நாராயணன் – சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி!

unnamed

தை அறுவடை

அன்புள்ள எழுத்தாளருக்கு !

வணக்கம்!

ஒரு இருபது வருடங்களுக்கு முன்பு வரை வெளி மாவட்டங்களில் இருந்து தருமபுரி/கிருஷ்ணகிரி மாவட்டங்களில் அரசாங்க வேலை செய்ய வருபவர்கள் எங்கள் பகுதி மக்கள் கொள்ளை உணவாக பயன்படுத்துவதை பார்த்து அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள். அய்யே இது குதிரை தீவனமில்லையா? இதைப் போயி சாப்பிடறிங்க என்று கிண்டல் அடிப்பார்கள் என்று பெரியவர்கள் சொல்லுவதுண்டு. கேழ்வரகுக் களியும் அப்படித்தான் கிண்டல் செய்யப்பட்டது. ” களி, புளி, கம்பளி” என்ற புதிய கிண்டல் மொழியே உருவாக்கி விட்டார்கள். கோவையில் வேளாண் அறிவியல் படிக்கும்போது எங்கள் பகுதி மாணவர்களின் செல்லப் பெயர் அதுதான். :)

ஆனால் தற்போதைய நிலவரத்தின் படி கொள்ளு நல்ல விலைக்கு போகிறது. கிலோ -நாற்பதிலிருந்து அறுபது ரூபாய் வரையில் வாங்கப்படுகிறது. புரட்டாசி பட்டத்தில் மானாவரியில் விளையக்கூடியது. சாகுபடி செலவு மிகவும் குறைவு. இடு பொருட்களின் தேவை இல்லை வளமான மண்ணாக இருக்கும் பட்சத்தில். குறைந்த மழையிலும் நன்றாக வளரும். பூக்கும் பருவத்தில் பனிப் பொழிவு இருந்தாலே போதுமானது.

கொழுப்பைக் கரைக்கும் பண்பு கொள்ளுக்கு இருக்கிறது. ” இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்கு கொள்ளு ” என்ற பழமொழி உண்மைதான். கொழுப்பைக் கரைக்கும் மூலக்ககூறுகளைப் பற்றிய ஆராய்ச்சியை மேற்கொள்ள உத்தேசித்திருக்கிறேன்.கொள்ளில் ஒரு புதிய ரகத்தையும் கண்டறிந்திருக்கிறேன்.

தம்பி நாராயணன் ஒரு ஆர்வமுள்ள சிறுவன். நிறைய முறை நான் பொறுமை இழந்து கோபத்தில் பேசி இருக்கிறேன். ஆனால் அவன் அதை பொருட்படுத்தவில்லை. விஷ்ணுபுரம் விழாவில் நேரில் சந்தித்து பேசிய சில நிமிடங்களில் மனதுக்கு மிக நெருக்கமாக உணர்ந்தேன். கரிசல் காட்டில் ஒரு சம்சாரி துரைசாமி நாயக்கரின் திட்டமிடுதல், மண் வளத்தை மேம்படுத்தும் முறைகள் போன்றவற்றை பரிந்துரைத்தேன்.

நாராயணன் அறுவடை செய்த  தானியங்களைப் பார்த்து மிக மகிழ்ச்சி அடைந்தேன். நல்ல திரட்சியான மணிகள். சரியானமிதமான  வெப்பத்தில் வறுத்து அரைத்து சாம்பாருக்கு பருப்பு பொடியாகப் பயன்படுத்தலாம். ரசம் சட்னி போன்றவைகளும் செய்யலாம். ஊற வைத்த தானியங்களை வெறும் வயிற்றில் சாப்பிடலாம். முளைப்பு கட்டியும் பயன்படுத்தலாம். எங்களூரில் கொள்ளு சுண்டல்தான் பிள்ளையார் சதுர்த்திக்கு படைக்கப்படும். அவரின் தொப்பை அப்படியேதான் இருக்கிறது ( எனக்குமே :) )

நாராயணின் மகிழ்ச்சியை முழுதும் உணர்கிறேன். மனமார வாழ்த்துகிறேன். ஆனாலும் மிகுந்த கவனமுடன் தெளிவான திட்டமிடலுடனும் இந்த முறை செய்ய வேண்டும் என அறிவுறுத்துகிறேன். கொள்ளுக்கும் அதன் பதப்படுத்தப்பட்ட பொடிகளுக்கும்  சென்னையில் நல்ல கிராக்கி  இருப்பதால் அடுத்த வருடமும் கொள்ளையே சாகுபடி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். தண்ணீர் பாய்ச்சும் வேலை இல்லை. களை எடுக்கத்தேவையில்லை. நான்றாக உழுது விதைத்தால் போதும். .

நன்றிகள்

அன்புடன்

தண்டபாணி, பையூர்

முந்தைய கட்டுரைஅடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம்
அடுத்த கட்டுரைபயணம் கடிதங்கள்