னோர்களைத் தொடர்ந்து சென்றால் தீர்வு கண்டுவிடலாம் என்று சொல்கிறார்கள். எனக்குக்கூட அக்ரோபோபியா என்று சொல்லக்கூடிய உயரம் சார்ந்த அச்சம் இருக்கிறது. அதிலிருந்து வெளிவருவதற்காக ஸ்கை-டைவ், பங்கி-ஜம்பிங் என்று அத்தனையும் முயன்று பார்த்துவிட்டேன். ஆனாலும் ஒரு பலனும் இல்லை. ஐபில் டவரின் உச்சியில் எடுத்த புகைப்படத்தில் என்னுடைய மனைவியின் கைகளை அச்சத்துடன் பிடித்துக்கொண்டு  நின்றுகொண்டிருப்பேன். அநேகமாக, நம்முடைய தாத்தா எவரோ ஐம்பதாயிரம் வருடங்களுக்கு முன்பு உயரத்திலிருந்து விழுந்து நீண்டநாட்களுக்கு பித்துப் பிடித்தவராக வாழ்ந்திருக்கவேண்டும். அவர் இன்னும் அவருடைய அச்சத்தின் வடிவில் என்னுடைய மரபணுக்களில் வசித்துக்கொண்டு தொடைநடுக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார். இது இயற்கையும், வரலாறும், உயிரியலும், உளவியலும் இணையும் அழகானதொரு இடம். எனவே, நவீன யுக மனிதனைவிடவும் இயற்கையின் ரகசியங்களை நன்கு அறிந்திருந்த ஆதிமனிதனைத் தேடித் போவது என்பது எனக்கு சுவாரஸ்யமாகவே படுகிறது. இதனால்தான் எனக்கு தொல்லியலிலும், மூலக்கூற்று உயிரியலின் சாத்தியங்களை அறிந்துகொள்வதிலும் ஆவல் பெருகிக்கொண்டே போகிறது.அதே சமயம், இன்றைக்கு கிடைக்கும் உணவின் தரத்தையும், வாழ்க்கைமுறையையும் கருத்தில் கொள்ளவேண்டியிருக்கிறது.  இந்த உடலின் நுண்ணறிவை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும். வெளிப்புற மாற்றங்களுக்கேற்ப எதற்கும் தன்னை உட்புறம் தயார்படுத்திக் கொள்ளும் சக்தி வாய்ந்தது இந்த உடல், எனவே காலப்போக்கில் நம் உடலில் ஏற்பட்ட திடீர்மாற்றங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியதும் அவசியம் என்றும் ஒருசாரார் கருதுகிறார்கள். நெருப்பைக் கண்டுபிடித்து மாமிசத்தை வேகவைத்து உண்டதால்தானே நான்கு கால்களில் நடந்துகொண்டிருந்தவன் இரண்டு கால்களில் நடக்க ஆரம்பித்தான்.
 
இதைப் பற்றியெல்லாம் எழுதித் தீராது. இறுதி வார்த்தையாக,
 
ஏதாவது ஒரு உணவுமுறையைப் பின்பற்றலாம். அச்சம்கொள்ளத்  தேவையில்லை. மற்றவர்களையும் அச்சுறுத்தத் தேவையில்லை. உங்களுடைய தளத்தில் என்னுடைய கடிதத்தைப் பார்த்தவுடன் ஓரிரு நண்பர்கள் என்னிடம் வந்து “என்னுடைய டயட் பிளானைக்” கேட்கிறார்கள். இன்னொருவர தன் நண்பர் அறிவுறுத்தியதால், கடந்த நான்கு வருடங்களாக ‘ஆலிவ் எண்ணெய்’ உபயோகித்து வந்திருக்கிறார். ஆலிவ் எண்ணெய் நல்லதுதான். ஆனால் அது இந்தியச் சமையலறைக்கு, குறிப்பாக தாளிப்பதற்கு நிச்சயம் உகந்ததல்ல. இது பயத்தின் விளைவாய் நேர்ந்த விபத்து. கார் வாங்குவதிலிருந்து, சலவைத்தூளை தேர்வு செய்வதிலிருந்து, நகை, உடை என்று நீண்டு தற்போது உணவுமுறை வரை வளர்ந்துவிட்டது இந்த ‘Social Pressure’ எனும் நோய். சிறுவயதில் வீட்டுக்கு வண்ணம் தீட்டுவதற்காக என் தந்தையாருடன் பெயிண்ட் வாங்கச் சென்றால் அங்கிருக்கும் மூன்று வர்ணங்களில் ஒன்றை வாங்கிக்கொண்டு வந்து விடுவோம். இரண்டு வருடங்களுக்கு முன்பு என் மகனின் அறைக்குச் சாயம் வாங்கச் சென்றால் நீல நிறத்துக்கு மட்டுமே ஒரு பத்து பக்க கையேட்டைத் தருகிறார்கள். “நாம் வேண்டுமானால் ஹ்யூபோ கடைக்குப் போய்ப் பார்க்கலாமா?” என்று என் மனைவி ஆர்வத்துடன் கேட்டதற்கு, “ஆளை விடுங்கள்” என்று என் கண்களுக்குத் தென்பட்ட வெண்சாம்பல் நிறப் பூச்சைத் தூக்கிக்கொண்டு ஓடிவந்துவிட்டேன். இந்த ‘Paradox of Choice’ ஒருவித மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. 
 
உணவுமுறை விஷயத்தில் உடலுக்கு நல்லதாகத் தெரிந்தாலும், உளவியல்ரீதியாக சில அழுத்தங்கள் நல்லதற்கில்லை. அதுவும் சூழல் காரணமாக இன்றைய தலைமுறை எதற்கெடுத்தாலும் நடுக்கம்கொள்ளும் தலைமுறையாக மாறி வரும் நிலையில், அச்சுறுத்தல் மூலமாக எந்த மாற்றத்தையும் கொண்டுவந்துவிட முடியாது. முதலில் அந்த இயல்பை மாற்றவேண்டும். என்னுடைய பயிற்சிகளில் அதில்தான் அதிக கவனம் செலுத்துகிறேன். நமக்குத் தேவையானதெல்லாம் அரவணைப்பு மட்டுமே. முந்தைய தலைமுறையை எடுத்துக்கொண்டால் அது வேறுவகையான பிரச்சினை. அண்மையில் என்னுடைய பள்ளி நண்பன் ஒருவனின் தந்தை தன்னுடைய எழுபெத்தெட்டாவது வயதில் காலமாகிவிட்டார். அவனை அழைத்து நீண்ட நேரம் பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு நிறைய உடல் உபாதைகள் என்பதனால் உணவுக்கட்டுப்பாடு தேவை என்று பலமுறை அறிவுறுத்தியிருக்கிறான். அவர் கேட்கவில்லை போலிருக்கிறது.. “வாழவேண்டிய வயதில் உண்பதற்கே எதுவுமில்லை. இப்போது சாகவேண்டிய வயதில் என்னடா உணவுக் கட்டுப்பாடு? போடா!” என்று கூறிவிட்டாராம். இதுதான் நிதர்சனம். இல்லாதவன் கற்கால மனிதனைப் போல எது கிடைத்தாலும் அது போதும் என்றிருக்கிறான். இருப்பவனோ அதுவா, இதுவா என்று குழம்பித் தடுமாறுகிறான்.  

அன்புடன்,

மாதவன் இளங்கோ

பெல்கியம்.

முந்தைய கட்டுரைஎழுத்துச் சீர்திருத்தம்
அடுத்த கட்டுரைகி ராவை வரையறுத்தல்