அடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம்

pazanipapa

பெருமதிப்பிற்குரிய ஜெமோ.அவர்களுக்கு,

வணக்கம்.

அடிப்படைவாத பற்றி மேற்கண்ட தலைப்பில் உள்ள கட்டுரையில் நண்பர் திரு. கொள்ளு நதீம் அவர்களின் ஆற்றாமைகளை படித்த எனக்கு இன்று ‘மின்னம்பலத்தில்’ வந்துள்ள திரு.களந்தை முகம்மது அவர்களின் இந்த துணிச்சலான  வஹாபிசத்தின் அஸ்தமனம் என்ற கட்டுரை மிகுந்த ஆறுதலாக இருந்தது. இவரைப் போன்றவர்களால்தான் இந்தச் சூழ்நிலையில் இவ்வாறு ஆணித்தரமாக எழுதமுடியும்.ஆனால் நாம் இந்த விஷயங்களில் சவுதியைக்காட்டிலும் பின்னால் வெகுதூரத்திற்கு வந்துவிட்டோமோ என்ற  ஐயமும் உள்ளது?.அப்படியில்லையென்றால் அவர் கட்டுரையின் இறுதியில் குறிப்பிட்டபடி  “இது அனைத்து முஸ்லிம்களுக்குமான சோபனம்!.”

அன்புடன்,

அ .சேஷகிரி

அன்புள்ள சேஷகிரி

அடிப்படைவாதத்தின் ஊற்றுமுகம் குறுங்குழு அரசியலில் உள்ளது. பெருந்திரளாக மக்களை இணைக்கவேண்டும் என்றால் அதற்கு மக்களின் தேவைகள், ஆசைகள் ஆகியவற்றுடன் நெடுங்காலமாக தொடர்ந்து உரையாடியிருக்கவேண்டும். குறுங்குழுக்களால் அதற்கு இயல்வதில்லை. அதை  மிதமிஞ்சிய தீவிரம் வழியாக ஈடுகட்டுகிறார்கள். அதற்கு செயற்கையான உணர்ச்சிகளை தூண்டிவிடுகிறார்கள். அது எப்போதுமே எதிர்மறையான உணர்வுகள். கசப்பு காழ்ப்பு. அவை அனைத்தும் ஒன்றே, அதை எதிர்த்தே இங்கே ஆக்கபூர்வ அரசியல் நிலைகொள்ளமுடியும்

ஜெ

வணக்கம் ஜெ,

Youtube ல் shruthi tv பெயரை இட்டேன். புதிதாக சில வீடியோக்கள். தொல்.திருமாவளவன், சீமான், ஆழி செந்தில்நாதன், இன்னும் சிலர் (திராவிட, மதச்சார்பற்ற, பகுத்தறிவுவாதிகள் உட்பட). என்னவென்று பார்த்தால், ‘பழனிபாபா’ பற்றிய நூலான ”பழனிபாபா : வாழ்வும் போராட்டமும்” வெளியீட்டு விழா. என்னடா இது….! ? என்றுதான் தோன்றியது…..

பழனிபாபாவின் வீடியோ, ஆடியோ சிலவற்றை இணையதளத்தில் கவனித்திருக்கிறேன். நம் திராவிட பகுத்தறிவுவாதிகள் பாணியிலான  அதே அபத்தமான, அற்பத்தனமான, வெறுப்பூட்டும் பேச்சுகள். இன்று அவர் ஒரு சமூகப் போராளி.

உங்கள் இணையதளத்தில் அவரைப்பற்றிய கட்டுரைகளைத் தேடினேன், எதுவும் கிடைக்கவில்லை.

நன்றி.

விவேக்.

அன்புள்ள விவேக்

சென்ற கடிதத்தின் பதிலையே தொடர விரும்புகிறேன். குறுங்குழு அரசியல்வாதிகள் மெல்லமெல்ல அழிவைநோக்கியே செல்கிறார்கள். அவர்கள் பேசுவது புரட்சி அல்ல. மாற்றம் அல்ல. பிரிவு, அழிவு. அந்தக்கோஷ்டியில் திருமாவளவன் நின்றிருப்பது மிகமிகத் துயரளிப்பது. ஓர் ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல் அவர். அவருடைய இந்நிலை அச்சமூகத்திற்கே அழிவைக்கொண்டுவருவது

பழனிபாபா பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது என் பள்ளிநாட்களில் திடீரென எம்ஜியாருக்கு அணுக்கமான  நிழலான மனிதராக ஊடகம் முன் அறிமுகமானார். பின்னர் ஊடகத்திலிருந்து அகன்றார். மீண்டு வந்தபோது தமிழகத்தில் வஹாபியத் தீவிரவாதத்தைக் கொண்டுவந்தவராக இருந்தார். இன்று அவர்களால் ஓர் அடையாளமாகக் கொண்டுசெல்லப்படுகிறார்.

கோவையில் திராவிடர் கழகக்காரரான உமர் ஃபாரூக் என்பவர் வஹாபியர்களால் கொல்லப்பட்டார். அவருக்கு அஞ்சலி செலுத்தவேண்டியவர்கள் அவரைக் கொன்றவர்களின் தரப்பில் சென்று நின்று அஞ்சலி செலுத்துகிறார்கள். இதுவே இங்குள்ள அரசியல்

மொத்தத் தமிழ்நாட்டிலும் எந்த நடுநிலையாளருக்கும் முற்போக்காளருக்கும் இதில் விமர்சனம் இல்லை, அந்த ஒற்றைப்படைக் குருட்டுத்தன்மையிலேயே இங்கே இந்து அடிப்படைவாதம் வேர்கொள்கிறது

ஜெ

முந்தைய கட்டுரைகி ராவை வரையறுத்தல்
அடுத்த கட்டுரைநாராயணன் – சிவகங்கைச் சீமையில் ஒரு சம்சாரி!