குற்றமும் தண்டனையும் பற்றி…

dostoevsky

அன்புள்ள ஜெ சார் அவர்களுக்கு,

கடந்த இருபத்தைந்து நாட்களாக ரஷ்ய நாவலாசிரியர் ஃபியோதர் தஸ்தயேவ்ஸ்கி அவர்கள் எழுதிய “குற்றமும் தண்டனையும்” என்ற மிகப் பெரிய நாவலை வாசித்து, நேற்று முடித்தேன். அது எனக்கு மிகவும் உயர்தரமான மேம்பட்ட நாவலாகத் தெரிகிறது. எங்கேயும் எந்தவிதத்திலும் அது வாசிப்பவர்களை உணர்ச்சிவசப்படவைக்க முயலவில்லை. தன்னிச்சையாகத்தான் நான் உணர்ச்சிவசப்பட்டு அழநேர்ந்தது. அதுவும் நிறைய நேரம் நீடிக்கவில்லை. உடனடியாக தீவிரத்தை நோக்கி என்னை இழுத்துச் சென்றது. அவசரம் அவசரமாக கண்களைத் துடைத்துவிட்டு வேகவேகமாக அவர்களைப் பின்தொடர்ந்தேன். எங்கேயும் அது என்னை நிற்கவிடவில்லை. ஆனால் நான் அவசரகதியில் ஓடவும் இல்லை. மிக அருகிலிருந்து இரண்டு கொலைகளைப் பார்க்க வைத்து, நிதானமாக என்னையும் சிந்திக்க வைத்து என் தோள்மீது கைபோட்டு அரவணைத்து தன்கூடவே அணைத்துச் சென்றது. எனக்குத் தனிமையை உணர்த்தவில்லை. தயக்கத்தைத் தரவில்லை. வெறியை ஏற்றவில்லை. மிகவும் அற்புதமாக காலை வேளையில் கதிரவன் மென்மையாக தன் இன்முகத்தை மேகத்தினின்று வெளிக்காட்டுவதைப் போல வாழ்க்கையை அது எனக்கு மிக ஆதூரமாக உணர்த்திற்று. குற்றமும் தண்டனையுமில் வரும் ஒவ்வொருவருடனும் நான் மிக அணுக்கமாக உணர்ந்தேன். அவர்களில் நான் யாராகவிருக்கிறேன் என இனம் கண்டுகொள்ள முடிந்தது. ஒவ்வொருவரின் கருத்துகளும் ஒன்றை மற்றொன்று வெற்றி கொள்ளும்படியாகவே இருந்தன. மிக சிக்கல்களுடன் தஸ்தயேவ்ஸ்கி என்னை வழிதெரியாத வேறோர் நாட்டில் புதிய ஊரான செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் பழகிய நண்பனைப்போல் வழிநடத்திச் சென்றார். மர்மலெதோவில் ஆரம்பித்து ஃபோர்பிரி பெத்ரோவிச் வரை சுவாரஸ்யம் குன்றா நீண்ட சொற்பொழிவுகளின் வழி ஆற்றுப்படுத்தினார்.

எதிரெதிர் துருவங்கள் ஒன்றையொன்று ஈர்க்கும் என்பதுபோல எதிரெதிர்க் கருத்துக்களைக் கொண்ட ரஸ்கோல்னிகோவும் சோஃபியா செமினோவ்னாவும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுகிறார்கள். ஆனால் ரஸ்கோல்னிகோவ் அவன் கொள்கையினின்று மாறாமல் கடைசிவரை மல்லுக்கட்டுகிறான். சோனியாவோ தான் உலகிற்கு வந்ததே, மலர்ந்து இனிய மணம் பரப்புவதும் பின்பு வாடி வீழ்வதுமான ரோஜாப்பூக்களை உருவாக்கிக் கொண்டிருப்பதே தன் கடமை எனக் கொண்ட ரோஜாச்செடியாக இருக்கிறாள். இருவருக்குமான போராட்டத்தின் இறுதியில் மனித குலத்தின் நன்மைக்காக, தீமையை நன்மை வென்றாக வேண்டும் அல்லது நன்மையிடம் தீமை தன்னை விட்டுக்கொடுத்துவிட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்படுகிறது.

