எழுத்துச் சீர்திருத்தம்

viira

வணக்கம்.

‘மொழிகள் – ஒரு கேள்வி’ என்ற பதிவைப் படித்தபின் ரொம்ப நாட்களாக இருந்த சந்தேகத்தைக் கேட்கத் துணிகிறேன். ‘ஐவர் என்பதை அய்வர் என்றும் ஔவை என்பதை அவ்வை என்றும் எழுதவது சரியா?’ என்ற கேள்விதான் அது. எழுத்தாளர் நாஞ்சில் நாடன் ‘ஔவியம் பேசேல்‘ என்ற கட்டுரையில் ‘எழுத்துப்போலிகள்’ என்று குறிப்பிட்டு இதற்கு பதில் அளிக்கிறார். இரண்டும் சரிதான் என்று தொல்காப்பியம் அனுமதிக்கிறது என்றார். குறளிலும் கவ்வை போன்ற வார்த்தைகள் கையாளப்பட்டிருப்பது உதாரணம். “மெய்யில் புழங்குவதா, அன்றிப் போலிகளில் புழங்குவதா என்பது அவரவர் தேர்வு.” என்பது சமாதானம் சொல்கிறார் நாஞ்சில் நாடன். தற்செயலாக படித்த எழுத்தாளர் கார்த்திக் புகழேந்தியின் பதிவு இதைப் பற்றிய கேள்வியை மீண்டும் எழுப்பிவிட்டது.

“மையம் -மய்யம்”

“…எழுத்துக்கள் உருவம் மாற்றுவது, குறிப்புகள் ஏற்படுத்துவது, புதிய எழுத்துக்களைச் சேர்ப்பது, என்பது போலவே சில எழுத்துக்களை அதாவது அவசியமில்லாத எழுத்துக்களைக் குறைக்க வேண்டியதும் அவசியமாகும்.

உதாரணமாக உயிரெழுத்துக்கள் என்பவைகளில் ஐ, ஒள என்கின்ற இரண்டு எழுத்துக்களும் தமிழ் பாஷைக்கு அவசியமில்லை என்பதே நமது வெகுநாளைய அபிப்பிராயமாகும்.

காரம் வேண்டிய எழுத்துக்களுக்கு ை, இந்த அடையாளத்தைச் சேர்ப்பதற்கு பதிலாக ய் என்ற எழுத்தை பின்னால் சேர்த்துக் கொண்டால் கார சப்தம் தானாகவே வந்து விடுகின்றது. உதாரணமாக கை என்பதற்குப் பதிலாக கய் என்று எழுதினால் சப்தம் மாறுவதில்லை என்பது விளங்கும்.

தமிழ் எழுத்துக்களில் மேலே குறிப்பிட்ட இந்தப்படியான சீர்திருத்தங்கள் எல்லாம் செய்யப்படுமானால் அப்போது தமிழில் மொத்த எழுத்துக்கள் 46ம் 7 குறிப்பு எழுத்துக்களும் ஆக 53 எழுத்துக் களில் தமிழ் பாஷை முழுவதும் அடங்கிவிடும்.

பாஷையின் பெருமையும், எழுத்துக்களின் மேன்மையும் அவை சுலபத்தில் தெரிந்து கொள்ளக் கூடியதாகவும், கற்றுக் கொள்ளக் கூடிய தாகவும் இருப்பதைப் பொருத்ததே ஒழிய வேறல்ல….”

-ஈ.வெ.ரா. பெரியார்
குடி
அரசு தலையங்கம் 20.01.1935

இப்போது எழுத்துப்போலிகளின் புழக்கம் மிக அதிகமாகிவிட்டதை புத்தகங்களிலும் பத்திரிகைகளிலும் காண முடிகிறது. எனக்கு போலியில் புழங்குவதில் நாட்டமில்லை. அவற்றை எழுத்தில் காண்பதும் எரிச்சலூட்டுகிறது.

“தமிழில் உயிர் எழுத்துக்கள் 12, மெய் எழுத்துக்கள் 18, ஆக முப்பது. உயிரும் மெய்யும் புணர்ந்து, உயிர்மெய் 216 எழுத்துக்கள். ஆய்த எழுத்து எனப்படும் ஒன்று. எனவே, ஆக மொத்தம், தமிழ் எழுத்துகள் 247. இது பாலபாடம். மேலும், சில உச்சரிப்புகளைத் தமிழில் கொண்டுவருவதற்காக, ஏற்படுத்தப்பட்ட கிரந்த எழுத்துகள் க்,ஷ்,வ்,ஷ்,ஹ் எனும் ஐந்தும் பன்னிரு தமிழ் உயிருடன் புணர்ந்து, மொத்த கிரந்த எழுத்துகள் 65, அவற்றுடன் சிறப்பெழுத்து ஸ்ரீ சேர்ந்து ஆக 66.” என்கிறார் நாஞ்சில் நாடன். “53 எழுத்துக்களில் தமிழ் பாஷை முழுவதும் அடங்கிவிடும்.” என்றார் ஈ.வெ.ரா. இதெல்லாம் மொழிச் சீர்திருத்தமா? அவசியந்தானா?