 மனிதன் என்னதான் தன் மனதளவில் வலிமையுள்ளவனாயிருந்தாலும் ஒரு ஓரத்தில் மனசாட்சி என்று ஒன்று இருந்துகொண்டு அவனை வலிமை குன்ற வைக்கிறது. அதாவது தீமையில் ஒருவன் வலிமை மிக்கவனாயிருக்கிறான். இரக்கம், தாழ்ச்சி, கருணை, அன்பு என்று வரும்போது அவன் மிகவும் பலவீனமடைகிறான். இந்தப் பாதையில் நடப்பதற்குத்தான் உண்மையில் அவனுக்கு அதிகமான வலிமை தேவையாயுள்ளது. இன்று சமூகத்தில் ஆஙகாங்கே எழும் வன்முறைகளும் போர்த் தாக்குதல்களும் அதிகார ஒடுக்குமுறைகளும் எதனைக் காண்பிக்கின்றனவென்றால், மனிதர்கள் தங்கள் மனதிலிருந்து அன்பையும் தாழ்ச்சியையும் பொறுமையையும் சாந்தத்தையும் அமைதியையும் வெளிப்படுத்துவதை தங்களின் ஆண்மைக்கு இகழ்ச்சியாகவும் தங்கள் கௌரவத்திற்கு இழிவாகவும், பெண்கள் தாம் நலிவடைந்தவர்களாகவும் ஆகிவிடுவதைப்போன்று நினைத்துக்கொள்வதைத்தான். ஆகவே அவர்கள் கோபத்தைக் காட்டாவிட்டால், பொறுமையாகவும் சகிப்புத்தன்மை கொண்டவர்களாகவும் நடந்துகொண்டால், தங்கள் சுய கௌரவத்திற்கு இழுக்கு என்ற தவறான புரிதல் கொண்டவர்களாக இருக்கிறார்கள். தன்னைத் தாக்கியவனை அல்லது தன்னை இழிவுபடுத்தியவனை, அது அறிவுபூர்வமான இறங்குமுகமாகவே இருந்திருந்தாலும், அவனைத் திருப்பித் தாக்குவதும் நாலாந்தரமாக அவனை இழிவுபடுத்துவதும் மட்டுமே தனக்குப் பெருமை என நினைக்கிறார்கள். முக்கியமாக தன்னை அவ்வாறு பெருமைப்படுத்திக்கொண்டு மற்றவர்கள்முன் காண்பித்துக்கொள்வதுதான் அவர்கள் அடைந்துவிட்ட வெற்றியாக நினைக்கிறார்கள். அவ்வெற்றியையே மிகவும் விமரிசையாகக் கொண்டாடுகிறார்கள். இந்த மனப்போக்குதான் மனிதகுலத்துக்கு நேரப்போகும் அழிவுக்கான மிக முக்கியமான காரணியாகும்.

 நாவலின் இறுதியில் இவ்வழிவை நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்பே தஸ்தயேவ்ஸ்கி குறிப்பிட்டு விவாதத்திற்கு உள்ளாக்கியிருப்பதுதான் அவரின் மனிதகுல நன்மைக்கான மாபெரும் முற்போக்குச் சிந்தனையாகும். இதனாலேயே அவர் படைப்பு உலகத்தரம் வாய்ந்ததாக உலக இலக்கியமாக போற்றப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கிறது.

 இந்நாவலின் கதாநாயகனான ரஸ்கோல்னிகோவின் அறிவின் மூலம் எழுந்த தீமைக்காரணியை, எளியவளும் அதிக புத்திசாலித்தனமுமில்லாதவளும் கள்ளமில்லா அன்பும் தாழ்ச்சியும் பொறுமையுமிக்க சோனியாவெனும் நன்மையால் எதிர்க்கவைத்து, ஒரு சிக்கலான மனப்போராட்டத்தை மனிதனுக்கு உருவாக்கி, இதில் நீ எதைத் தேர்ந்தெடுக்கப் போகிறாய் என்ற பிரம்மாண்டமான கேள்வியை தஸ்தயேவ்ஸ்கி முன்வைக்கிறார்.

 எப்படியோ உலகம் தோன்றிவிட்டது; அதில் மனிதர்கள் ஏனென்று தெரியாமலே ஆண்களாகவும் பெண்களாகவும் படைக்கப்பட்டுவிட்டாேம்; ஏன் வாழ்கிறோம், எதற்காக வாழ்கிறோம்; எங்கிருந்து வந்தோம், இறந்தபிறகு எங்கே செல்கிறோம் என்று தெரியாமலேயே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அதிகமாகவே வைத்துக்கொண்டாலும் இருக்கும் நூறாண்டு வாழ்நாட்களில் எவராலும் இப்பூமியின் சுழற்சியையோ சூரியோதயத்தையோ மாற்ற இயலாது. நமக்குத் தெரியாமல் பிறந்ததைப் போலவே நமக்குத் தெரியாமலேயே இறக்கப் போகிறோம்.

 ரோடியன் ரோமோனோவிச் ரஸ்கோல்னிகோவ் சொல்வதைப்போல நம் வாழ்க்கை ஒரு பேனின் வாழ்க்கை போன்றதுதான். அது புரியாமல் என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் இந்த பிரபஞ்சவெளியென்று நம்மை நினைத்துக்கொண்டு, தான் என்ற அகங்காரம் கொண்டு, தனக்கு அடுத்திருப்பவனைப் பேனைப் போல பார்க்கிறோம். அடுத்தவனும் அப்படித்தான் நம்மையும் ஒரு பேனைப் போல நினைப்பான் என சற்றும் உணர்வதில்லை. அப்படி நினைத்தாலே மனிதன் போடுகின்ற ஆட்டங்கள், செய்யும் அட்டகாசங்கள் ஒரு முடிவுக்கு வந்துவிடும். என்றைக்கு ஒருவன் தானும் அடுத்தவனைப் போலத்தான் என்ற எண்ணம் கொள்கிறானோ அன்றிலிருந்துதான் மனித குலம் மாபெரும் அழிவின் பாதையிலிருந்து விலக ஆரம்பிக்கும்.

 மனிதர்களாகப் பிறந்த நசரேயனுக்கோ சித்தார்த்தனுக்கோ இந்த உண்மைகள் தெரியாமலில்லை. ஆனால், தங்களுக்குக் கிடைத்த ஒரே ஒரு மிக அற்புதமான வாழ்க்கையை, மனித குல மீட்புக்காக அவர்கள் அர்ப்பணித்துக் கொண்டார்கள். மனிதகுலம்தான் அதனை உணர்ந்துகொள்ளாமல் அவர்களை மதக் கடவுள்களாக மாற்றி இயேசுவாகவும் புத்தராகவும் வழிபாடு செய்து தங்களிடமிருந்து விலக்கி உயரே தூக்கி அமரவைத்துவிட்டு தன் போக்கிலேயே செல்ல ஆரம்பித்துவிட்டது. இயேசுவும் காந்தியும் சிந்திய இரத்த வியர்வையால்தான் அன்பென்ற வார்த்தைக்கும் அகிம்சை என்ற வார்த்தைக்கும் அர்த்தம் உண்டாகி, இன்றுவரை, ஒட்டுமொத்தமாக மனிதகுலம் ஒரே அணுகுண்டால் அழிக்கப்பட்டுவிடாமல், காக்கப்பட்டு வருகிறது. இதனை நாம் புரிந்துகொள்ள முயற்சிக்கவில்லையெனில் மேலும் மேலும் மனிதனிடையே உள்ள இந்த மனிதனுக்கான விரோதப்போக்கு மனிதகுலத்தையே அழித்துவிட்டுத்தான் அமையும்.

 “குற்றமும் தண்டனையும்” என்னைப் பொறுத்தவரை மனிதகுலத்தின் மீட்புக்கான நாவல். மனித குலத்தை பேரழிவினின்று காக்க முற்படும் ஒரு முன்னெச்சரிக்கை. ஆன்மீகத்தின்வழி மனித இனத்தைக் காப்பாற்ற விழையும் ஒரு ஆதங்கம்.