“ஒரு காலகட்டத்தில் பொதுவாக ஏற்கப்பட்ட மொழியியல் அளவுகோல்களும் அவற்றின் அடிப்படையிலான பொதுமுடிவுகளும் அறிவுத்துறைக்குள் இருக்கும். அவற்றை ஏற்றுக்கொண்டு, சிறிதளவு ஐயத்தையும் தக்கவைத்துக்கொண்டு, பொதுவிவாதத் தளத்தில் பேசுவதே மொழியியலாளர் அல்லாதவர்கள் செய்யவேண்டியது.” குறிப்பிட்டிருந்தீர்கள். இது மொழியியல் அளவுகோல்களும் அவற்றின் அடிப்படைகளையும் மாற்றுக்கொள்ளும் காலகட்டமா? ணா, னா, னை மாறியது போல இந்த மாற்றமும் நிகழத்தான் போகிறதா?

நன்றியுடன்

ஸ்ரீநிவாச கோபாலன்

***

அன்புள்ள ஸ்ரீனிவாசகோபாலன்,

தமிழில் வீரமாமுனிவர் காலம் முதல் ஏராளமான எழுத்துச்சீர்திருத்தங்கள் வந்துள்ளன. இன்னமும் வரும்.பொதுவாக இந்த எழுத்துமாற்றம் எல்லாம் உணர்வுத்தளத்தில், நம்பிக்கை சார்ந்தோ பற்றுடனோ பேசப்படவேண்டியது அல்ல என்பதே என் எண்ணம். அறிவார்ந்த , நடைமுறை நோக்கும் மரபறிவும் இணைந்த அணுகுமுறைதேவை.

எழுத்துக்கள் மாறிக்கொண்டேதான் இருக்கும். நான் படிக்க ஆரம்பித்தபின் மலையாள எழுத்துவடிவுகள் மூன்றுமுறை மாறிவிட்டன.மாற்றிப்பார்க்கலாம், சரியாக இருந்தால் வைத்துக்கொள்ளலாம். அதில் மொழியறிந்தோரின் தரப்பே ஓங்கி ஒலிக்கவேண்டும். தெருமுனை அரசியல்வாதிகள் பேசக்கூடாது. மொழியரசியல் அதை வழிநடத்தலாகாது.

மேலே குறிப்பிட்ட மாற்றத்தைப் பொறுத்தவரை அது தட்டச்சு, அச்சுக்கோப்பு காலத்தில் அன்றைய தேவையை உத்தேசித்து உருவாக்கப்பட்டது. அன்றே அது ஏற்கப்படவில்லை. இன்று அதற்கு எந்த மேலதிகப் பயனும் இல்லை. அதோடு அப்படி மாற்றப்போனால் தமிழில் உள்ள எல்லா சொற்களையும் மாற்ற முடியாது. ஏராளமான சொற்குழப்பங்கள் உருவாகக்கூடும். ஆகவே இன்று தேவையற்ற ஒன்று என்றே படுகிறது

உதாரணமாக ஐயன் என்பதை அய்யம் என்று எழுதலாம். காதுக்கு பெரிய வேறுபாடில்லை. ஆனால் தமிழில் ஐ என்னும் எழுத்தே ஒரு சொல். தலைவனைக் குறிப்பிடுகிறது. [என் ஐ முன் நில்லன்மிர் தெவ்விர் பலர் என் ஐ முன்னின்று கல்நின்றவர் – குறள்]  ஐயை என்றால் தலைவியாகிய கொற்றவை. ஐயோ என்னும் அழைப்பு அதிலிருந்து வந்தது. தலைவனே என்னும் கதறல் அது. அய் என்றும் அய்யய் என்றும் அச்சொற்களைக் கையாள்வது தமிழின் அழகிய சொல் ஒன்றை அழிப்பது

மையம் என்பதை மய்யம் என எழுதலாம். ஆனால் தமிழில் மை என்னும் எழுத்து ஓர் பின்னிணைப்பாக ஆழ்ந்த பொருள் உடையது. ஒரு தொழில் அல்லது பொருள் ஒரு கருத்துருவமாக ஆவது மைவிகுதியினூடாக. உள்+ மை= உண்மை. பெண்+மை=பெண்மை. தன்+மை= தன்மை. மையம் அதிலிருந்து வந்த சொல். மையம் என்றால் ஒன்றிலுள்ள நுண்மை, அதன் கருத்திருப்பு.

ஈவேரா தமிழறிஞர் அல்ல. தமிழ்மேல் மதிப்புள்ளவரும் அல்ல. இந்நுட்பங்களை அவரால் புரிந்துகொள்ளவும் முடியாது. தமிழ் தமிழ் எனக் கூச்சலிடுபவர்கள் தமிழாய்ந்தோர் கூற்றுக்களைப் புறந்தள்ளி வெறும் சாதியக்காழ்ப்பு சார்ந்த அரசியல் நோக்குடன் மொழியியலில்கூட ஈவேராவை தூக்கி அலைவது வருத்தமளிப்பது.

எந்த மாற்றம் என்றாலும் அது பலதரப்புசார்ந்த சொல்லாடல்கள் வழியாக ,எந்நுட்பத்தையும் இழக்காதபடி, மெல்லமெல்ல நீண்ட கால அளவில் நிகழ்த்தப்படவேண்டும்.

ஜெ

முந்தைய கட்டுரைபயணம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇலக்கிய டயட் – மாதவன் இளங்கோ