 இந்நாவலில் வரும் ஸ்விட்ரிகைலோவ் போல இன்றும் பல மனிதர்கள் உண்டு. லூசின் போல பலர் உண்டு. ஸ்விட்ரிகைலோவிற்காவது கொஞ்சம் மனசாட்சி உள்ளது. ஆனால் லூசின் மருந்துக்கும் இரக்கமில்லாதவன். அதிகாரச் செருக்கு கொண்டு அடுத்தவரைப் பேனைப் போலப் பார்க்கிறவன். மற்றவரால் அவன் பேனைப் போலப் பார்க்கப்படுவதை அவனால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. மனசாட்சியுள்ளவன் தன்னைத்தானே அழித்துக்கொள்கிறான். மனசாட்சியில்லாதவன் அடுத்தவனை அழிக்க நினைக்கிறான். அடுத்தவனின் நற்பெயரைக் கெடுக்க நினைக்கிறான்.

 கொலைக்குற்றம் செய்த ரஸ்கோல்னிகோவும் பல பெண்களுடன் தொடர்பு கொண்ட ஸ்விட்ரிகைலோவும் மனசாட்சி கொண்டவர்களாக இருப்பதால், விலைமகளாகவே இருந்தாலும் நன்மையே உருவாகிய சோனியா மற்றும் இன்னொரு நன்னுருவம் துனியா இவர்களின் கள்ளமில்லா அன்பாலும் பொறுமையாலும் தாழ்ச்சியான குணங்களாலும் மனமாறுகிறார்கள். தன் குழந்தைகளுக்காகவே தன்னை அழித்துக்கொள்கிற, கொடுந்துயரத்தின், உயரிய அன்பின் மொத்த உருவமேயான காதரீனாவைப் பார்த்தபிறகும் இரக்கம் தோன்றா பீட்டர் பெத்ரோவிச் லூசின் போன்ற பாறைமனம் படைத்த அதிகார மனிதர்களை பணவலிமைமிக்க மனிதர்களை என்ன செய்வது? இவர்களைப் போன்றவர்களுக்குத்தான் உலகின் பெரிய அரசுகள் அச்சுறுத்தல்களாக அமையவேண்டும். ஆனால் அரசோ இவர்களைப் போன்றோர்களின் தயவில் இருக்கிறது. எளியவர்களிடத்தில் மெத்தனமாக நடந்துகொள்கிறது. வலிமையில்லாதவரிடமும் விளிம்புநிலையினரிடமும் அதிகாரத்தையும் ஆணவத்தையும் காட்டுகிறது. அரசு தன்பாதுகாப்பின்கீழ் உள்ளவர்களைப் பேன் போல நினைக்கலாமா? அப்படிப்பட்ட பேன் போன்றவர்கள் அரசினைப் பேன் போல நினைத்தால் இவ்வுலகம் என்னாவது? ஜனநாயக உணர்வு அந்தளவு நம்நாட்டில் உக்கிரமாக இல்லை. இருந்திருந்தால் என்றோ இப்படிப்பட்ட அதிகார வரம்பைப் பேன் போல நசுக்கியிருப்பார்கள்.

 குற்றமும் தண்டனையும் நூற்றைம்பது வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்டிருந்தாலும் அது ரஷ்ய நாட்டில் எழுதப்பட்டிருந்தாலும் அது இன்றைய மக்களின் மனதையும் அரசின் மனதையும் பற்றிப் பேசுவதாக உள்ளது. இந்திய நாட்டுக்கும் இந்திய மக்களுக்குமானதாகவும் இருக்கிறது. அப்படி மட்டும் சொல்லிவிடமுடியாது. இது எல்லா நாட்டுக்கும் எல்லா மக்களுக்குமானதாக இருக்கிறது. ஏனெனில் உலகத்திலுள்ள மனிதர் அனைவரும் மனித இனம்தானே. அவர்களின் மன உணர்வுகள் ஒன்றுதானே. அவை நன்மைக்கும் தீமைக்குமான போராட்டங்களினூடாகவேதானே வாழ்ந்துகொண்டிருக்கின்றன. இந்நாவலை வாசித்தாலாவது அவை ஒரு முடிவெடுக்கட்டும். ஒருவரை ஒருவர் அழித்துக்கொண்டு இறந்துவிடலாமா அல்லது இருக்கும்வரை அடுத்தவரைப்போலத்தான் தானும் என எண்ணி நெஞ்சில் உள்ளங்கை பதித்து எதிரிருப்பவர்முன் தலைதாழ்த்தி மென்மையான புன்முறுவல் அளித்து வணக்கம் சொல்லி வாழவைக்கலாமா என்று.

பின்குறிப்பு:

இந்நாவல் ரஷ்ய நாட்டில் ரஷ்ய மொழியில் எழுதப்பட்டு அங்கே மட்டும் உலவியிருக்கும் பட்சத்தில் நிச்சயமாக உலக இலக்கியமாக ஆகியிருக்காது. அதன் கருத்துக்கள் அங்கிருந்த சிந்தனையாளர்களை முதலில் கவர்ந்திருக்கின்றன. பலவித விமரிசனங்களுக்கு ஆட்பட்டிருக்கிறது இந்நாவல். 21 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது எனவும் அறிந்துகொண்டேன். எம். ஏ. சுசீலா அம்மையார் நம் தமிழ்மொழியை ஏமாற்றிவிடவில்லை. வெற்றிகரமாக தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார். நுணுக்கமான மன உணர்வுகள் போராட்டங்கள் இவற்றை விவரிக்கும்போதும் சூழல்களைப் பற்றிய விவரணைகளின்போதும் தன் தங்குதடையற்ற அருமையான மொழிப்பிரவாகத்தால் இலகுவாகக் கடந்து செல்கிறார். வாக்கியங்களை அவர் அமைத்திருந்த விதம் திரும்பத் திரும்ப வாசிக்கும் ஆவலைத் தூண்டியது. ரஸ்கோல்னிகோவுடன் மர்மலெதோவ் நாவலின் ஆரம்பத்தில் பேசும் காட்சிகள் அப்படியே கண்முன் நகைச்சுவையுடனும் துன்ப உணர்வுடனும் காட்சியளிக்கின்றன. ரஸ்கோல்னிகோவுடன் ஃபோர்பிரியின் விசாரணைக் காட்சிகளில் வரும் உரையாடல்கள் திகைப்பையளிக்கின்றன. ரோட்யா சோனியாவிடம் பாவ அறிக்கை உரையாடல் ஒரு உச்சகட்டம். திகிலுணர்வு மாறாமல் பிடிவாத உணர்வு மாறாமல் ஜன்னிகண்ட உணர்வு மாறாமல் அந்த புன்னகையுணர்வையும் அதே இறுக்க உணர்வையும் ரோட்யாவின் அம்மா பல்கேரியாவின் துயர உணர்வையும் ரோடியனின் உற்ற நண்பன் ரஸூமிகினின் துல்லியமான திண்டாட்ட உணர்வையும் பேராசிரியர் எம். ஏ. சுசீலா அவர்களின் மொழிபெர்ப்பில் வாசித்தபோது என் உள்ளம் நெகிழ்ந்து போனது. தன்னை மிகவும் அர்ப்பணித்து இதைச் செய்திருந்தாலொழிய வேறெந்தவகையிலும் இதைச் சாதித்திருக்க இயலாது. அவர்களுக்கு என் சிரம்தாழ்ந்த வணக்கங்களையும் உளமார்ந்த நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

அன்புடன்,

கிறிஸ்டி.

***

அன்புள்ள கிறிஸ்டி

நலம்தானே?

எம்.ஏ.சுசீலாவை அவருடைய மொழியாக்கப் பணிக்காகப் பாராட்டும்பொருட்டு ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்னையில். வரும் ஏப்ரல் 7 அன்று

ஜெ

***

முந்தைய கட்டுரைநம்பியின் சொல்
அடுத்த கட்டுரைஇமையத் தனிமை -1